<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.1.3 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 1.3

# Maṇimēkalai's Renunciation 1.3

Maṇimēkalai urai 1.3

- **Language:** Tamil

### [1.3](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.1.3)

பதிகம்  
  
15 ஆங்கினி திருந்த அருந்தவ முதியோள்  
ஓங்குநீர்ப் பாவையை உவந்தெதிர் கொண்டாங்கு  
ஆணு விசும்பின் ஆகாய கங்கை  
வேணவாத் தீர்த்த விளக்கே வாவெனப்  
பின்னிலை முனியாப் பெருந்தவன் கேட்டீங்கு  
  
20  
  
அன்னை கேளிவ் வருந்தவ முதியோள் நின்னால் வணங்குந் தகைமையள் வணங்கெனப்  
  
15  
  
உரை  
  
21  
  
ஆங்கு இனிது இருந்த அருந்தவ முதியோள் - ஆண்டு  
இனிது அமர்ந்திருந்த அரிய தவமுதியோளாகிய சம்பாபதி, ஓங்கு நீர்ப் பாவையை உவந்து எதிர்கொண்டு-பெருகுகின்ற காவிரிப் பாவையை மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டு, ஆணு விசும்பின் ஆகாய கங்கை-வானினை இடமாகக் கொண்ட அன்பினையுடைய ஆகாய கங்கையே, வேணவாத் தீர்த்த விளக்கே வா என - வேட்கையானாகிய அவாவினைத் தீர்த்த விளக்கே வருக என அழைப்ப, பின் நிலை முனியாப் பெருந்தவன் கேட்டு - பின் நிற்றலை வெறுத்தலில்லாத அகத்திய மாமுனிவன் அதனைக் கேட்டு, அன்னை கேள்-அன்னாய் கேட்பாயாக, இவ் அருந்தவ முதியோள் நின்னால் வணங்கும் தகைமையள் - இவ்வரிய தவமூதாட்டி நின்னால் வணங்கப்படும் தகுதியுடையவள், வணங்கு என - ஆகலின் இவளை நீ வணங்குவாய் என்று காவிரியை நோக்கிக் கூற ;  
  
பின்னிற்றல் - தாழ்ந்து நிற்றல்; ¹"பிற்றை நிலை முனியாது" என்பதிற் போல. கொண்டாங்கு, கேட்டீங்கு என்பவற்றில் ஆங்கு, ஈங்கு என்பன அசைகள். ஆணு - அன்பு: ² "ஆணுப் பைங்கிளி" என்பதன் உரை காண்க. விசும்பின் என முன் வந்தமையின், ஆகாய கங்கை என்பது பெயர் மாத்திரையாய் நின்றது. கங்கை வானினின்று வந்ததென்ப ஆகலானும், காவிரி நீர் கங்கை நீர் ஆகலானும் 'ஆகாய கங்கை' என்றார். "பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர்" என்புழி, "காவிரி நீர் கங்கை நீராதலிற் கங்கைப் புதல்வரைக் காவிரிப் புதல்வர் என்றார்" என அடியார்க்கு நல்லார் கூறியதும், தொல்காப்பியப் பாயிர வுரையில் ³"கங்கையாருழைச் சென்று காவிரியாரை வாங்கி" என நச்சினார்க்கினியர் கூறியதும் ஈண்டு அறியற்பாலன.  
  
¹ புறம். 183. ² சீவக. 1002. ³ தொல். பாயிரவுரை.

- [Previous: 1.2](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.1.2)
- [Next: 1.4](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.1.4)
- [Up: 1](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.1)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.0.16-21) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.1.3](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.1.3) · Pramāṇa
