<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.1 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 1

# Maṇimēkalai's Renunciation 1

Maṇimēkalai urai 1

- **Language:** Tamil

### [1.1](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.1.1)

பதிகம்  
  
இளங்கதிர் ஞாயி றெள்ளுந் தோற்றத்து  
விளங்கொளி மேனி விரிசடை யாட்டி  
பொன்றிகழ் நெடுவரை உச்சித் தோன்றித்  
தென்றிசைப் பெயர்ந்தவித் தீவத் தெய்வதம்  
  
5 சாகைச் சம்பு தன்கீழ் நின்று  
மாநில மடந்தைக்கு வருந்துயர் கேட்டு  
வெந்திற லரக்கர்க்கு வெம்பகை நோற்ற  
சம்பு வென்பாள் சம்பா பதியினள்  
  
1  
  
உரை  
  
8  
  
இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து-கதிர்களையுடைய இளஞாயிற்றின் ஒளியை இகழும் தோற்றமுடைய, விளங்கு ஒளி மேனிவிரிசடையாட்டி-விளங்குகின்ற ஒளிபொருந்திய திருமேனியும் விரிந்த சடையுமுடையாளும், பொன்திகழ் நெடுவரை உச்சித் தோன்றி-விளங்குகின்ற பெரிய பொன்மலையாகிய மேருவின் உச்சியில் தோன்றி, தென்திசைப்பெயர்ந்த இத் தீவத் தெய்வதம்- தென்றிசைக்கண் போந்த நாவலந்தீவின் காவற்றெய்வமும், சாகைச் சம்புதன் கீழ்நின்று-கிளைகளையுடைய நாவன்மரத்தின் கீழிருந்து, மாநில மடந்தைக்கு வருந்துயர் கேட்டு-பெருமை பொருந்திய நிலமகட்கு நேரும் துன்பத்தினைக் கேட்டு, வெந்திறல் அரக்கர்க்கு வெம்பகை நோற்ற-கொடிய வலியினையுடைய அரக்கர்கட்கு வெவ்விய பகையாக நோற்றவளுமாய, சம்பு என்பாள் சம்பாபதியினள்-சம்பு என்பவள் சம்பாபதியினிடத்தே இருந்தனள் ;  
  
எள்ளும்: உவமவுருமாம். பகை நோற்ற-பகையாக நோற்ற. சம்பு வென்பாள்: வட சொல்லாகலின் உடம்படுமெய் பெற்றது. சம்பாபதி-காவிரிப்பூம்பட்டினத்தின் வேறு பெயர். சம்பாபதியினள் : முற்று ; ஆக என்பது விரித்து எச்சப்படுத்தலுமாம்.

### [1.2](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.1.2)

பதிகம்  
  
செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும்  
  
10 கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்ட  
அமர முனிவன் அகத்தியன் றனாது  
கரகங் கவிழ்த்த காவிரிப் பாவை  
செஙகுணக் கொழுகியச் சம்பா பதியயல  
்பொங்குநீர்ப் பரப்பொடு பொருந்தித் தோன்ற  
  
9  
  
உரை  
  
14  
  
செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும் கஞ்ச வேட்கையில் காந்தமன் வேண்ட - சிவந்த கதிர்களையுடைய ஞாயிற்றின் வழித் தோன்றினோராகிய சோழர் மரபினை விளக்குமாறுதித்த காந்தன் எனப் பெயரிய மன்னவன் நாட்டில் நீர்ப் பெருக்கினை விரும்பி வேண்டிக்கொள்ள, அமரமுனிவன் அகத்தியன் தனாது கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை - தேவ இருடியாகிய அகத்திய முனிவன் தனது கமண்டல நீரைக் கவிழ்த்தலாற் போந்த காவிரியாகிய பாவை, செங்குணக்கு ஒழுகி - நேர்கிழக்கே ஓடி, அச்சம்பாபதி அயல் - அந்தச் சம்பாபதியின் மருங்கு, பொங்குநீர்ப் பரப்பொடு பொருந்தித்தோன்ற-விளங்குகின்ற கடலொடு கலந்து தோன்ற ;  
  
திருக்குலம் - சூரிய குலம். விளக்கும் காந்தமன் என்க. காந்தமன் -காந்தனாகிய மன்னன் ; காந்தன் - சோழருள் ஒருவன் ; ¹ "காந்த மன்னவன்" என்பர் பின்னும். கஞ்சம் - நீர். வேட்கையினையுடைய மன் என்றுமாம். கரகம் - குண்டிகை ; ²"நீரற வறியாக் கரகத்து" என்பது காண்க. கவிழ்த்த வென்னும் பெயரெச்சம் காரியப் பெயர் கொண்டது ; காவிரி முன்னரே யுள்ளதாயின் இடப்பெயர் கொண்டதாம். செங் குணக்கு : செம்மை - நேர்மை. நீர்ப் பரப்பு - விரிநீர்: கடல்.  
  
