<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.24 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 19.24

# Maṇimēkalai's Renunciation 19.24

Maṇimēkalai urai 19.24

- **Language:** Tamil

### [19.24](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.24)

உதயகுமரன் அம்பலம் புக்க காதை  
  
160  
  
165  
  
170 இன்னுங் கேளாய் இமையோர் பாவாய்  
பவளச் செவ்வாய்த் தவளவாள் நகையும்  
அஞ்சனஞ் சேராச் செங்கயல் நெடுங்கணும்  
முறிந்துகடை நெரிய வளைந்தசிலைப் புருவமும்  
குவிமுட் கருவியும் கோணமும் கூர்நுனைக்  
கவைமுட் கருவியும் ஆகிக் கடிகொளக்  
கல்விப் பாகரிற் காப்புவலை யோட்டி  
வல்வா யாழின் மெல்லிதின் விளங்க  
முதுக்குறை முதுமொழி எடுத்துக் காட்டிப்  
புதுக்கோள் யானை வேட்டம் வாய்த்தென  
முதியாள் உன்றன் கோட்டம் புகுந்த  
மதிவாள் முகத்து மணிமே கலைதனை  
ஒழியப் போகேன் உன்னடி தொட்டேன்  
இதுகுறை யென்றனன் இறைமகன் றானென்.  
  
159  
  
உரை  
  
172  
  
இன்னும் கேளாய் இமையோர் பாவாய்-வானோர்தலைவியே இன்னுங் கேட்பாயாக, பவளச் செவ்வாய்த் தவள வாள் நகையும் - பவளம்போற் சிவந்த வாயின்கணுள்ள வெள்ளொளி பொருந்திய பற்களும், அஞ்சனம் சேராச் செங்கயல் நெடுங்கணும்- மையெழுதப்படாத சிவந்த கயல்போலும் நீண்ட கண்களும், முறிந்து கடை நெரிய வரிந்த சிலைப் புருவமும்-கடை நெரியுமாறு வளைந்து வரிந்த வில்லைப் போன்ற புருவங்களும், குவிமுட் கருவியும் கோணமும் கூர்நுனைக் கவைமுட் கருவியும் ஆகிக் கடிகொள களிற்றினை யடக்கும் குவிந்த முள்ளையுடைய கருவியும் தோட்டியும் கூரியமுனையையுடைய கவைத்த முட்களாலாகிய பரிக்கோலுமாகிக் காவல் கொள்ள, கல்விப் பாகரில் காப்புவலை ஓட்டி-கல்வியாகிய பாகரால் காப்பினையுடைய வலையை வீசி, வல்வாய் யாழின் மெல்லிதின் விளங்க - சொல்வன்மையுடைய வாயாகிய யாழினால் இனிதாக விளங்குமாறு, முதுக்குறை முதுமொழி எடுத்துக்காட்டி - பேரறிவைவிளக்கும் முதுமொழிகளை எடுத்துக்காட்டி, புதுக்கோள் யானை வேட்டம் வாய்த்தென - புதிதாகக் கொள்ளப்படும் யானை வேட்டத்தின்கண் அகப்பட்டதென்று, முதியாள் உன்றன் கோட்டம் புகுந்த - சம்பாபதீ நின்னுடைய கோயிலிற் புகுந்த, மதிவாள் முகத்து மணிமேகலைதனை ஒழியப்போகேன்-மதிபோலும் ஒள்ளிய முகத்தினையுடைய மணிமேகலையை ஈண்டு விடுத்துச் செல்லேன் ; உன் அடி தொட்டேன் - நின் திருவடிகளைத் தொட்டுச் சூளுற்றேன் ; இது குறை என்றனன் இறைமகன் தான் என் - எனக்கு வேண்டும் காரியம் இதுவென்று உதயகுமரன் கூறின  
னென்க  
  
ஈண்டு இமையோர் பாவாய் என்றது போலப் பின்னர் "வானோர் பாவாய்" (25-147) எனச் சிந்தாதேவியை விளித்தலுங் காண்க. பிக்குணியாதலின் கண்ணுக்கு மைதீட்டிற்றில ளென்க. வரிந்த சிலை - கட்டமைந்த வில் ; நாணேற்றிய வில்லுமாம். கோணம் - தோட்டியென்னுங் கருவி ; கவைமுட் கருவி - கவைத்த முள்ளையுடைய பரிக்கோல்: ¹"கோணந் தின்ற வடுவாழ் முகத்த" ²;"கவைமுட் கருவியின் வடமொழி பயிற்றி" என்பன காண்க.  
  
