<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.16.5 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 16.5

# Maṇimēkalai's Renunciation 16.5

Maṇimēkalai urai 16.5

- **Language:** Tamil

### [16.5](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.16.5)

பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை  
  
30  
  
35  
மண்ணக மெல்லாம் மாரி இன்றியும்  
புண்ணிய நன்னீர் போதொடு சொரிந்தது  
போதி மாதவன் பூமியில் தோன்றும்  
கால மன்றியும் கண்டன சிறப்பெனச்  
சக்கர வாளக் கோட்டம் வாழும்  
மிக்க மாதவர் விரும்பினர் வியந்து  
கந்துடை நெடுநிலைக் கடவுள் எழுதிய  
அந்திற் பாவை அருளு மாயிடின்  
அறிகுவம் என்றே செறியிருள் சேறலும்  
  
27  
  
உரை  
  
35  
  
மண்ணகம் எல்லாம் மாரி இன்றியும் புண்ணிய நல்நீர் போதொடு சொரிந்தது - புவிமுழுதும் மழை இல்லாம லிருந்தும் புண்ணியத் தூ நீர் மலருடன் பொழிந்தது, போதி மாதவன் பூமியில் தோன்றும் காலம் அன்றியும்-புத்த தேவன் உலகின்கண் தோன்றும் காலமல்லாதிருந்தும், கண்டன சிறப்பு என - இத்தகைய சிறப்புக்கள் நிகழ்ந்தன என்று, சக்கரவாளக் கோட்டம் வாழும்-சக்கரவாளக் கோட்டத்திலுறைகின்ற, மிக்க மாதவர் விரும்பினர் வியந்து-மிக்க பெருந்தவமுடைய முனிவர்கள் ஆர்வமுடையராய் வியந்து, கந்துடை நெடுநிலைக் கடவுள் எழுதிய அந்தில்பாவை அருளுமாயிடின் அறிகுவம் என்றே - உயரிய தூணின்கண் கடவுளால் எழுதப்பட்ட பாவை உரைத்தருளுமாயின் அறிவோம் என்று, செறிஇருள் சேறலும்-செறிந்த இருளின்கட் செல்லுதலும்;  
  
மாரி - மழை, முகில், போதொடு கூடிய நீர் சொரிந்ததென்க. சொரிதல் - பொழிதல், சோர்தல்; சொரியப்பட்டது என்றுமாம். கண்டன- காணப்பட்டன; ¹"செயப்படு பொருளைச் செய்தது போலத்' தொழிற்படக் கிளத்தலும் வழக்கியன் மரபே" என்பதனாற் போந்த வழுவமைதி : சிறப்பு - வியத்தகு நிகழ்ச்சி ; நன்னிமித்தம். புத்தன் தோன்றுங்காலத்துளவாம் சிறப்பு நிகழ்ச்சிகள் முன்னர் அறவணர்த்தொழுத காதையிற் கூறப்பட்டமை காண்க. நெடுநிலையுடைக்கந்து என மாறுக. அந்தில் : அசை; அவ்விடம் என்று கொண்டு, அந்திற்சேறலும் என்றியைத்தலுமாம்.  
  
¹ தொல். வினை. 49.

- [Previous: 16.4](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.16.4)
- [Next: 16.6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.16.6)
- [Up: 16](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.16)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.15.31) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.16.5](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.16.5) · Pramāṇa