¹ மணி. 22 : 27. ² புறம். கடவுள் வாழ்ந்து.

### [1.3](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.1.3)

பதிகம்  
  
15 ஆங்கினி திருந்த அருந்தவ முதியோள்  
ஓங்குநீர்ப் பாவையை உவந்தெதிர் கொண்டாங்கு  
ஆணு விசும்பின் ஆகாய கங்கை  
வேணவாத் தீர்த்த விளக்கே வாவெனப்  
பின்னிலை முனியாப் பெருந்தவன் கேட்டீங்கு  
  
20  
  
அன்னை கேளிவ் வருந்தவ முதியோள் நின்னால் வணங்குந் தகைமையள் வணங்கெனப்  
  
15  
  
உரை  
  
21  
  
ஆங்கு இனிது இருந்த அருந்தவ முதியோள் - ஆண்டு  
இனிது அமர்ந்திருந்த அரிய தவமுதியோளாகிய சம்பாபதி, ஓங்கு நீர்ப் பாவையை உவந்து எதிர்கொண்டு-பெருகுகின்ற காவிரிப் பாவையை மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டு, ஆணு விசும்பின் ஆகாய கங்கை-வானினை இடமாகக் கொண்ட அன்பினையுடைய ஆகாய கங்கையே, வேணவாத் தீர்த்த விளக்கே வா என - வேட்கையானாகிய அவாவினைத் தீர்த்த விளக்கே வருக என அழைப்ப, பின் நிலை முனியாப் பெருந்தவன் கேட்டு - பின் நிற்றலை வெறுத்தலில்லாத அகத்திய மாமுனிவன் அதனைக் கேட்டு, அன்னை கேள்-அன்னாய் கேட்பாயாக, இவ் அருந்தவ முதியோள் நின்னால் வணங்கும் தகைமையள் - இவ்வரிய தவமூதாட்டி நின்னால் வணங்கப்படும் தகுதியுடையவள், வணங்கு என - ஆகலின் இவளை நீ வணங்குவாய் என்று காவிரியை நோக்கிக் கூற ;  
  
பின்னிற்றல் - தாழ்ந்து நிற்றல்; ¹"பிற்றை நிலை முனியாது" என்பதிற் போல. கொண்டாங்கு, கேட்டீங்கு என்பவற்றில் ஆங்கு, ஈங்கு என்பன அசைகள். ஆணு - அன்பு: ² "ஆணுப் பைங்கிளி" என்பதன் உரை காண்க. விசும்பின் என முன் வந்தமையின், ஆகாய கங்கை என்பது பெயர் மாத்திரையாய் நின்றது. கங்கை வானினின்று வந்ததென்ப ஆகலானும், காவிரி நீர் கங்கை நீர் ஆகலானும் 'ஆகாய கங்கை' என்றார். "பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர்" என்புழி, "காவிரி நீர் கங்கை நீராதலிற் கங்கைப் புதல்வரைக் காவிரிப் புதல்வர் என்றார்" என அடியார்க்கு நல்லார் கூறியதும், தொல்காப்பியப் பாயிர வுரையில் ³"கங்கையாருழைச் சென்று காவிரியாரை வாங்கி" என நச்சினார்க்கினியர் கூறியதும் ஈண்டு அறியற்பாலன.  
  
¹ புறம். 183. ² சீவக. 1002. ³ தொல். பாயிரவுரை.

### [1.4](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.1.4)

பதிகம்  
  
பாடல்சால் சிறப்பிற் பரதத் தோங்கிய  
கோடாச் செங்கோற் சோழர்தங் குலக்கொடி  
கோள்நிலை திரிந்து கோடை நீடினும்  
  
25  
  
தான்நிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை  
தொழுதனள் நிற்பஅத் தொன்மூ தாட்டி  
கழுமிய உவகையிற் கவாற்கொண் டிருந்து  
தெய்வக் கருவுந் திசைமுகக் கருவும்  
செம்மலர் முதியோன் செய்த அந்நாள்  
  
30 என்பெயர்ப் படுத்தஇவ் விரும்பெயர் மூதூர்  
நின்பெயர்ப் படுத்தேன் நீவா ழியவென  
இருபாற் பெயரிய உருகெழு மூதூர்  
  
