<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 19

# Maṇimēkalai's Renunciation 19

Maṇimēkalai urai 19

- **Language:** Tamil

### [19.1](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.1)

உதயகுமரன் அம்பலம் புக்க காதை  
  
5 ஆங்கது கேட்டாங் கரும்புண் அகவயின்  
தீத்துறு செங்கோல் சென்றுசுட் டாங்குக்  
கொதித்த உள்ளமொடு குரம்புகொண் டேறி  
விதுப்புறு நெஞ்சினள் வெய்துயிர்த்துக் கலங்கித்  
தீர்ப்பலிவ் வறமெனச் சித்திரா பதிதான்  
கூத்தியன் மடந்தையர்க் கெல்லாங் கூறும்  
  
1  
  
உரை  
  
6  
  
ஆங்கது கேட்டு ஆங்கு - மணிமேகலை அறத்தோர் கோலம் பூண்டு பிச்சையேற்று னைவருக்கும் உணவளிப்பதைக் கேட்டு அப்பொழுதே, அரும்புண் அகவயின் - அரிய புண்ணின் உள்ளே, தீத்துறு செங்கோல் சென்று சுட்டாங்கு - தீயின்கண் பழுக்கக் காய்தலுற்ற செவ்விய கோலானது சென்று சுட்டாற்போல, கொதித்த உள்ளமொடு - கொதிப்புற்ற உள்ளத்துடன், குரம்பு கொண்டு ஏறி - வரம்பு கடந்து எழுந்து, விதுப்புற் நெஞ்சினள் வெய்துயிர்த்துக் கலங்கி - நடுக்க மெய்திய மனத்தளாய்ச் சுடு மூச்செறிந்து மயங்கி, தீர்ப்பல் இவ் அறமெனச் சித்திராதிபதிதான் கூத்தியல் மடந்தையர்க்கு எல்லாம் கூறும்-சித்திராதிபதியானவள் மணிமேகலை கொண்ட இவ்வறத்தினை ஒழித்து விடுவேன் என எண்ணி நாடகக் கணிகையர் அனைவர்க்கும் கூறுவாள்;  
  
தீ துறு - தீயானது பற்றிய, கோல் சுட்டாங்குத் துன்பத்தாற் கொதித்த உள்ள மென்க. குரம்பு - வரம்பு; கொண்டு - தாண்டியென்னும் பொருட்டு; ¹"குரம்பெழுந்து குற்றங்கொண் டேறார்" என்பது காண்க. விதுப்பு-விரைவுமாம். மேல் வருவன சித்திராபதி கூற்று.  
  
¹ நாலடி. 153.

### [19.2](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.2)

உதயகுமரன் அம்பலம் புக்க காதை  
  
10  
கோவலன் இறந்தபின் கொடுந்துய ரெய்தி  
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தது  
நகுதக் கன்றே நன்னெடும் பேரூர்  
இதுதக் கென்போர்க் கெள்ளுரை யாயது  
காதலன் வீயக் கடுந்துய ரெய்திப்  
போதல் செய்யா உயிரொடு புலந்து  
நளியிரும் பொய்கை யாடுநர் போல  
முளியெரிப் புகூஉம் முதுகுடிப் பிறந்த  
  
7  
  
உரை  
  
14  
  
கோவலன் இறந்தபின் கொடுந்துயர் எய்தி மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்ததும் - மாதவி தன் காதலனாகிய கோவலன் கொலையுண்ட பின்னர்க் கொடிய துன்பத்தையடைந்து அறவண வடிகள் உறைவிடத்தை அடைந்ததும், நகுதக்கன்றே நல்நெடும் பேரூர் - மிகச் சிறந்த பேரூரின்கண் சிரிக்கத்தக்கதாயிற்று, இது தக்கு என்போர்க்கு எள்ளுவரை ஆயது - இவ்வுரை தகுதியுள்ளதென்று கூறும் அறிஞர்கட்கு இகழுரையாகியது, காதலன் வீயக் கடுந்துயர் எய்தி-கணவனிறக்க மிகுந்த துயரத்தை யடைந்து, போதல் செய்யா உயிரோடு புலந்து - நீங்காத உயிருடன் வெறுப்புக் கொண்டு, நளிஇரும் பொய்கை ஆடுநர்போல - குளிர்ந்த நீரினையுடைய பெரிய குளத்தின்கட் சென்று நீராடுவார் போல, முளி எரி புகூஉம் முதுகுடிப்பிறந்த பத்தினிப் பெண்டிர் அல்லேம்-விளக்க மிக்க தீயிடைக் குளிக்கும் பழங்குடியிற் பிறந்த கற்புடை மகளி ரல்லேம் யாம்;  
  
கோவலன் கொலையுண்டமை கேட்டு மாதவி அறவணவடிகளை யடைந்து துறவு பூண்டதனை, முன்னர் ஊரலருரைத்த காதையிற் கூறினமையானும், ¹"போதியின்கீழ் மாதவர் முன் புண்ணியதானம் புரிந்த, மாதவி தன்றுறவுங் கேட்டாயோ தோழீ" என்பதனாலும் அறிக. பேரூர்-பேரூரில். இது-மணிமேகலை பிக்குணிக் கோலம் பூண்டு பிச்சை யேற்கின்றாள் என்னும் உரை. தக்கு-தக்கது: விகாரம். தக்கென்போர் - தகவுடைமையை அறிந்து கூறும் அறிஞர். முளியெரி - காய்ந்த விறகிற் பற்றிய தீ யென்றுமாம்.  
  
¹ சிலப். 26: 'காதலன்றன்.'

### [19.3](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.3)

உதயகுமரன் அம்பலம் புக்க காதை  
  
15  
  
20  
  
பத்தினிப் பெண்டிர் அல்லேம் பலர்தம்  
கைத்தூண் வாழ்க்கை கடவிய மன்றே  
பாண்மகன் பட்டுழிப் படூஉம் பான்மையில்  
யாழினம் போலும் இயல்பினம் அன்றியும்  
நறுந்தா துண்டு நயனில் காலை  
வறும்பூத் துறக்கும் வண்டு போல்குவம்  
வினைமொழி காலைத் திருவின் செல்வி  
அனையே மாகி ஆடவர்த் துறப்பேம்  
தாபதக் கோலந் தாங்கின மென்பது  
யாவரும் நகூஉம் இயல்பின தன்றே  
  
15  
  
உரை  
  
24  
  
பலர் தம் கைத்தூண் வாழ்க்கை கடவியம் அன்றே - பலருடைய கையதாகிய உணவையுண்டு வாழ்தலாகிய உரிமையையுடையேம்; பாண்மகன் பட்டுழிப் படூஉம் பான்மை இல் யாழினம் போலும் இயல்பினம்-பாணனிறந்தவிடத்து உடனிறக்குந்தன்மையில்லாத யாழைப் போன்ற இயல்புடையோம்: அன்றியும்-அஃதன்றியும், நறுந்தாது உண்டு நயன் இல் காலை-மணமுள்ள மகரந்தத்தை நுகர்ந்து பசையாகிய தேன் இல்லாதபொழுது, வறும்பூத் துறக்கும் வண்டு போல்குவம் - வறிதாகிய பூவை விட்டு நீங்கும் வண்டினையும் போல்வேம்; வினை ஒழி காலைத் திருவின் செல்வி அனையேம் ஆகி ஆடவர்த் துறப்பேம்-மற்றும் நல்வினை நீங்கும் காலத்துத் திருமகளைப் போன்றேம் ஆகி ஆடவரை விட்டு நீங்குவேம் ; தாபதக் கோலம் தாங்கினம் என்பது - பிக்குணிக் கோலம் பூண்டேம் என்பது, யாவரும் நகூஉம் இயல்பினது அன்றே - யாவரும் நகைக்கும் இயல்பையுடைய தல்லவோ ;  
  
நாடகக் கணிகையாதலின் பாண்மகனையும் யாழையும் உவமை கூறினாளென்க. நயன் இல் காலை - ஆடவரிடத்துச் செல்வமில்லாத காலத்தில் என்றுமாம். "வண்டிற் றுறக்குங்கொண்டி மகளிரை" என இக் காதையிற் பின்பும் கூறப்பட்டுள்ளது; மதுரைக் காஞ்சி யுள்ளும் ¹;"இளம்பல் செல்வர் வளந்தப வாங்கி, நுண்டா துண்டு வறும்பூத் துறக்கும், மென்சிறை வண்டின மான" என இவ் வுவமை வந்துள்ளமை அறியற்பாலது. வினை - நல்வினை. திருவின் செல்வி-திருவாகிய செல்வி. நல்வினை யுலந்த பொழுது திருமகள் நீங்குவது போலும் என்னும் இவ் வுவமை ²;"தவந்தீர் மருங்கிற் றிருமகள் போலப், பயந்தீர் மருங்கிற் பற்றுவிட் டொரீஇ" எனப் பெருங் கதையுள் வருதல்அறிந்து இன்புறற்பாலது. தாபதக்கோலம் - தவக்கோலம்.  
  
