<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.12.12 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 12.12

# Maṇimēkalai's Renunciation 12.12

Maṇimēkalai urai 12.12

- **Language:** Tamil

### [12.12](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.12.12)

பாத்திரம் பெற்ற காதை  
  
80 குடிப்பிறப் பழிக்கும் விழுப்புங் கொல்லும்  
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்  
நாணணி களையும் மாணெழில் சிதைக்கும்  
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்  
பசிப்பிணி யென்றும் பாவியது தீர்த்தோர்  
இசைச்சொல் அளவைக் கென்நா நிமிராது  
  
76  
  
உரை  
  
81  
  
குடிப்பிறப்பு அழிக்கும்-தன்னாற் பற்றப்பட்டாருடைய உயர்குடிப் பிறப்பைக் கெடுக்கும், விழுப்பம்கொல்லும்-சிறப்பினை அழிக்கும், பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்-பற்றிய கல்வியாகிய பெரிய தெப்பத்தை நீக்கும், நாண் அணி களையும்-நாணாகிய அணிகலனைப் போக்கும், மாண் எழில் சிதைக்கும்-மாட்சிமைப்பட்ட அழகைக் குலைக்கும், பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்-பூண் விளங்குகின்ற கொங்கைகளையுடைய மகளிரொடு பிறர் கடைவாயிலில் நிறுத்தும், பசிப்பிணி என்னும் பாவி-பசி நோய் என்று கூறப்படுகின்ற பாவி, அது தீர்த்தோர்-அத்தகைய பசியை நீக்கினோரது, இசைச்சொல் அளவைக்கு என் நா நிமிராது-புகழை அளந்துரைத்தற்கு எனது நா எழாது ;  
  
குடிப் பிறந்தார்க் கேலாத இழிசெயல்களை உளவாக்கலின் அதனை அழிக்கும் என்றாள். பிடித்த-பற்றுக் கோடாகக் கொண்ட. விடூஉம்-விடுவிக்கும் : பிறவினை ; கல்வியும் அழியும் என்றபடி ; அவரது சொல் செல்லா தென்றவாறுமாம் ; ¹"நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார், சொற்பொருள் சோர்வு படும்" என்பது காண்க. அழகு செய்தலின் நாண் அணியெனப்பட்டது ; ²"அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு" என்றார் வள்ளுவனாரும். ஆணெழில் எனப் பிரித்தலுமாம்; ³"பிறந்த குலமாயும் பேராண்மை மாயும், சிறந்த தங் கல்வியு மாயும்" என்பது அறியற்பாலது. பண்பிற்குப் பண்பு இல்லையேனும் தன்னாற் பற்றப்பட்டாருடைய நலங்களை யெல்லாம் அழித்தற் கொடுமைபற்றி, வேறு பண்புள்ளதுபோல் பசியைப் பாவியென்றார்; ⁴"இன்மை யெனவொரு பாவி" என்பதுங் காண்க. நிமிராது-எழாது; பேச முயலாது; புகழ் அளவுபடா தென்றபடி.  
  
¹குறள். 1049. ² குறள். 1014. ³ நாலடி. 285.  
⁴ குறள். 1042.

- [Previous: 12.11](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.12.11)
- [Next: 12.13](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.12.13)
- [Up: 12](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.12)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.11.76-81) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.12.12](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.12.12) · Pramāṇa
