<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.1.7 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 1.7

# Maṇimēkalai's Renunciation 1.7

Maṇimēkalai urai 1.7

- **Language:** Tamil

### [1.7](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.1.7)

பதிகம்  
  
உழந்தோ ளாங்கணோர் ஒளிமணிப் பீடிகைப்  
  
50  
  
பழம்பிறப் பெல்லாம் பான்மையி னுணர்ந்ததும்  
உணர்ந்தோள் முன்னர் உயர்தெய்வந் தோன்றி  
மனங்கவ லொழிகென மந்திரங் கொடுத்ததும்  
தீப திலகை செவ்வனந் தோன்றி  
மாபெரும் பாத்திரம் மடக்கொடிக் களித்ததும்  
  
55 பாத்திரம் பெற்ற பைந்தொடி தாயரொடு  
யாப்புறு மாதவத் தறவணர்த் தொழுததும்  
அறவண வடிகள் ஆபுத் திரன்றிறம்  
நறுமலர்க் கோதைக்கு நன்கனம் உரைத்ததும்  
  
49  
  
உரை  
  
58  
  
உழந்தோள் ஆங்கண் ஓர் ஒளிமணிப் பீடிகை - அங்ஙனம் வருந்தினவள் அவ்விடத்தில் ஒளிமிக்க மணிகளானாய ஒரு பாத பீடிகையினால், பழம்பிறப்பு எல்லாம் பான்மையின் உணர்ந்ததும்- முற்பிறப்பு நிகழ்ச்சியை யெல்லாம் முறையால் அறிந்ததும், உணர்ந்தோள் முன்னர் உயர் தெய்வம் தோன்றி மனங்கவல் ஒழிகென மந்திரம் கொடுத்ததும்-அங்ஙனம் அறிந்த மணிமேகலை முன் மணிமேகலா தெய்வம் வெளிப்பட்டு மனம் கவலுதல் ஒழிகவென்று கூறி மந்திரம் அருளியதும், தீப திலகை செவ்வனம் தோன்றி மாபெரும் பாத்திரம் மடக்கொடிக்கு அளித்ததும் - தீவதிலகை என்பாள் நன்கு வெளிப்பட்டுப் பெருமை பொருந்திய பாத்திரத்தினை மணிமேகலைக்குக் கொடுத்ததும், பாத்திரம்பெற்ற பைந்தொடி தாயரொடு - அப் பாத்திரத்தினைப்பெற்ற மெல்லியல் தன் தாயராகிய மாதவி சுதமதி என்னும் இருவருடனும், யாப்புறு மாதவத்து அறவணர்த் தொழுததும் - கட்டமைந்த பெருந்தவமுடைய அறவணவடிகளை வணங்கியதும், அறவண அடிகள் ஆபுத்திரன் திறம் - அறவண முனிவர் ஆபுத்திரன் வரலாற்றினை, நறுமலர்க் கோதைக்கு நன்கனம் உரைத்ததும் - நறிய மலர்மாலை போலும் நங்கைக்கு நன்கு மொழிந்ததும் ;  
  
கவல் - கவலுதல் : முதனிலைத் தொழிற் பெயர். ஒழிகென-ஒழிக  
  
என : அகரந் தொக்கது. மந்திரம் - வேற்றுரு அடைவிப்பதும், விசும்பிலே திரியச் செய்வதும், பசியைப் போக்குவதுமாகிய மந்திரங்கள். தீப திலகை - தீவுக்குத் திலகம் போன்றவள் ; மணிபல்லவத்திலே புத்தன் பாத பீடிகையை இந்திரன் ஏவலாற் காவல் செய்பவள் இவள். மாபெரும் பாத்திரம்-அமுதசுரபி எனப் பெயரிய பிச்சைப் பாத்திரம். தாயர் - மாதவியும் அவள் தோழியாகிய சுதமதியும் ; இக்காப்பியத்திற்பிறாண்டும் இவ்விருவரும் மணிமேகலையின் தாயரென வழங்கப்பெறுவர். யாப்பு - கட்டு ; உறுதி. அறவணர் - ஒரு புத்த முனிவர்

- [Previous: 1.6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.1.6)
- [Next: 1.8](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.1.8)
- [Up: 1](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.1)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.0.51-56) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.1.7](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.1.7) · Pramāṇa