¹; மதுரைக். 572-4. ²; பெருங்கதை 1, 35: 137-8

### [19.4](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.4)

உதயகுமரன் அம்பலம் புக்க காதை  
  
25  
  
30  
மாதவி ஈன்ற மணிமே கலைவல்லி  
போதவிழ் செல்வி பொருந்துதல் விரும்பிய  
உதய குமரனாம் உலகாள் வண்டின்  
சிதையா உள்ளஞ் செவ்விதின் அருந்தக்  
கைக்கொண் டாங்கவள் ஏந்திய கடிஞையைப  
பிச்சை மாக்கள் பிறர்கைக் காட்டி  
மற்றவன் றன்னால் மணிமே கலைதனைப்  
பொற்றேர்க் கொண்டு போதே னாகில்  
  
25  
  
உரை  
  
32  
  
மாதவி ஈன்ற மணிமேகலை வல்லி - மாதவி பெற்ற மணிமேகலையாகிய பூங்கொடி, போதவிழ் செவ்வி பொருந்துதல் விரும்பிய-பூக்கும் பருவ மடைதலை விரும்பிய, உதயகுமரனாம் உலகாள் வண்டின்-உதயகுமரன் என்னும் உலகினையாள்கின்ற வண்டினது, சிதையா உள்ளம் செவ்விதின் அருந்த-வேறொன்றாலும் அழியாத மனமானது நன்றாக அருந்துமாறு, கைக்கொண்டு - மணிமேகலையைக் கையகப்படுத்து, ஆங்கவள் ஏந்திய கடிஞையை - அவள் கையில் ஏந்திய ஓட்டினை, பிச்சைமாக்கள் பிறர்கைக் காட்டி - ஏற்றுண்போராகிய பிற மக்களின் கையிலே காட்டி, மற்றவன் தன்னால் - அவ்வுதயகுமரனால், மணிமேகலைதனைப் பொற்றேர்க் கொண்டுபோதேன் ஆகில் - அவளைப் பொற்றேரின்மீது ஏற்றிக் கொண்டு வாரேனாயின் ;  
  
போதவிழ் செவ்வி பொருந்துதல் விரும்பிய என்பதற்குப் பூக்கும் பருவத்தில் அதனை யடைதற்கு விரும்பிய என்றுரைத்தலுமாம். இக்காதையுட் பின்னரும் உதயகுமரன் வண்டாக உருவகிக்கப்படுகின்றனன். தலைவன் மகளிர் நலத்தை யுண்டு துறத்தற்கு வண்டினை உவமை கூறுதலுமுண்டு; ¹"பெண்டிர் நலம்வௌவித் தண்சாரற்றாதுண்ணும், வண்டிற் றுறப்பான் மலை" என்பது காண்க. பிறர் கைக்காட்டி - பிறரிடம் பறித்துக் கொடுத்தென்றபடி.  
  
¹ கலி. 40 : 24--5.

### [19.5](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.5)

உதயகுமரன் அம்பலம் புக்க காதை  
  
35  
  
40  
  
சுடுமண் ஏற்றி அரங்குசூழ் போகி  
வடுவொடு வாழும் மடந்தையர் தம்மோர்  
அனையே னாகி அரங்கக் கூத்தியர்  
மனையகம் புகாஅ மரபின னென்றே  
வஞ்சினஞ் சாற்றி நெஞ்சுபுகை உயிர்த்து  
வஞ்சக் கிளவி மாண்பொடு தேர்ந்து  
செறிவளை நல்லார் சிலர்புறஞ் சூழக்  
குறுவியர் பொடித்த கோலவாண் முகத்தள்  
கடுந்தேர் வீதி காலிற் போகி  
இளங்கோ வேந்தன் இருப்பிடம் குறுகி  
  
33  
  
உரை  
  
42  
  
சுடுமண் ஏற்றி அரங்கு சூழ்போகி - செங்கற்களைத் தலை மீதேற்றி அரங்கினைச் சுற்றி வந்து, வடுவொடு வாழும் மடந்தையர் தம்மோ ரனையேன் ஆகி - குற்றத்துடன் கூடிவாழும் மகளிரைப் போன்றவளாகி, அரங்கக் கூத்தியர் மனையகம் புகாஅ மரபினன் என்றே-அரங்கின்கண் ஆடுகின்றநாடக மகளிருடைய இல்லத்தின் கண் நுழையாத முறைமையளாவேன் என்று, வஞ்சினம் சாற்றி நெஞ்சு புகை உயிர்த்து-வஞ்சினங்கூறி நெஞ்சு புகையெழப் பெருமூச் செறிந்து, வஞ்சக்கிளவி மாண்பொடு தேர்ந்து - வஞ்சம் பொருந்திய சொல்லை நன்கு ஆராய்ந்து, செறிவளை நல்லார் சிலர் புறம் சூழ் - நெருங்கிய வளையல்களை யணிந்த பொது மகளிர் சிலர் புறத்தே சூழ, குறுவியர் பொடித்த கோலவாண் முகத்தள் - சிறு வியர்வைநீர் அரும்பிய அழகு பொருந்திய ஒள்ளிய முகத்தையுடையளாய், கடுந்தேர் வீதி காலிற்போகி - விரைந்த செலவினையுடைய தேர்கள் செல்லும் வீதியில் நடந்து சென்று, இளங்கோ வேந்தன் இருப்பிடம் குறுகி - அரசிளங் குமரன் இருப்பிடத்தை அடைந்து ;  
  
ஏற்றி - ஏற்றப்பட்டு என்றுமாம். பதியிலாரிற் குடிக்குற்றப் பட்டாரை ஏழு செங்கற் சுமத்தி அரங்கு சூழ்வித்துப் புறத்து விடுதல் மரபாகலின், சித்திராபதி இங்ஙனம் வஞ்சினஞ் சாற்றினளென்க ; 'ய ங்குஞ் சூழ்போகி' எனப் பாடங் கொண்டு, ஊரைச் சுற்றி வந்து என்றுரைத்தலுமாம்; ¹;"சுடும ணேறா வடுநீங்கு சிறப்பின்" என்பதும் அதன் உரைகளும் காண்க. மடந்தையர் தம்மோர் ; ஓர் : அசை. மரபினன் : அன்விகுதி, தன்மைக்கண் வந்தது ; 'மரபினளன்றென' என்பதும் பாடம் வஞ்சக்கிளவி - மணிமேகலையை உதயகுமரன் வய மாக்கற்கேற்ற சொல். கோலமுகத்து வியர்பொடித்தவளாய் எனப் பிரித்துக் கூட்டுதலுமாம்.  
  
¹ சிலப். 14 : 146.