நகை குவிமுட் கருவியும், கண் கோணமும், புருவம் கவைமுட் கருவியுமாகி என நிரனிறையாக்குக. காப்பு என்றது வலைக்கு அடை. கலையாகிய வலையென உருவகம் விரித்துரைக்க. தன் கலைத்திறங்களால் புறம்போகாது தடுத்தாள் என்றபடி. வாயை யாழ் என்றதற்கேற்ப முதுமொழியை இசையென உருவகஞ் செய்க ; யாழோசை போல மெல்லிதின்-விளங்க வாயால் முதுமொழி யெடுத்துக் காட்டி என்றலுமாம் ; யானை யாழிசைக்கு வயமாகுமாதலின் இவ்வாறு கூறினான். ³;"காழ்வரை நில்லாக் கடுங்களிற் றொருத்தல், யாழ்வரைத் தங்கி யாங்கு" என்பதனால் யானை யாழுக்கு வயமாத லறிக. முதுமொழி - முதுவோர் மொழி; நீதிமொழி. உதயகுமரன் தன்னை யானையாகவும், மணிமேகலையின் நகை முதலியவற்றை யானையை அடக்குங் கருவிகளாகவும் உருவகஞ் செய்து, அவளால் தான் பிணிப்புண்டமை கூறினனெனக். சூளுறுவார் அடிதொடுதல் வழக்காதலை ⁴"அறவ ரடிதொடினும்" ⁵"கோனடி தொட்டேன்" ⁶"அடல்வலி யெயினர்நின் அடி தொடு கடனிது" என்பவற்றானு மறிக.  
  
சித்திராபதி அது கேட்டு ஏறி வெய்துயிர்த்துக் கலங்கித் தீர்ப்பலென்று கூத்தியன் மடந்தையர் எல்லார்க்குங் கூறும்; அங்ஙனங் கூறுகின்றவள், வஞ்சினஞ் சாற்றி உயிர்த்துத் தேர்ந்து போகிக் குறுகிப் பொருந்தி நின்று ஏத்த, அவன், 'தவறின்றோ' என, அவள், 'வேந்தே! நின் கண்ணி வாழ்க; காஞ்சி அம்பலத் தாயது' என, அது கேட்டு அவட்கு உரைப்போன், 'எய்யா மையலேன்' என்று சொல்ல, சித்திராபதி சிறுநகை யெய்தி, படிற்றுரை யடக்குதல் கோன்முறை யன்றோ குமரற்கு?' என்றலும், உதயகுமரன் உள்ளம் பிறழ்ந்து ஏறி எய்திக் காண்டலும் அடங்கானாகிச் சென்று துணிந்து கேட்ப, அவர் வணங்கி நடுங்கி மயங்கி, 'வேட்டது செய்க' என்று கூறி நீங்கிப் புக்குத்தொழுது ஏத்தி ஓதிக் காயசண்டிகை வடிவாய் வந்து தோன்ற, தாரோன் புக்கு மரீஇ, 'இது குறை' என்றனன் என, வினை முடிவு செய்க.  
  
¹ மதுரைக். 592. ² முல்லைப். 35. ³ கலி. 226-7. ⁴ பரி. 1 : 68. ⁵ கலி. 94; 36. ⁶ சிலப். 12: 'சுடரொடு'.

- [Previous: 19.23](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.23)
- [Next: 20.1](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.20.1)
- [Up: 19](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.18.171) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.24](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.24) · Pramāṇa
