<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.6 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 19.6

# Maṇimēkalai's Renunciation 19.6

Maṇimēkalai urai 19.6

- **Language:** Tamil

### [19.6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.6)

உதயகுமரன் அம்பலம் புக்க காதை  
  
45  
  
50  
  
அரவ வண்டொடு தேனினம் ஆர்க்கும்  
தருமணன் ஞெமிரிய திருநா றொருசிறைப்  
பவழத் தூணத்துப் பசும்பொற் செஞ்சுவர்த்  
திகழொளி நித்திலச் சித்திர விதானத்து  
விளங்கொளி பரந்த பளிங்குசெய் மண்டபத்துத்  
துளங்குமா னூர்தித் தூமலர்ப் பள்ளி  
வெண்டிரை விரிந்த வெண்ணிறச் சாமரை  
கொண்டிரு மருங்குங் கோதையர் வீச  
இருந்தோன் திருந்தடி பொருந்திநின் றேத்திப்  
  
43  
  
உரை  
  
51  
  
அரவ வண்டொடு தேனினம் ஆர்க்கும்-ஒலிக்கின்ற வண்டுகளுடன் தேனினமும் ஆரவாரிக்கும், தருமணல் ஞெமிரிய திருநாறு ஒரு சிறை - கொண்டுவந்திட்ட மணல் பரந்த முன்றிலையுடைய அழகு தோன்றும் ஒரு பக்கத்தில், பவழத் தூணத்துப் பசும்பொன் செஞ்சுவர்-பவளங்களாற் செய்த தூண்களையும் பசிய பொன்னாலாகிய செவ்விய சுவர்களையும், திகழ்ஒளி நித்திலச் சித்திர விதானத்து - ஒளி விளங்கும் முத்துக்களாகிய மேற்கட்டியையும் உடைய, விளங்கு ஒளி பரந்த பளிங்கு செய் மண்டபத்து-விளங்குகின்ற பேரொளி பரவிய பளிங்கு மண்டபத்தில், துளங்கு மான் ஊர்தித் தூமலர்ப் பள்ளி - ஒளி அசைகின்ற அரியணையாகிய நறு மலர் இருக்கையில், வெண்திரை விரிந்த வெண்ணிறச் சாமரை - வெள்ளிய அலைகள் போல விரிந்த வெண்ணிறமுடைய கவரிகளை, கொண்டு இரு மருங்கும் கோதையர் வீச - மகளிர் கொண்டு இரு பக்கமும் வீச, இருந்தோன் திருந்தடி பொருந்தி நின்று ஏத்தி - அமர்ந்திருந்த உதயகுமரனுடைய திருந்திய அடிகளை வணங்கி நின்று ஏத்த ;  
  
ஆர்க்கும் ஒரு சிறை யென்க; ஆர்க்கும் என்றதனால் மணமுடைமை பெறப்பட்டது. மணல் பரந்த முற்றத்தையுடையவென விரித்துரைத்துக் கொள்க ; ¹"தருமணன் ஞெமிரிய திருநகர் முற்றத்து" என்பது காண்க. நாறுதல்-தோன்றுதல். முத்தாலாகிய சல்லியையும் தூக்கினையும் உடைய சித்திர விதானம் என்க; ²;"ஓவிய விதானத் துரைபெறு நித்திலத்து, மாலைத் தாமம் வளையுட னாற்றி" என்றார் இளங்கோவடிகளும். மான்-அரிமான். ஊர்தி-ஏறுதற்கிடமாகவுள்ள ஆதனம் என்னும் பொருள் குறித்து நின்றது. மண்டபத்துப் பள்ளியில் இருந்தோன் என்க. ஏத்தி - ஏத்தவெனத் திரிக்க.  
  
¹ நெடுநல். 90. ² சிலப். 3: 111-2.

- [Previous: 19.5](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.5)
- [Next: 19.7](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.7)
- [Up: 19](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.18.46) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.6) · Pramāṇa