### [19.6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.6)

உதயகுமரன் அம்பலம் புக்க காதை  
  
45  
  
50  
  
அரவ வண்டொடு தேனினம் ஆர்க்கும்  
தருமணன் ஞெமிரிய திருநா றொருசிறைப்  
பவழத் தூணத்துப் பசும்பொற் செஞ்சுவர்த்  
திகழொளி நித்திலச் சித்திர விதானத்து  
விளங்கொளி பரந்த பளிங்குசெய் மண்டபத்துத்  
துளங்குமா னூர்தித் தூமலர்ப் பள்ளி  
வெண்டிரை விரிந்த வெண்ணிறச் சாமரை  
கொண்டிரு மருங்குங் கோதையர் வீச  
இருந்தோன் திருந்தடி பொருந்திநின் றேத்திப்  
  
43  
  
உரை  
  
51  
  
அரவ வண்டொடு தேனினம் ஆர்க்கும்-ஒலிக்கின்ற வண்டுகளுடன் தேனினமும் ஆரவாரிக்கும், தருமணல் ஞெமிரிய திருநாறு ஒரு சிறை - கொண்டுவந்திட்ட மணல் பரந்த முன்றிலையுடைய அழகு தோன்றும் ஒரு பக்கத்தில், பவழத் தூணத்துப் பசும்பொன் செஞ்சுவர்-பவளங்களாற் செய்த தூண்களையும் பசிய பொன்னாலாகிய செவ்விய சுவர்களையும், திகழ்ஒளி நித்திலச் சித்திர விதானத்து - ஒளி விளங்கும் முத்துக்களாகிய மேற்கட்டியையும் உடைய, விளங்கு ஒளி பரந்த பளிங்கு செய் மண்டபத்து-விளங்குகின்ற பேரொளி பரவிய பளிங்கு மண்டபத்தில், துளங்கு மான் ஊர்தித் தூமலர்ப் பள்ளி - ஒளி அசைகின்ற அரியணையாகிய நறு மலர் இருக்கையில், வெண்திரை விரிந்த வெண்ணிறச் சாமரை - வெள்ளிய அலைகள் போல விரிந்த வெண்ணிறமுடைய கவரிகளை, கொண்டு இரு மருங்கும் கோதையர் வீச - மகளிர் கொண்டு இரு பக்கமும் வீச, இருந்தோன் திருந்தடி பொருந்தி நின்று ஏத்தி - அமர்ந்திருந்த உதயகுமரனுடைய திருந்திய அடிகளை வணங்கி நின்று ஏத்த ;  
  
ஆர்க்கும் ஒரு சிறை யென்க; ஆர்க்கும் என்றதனால் மணமுடைமை பெறப்பட்டது. மணல் பரந்த முற்றத்தையுடையவென விரித்துரைத்துக் கொள்க ; ¹"தருமணன் ஞெமிரிய திருநகர் முற்றத்து" என்பது காண்க. நாறுதல்-தோன்றுதல். முத்தாலாகிய சல்லியையும் தூக்கினையும் உடைய சித்திர விதானம் என்க; ²;"ஓவிய விதானத் துரைபெறு நித்திலத்து, மாலைத் தாமம் வளையுட னாற்றி" என்றார் இளங்கோவடிகளும். மான்-அரிமான். ஊர்தி-ஏறுதற்கிடமாகவுள்ள ஆதனம் என்னும் பொருள் குறித்து நின்றது. மண்டபத்துப் பள்ளியில் இருந்தோன் என்க. ஏத்தி - ஏத்தவெனத் திரிக்க.  
  
¹ நெடுநல். 90. ² சிலப். 3: 111-2.

### [19.7](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.7)

உதயகுமரன் அம்பலம் புக்க காதை  
  
அதிருந்தெயி றிலங்கச் செவ்வியி னக்கவன்  
மாதவி மணிமே கலையுடன் எய்திய  
தாபதக் கோலந் தவறின் றோவென  
  
52  
  
உரை  
  
54  
  
திருந்து எயிறு இலங்கச் செவ்வியின் நக்கு அவன் - உதயகுமரன் அழகிய பற்கள் விளங்குமாறு செவ்வையாகச் சிரித்து, மாதவி மணிமேகலையுடன் எய்திய - மாதவி மணிமேகலையுடன் கொண்ட, தாபதக் கோலம் தவறின்றோ என - தவ வேடம் தவறின்றி யுளதோ வென்று கேட்க ; தாபதக்கோலம்-தவவேடம்; என்றது பிக்குணிக் கோலத்தை.

### [19.8](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.8)

உதயகுமரன் அம்பலம் புக்க காதை  
  
55  
  
60  
  
அரிதுபெறு சிறப்பிற் குருகுகரு உயிர்ப்ப  
ஒருதனி யோங்கிய திருமணிக் காஞ்சி  
பாடல்சால் சிறப்பிற் பரதத் தோங்கிய  
நாடகம் விரும்ப நன்னலங் கவினிக்  
காமர் செவ்விக் கடிமலர் அவிழ்ந்தது  
உதய குமரனெனும் ஒருவண் டுணீஇய  
விரைவொடு வந்தேன் வியன்பெரு மூதூர்  
பாழ்மம் பறந்தலை அம்பலத் தாயது  
வாழ்கநின் கண்ணி வாய்வாள் வேந்தென  
  
55  
  
உரை  
  
63  
  
அரிது பெறு சிறப்பில் குருகு கரு வுயிர்ப்ப - அரிதிற் பெற்ற சிறப்பினால் பறவைகள் ஈனும் வண்ணம், ஒரு தனி ஓங்கிய திருமணிக் காஞ்சி - ஒப்பற்றுயர்ந்த அழகிய கரிய காஞ்சி மரம், பாடல் சால் சிறப்பில் பரதத்து ஓங்கிய-பாடல் சான்ற சிறப்பினையுடைய பரத கண்டத்தில் உயர்ந்த, நாடகம் விரும்ப நன்னலம் கவினி - நாடுகளினிடம் விரும்புமாறு அழகிய நலங்கள் நிறைந்து. காமர் செவ்விக் கடிமலர் அவிழ்ந்தது-விரும்பப்படும் செவ்வியையுடைய நறிய மலர் விரியப் பெற்றது; உதயகுமரன் எனும் ஒரு வண்டு உணீஇய - அதனை உதயகுமரனாகிய ஒப்பற்ற வண்டு உண்ணும் பொருட்டு, விரைவொடு வந்தேன்-விரைந்து வந்தேன் ; வியன்பெரு மூதூர்ப் பாழ்ம்ம் பறந்தலை அம்பலத்தாயது - அது மிக்க பெருமையையுடைய இம் மூதூரின் கண்ணே பாழிடமாகிய புறங்காட்டைச் சார்ந்த உலக வறவியில் உள்ளது ; வாழ்க நின் கண்ணி வாய்வாள் வேந்து என-கூரிய வாய் பொருந்திய வாளினையுடைய மன்னவ நின் கண்ணி வாழ்வதாக என வுரைப்ப ;  
  
உதயகுமரன் அவைக் களத்திருந்தா னாகலின் சித்திராபதி தான் கூறுவதனைக் குறிப்பி னுணர்ந்துகொள்ளுமாறு சிலேடையாற் கூறுவாளாயினள். காஞ்சிமரத்தைப் புனைந்துரைப்பது போன்ற இதன்கண், 'குருகு' என்பது மாதவியையும், 'மணிக் காஞ்சி' என்பது மணிமேகலையையும் குறித்து நின்றன. மாதவிபெற ஓங்கிய மணிமேகலை நாடகம் விரும்பப் பருவ மெய்தினளென்க. குருகு-குருக்கத்தி ; இது மாதவியெனவும் படும். காஞ்சி - மேகலையாதலைத் திவாகரம் முதலியவற்றானறிக, நாடகம் - நாட்டினிடம், நாடகக்கலை. நாடகம் இவளாற் சிறப்பெய்து மாகலின் "நாடகம் விரும்ப" என்றார் ; ¹"நாடக மேத்து நாடகக் கணிகை" என வருதல் காண்க. நலம் கவினி - நலம் நிறைந்து என்னும் பொருட்டு. காமர்-விருப்பம். 'உதயகுமரனெனு மொருவண்டு' என்றது முன்னிலைப் புறமொழி. பறந்தலை - புறங்காடு. குருகு கருவுயிர்ப்ப ஓங்கிய காஞ்சி, நலங் கவினிக் கடிமல ரவிழ்ந்தது ; அதனை உதயகுமரனாகிய வண்டு உண்ணும் பொருட்டு வந்தேன் ; அக் காஞ்சி அம்பலத்தாயது என்க. கண்ணி-தலையிற் சூடும் மாலை. நின் கண்ணி வாழ்க வென்றல் மரபு.  
  
¹ சிலப். பதி. 15.

### [19.9](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.9)

உதயகுமரன் அம்பலம் புக்க காதை  
  
ஓங்கிய பௌவத் துடைகலப் பட்டோன்  
வான்புணை பெற்றென மற்றவட் குரைப்போன்  
  
64  
  
உரை  
  
65  
  
ஓங்கிய பௌவத்து உடைகலப் பட்டோன் வான்புணை பெற்றென - பெரிய கடலிலே கப்பல் உடையப்பட்டவன் சிறந்த தெப்பத்தைப் பெற்றாற்போலக் கருதி, மற்று அவட்கு உரைப்போன் - சித்திராபதிக்குக் கூறுபவனாய்.  
  
உடைகலப் பட்டோன் - கலம் உடையப் பட்டோன் என மாறுக. "உடைகலப் பட்டாங் கொழிந்தோர் தம்முடன்" (16:20) என முன் வந்தமையுங் காண்க.

