<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.12.10 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 12.10

# Maṇimēkalai's Renunciation 12.10

Maṇimēkalai urai 12.10

- **Language:** Tamil

### [12.10](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.12.10)

பாத்திரம் பெற்ற காதை  
  
65  
  
70 மாரனை வெல்லும் வீர நின்னடி  
தீநெறிக் கடும்பகை கடிந்தோய் நின்னடி  
பிற்ர்க்கறம் முயலும் பெரியோய் நின்னடி  
துறக்கம் வேண்டாத் தொல்லோய் நின்னடி  
எண்பிறக் கொழிய இருந்தோய் நின்னடி  
கண்பிறர்க் களிக்குங் கண்ணோய் நின்னடி  
தீமொழிக் கடைத்த செவியோய் நின்னடி  
வாய்மொழி சிறந்த நாவோய் நின்னடி  
நரகர் துயர்கெட நடப்போய் நின்னடி  
உரகர் துயரம் ஒழிப்போய் நின்னடி  
வணங்குதல் அல்லது வாழ்த்தலென் நாவிற்  
கடங்கா தென்ற வாயிழை முன்னர்ப்  
  
61  
  
உரை  
  
72  
  
மாரனை வெல்லும் வீர நின் அடி-மாரனை வென்ற வீரனே நின் திருவடிகளை, தீநெறிக் கடும்பகை கடிந்தோய் நின் அடி-தீய வழிகளாகிய மிக்க பகையை நீக்கினோய் நின் திருவடிகளை, பிறர்க்கு அறம் முயலும் பெரியோய் நின் அடி-ஏனையோர்க்கு அறம் உண்டாதற்கு முயல்கின்ற பெரியோனே நின் திருவடிகளை, துறக்கம் வேண்டாத் தொல்லோய் நின் அடி-சுவர்க்க இன்பத்தை வேண்டாத பழையோனே நின் திருவடிகளை, எண் பிறக்கு ஒழிய இறந்தோய் நின் அடி - மக்களுடைய எண்ணங்கள் எட்டாமற் பின்னே கிடக்குமாறு மேற்பட்ட நிலையிற் சென்றோய் நின் திருவடிகளை, கண் பிறர்க்கு அளிக்கும் கண்ணோய் நின் அடி - உயிர்கட்கு ஞானத்தை அளிக்கும் மெய்யுணர்வுடையோய் நின் திருவடிகளை, தீமொழிக்கு அடைத்த செவியோய் நின் அடி - தீயமொழிகளைக் கேளாதிருக்குமாறு அடைக்கப்பட்ட காதினை யுடையோனே நின் திருவடிகளை, வாய்மொழி சிறந்த நாவோய் நின் அடி - மெய்மொழிகள் சிறந்த நாவினை யுடையோய் நின் திருவடிகளை, நரகர்துயர் கெட நடப்போய் நின் அடி-நிரயத்திலிருப்போர்களின் துன்பம் நீங்குமாறு ஆண்டுச்சென்றோய் நின் திருவடிகளை, உரகர் துயரம் ஒழிப்போய் நின் அடி - நாகர்களின் துன்பத்தை நீக்குவோய் நின் திருவடிகளை, வணங்குதல் அல்லது வாழ்த்தல் என் நாவிற்கு அடங்காது என்ற ஆயிழை முன்னர்-வணங்குதலேயன்றி வாழ்த்துதல் எனது நாவின்கண் அடங்காது என்று பரவிய மணிமேகலையின் முன்னர் ;  
  
பாத்திரம் பெற்ற மகிழ்ச்சியாலும் அன்பின் ஆராமையினாலும் நின்னடி' என்பதனைப் பலகால் அடுக்கிக் கூறினளாயினும், வீர, கடிந்தோய் என்றிங்ஙனம் விளியடுத்த பெயர்களை ஒருசேரக் கூறி, அவற்றினிறுதியில் 'நின்னடி' என்று கூறுதல் அமையும். மாரன் - அறத்திற்கு மாறாய தீய விருப்பங்களை மனத்தில் உண்டாக்கும் ஒரு தேவன் ; மாபோதியின்கீழ் தவஞ்செய்திருக்கையில் இவன் செய்த இடையூறுகளை யெல்லாம் புத்தன் வென்று மேம்பட்டு விளங்கினன் என்பர். முயலுதலாவது அறத்தினை அறிவுறுத்தல்; பிறர் பொருட்டு அறத்தினை முயன்று செய்யும் என்றுமாம். அழிவற்ற நிருவாணமே (முத்தியே) அவனால் விரும்பப்பட்டமையின் அழியு மியல்புடைய துறக்கம் வேண்டப்படாதாயிற்று. பிறக்கு-பின்; ¹"துறைபிறக் கொழியப் போகி" என்பது காண்க. கண்-ஈண்டு ஞானம்; புத்தன் எடுத்த பல பிறப்புக்களுள் ஒன்றில் வந்து இரந்த இந்திரற்குக் கண்ணைக் கொடுத்ததனை இதற்குப் பொருளாகக் கொள்ளுதல் சிறப்பின்று. தீமொழி-பொய், குறளை, வன்சொல், பயனில்சொல் என்பன. நரகர் சிலரது துன்பந் தணித்தற் பொருட்டுப் புத்தன் ஒரு பிறப்பில் நரகலோகத்திற்குச் சென்றான் என்பர். ²"அருவினை சிலர் கெட வொரு பெரு நரகிடை, எரிசுடர் மரைமல ரெனவிடு மடியினை" என்பது காண்க. கருடனுக்கு அருளறம் போதித்து நாகர் துயரினைப் போக்கினானென்பதும் வீரசோழியத்து அச் செய்யுளுரை மேற்கோள்களால் அறியப்படும்.  
  
¹ பெரும்பாண், 351. ² வீர. யாப்பு. 11. மேற்கோள்.

- [Previous: 12.9](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.12.9)
- [Next: 12.11](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.12.11)
- [Up: 12](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.12)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.11.66) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.12.10](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.12.10) · Pramāṇa
