<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.16.14 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 16.14

# Maṇimēkalai's Renunciation 16.14

Maṇimēkalai urai 16.14

- **Language:** Tamil

### [16.14](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.16.14)

பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை  
  
75  
  
80 குளனணி தாமரைக் கொழுமலர் நாப்பண்  
ஒருதனி யோங்கிய திருமலர் போன்று  
வான்தரு கற்பின் மனையுறை மகளிரில்  
தான்தனி யோங்கிய தகைமையள் அன்றோ  
ஆதிரை நல்லாள் அவள்மனை இம்மனை  
நீபுகல் வேண்டும் நேரிழை என்றனள  
  
75  
  
உரை  
  
80  
  
குளன் அணி தாமரைக் கொழுமலர் நாப்பண் ஒரு தனி ஓங்கிய திருமலர் போன்று-குளத்திற்கு அழகு செய்யும் தாமரைச் செழுமலர்களின் நடுவண் ஒன்றாய் ஒப்பற்றுயர்ந்த அழகிய தாமரை மலரைப்போல, வான் தரு கற்பின் மனைஉறை மகளிரில் - மழை வேண்டிற் பெய்விக்குஞ் சிறந்த கற்பினையுடைய இல்லில்வாழ் பெண்டிருள், தான்தனி ஓங்கிய தகைமையள் அன்றோ ஆதிரை நல்லாள் - ஆதிரை யென்னும் மெல்லியல் தான் இணையிலாச்சிறப்புடைய தகுதியுடையள் அல்லளோ? அவள்மனை இம்மனை - அவளது திருமனை இதுவாகும், நீ புகல்வேண்டும் நேரிழை என்றனள்- நங்கையே இதன்கண் நீமுதலிற் செல்லவேண்டும் என்று கூறினள்;  
  
"பாசடைப் பரப்பிற் பன்மல ரிடைநின், றொருதனி யோங்கிய விரைமலர்த் தாமரை" (4: 8-9) என்றார் முன்னும். திருமலர் போன்று ஆதிரை நல்லாள் ஓங்கிய தகைமையள் என்க. கற்புடை மகளிர் வேண்டும் பொழுது மழை பெய்விக்கும் ஆற்றலுடையரென்பது,  
  
"¹தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்  
பெய்யெனப் பெய்யும் மழை"  
  
என்னும் பொய்யா மொழியானும்,  
  
"²வறனோடின் வையகத்து வான்றருங் கற்பினாள்"  
  
என்னும் பாலைக் கலியானும் அறியப்படும். இக் கருத்து  
இந் நூலகத்துப் பின்னரும் (16: 49-50; 22: 68-9) வருதல் காண்க.  
  
¹ குறள் - 55. ² கலி. 16.

- [Previous: 16.13](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.16.13)
- [Next: 16.15](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.16.15)
- [Up: 16](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.16)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.15.76) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.16.14](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.16.14) · Pramāṇa