### [19.10](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.10)

உதயகுமரன் அம்பலம் புக்க காதை  
  
70  
மேவிய பளிங்கின் விருந்திற் பாவையிஃது  
ஓவியச் செய்தியென் றொழிவேன் முன்னர்க்  
காந்தளஞ் செங்கை தளைபிணி விடாஅ  
ஏந்திள வனமுலை இறைநெரித் ததூஉம்  
ஒத்தொளிர் பவளத் துள்ளொளி சிறந்த  
முத்துக்கூர்த் தன்ன முள்ளெயிற் றமுதம்  
அருந்தே மாந்த ஆருயிர் தளிர்ப்ப  
விருந்தின் மூரல் அரும்பிய தூஉம்  
  
66  
  
உரை  
  
73  
  
மேவிய பளிங்கின் விருந்தின் பாவை இஃது ஓவியச் செய்தி யென்று ஒழிவேன் முன்னர்-பளிக்கறையின்கண் பொருந்திய புதுமையினை யுடைய பாவையாகிய இது சித்திரச் செய்கை என்று நீங்குவேன் முன்னே, காந்தளஞ் செங்கை தளைபிணி விடாஅ ஏந்து இளவனமுலை இறைநெரித்ததூஉம் - காந்தள் மலர் போன்ற சிவந்த கைகள் பிணித்த பிணிப்பு விடாவாய் ஏந்திய இளைய அழகிய முலையை இறையளவு நெரித்த செய்கையும், ஒத்தொளிர் பவளத்து உள் ஒளி சிறந்த - பவளத்தை யொத்து ஒளிருகின்ற வாயினுள்ளே ஒளிமிக்க, முத்துக் கூர்த்தன்ன முள்எயிற்று அமுதம் - முத்துக்கள் கூர்மையுற்றாலன்ன கூரிய பற்களின்கண் ஊறுகின்ற அமுதினை, அருந்த ஏமாந்த ஆருயிர் தளிர்ப்ப-அருந்துதற்கு ஆசைப்பட்ட அரிய உயிரானது தளிர்க்குமாறு, விருந்தின் மூரல் அரும்பியதூஉம் - புதிய புன்முறுவல் பூத்ததுவும் ;  
  
முன்பு மணிமேகலை தன்னைக் கண்டு அஞ்சிப் பளிக்கறையிற் புகுந்த பொழுது அவளை ஓவியமென்று தான் எண்ணியிருந்தானாக உதயகுமரன் கூறினானென்க. விடா அஃஎதிர்மறை வினையெச்சமுற்று. இறை - சிறிது. அருந்த என்னும் பெயரெச்சத் தகரம் தொக்கது ; "அருந்தே மாந்த வாருயிர் முதல்வனை" (14 : 68) என முன்னரும் இங்ஙனம் போந்தது.

### [19.11](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.11)

உதயகுமரன் அம்பலம் புக்க காதை  
  
75  
  
80  
மாயிதழ்க் குவளை மலர்புறத் தோட்டிக்  
காய்வேல் வென்ற கருங்கயல் நெடுங்கண்  
அறிவுபிறி தாகிய தாயிழை தனக்கெனச்  
செவியகம் புகூஉச் சென்ற செவ்வியும்  
பளிங்குபுறத் தெறிந்த பவளப் பாவையென்  
உளங்கொண் டொளித்தாள் உயிர்க்காப் பிட்டென்று  
இடையிருள் யாமத் திருந்தேன் முன்னர்ப்  
  
74  
  
உரை  
  
80  
  
மாயிதழ்க் குவளை மலர் புறத்து ஓட்டிக் காய்வேல் வென்ற கருங்கயல் நெடுங்கண் - கரிய இதழ்களையுடைய குவளை மலர்களைப் புறத்தே ஓடச்செய்து காய்கின்ற வேலினை வென்ற கரிய கயல்மீனைப் போன்ற நீண்ட கண்கள், அறிவு பிறிதாகியது ஆயிழை தனக்கெனச் செவியகம் புகூஉச் சென்ற செவ்வியும் - மணிமேகலைக்கு அறிவு வேறுபட்டதென்று அறிவிக்குமாறு காதினிடம் ஓடிச் சென்ற அழகும், பளிங்கு புறத்தெறிந்த பவளப்பாவை என் உளம் கொண்டு ஒளித்தாள் உயிர்க் காப்பிட்டு என்று-ஆகிய இவற்றைக்கொண்டு பளிக்கறையின் புறத்தே தோன்றிய பவளப்பாவை உயிரைக் காத்தல் செய்து என் உளத்தில் ஒளித்தாள் என்று, இடையிருள் யாமத்து இருந்தேன் முன்னர்-இருளையுடைய இடையாமத்தில் துயிலாதிருந்தேன் முன்பு ;  
  
ஓட்டி வென்ற கண், கயல் நெடுங்கண் என்க. செவியில்உ,ரைக்கப் புக்கதுபோற் சென்ற வென்க. கண்ணின் இயல்பாகிய நீட்சியையோ அல்லது மீட்சியையோ இங்ஙனங் கற்பித்துக் கூறுதலால் இதுதற்குறிப்பேற்றம். கொண்டு - நெரித்ததூஉம் அரும்பியதூஉம் செவ்வியுமாகிய இவற்றைக் கொண்டு, பாவை கொண்டு உயிர்க்காப்பிட்டு என் உளத்து ஒளித்தாள் என்க. இருந்தேன் முன்னர் - துயிலாதிருந்தேனுடைய முன்பு; "பொங்கு மெல்லமளியிற் பொருந்தா திருந்தோன், முன்னர்த் தோன்றி" (7: 6-7) என முன்பு வந்திருத்தல் காண்க. இருந்தேன் ; அங்ஙனமிருந்த என் முன்னர் என வேற்றுத்துரைக்க.

### [19.12](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.12)

உதயகுமரன் அம்பலம் புக்க காதை  
  
85  
பொன்றிகழ் மேனி ஒருத்தி தோன்றிச்  
செங்கோல் காட்டிச் செய்தவம் புரிந்த  
அங்கவள் தன்றிறம் அயர்ப்பா யென்றனள்  
தெய்வங் கொல்லோ திப்பியங் கொல்லோ  
எய்யா மையலேன் யானென் றவன்சொலச்  
  
81  
  
உரை  
  
85  
  
பொன்திகழ் மேனி ஒருத்தி தோன்றி - பொன்போல விளங்குகின்ற திருமேனியையுடைய ஒருத்தி தோன்றி, செங்கோல் காட்டி - செங்கோன்மையை அறிவுறுத்தி, செய்தவம் புரிந்த அங்கவள் தன்திறம் அயர்ப்பாய் என்றனள் - தவநெறியிற் செல்லும் மணிமேகலையின்மீது கொண்ட எண்ணத்தை மறப்பாய் என்று கூறினள், தெய்வங் கொல்லோ திப்பியங் கொல்லோ எய்யா மையலேன் யான் என்று அவன் சொல-அங்ஙனங் கூறியது ஒரு தெய்வந்தானோ அன்றி வானவர் உலகில் தோன்றிய வேறு பொருளோ இன்னதென அறியாத மயக்கமுடையேன் என்று உதயகுமரன் கூற ;  
  
ஒருத்தி என்றது மணிமேகலா தெய்வத்தை- எய்யாமை - அறியாமை : உரிச்சொல், திப்பியங் கொல்லோ - வியப்பினை விளைவிக்கும் வேறொன்றோ என்றுமாம்.

### [19.13](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.13)

உதயகுமரன் அம்பலம் புக்க காதை  
  
சித்திரா பதிதான் சிறுநகை எய்தி  
அத்திறம் விடுவாய் அரசிளங் குரிசில்  
காமக் கள்ளாட் டிடைமயக் குற்றன  
தேவர்க் காயினுஞ் சிலவோ செப்பின்  
  
86  
  
உரை  
  
89  
  
சித்திராபதி தான் சிறு நகை எய்தி - சித்திராபதி சிறுநகையடைந்து, அத்திறம் விடுவாய் அரசிளங்குரிசில்-இளவரசர் பெருந்தகையே நின் கனவிற்றோன்றி ஒருத்தி கூறியதனை விடுவாயாக, காமக் கள்ளாட்டிடை மயக்குற்றன தேவர்க்காயினும் சிலவோ செப்பின்-கூறுங்கால் வானவர்களிடத்தும் காமக் கள்ளாட்டின் கண் மயங்கிச் செய்த செய்கைகள் சிலவாமோ ;  
  
காமக் கள்ளாட்டிடை - காமமாகிய கள்ளை உண்டவழி. அறிவை மயக்குதலானும், வெளிப்படுந்தோறும் விருப்பத்தை யுண்டாக்குதலானும் காமம் கள்ளினை யொப்பதாயிற்று ; ¹"களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம், வெளிப்படுந் தோறு மினிது" என்பது காண்க. தேவர்களும் மயங்கிச் செய்தன பல வென்றபடி.  
  
