<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.13.6 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 13.6

# Maṇimēkalai's Renunciation 13.6

Maṇimēkalai urai 13.6

- **Language:** Tamil

### [13.6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.13.6)

அறவணர்த் தொழுத காதை  
  
55  
  
60  
  
65 பிறவியும் அறவியும் பெற்றிஇன் உணர்ந்த  
நறுமலர்க் கோதாய் நல்கினை கேளாய்  
தரும தலைவன் தலைமையில் உரைத்த  
பெருமைசால் நல்லறம் பெருகா தாகி  
இறுதியில் நற்கதி செல்லும் பெருவழி  
அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்துகண்  
ணடைத்தாங்குச்  
செயிர்வழங்கு தீக்கதி திறந்து கல்லென்று  
உயிர்வழங்கு பெருநெறி ஒருதிறம் பட்டது  
தண்பனி விழுங்கிய செங்கதிர் மண்டிலம்  
உண்டென உணர்தல் அல்லதி யாவதும்  
கண்டினிது விளங்காக் காட்சி போன்றது  
  
55  
  
உரை  
  
65  
  
பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த-பழம் பிறப்பையும் அறநெறியையும் முன்னை நல்வினையால் அறிந்த, நறுமலர்க் கோதாய் நல்கினை கேளாய் - நறிய மலர்மாலையணிந்த நங்கையே உவந்து கேட்பாயாக, தரும தலைவன் தலைமையின் உரைத்த - தரும முதல்வனாகிய புத்தன் முதன்மையாகக் கூறிய, பெருமை சால் நல்லறம் பெருகாதாகி - பெருமையமைந்த நல்லறம் வளர்தலின்றி, இறுதிஇல் நற்கதி செல்லும் பெருவழி - அழிவில்லாத நற்கதியாகிய நிருவாணத்திற்குச் செல்லும் பெருநெறி, அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்துகண் அடைத்தாங்கு - அறுகம்புல்லும் நெருஞ்சியுஞ் செறிந்து இடத்தை யடைத்தாற்போல, செயிர் வழங்கு தீக்கதி திறந்து - துன்பத்தையுடைய தீக்கதிக்கண் செல்லும் வழி திறக்கப்பட்டு நெருக்குதலின், கல்லென்று உயிர்வழங்கு பெருநெறி ஒருதிறம் பட்டது-ஆரவாரத்துடன் உயிர்கள் செல்லும் பொதுநெறியாகிய ஒரு கூற்றிலே பட்டது (ஆகலின் அப்பெரு வழி), தண்பனி விழுங்கிய செங்கதிர் மண்டிலம் - குளிர்ந்த பனியால் மூடப்பட்ட சிவந்த ஞாயிற்று மண்டலம், உண்டுஎன உணர்தல் அல்லது-உண்டு என்று அறிகின்ற அளவினை அன்றி, யாவதும் கண்டு இனிது விளங்காக் காட்சி போன்றது-சிறிதும் தெளிவாகக் கண்டறியப்படாத காட்சியைப் போன்றது ;  
  
நிலமிசை நடந்து செல்லும் வழியை அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்து அடைந்தாற்போல் நற்கதி செல்லும் பெருவழியைத் தீக்கதியிற் செல்லும் நெறிகள் திறந்து அடைத்தலால் என்க. பெருவழி ஒரு திறம் பட்டதென்க. உயிர் வழங்கு பெருநெறி என்றது பிறந்திறக்கும் உயிர்கள் செல்லும் பொதுவழி ; ¹''பெரும்பே ரியாக்கை பெற்ற நல்லுயிர், மலர் தலை யுலகத்துயிர்போகு பொதுநெறி......போகுதல் பொறேஎன்'' எனச் செங்குட்டுவனை நோக்கி மாடலன் கூறிற்றாக வுள்ளது காண்க. ஆகலின் அப் பெருவழியென விரித்துரைக்க. இனி, தீக்கதி திறக்கப் பெருநெறி ஒருதிறம் பட்டமையின் பெருவழி காட்சி போன்றது என முடித்தலுமாம். அறுகை - அறுகு. செயிர் - குற்றமுமாம். காட்சி - தன்மை.  
  
¹ சிலப். 28 ; 172-4.

- [Previous: 13.5](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.13.5)
- [Next: 13.7](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.13.7)
- [Up: 13](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.13)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.12.61) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.13.6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.13.6) · Pramāṇa
