<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.8 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 17.8

# Maṇimēkalai's Renunciation 17.8

Maṇimēkalai urai 17.8

- **Language:** Tamil

### [17.8](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.8)

ஆதிரை பிச்சையிட்ட காதை  
  
45  
  
50 ஐயரி யுண்கண் அழுதுயர் நீங்கிப்  
பொய்கைபுக்காடிப் போதுவாள் போன்று  
மனங்கவல் வின்றி மனையகம் புகுந்தென்  
கண்மணி யனையான் கடிதீங் குறுகெனப்  
புண்ணிய முட்டாள் பொழிமழை தரூஉம்  
அரும்பெறல் மரபிற் பத்தினிப் பெண்டிரும்  
விரும்பினர் தொழூஉம் வியப்பினள் ஆயினள்  
  
45  
  
உரை  
  
51  
  
ஐ அரி உண்கண் அழுதுயர் நீங்கி - அழகிய செவ்வரி படர்ந்த மையுண்ட கண்களையுடைய ஆதிரைநல்லாள் தான் அழுதுகொண்டிருந்த துன்பத்தினின்றும் நீங்கி, பொய்கை புக்கு ஆடிப் போதுவாள் போன்று-வாவியுட் சென்று நீராடி வருவாள் போல, மனம் கவல்வு இன்றி மனையகம் புகுந்து - மனம் கவலுதலின்றி இல்லுட் சென்று, என் கண்மணி அனையான் கடிது ஈங்கு உறுகென-எனது கண்ணினுள் மணியனைய கணவன் விரைவில் ஈண்டு வருக என்று, புண்ணியம் முட்டாள்-அறம் புரிதல் வழுவா தவளாய், பொழிமழை தரூஉம் அரும்பெறல் மரபின் பத்தினிப் பெண்டிரும்-பொழிகின்ற மழையைத் தரவல்ல பெறற்கரிய ஒழுக்கத்தினையுடைய கற்பிற் சிறந்த மகளிரும், விரும்பினர் தொழூஉம் வியப்பினள் ஆயினள் - வியந்து விரும்பி வணங்குந் தகுதியளாயினள் ;  
  
முட்டுதல் - குன்றுதல், வழுவுதல். பெண்டிரும் என்பதில் உம்மை உயர்வு சிறப்பு. வியந்து விரும்பினர் தொழுமெனப் பிரித்துக்கூட்டுக ; வியப்பு-மேன்மை யெனலுமாம்.

- [Previous: 17.7](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.7)
- [Next: 17.9](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.9)
- [Up: 17](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.16.46-51) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.8](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.8) · Pramāṇa