¹ குறள். 1145.

### [19.14](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.14)

உதயகுமரன் அம்பலம் புக்க காதை  
  
90  
  
95  
  
மாதவன் மடந்தைக்கு வருந்துதுய ரெய்தி  
ஆயிரஞ் செங்கண் அமரர்கோன் பெற்றதும்  
மேருக் குன்றத் தூறுநீர்ச் சரவணத்து  
அருந்திறன் முனிவர்க் காரணங் காகிய  
பெரும்பெயர்ப் பெண்டிர் பின்புளம் போக்கிய  
அங்கி மனையாள் அவரவர் வடிவாய்த்  
தங்கா வேங்கை தனையவள் தணித்ததூஉம்  
கேட்டு மறிதியோ வாட்டிறற் குரிசில்  
  
90  
  
உரை  
  
97  
  
மாதவன் மடந்தைக்கு வருந்து துயர் எய்தி ஆயிரஞ் செங்கண் அமரர்கோன் பெற்றதும் - கௌதம முனிவர் மனைவியாகிய அகலிகையின் மேலுள்ள வேட்கையால் மிக்க துயருழந்து தேவர்க்கரசனாகிய இந்திரன் அம்முனிவரால் ஆயிரஞ் செங்கண் அடைந்த செய்தியும், மேருக் குன்றத்து ஊருநீர்ச் சரவணத்து-இமயமலையிலுள்ள பரந்த நீரினையுடைய சரவணப் பொய்கையில், அருந்திறல் முனிவர்க்கு ஆரணங்காகிய - அரிய வலி பொருந்திய முனிவர் எழுவர்க்கு அரிய அணங்குபோல்வாராகிய, பெரும் பெயர்ப் பெண்டிர் பின்பு உளம் போக்கிய - பெரிய புகழையுடைய அவர் மனைவியர் பின்னே உளத்தைச் செலுத்திய, அங்கி மனையாள் - அக்கினிதேவன் மனைவி, அவரவர் வடிவாய்த் தாங்கா வேட்கைதனை அவண் தணித்ததூஉம் - அம் முனிவர் மனைவியரின் வடிவத்தைத் தனித்தனி கொண்டு அவனது நீங்காத வேட்கையைத் தணித்த செய்தியும், கேட்டும் அறிதியோ வாட்டிறல் குரிசில் - கேட்டும் அறியாயோ வாள்வலியுடைய அரசர் பெருந்தகையே ;  
  
துயரெய்தி அவளைச் சேர்ந்து அதனாற் பெற்றதும் என விரித்துரைத்துக் கொள்க. இந்திரன் கௌதம முனிவர் மனைவியாகிய அகலிகையை விரும்பிச் சேர்ந்து அம் முனிவரிட்ட சாபத்தால் ஆயிரங்கண் பெற்றான் என்பது புராணக்கதை. மேரு - இமயம் ; ¹"இமையவில் வாங்கிய" என்பது காண்க. ஊர்தல் - பரத்தல். சரவணம் - தருப்பைக் காடு ; அதனை யுடையதொரு பொய்கையை உணர்த்திற்று. முன்னொரு காலத்தில் அங்கிவானவன் எழுமுனிவர் மனைவியரை விரும்பி அவ்வேதனைபொறுக்கலாற்றாது காட்டிற்குச்சென்றபொழுது, அவன் எண்ணத்தை யறிந்த அவன் மனைவியாகிய சுவாகாதேவி எழு முனிவர் மனைவிகளுள் அருந்ததி யொழிந்தோர் வடிவத்தை முறையே எடுத்து, வேறுவேறு காலங்களிற் சேர்ந்து அவன் வேட்கையைத் தணித்தாள் என்பதும் புராணக்கதை.  
  
¹ கலி. 38.

### [19.15](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.15)

உதயகுமரன் அம்பலம் புக்க காதை  
  
100  
கன்னிக் காவலுங் கடியிற் காவலும்  
தன்னுறு கணவன் சாவுறிற் காவலும்  
நிறையிற் காத்துப் பிறர்பிறர்க் காணாது  
கொண்டோன் அல்லது தெய்வமும் பேணாப்  
பெண்டிர்தங் குடியிற் பிறந்தாள் அல்லள்  
  
98  
  
உரை  
  
102  
  
கன்னிக் காவலும் கடியிற் காவலும் - கன்னிப் பருவத்திற் காவலும் மணத்தின் பிற்காவலும், தன்உறுகணவன் சாவுறிற் காவலும்-தன்னை அடைந்த கணவன் இறப்பிற் காவலும் ஆகிய இவற்றை, நிறையிற் காத்துப் பிறர்பிறர்க் காணாது-உளத்தைக் கற்பு நெறியில் நிறுத்தலாற் காத்து அயலாரை நோக்காமல், கொண்டோன் அல்லது தெய்வமும் பேணா - கணவனையன்றித் தெய்வத்தையும் தொழாத, பெண்டிர்தம் குடியில் பிறந்தாள் அல்லள் - குலமகளிர்தம் மரபில் தோன்றியவள் அல்லள் ;  
  
குலமகளிர் கன்னி முதலிய முந்நிலையிலும் நிறையாற் றம்மைக்காத் தொழுகுவ ரென்றதனால் பொதுமகளிர்க்கு அந் நிலை வேறுபாடும் காத்தலும் இல்லை யென்றவாறாயிற்று. ¹"மகளிர், நிறைகாக்குங் காப்பே தலை," "தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்" என்பன காண்க.  
  
¹ குறள். 57 : 55.

### [19.16](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.16)

உதயகுமரன் அம்பலம் புக்க காதை  
  
105  
  
110  
  
நாடவர் காண நல்லரங் கேறி  
ஆடலும் பாடலும் அழகுங் காட்டிச்  
சுருப்புநாண் கருப்புவில் அருப்புக்கணை தூவச்  
செருக்கயல் நெருங்கட் சுருக்குவலைப் படுத்துக்  
கண்டோர் நெஞ்சங் கொண்டகம் புக்குப்  
பண்டேர் மொழியிற் பயன்பல வாங்கி  
வண்டிற் றுறக்குங் கொண்டி மகளிரைப்  
பான்மையிற் பிணித்துப் படிற்றுரை யடக்குதல்  
கோன்முறை யன்றோ குமரற் கென்றலும்  
  
103  
  
உரை  
  
111  
  
நாடவர் காண நல் அரங் கேறி ஆடலும் பாடலும் அழகும் காட்டி-இலக்கணப்படி அமைத்த நல்ல அரங்குகளில் ஏறி நாட்டினர் பலரும் காணும் வண்ணம் ஆடலையும் பாடலையும் எழிலையும் புலப்படுத்தி, சுருப்பு நாண் கருப்புவில் அருப்புக்கணை தூவ - வண்டுகளாகிய நாணினையுடைய கரும்புவில்லைக்கொண்ட அநங்கன் அரும்புகளாகிய அம்புகளைப் பொழிய, செருக்கயல் நெடுங்கண் சுருக்கு வலைப்படுத்து-போர்செய்யுங் கயல்மீனை யொத்த நீண்ட கண்களாகிய சுருக்கு வலையால் அகப்படுத்தி, கண்டோர் நெஞ்சம் கொண்டு அகம்புக்கு - தமதாடல் முதலியவற்றைக் கண்டோருடைய உள்ளத்தைக் கொள்ளைகொண்டு மனையிற் சென்று, பண்தேர் மொழியிற் பயன்பல வாங்கி - பண்போலும் இனிய மொழிகளால் பொன் ஆடை அணி முதலிய பல பொருள்களையும் வாங்கி, வண்டின் துறக்கும் கொண்டி மகளிரை - தேனையுண்டு மலரைத் துறக்கும் வண்டினைப் போலப் பொருள் கொடுத்தாரைப் பின்பு துறக்கும் பரத்தையரை, பான்மையில் பிணித்துப் படிற்றுரை அடக்குதல் - தன் வயமாகப் பிணித்து அவர்தம் பொய்யுரைகளை அடக்குதல், கோல்முறை அன்றோ குமரற்கு என்றலும் - இளங்கோவுக்குச் செங்கோன்முறைமை அல்லவோ என உரைத்தலும்,  
  
