<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.18 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 17.18

# Maṇimēkalai's Renunciation 17.18

Maṇimēkalai urai 17.18

- **Language:** Tamil

### [17.18](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.18)

ஆதிரை பிச்சையிட்ட காதை  
  
120  
  
125 தீத்திறம் ஒழிகெனச் சிறுமகன் உரைப்போன்  
ஈங்கெமக் காகும் இவ்வறம் செய்கேம்  
ஆங்குனக் காகும் அரும்பொருள் கொள்கெனப்  
பண்டும் பண்டும் கலங்கவிழ் மாக்களை  
உண்டோம் அவர்தம் உறுபொருள் ஈங்கிவை  
விரைமரம் மென்றுகில் விழுநிதிக் குப்பையோ  
டிவையிவை கொள்கென எடுத்தனன் கொணர்ந்து  
சந்திர தத்தன் என்னும் வாணிகன்  
வங்கஞ் சேர்ந்ததில் வந்துடன் ஏறி  
இந்நகர் புகுந்தீங் கிவளொடு வாழ்ந்து  
தன்மனை நன்பல தானமும் செய்தனன்  
  
117  
  
உரை  
  
127  
  
சிறுமகன் உரைப்போன் - கீழோனாகிய நாகன் உரைப்பவன், ஈங்கு எமக்காகும் இவ்வறம் செய்கேம் - ஈண்டு எமக்குப் பொருந்திய இவ்வறத்தினைச் செய்யாநிற்பேம், ஆங்கு உனக்கு ஆகும் அரும் பொருள் கொள்கென - நினக்கேற்ற அரிய பொருள்களைக் கொண்டு செல்க வென்று, பண்டும் பண்டும் கலங்கவிழ்மாக்களை உண்டேம் - முன்பெல்லாம் மரக்கலங் கவிழ்ந்து வந்த மக்களைக் கொன்று உண்டோம், அவர் தம் உறுபொருள் ஈங்கிவை- அவர்களுடைய மிக்க பொருள்களாகும் இங்குள்ள இவைகள், விரைமரம் மென்துகில் விழுநிதிக் குப்பையோடு இவை இவை கொள்கென - சந்தன மரங்களும் மெல்லிய ஆடைகளும் சிறந்த பொருட்குவைகளுமாகிய இவற்றையெல்லாம் கொள்க என்று கூற, எடுத்தனன் கொணர்ந்து - சாதுவன் அவைகளை எடுத்து கொணர்ந்து, சந்திரதத்தன் என்னும் வாணிகன் வங்கஞ் சேர்ந்ததில் - சந்திரதத்தன் என்னும் வணிகனது மரக்கலம் வந்ததில், வந்து உடன்ஏறி - உடன் ஏறிவந்து, இந்நகர் புகுந்து ஈங்கு இவளொடு வாழ்ந்து - இந் நகரத்தை யடைந்து இவ்வாதிரையுடன் வாழ்ந்து, தன் மனை நன் பல தானமும் செய்தனன் - தனது மனையின் கண் பல நல்லறங்களையுஞ் செய்தனன்.  
  
உரைப்பவன் அரும்பொருள் கொள்கெனப் பொதுவிற் கூறிப் பின்பு அவற்றை விதந்து, இவை யிவை கொள்க வென்றுரைக்க வென்க. விரைமரம் - மணமுடைய சந்தனம் அகில் முதிலிய மரங்கள். சேர்ந்ததாகிய வங்கத்திலென்க.

- [Previous: 17.17](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.17)
- [Next: 17.19](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.19)
- [Up: 17](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.16.121-126) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.18](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.18) · Pramāṇa
