<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.13.8 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 13.8

# Maṇimēkalai's Renunciation 13.8

Maṇimēkalai urai 13.8

- **Language:** Tamil

### [13.8](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.13.8)

அறவணர்த் தொழுத காதை  
  
75  
  
80 சக்கர வாளத்துத் தேவ ரெல்லாம்  
தொக்கொருங் கீண்டித் துடிதலோ கத்து  
மிக்கோன் பாதம் விழுந்தனர் இரப்ப  
இருள்பரந்து கிடந்த மலர்தலை யுலகத்து  
விரிகதிர்ச் செல்வன் தோன்றின னென்ன  
ஈரெண் ணூற்றோ டீரெட் டாண்டில்  
பேரறி வாளன் தோன்றுமதற் பிற்பாடு  
பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி  
இரும்பெரு நீத்தம் புகுவது போல  
அளவாச் சிறுசெவி யளப்பரு நல்லறம்  
உளமலி யுவகையொ டுயிர்கொளப் புகூஉம்  
  
72  
  
உரை  
  
82  
  
சக்கரவாளத்துத் தேவர் எல்லாம்-சக்கரவாளத்திலுள்ள தேவரனைவரும், தொக்கு ஒருங்கு ஈண்டித் துடிதலோகத்து மிக்கோன் பாதம் விழுந்தனர் இரப்ப - சேர்ந்து ஒன்றாகக்கூடித் துடிதலோகத்துள்ள சிறந்த தேவன் திருவடிகளில் விழுந்து இரக்க, இருள் பரந்து கிடந்த மலர்தலை உலகத்து - இருளாற் பரவப்பட்டுக் கிடந்த அகன்ற இடத்தையுடைய பூமியின்கண், விரிகதிர்ச் செல்வன் தோன்றினன் என்ன - வரிந்த கிரணங்களையுடைய பரிதிவானவன் தோன்றினாற்போல, ஈரெண்ணூற்றொடு ஈரெட்டாண்டில் பேரறிவாளன் தோன்றும் - ஆயிரத்தறுநூற்றுப் பதினாறாம் ஆண்டில் புத்தன் தோன்றுவான், அதன் பிற்பாடு - அதன் பின்பு, பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி - பெரிய குளத்திலுள்ள மதகாகிய சிறிய வழியில், இரும் பெரு நீத்தம் புகுவது போல - மிகப் பெரிய வெள்ளம் புகுவதைப்போல, அளவாச் சிறுசெவி - பேரளவில்லாத சிறிய செவிகளின் வழியே, அளப்பரு நல்லறம் உளம் மலி உவகையொடு உயிர் கொளப் புகூஉம் - அளத்தற்கரிய நல்லறங்கள் உள்ளத்தில் நிறைந்த மகிழ்ச்சியோடு உயிர்கள் ஏற்றுக்கொள்ளும்படி புகாநிற்கும்;  
  
துடிதலோகம் - உலகம் முப்பத்தொன்றனுள் ஒன்பதாவது ; தெய்வலோகம் ஆறனுள் நான்காவது. மிக்கோன்-சிறந்தவன்; இவன் பெயர் பிரபாபாலன் என்பர். ஈண்டுக் குறிக்கப்பட்ட ஆண்டு இன்ன அப்தத்தைச் சேர்ந்ததென்று தெரியவில்லை. வளவா எனப் பிரித்து வளமில்லாத என்றுரைத்தலுமாம். சிறு செவிப் புகூஉம் என்க.

- [Previous: 13.7](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.13.7)
- [Next: 13.9](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.13.9)
- [Up: 13](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.13)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.12.76) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.13.8](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.13.8) · Pramāṇa