நல்லரங்கு-¹"எழுகோ லகலத் தெண்கோ னீளத், தொருகோலுயரத் துறுப்பின தாகி, உத்தரப் பலகையோ டரங்கின் பலகை, வைத்த விடை நிலம் நாற்கோ லாக, ஏற்ற வாயி லிரண்டுடன் பொலியத், தோற்றிய வரங்கு." நாடக மகளிர்க்கு ஆடல் முதலிய மூன்றினொன்றுங் குறையலாகா தென்பது, ²;"ஆடலும் பாடலு மழகு மென்றிக், கூறிய மூன்றி னொன்றுகுறை படாமல்" என்பதனா னறிக ; சுரும்பு, கரும்பு, அரும்பு என்பன வலித்தல் பெற்றன. அரும்பு - மொட்டறாமலர். செருக்கயல் - ஒன்றை யொன்று எதிர்ந்து போர் செய்யுங் கயல். கொண்டி மகளிர்-பொருளைக் கொள்ளும் பரத்தையர், கோன்முறை-அரசநீதி என்றுமாம். குமரற்கு:முன்னிலையிற் படர்க்கை. குடியிற் பிறந்தாளல்லள். கொண்டி மகளிருட் பட்டாள். அவளைப் பிணித்து அடக்குதல் கோன்முறை யன்றோ வென்க.  
  
¹ சிலப். 3 : 101-6. ² சிலப். 3 : 8-9.

### [19.17](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.17)

உதயகுமரன் அம்பலம் புக்க காதை  
  
115  
உதய குமரன் உள்ளம் பிறழ்ந்து  
விரைபரி நெடுந்தேர் மேற்சென் றேறி  
ஆயிழை யிருந்த அம்பல மெய்திக்  
காடமர் செல்வி கடிப்பசி களைய  
ஓடுகைக் கொண்டுநின் றூட்டுநள் போலத்  
தீப்பசி மாக்கட்குச் செழுஞ்சோ றீத்துப்  
பாத்திரம் ஏந்திய பாவையைக் காண்டலும்  
  
112  
  
உரை  
  
118  
  
உதயகுமரன் உள்ளம் பிறழ்ந்து - உதயகுமரன் மனம் மாறுதலடைந்து, விரைபரி நெடுந்தேர் மேற்சென் றேறி-விரைந்த செலவினையுடைய குதிரைகள் பூட்டப்பெற்ற பெரிய தேரின்மீது ஏறிச் சென்று, ஆயிழை இருந்த அம்பலம் எய்தி - மணிமேகலையிருந்த அம்பலத்தை யடைந்து, காடமர் செல்வி கடிப்பசி களைய ஓடுகைக் கொண்டு நின்று ஊட்டுநள் போல - பேய்களின் பசியை நீக்குதற்கு ஓட்டினைக் கையிற் கொண்டு நின்று ஊட்டுகின்ற காடு கிழாளைப் போல, தீப்பசி மாக்கட்குச் செழுஞ் சோறு ஈத்துப் பாத்திரம் ஏந்திய பாவையைக் காண்டலும் - கொடிய பசியையுடைய மக்களுக்குச் செழுஞ்சோறளித்துக் கடிஞை ஏந்தி நின்ற மணிமேகலையைக் கண்ட வளவில் ;  
  
கடி - பேய். ஊட்டுநளாகிய செல்வி போல வென்க.

### [19.18](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.18)

உதயகுமரன் அம்பலம் புக்க காதை  
  
120  
  
125  
இடங்கழி காமமொ டடங்கா னாகி  
உடம்போ டென்றன் உள்ளகம் புகுந்தென்  
நெஞ்சங் கவர்ந்த வஞ்சக் கள்வி  
நோற்றூண் வாழ்க்கையின் நோசிதவந் தாங்கி  
ஏற்றூண் விரும்பிய காரணம் என்னெனத்  
தானே தமியள் நின்றோள் முன்னர்  
யானே கேட்டல் இயல்பெனச் சென்று  
நல்லாய் என்கொல் நற்றவம் புரிந்தது  
சொல்லாய் என்று துணிந்துடன் கேட்ப  
  
119  
  
உரை  
  
127  
  
இடங்கழி காமமொடு அடங்கான் ஆகி - வரம்பின்றிப் பெருகிய காமத்தோடு அடங்காதவனாய், உடம்போடு என்றன் உள்ளகம் புகுந்து என் நெஞ்சம் கவர்ந்த வஞ்சக் கள்வி - உடலுடன் என்னுடைய நெஞ்சினுட் புகுந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த வஞ்சக் கள்வியாகிய மணிமேகலை, நோற்றூண் வாழ்க்கையின் நொசிதவம் தாங்கி - விரதங்களாற் பட்டினி விட்டுண்ணும் வாழ்க்கையையுடைய நுண்ணிய தவத்தைத் தாங்கி, ஏற்றூண் விரும்பிய காரணம் என்என - இரந்துண்ணுதலை விரும்பிய காரணம் யாது என்று, தானே தமியள் நின்றோள் முன்னர் - தானே தனியளாய் நின்றோள்முன், யானே கேட்டல் இயல்பு எனச் சென்று - யானே நேரிற் சென்று கேட்பது நன்று எனப் போய், நல்லாய் என்கொல் நற்றவம் புரிந்தது சொல்லாய் என்று துணிந்துடன் கேட்ப - நங்காய் நீ நற்றவம் செய்ய மேற்கொண்டது என்ன காரணம் அதனைக் கூறுவாயாக என்று துணிந்த கேட்க;  
  
இடங்கழி - வரம்பு கடந்த; 1"இடங்கழி நெஞ்சத் திளமையானை" என்பதன் உரை காண்க, நொசிதவம்-உடல் இளைத்தற் கேதுவாகிய தவமென்றும், மனம் நுண்ணிதாதற் கேதுவாகிய தவமென்றும் ஆம் ²: "நோற்றுணல் யாக்கை நொசிதவத்தீர்'' என்றார் இளங்கோடிகளும். உதயகுமாரன் அம்பலமெய்திப் பாவையைக் காண்டலும் அடங்கானாகி, யானே கேட்டல் இயல்பெனச் சென்று, 'புரிந்தது என்கொல் சொல் லாய்' என்று கேட்ப என்க.  
  
¹ சிலப். 23 : 37. 2 சிலப். 10 : 223.

### [19.19](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.19)

உதயகுமரன் அம்பலம் புக்க காதை  
  
130 என்னமர் காதல னிராகுலன் ஈங்கிவன்  
தன்னடி தொழுதலும் தகவென வணங்கி  
அறைபோய் நெஞ்சம் அவன்பால் அணுகினும்  
இறைவளை முன்கை ஈங்கிவன் பற்றினும்  
தொன்று காதலன் சொல்லெதிர் மறுத்தவ்  
நன்றி யன்றென நடுங்கினள் மயங்கிக்  
  
128  
  
உரை  
  
133  
  
என் அமர் காதலன் இராகுலன் ஈங்கிவன் தன் அடி தொழுதலும் தகவென வணங்கி-இவன் என்னை விரும்பிய கணவனாகிய இராகுலனாகலின் இவனுடைய அடிகளை வணங்குதலும் தகுதியே எனப் பணிந்து, அறைபோய் நெஞ்சம் அவன்பால் அணு கினும்-என் உள்ளம் ஓட்டை போய் அவனிடம் கிட்டினும், இறைவளை முன் கை ஈங்கிவன் பற்றினும் - இறையினையுடைய வளை யணிந்த முன் கையை இவன் பற்றினும், தொன்று காதலன்சொல் எதிர் மறுத்தல் - பழம்பிறப்பிற் கணவனுடைய சொல்லை எதிர் மறுத்தல், நன்றி அன்றென நடுங்கினள் மயங்கி-நன்மையன்று என நடுக்கமுற்று மயங்கியவளாய் ;  
  
ஈங்கிவன் : ஒரு சொல். அறைபோதல் - கீழறுத்துச் செல்லுதல், அணுகினும் பற்றினும் என்பன எதிர்காலத்தில் வந்தன. மறுத்தலாவது விடைகூறா தொழிதல்.

