<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.11.14 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 11.14

# Maṇimēkalai's Renunciation 11.14

Maṇimēkalai urai 11.14

- **Language:** Tamil

### [11.14](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.11.14)

மந்திரங் கொடுத்த காதை  
  
75  
  
80 அறிபிறப் புற்றனை அறம்பா டறிந்தனை  
பிறவற முரைப்போர் பெற்றியுங் கேட்குவை  
பல்வேறு சமயப் படிற்றுரை யெல்லாம்  
அல்லியங் கோதை கேட்குறு மந்நாள்  
இளையள் வளையோ யென்றுனக் கியாவரும்  
விளைபொரு ளுரையார் வேற்றுரு வெய்தவும்  
அந்தரந் திரியவும் ஆக்குமிவ் வருந்திறன்  
மந்திரங் கொள்கென வாய்மையி னோதி  
  
75  
  
உரை  
  
82  
  
அறிபிறப்புற்றனை அறம்பாடு அறிந்தனை - முற்பிறவியை அறிந்தாய் அறத்தின் தோற்றத்தை உணர்ந்தாய், பிற அறம் உரைப்போர் பெற்றியும் கேட்குவை - பிறசமய உண்மைகளைக் கூறுவோர் பேற்றையும் கேட்பாய், பல்வேறு சமயப் படிற்றுரை எல்லாம் அல்லியங்கோதை கேட்குறும் அந்நாள்-பலவேறு சமயங்களின் பொய்யுரைகளை யெல்லாம் நீ கேட்கப் புகும் அந்நாளில், இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும் விளைபொருள் உரையார் - இளமைத் தன்மையையுடையாள் வளையணிந்த நங்கை என்று நினக்கு எவரும் தம் சமயங்களின் விளைபொருளைக் கூறார் ஆகலின், வேற்றுரு எய்தவும் அந்தரம் திரியவும் ஆக்கும் இவ் வருந்திறல் மந்திரம் கொள்க என - வேற்று வடிவங்கொள்ளவும் விசும்பின் வழியாகச் செல்லவும் செய்யும் அரிய ஆற்றலையுடைய இம் மந்திரத்தைக் கொள்வாயாக என்று, வாய்மையின ஓதி-நால் வகை வாய்மையுடன் கூறியருளி.  
  
அறம்பாடு - அறத்தின் கூறென்றும், அறத்தின் இயல்பென்றும் உரைத்தலுமாம். பிற அறம் என்றது பிற சமயக் கொள்கைகளை. பெற்றி - பேறு ; இயல்பென்றுமாம். அல்லியங்கோதை அகவிதழ்களாலாகிய மாலையை யுடையாள் ; ஈண்டு முன்னிலை. வாய்மையின் - உண்மையுடன் என்றுமாம்.

- [Previous: 11.13](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.11.13)
- [Next: 11.15](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.11.15)
- [Up: 11](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.11)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.10.76-81) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.11.14](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.11.14) · Pramāṇa
