<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.12.14 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 12.14

# Maṇimēkalai's Renunciation 12.14

Maṇimēkalai urai 12.14

- **Language:** Tamil

### [12.14](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.12.14)

பாத்திரம் பெற்ற காதை  
  
95 ஆற்றுநர்க் களிப்போர் அறவிலை பகர்வோர்  
ஆற்றா மாக்க ளரும்பசி களைவோர்  
மேற்றே யுலகின் மெய்நெறி வாழ்க்கை  
மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்  
உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே  
உயிர்க்கொடை பூண்ட உரவோ யாகிக்  
கயக்கறு நல்லறங் கண்டனை யென்றலும்  
  
92  
  
உரை  
  
98  
  
ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்-பொறுக்கும் வன்மையுடையோராகிய செல்வர்க்கு அளிக்கின்றவர்கள் அறத்தினை விலை கூறுவோரேயாவர், ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர் மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை-வறிஞர்களின் தீர்த்தற்கரிய பசியை நீக்குவோரின் கண்ணதே உலகத்தின் உண்மை நெறியாகிய வாழ்க்கை, மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம் - அணுக்கள் செறிந்த நிலவுலகில் வாழ்வோர்களில் எல்லாம், உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே - உணவினை அளித்தோரே உயிர்கொடுத்தோராவர், உயிர்க்கொடை பூண்ட உரவோய் ஆகி-உயிரினை அளிக்கும் அறத்தினை மேற்கொண்ட வலிய அறிவினை உடையையாகி, கயக்கறு நல்லறம் கண்டனை என்றலும்-கலங்குதலற்ற நல்லறத்தினை அறிந்தாய் என்று தீவதிலகை உரைத்தலும் ;  
  
ஆற்றுநர்க்கு-கைம்மாறு செய்யும் வலியுடையோர்க்கு என்றுமாம். அறவிலை பகர்வோர் - அறமென்னும் பெயரால் வாணிகஞ் செய்வோர் என்றுமாம் ; பயன் கருதிச் செய்வோராகின்றமையின் "அறவிலை பகர்வோர்" என்றாள். ¹"இம்மைச் செய்தது மறுமைக் காமெனும் அறவிலை வாணிகன் ஆஅ யல்லன்" ²"ஏற்றகை மாற்றாமை யென்னானுந் தாம் வரையா, தாற்றாதார்க் கீவதா மாண்கடன்" என்பன ஈண்டு அறியற் பாலன. வாழ்வோர்க்கெல்லாம்-வாழ்வோ ரெல்லாருள்ளும் என்க : வேற்றுமை மயக்கம். ³"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" எனப் புறப்பாட்டில் வந்துள்ளமையும் காண்க. கயக்கு - கயங்குதல் ; கலங்குதல்; "கயக்கறுமாக்கள்" (16 : 85) என்பர் பின்னும்.  
  
¹ புறம். 134. ² நாலடி. 98. ³ புறம். 18.

- [Previous: 12.13](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.12.13)
- [Next: 12.15](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.12.15)
- [Up: 12](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.12)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.11.91-96) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.12.14](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.12.14) · Pramāṇa