### [19.20](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.20)

உதயகுமரன் அம்பலம் புக்க காதை  
  
135 கேட்டது மொழிவேன் கேள்வி யாளரில்  
தோட்ட செவியைநீ யாகுவை யாமெனில்  
பிறத்தலும் மூத்தலும் பிணிப்பட் டிரங்கலும்  
இறத்தலு முடைய திடும்பைக் கொள்கலம்  
மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து  
மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன்  
  
134  
  
உரை  
  
139  
  
கேட்டது மொழிவேன் கேள்வியாளரில் தோட்ட செவியை நீ ஆகுவை ஆமெனில்-கேள்வியாளர்போல நீ துளைக்கப் பட்ட செவியுடையை ஆகுவையானால் நீ கேட்டதற்கு மறுமொழி கூறுவேன் ; பிறத்தலும் மூத்தலும் பிணிப்பட்டு இரங்கலும் இறத்தலும் உடையது - பிறத்தலும் முதுமை யெய்தலும் நோய்ப்பட்டு வருந்துதலும் இறத்தலும் உடையது ; இடும்பைக் கொள்கலம்- துன்பத்திற்குக் கொள்கலமானது ; மக்கள் யாக்கை இது என உணர்ந்து - மக்கள் உடம்பாகிய இது என அறிந்து, மிக்க நல் அறம் விரும்புதல் புரிந்தேன் - மேன்னையுடைய அருளறத்தினை விரும்புவேனாயினேன் ;  
  
ஆகுவை யாமெனில் மொழிவேன் என மாறுக. கேள்வியாளர் - உண்மைப் பொருளைக் கேட்டுணர்பவர்; ¹"கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி'' என்பது ஈண்டு உணர்தற் பாலது. மக்கள் யாக்கையாகிய இது உடையது கொள்கலம் என வுணர்ந்தென்க.  
  
நல்லறம்-அருளறம்: தயாதருமம், ²"வினையின் வந்தது வினைக்கு விளையாவது,......, மக்கள் யாக்கை யிதுவென உணர்ந்து'' என இந்நூலுள் முன்னர் யாக்கையி னிழிபு கூறப்பட்டிருத்தலும் காண்க.  
  
¹ குறள். 418. ² மணி. 4 : 112 - 20.

### [19.21](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.21)

உதயகுமரன் அம்பலம் புக்க காதை  
  
140 மண்டமர் முருக்குங் களிறனை யார்க்குப்  
பெண்டிர் கூறும் பேரறி வுண்டோ  
கேட்டனை யாயின் வேட்டது செய்கென  
  
140  
  
உரை  
  
142  
  
மண்டமர் முருக்கும் களிறு அனையார்க்குப் பெண்டிர் கூறும் பேரறிவு உண்டோ-மிக்குச் செல்லுகின்ற போரையழிக்கும் களிற்றினை யொத்த ஆடவர்க்கு மகளிர் கூறும் பேரறிவும் உண்டோ, கேட்டனை ஆயின் வேட்டது செய்கென - இதனைக் கேட்டா யாதலின் இனி நீ விரும்பியதைச் செய்க என்று கூறி;  
  
அமரின்கண் பகைவரைக் கொல்லும் என்றுமாம். களிறனை யார்க்கு என்றது முன்னிலைப்புறம். "இளமை நாணி முதுமை யெய்தி ......செறிவளை மகளிர் செப்பலு முண்டோ" (4: 107 - 10) என முன்னர்ச் சுதமதி உதயகுமாரனுக்கு நீதி கூறியவாறுங் காண்க.

### [19.22](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.22)

உதயகுமரன் அம்பலம் புக்க காதை  
  
145  
  
150 வாட்டிறற் குரிசிலை மடக்கொடி நீங்கி  
முத்தை முதல்வி முதியாள் இருந்த  
குச்சரக் குடிகை தன்னகம் புக்காங்கு  
ஆடவர் செய்தி அறிகுநகர் யாரெனத்  
தோடலர் கோதையைத் தொழுதனள் ஏத்தி  
மாய விஞ்சை மந்திரம் ஓதிக்  
காயசண் டிகையெனுங் காரிகை வடிவாய்  
மணிமே கலைதான் வந்து தோன்ற  
  
143  
  
உரை  
  
150  
  
வாள்திறல் குரிசிலை மடக்கொடி நீங்கி -மணிமேகலை வாள் வலியுடைய மன்னவன் புதல்வனை நீங்கி, முத்தை முதல்வி முதியாள் இருந்த-அனைவருக்கும் முற்பட்ட முதல்வியாகிய சம்பாபதி அமர்த்திருக்கின்ற, குச்சரக் குடிகைதன் அகம் புக்கு ஆங்கு - சிறிய கோயிலினுள் நுழைந்து அவ்விடத்தில், ஆடவர் செய்தி அறிகுநர் யார் என - ஆண்மக்களின் செயலை அறிவோர் யாவர் என்று எண்ணி, தோடலர் கோதையைத் தொழுதனள் ஏத்தி - இதழ் விரிகின்ற மலர்மாலையை யணிந்த சம்பாபதியை வணங்கித் துதித்து, மாய விஞ்சை மந்திரம் ஓதி - மாயவித்தை யுடைய மந்திரத்தை ஓதி, காயசண்டிகை எனும் காரிகை வடிவாய்-காயசண்டிகை என்னும் விஞ்சை மகளின் வடிவங்கொண்டு, மணி மேகலைதான் வந்து தோன்ற - மணிமேகலை வெளியே வந்து தோன்ற ;  
  
முத்தை: முந்தை யென்பதன் திரிபு. குச்சரம் - கூர்ச்சர நாடு; குச்சரக் குடிகை - கூர்ச்சர நாட்டுப் பணியமைந்த சிறிய கோயில் என்பர். ஆங்கு:அசை. ஆடவர் செய்கையை அறிகுநர் யார் என்றது மணிமேகலை தன் அறிவுரையைக் கேட்ட பின்னும் உதயகுமரன் காமத்தைக் கடக்கலாற்றாது தன்னைப் பற்றுதலுங் கூடுமென எண்ணினாள் என்னும் குறிப்பிற்று. மாயவிஞ்சை மந்திரம் என்றது மணிமேகலா தெய்வம் அருளிய வேற்றுரு எய்துவிக்கும் மந்திரத்தை.

### [19.23](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.23)

உதயகுமரன் அம்பலம் புக்க காதை  
  
155 அணிமலர்த் தாரோன் அவள்பாற் புக்குக்  
குச்சரக் குடிகைக் குமரியை மரீஇப்  
பிச்சைப் பாத்திரம் பெரும்பசி உழந்த  
காயசண் டிகைதன் கையிற் காட்டி  
மாயையின் ஒளித்த மணிமே கலைதனை  
ஈங்கிம மண்ணீட் டியாரென உணர்கேன்  
ஆங்கவள் இவளென் றருளா யாயிடின்  
பன்னா ளாயிரனும் பாடு கிடப்பேன்  
  
151  
  
உரை  
  
158  
  
அணிமலர்த் தாரோன் அவள்பாற் புக்கு - அழகிய மலர் மாலையினையுடைய உதயகுமரன் காயசண்டிகை யுருக்கொண்ட நங்கையிடஞ் சென்று, குச்சரக் குடிகைக் குமரியை மரீ இ-பின்பு கோயிலின்கண் உள்ள சம்புத்தெய்வத்தைப் பொருந்தி நின்று, பிச்சைப் பாத்திரம் பெரும்பசி உழந்த காயசண்டிகை தன்கையில் காட்டி - தன் கையிலிருந்த திருவோட்டைப் பெரும்பசியால்வருந்திய காயசண்டிகையின் கையிற் கொடுத்து, மாயையின் ஒளித்த மணிமேகலைதனை-மாயையினால் மறைந்த மணிமேகலையை, ஈங்கிம மண்ணீட்டு யார் என உணர்கேன் - ஈண்டுள்ள இப் பாவைகளுள் யார்என்று அறிவேன், ஆங்கவள் இவள் என்று அருளாய் ஆயிடின் - அம் மணிமேகலை இன்னளென அறிவித்தருளாய் ஆயின், பல்நாள் ஆயினும் பாடுகிடப்பேன் - பலநாட்களாயினும் ஈண்டு வரங்கிடப்பேன் ;  
  
மண்ணீடு-சுதையாற் செய்யப்பட்ட பாவை. "நெடுநிலை மண்ணீடு நின்ற வாயிலும்" (6: 47) என இந்நூலுள் முன்னரும், ¹"கண்ணுள் வினைஞரும் மண்ணீட் டாளரும்" எனச் சிலப்பதிகாரத்தும் வருதல் காண்க. ஆங்கவள் : ஒரு சொல் ; ²;"தெள்வன் புனற் சென்னி" என்னுஞ் செய்யுளுரையில், "இங்கிவை உங்குவை யென்பன ஒரு சொல்" எனப் பேராசிரியருரைத்தமை காண்க. பாடு கிடத்தல்-வரம் வேண்டிக் கிடத்தல் ; கருதியது கைகூடும் வரை எழாது கிடத்தலென்க ; ³;"பாசண்டச் சாத்தற்குப் பாடுகிடந் தாளுக்கு" என்பது காண்க.  
  
¹ சிலப். 5: 30. 2 திருச்சிற். 237. 3 சிலப். 9: 15.

### [19.24](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.24)

உதயகுமரன் அம்பலம் புக்க காதை  
  
160  
  
165  
  
170 இன்னுங் கேளாய் இமையோர் பாவாய்  
பவளச் செவ்வாய்த் தவளவாள் நகையும்  
அஞ்சனஞ் சேராச் செங்கயல் நெடுங்கணும்  
முறிந்துகடை நெரிய வளைந்தசிலைப் புருவமும்  
குவிமுட் கருவியும் கோணமும் கூர்நுனைக்  
கவைமுட் கருவியும் ஆகிக் கடிகொளக்  
கல்விப் பாகரிற் காப்புவலை யோட்டி  
வல்வா யாழின் மெல்லிதின் விளங்க  
முதுக்குறை முதுமொழி எடுத்துக் காட்டிப்  
புதுக்கோள் யானை வேட்டம் வாய்த்தென  
முதியாள் உன்றன் கோட்டம் புகுந்த  
மதிவாள் முகத்து மணிமே கலைதனை  
ஒழியப் போகேன் உன்னடி தொட்டேன்  
இதுகுறை யென்றனன் இறைமகன் றானென்.  
  
159  
  
உரை  
  
172  
  
இன்னும் கேளாய் இமையோர் பாவாய்-வானோர்தலைவியே இன்னுங் கேட்பாயாக, பவளச் செவ்வாய்த் தவள வாள் நகையும் - பவளம்போற் சிவந்த வாயின்கணுள்ள வெள்ளொளி பொருந்திய பற்களும், அஞ்சனம் சேராச் செங்கயல் நெடுங்கணும்- மையெழுதப்படாத சிவந்த கயல்போலும் நீண்ட கண்களும், முறிந்து கடை நெரிய வரிந்த சிலைப் புருவமும்-கடை நெரியுமாறு வளைந்து வரிந்த வில்லைப் போன்ற புருவங்களும், குவிமுட் கருவியும் கோணமும் கூர்நுனைக் கவைமுட் கருவியும் ஆகிக் கடிகொள களிற்றினை யடக்கும் குவிந்த முள்ளையுடைய கருவியும் தோட்டியும் கூரியமுனையையுடைய கவைத்த முட்களாலாகிய பரிக்கோலுமாகிக் காவல் கொள்ள, கல்விப் பாகரில் காப்புவலை ஓட்டி-கல்வியாகிய பாகரால் காப்பினையுடைய வலையை வீசி, வல்வாய் யாழின் மெல்லிதின் விளங்க - சொல்வன்மையுடைய வாயாகிய யாழினால் இனிதாக விளங்குமாறு, முதுக்குறை முதுமொழி எடுத்துக்காட்டி - பேரறிவைவிளக்கும் முதுமொழிகளை எடுத்துக்காட்டி, புதுக்கோள் யானை வேட்டம் வாய்த்தென - புதிதாகக் கொள்ளப்படும் யானை வேட்டத்தின்கண் அகப்பட்டதென்று, முதியாள் உன்றன் கோட்டம் புகுந்த - சம்பாபதீ நின்னுடைய கோயிலிற் புகுந்த, மதிவாள் முகத்து மணிமேகலைதனை ஒழியப்போகேன்-மதிபோலும் ஒள்ளிய முகத்தினையுடைய மணிமேகலையை ஈண்டு விடுத்துச் செல்லேன் ; உன் அடி தொட்டேன் - நின் திருவடிகளைத் தொட்டுச் சூளுற்றேன் ; இது குறை என்றனன் இறைமகன் தான் என் - எனக்கு வேண்டும் காரியம் இதுவென்று உதயகுமரன் கூறின  
னென்க  
  
ஈண்டு இமையோர் பாவாய் என்றது போலப் பின்னர் "வானோர் பாவாய்" (25-147) எனச் சிந்தாதேவியை விளித்தலுங் காண்க. பிக்குணியாதலின் கண்ணுக்கு மைதீட்டிற்றில ளென்க. வரிந்த சிலை - கட்டமைந்த வில் ; நாணேற்றிய வில்லுமாம். கோணம் - தோட்டியென்னுங் கருவி ; கவைமுட் கருவி - கவைத்த முள்ளையுடைய பரிக்கோல்: ¹"கோணந் தின்ற வடுவாழ் முகத்த" ²;"கவைமுட் கருவியின் வடமொழி பயிற்றி" என்பன காண்க.  
  
நகை குவிமுட் கருவியும், கண் கோணமும், புருவம் கவைமுட் கருவியுமாகி என நிரனிறையாக்குக. காப்பு என்றது வலைக்கு அடை. கலையாகிய வலையென உருவகம் விரித்துரைக்க. தன் கலைத்திறங்களால் புறம்போகாது தடுத்தாள் என்றபடி. வாயை யாழ் என்றதற்கேற்ப முதுமொழியை இசையென உருவகஞ் செய்க ; யாழோசை போல மெல்லிதின்-விளங்க வாயால் முதுமொழி யெடுத்துக் காட்டி என்றலுமாம் ; யானை யாழிசைக்கு வயமாகுமாதலின் இவ்வாறு கூறினான். ³;"காழ்வரை நில்லாக் கடுங்களிற் றொருத்தல், யாழ்வரைத் தங்கி யாங்கு" என்பதனால் யானை யாழுக்கு வயமாத லறிக. முதுமொழி - முதுவோர் மொழி; நீதிமொழி. உதயகுமரன் தன்னை யானையாகவும், மணிமேகலையின் நகை முதலியவற்றை யானையை அடக்குங் கருவிகளாகவும் உருவகஞ் செய்து, அவளால் தான் பிணிப்புண்டமை கூறினனெனக். சூளுறுவார் அடிதொடுதல் வழக்காதலை ⁴"அறவ ரடிதொடினும்" ⁵"கோனடி தொட்டேன்" ⁶"அடல்வலி யெயினர்நின் அடி தொடு கடனிது" என்பவற்றானு மறிக.  
  
சித்திராபதி அது கேட்டு ஏறி வெய்துயிர்த்துக் கலங்கித் தீர்ப்பலென்று கூத்தியன் மடந்தையர் எல்லார்க்குங் கூறும்; அங்ஙனங் கூறுகின்றவள், வஞ்சினஞ் சாற்றி உயிர்த்துத் தேர்ந்து போகிக் குறுகிப் பொருந்தி நின்று ஏத்த, அவன், 'தவறின்றோ' என, அவள், 'வேந்தே! நின் கண்ணி வாழ்க; காஞ்சி அம்பலத் தாயது' என, அது கேட்டு அவட்கு உரைப்போன், 'எய்யா மையலேன்' என்று சொல்ல, சித்திராபதி சிறுநகை யெய்தி, படிற்றுரை யடக்குதல் கோன்முறை யன்றோ குமரற்கு?' என்றலும், உதயகுமரன் உள்ளம் பிறழ்ந்து ஏறி எய்திக் காண்டலும் அடங்கானாகிச் சென்று துணிந்து கேட்ப, அவர் வணங்கி நடுங்கி மயங்கி, 'வேட்டது செய்க' என்று கூறி நீங்கிப் புக்குத்தொழுது ஏத்தி ஓதிக் காயசண்டிகை வடிவாய் வந்து தோன்ற, தாரோன் புக்கு மரீஇ, 'இது குறை' என்றனன் என, வினை முடிவு செய்க.  
  
¹ மதுரைக். 592. ² முல்லைப். 35. ³ கலி. 226-7. ⁴ பரி. 1 : 68. ⁵ கலி. 94; 36. ⁶ சிலப். 12: 'சுடரொடு'.

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.18.1) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19) · Pramāṇa