22  
  
உரை  
  
32  
  
பாடல்சால் சிறப்பிற் பரதத்து ஓங்கிய-பாடுதற்கமைந்த சிறப்பினையுடைய பரத கண்டத்தில் உயர்ச்சி மிக்க, கோடாச் செங்கோல் சோழர்தம் குலக்கொடி - வளையாத செங்கோலினையுடைய சோழர்களின் குலமகளாகிய, கோள் நிலை திரிந்து கோடை நீடினும்-கோட்களின் நிலை மாறுபட்டு மழை பெய்யாது கழியுங்காலம் நீட்டிப்பினும், தான் நிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை - தான் நிலைதிரியாது எஞ்ஞான்றும் வளங் கொடுக்கும் தண்ணளியுடைய தமிழ்ப் பாவையாங் காவிரி, தொழுதனள் நிற்ப-வணங்கி நிற்க, அத் தொன் மூதாட்டி கழுமிய உவகையில் கவான் கொண்டிருந்து-பழைய தவமுதியோளாகிய அச் சம்பாபதி கலந்த பேருவகையினோடு காவிரிப் பாவையைத் தன் துடைமீ திருத்திக் கொண்டு, தெய்வக் கருவும் திசைமுகக் கருவும் செம்மலர் முதியோன் செய்த அந்நாள்-தெய்வலோகம் ஆறினுமுள்ள அறுவகைத் தெய்வகண பிண்டங்களையும் பிரமலோகம் இருபதினுமுள்ள இருபது வகைப் பிரமகண பிண்டங்களையும் செந்தாமரை மலரின் மேவிய முதியோனாகிய பிரமன் படைத்த அந்நாளில், என்பெயர்ப் படுத்த இவ்விரும் பெயர் மூதூர் - என் பெயர்ப்படச் செய்த பெரும் புகழையுடைய இத் தொன்னகரை, நின் பெயர்ப்படுத்தேன் நீ வாழிய என - நின் பெயருடையதாக்கினேன் நீ வாழ்வாயாக என்றுரைத்தலான், இருபாற் பெயரிய உருகெழு மூதூர் - சம்பாபதி காவிரிப்பூம்பட்டினம் என்னும் இருவகைப் பெயரினை யுடையதாய்ப் பகைவர்க்கு அச்சத்தை யுண்டாக்கும் தொல்பதியில் ;  
  
வேற்று வேந்தர் அணுகாமையாற் சோழர்குலக்  
  
கொடியாயுள்ளான்என்க ; கவேரன் புதல்வியாதலிற் சோழர் குலக்கொடியென்றா ரெனலுமாம். கவேரன் புதல்வியாதலை, ¹"தவாநீர்க் காவிரிப் பாவைதன் றாதை, கவேரனாங் கிருந்த கவேர வனமும்" என மேல் உரைத்தலானறிக. தான் நிலை திரியாமை - என்றும் நீர் வற்றாமை. தமிழ்ப் பாவை யென்றது காவிரியை. தொழுதனள் : முற்றெச்சம். தெய்வலோகம் ஆறு எனவும், பிரமலோகம் இருபது எனவும் புத்த நூல்கள் கூறும். செம் மலர் முதியோன் - பெரும் பிரமன். என் பெயர்ப் படுத்த என்றமையால் சம்பாபதி என்பது சம்புத் தீவத் தெய்வத்திற்கும், காவிரிப்பூம்பட்டினத்திற்கும் உரிய பெயர் என்பது பெற்றாம். உரு - உட்கு, அச்சம்.  
  
சம்பு என்பாள் சம்பாபதியினள் ; அப்பொழுது காவிரிப்  
  
பாவை செங்குணக் கொழுகிச் சம்பாபதியின் அயலிற்றோன்ற, ஆங்கிருந்த முதியோள் நீர்ப்பாவையை எதிர்கொண்டு 'வா' என, அதனைப் பெருந்தவன் கேட்டு 'வணங்கு' என, குலக்கொடி தண்டமிழ்ப் பாவை தொழுது நிற்ப, அம் மூதாட்டி அவளைக் கவானிற் கொண்டிருந்து 'அந்நாளில் என் பெயர்ப்படுத்த இம்மூதூரை நின்பெயர்ப் படுத்தேன், நீ வாழிய,' என்றமையால் இருபாற் பெயரிய மூதூர் என்க.  
  
¹ மணி. 3: 55-6.

### [1.5](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.1.5)

பதிகம்  
  
ஒருநூறு வேள்வி உரவோன் றனக்குப்  
பெருவிழா அறைந்ததும் பெருகிய தலரெனச்  
  
35  
  
சிதைந்த நெஞ்சிற் சித்திரா பதிதான்  
வயந்த மாலையான் மாதவிக் குரைத்ததும்  
மணிமே கலைதான் மாமலர் கொய்ய  
அணிமலர்ப் பூம்பொழில் அகவயிற் சென்றதும்  
ஆங்கப் பூம்பொழில் அரசிளங் குமரனைப்  
  
40 பாங்கிற் கண்டவள் பளிக்கறை புக்கதும்  
  
33  
  
உரை  
  
40  
  
ஒரு நூறு வேள்வி உரவோன் தனக்குப் பெரு விழா அறைந்ததும்-ஒப்பற்ற நூறு வேள்விகளைப் புரிந்த வலியோனாகிய இந்திரனுக்குப் பெரிய விழாக் கொள்ளுமாறு பறை அறைந்ததும்,  
பெருகியது அலர் எனச் சிதைந்த நெஞ்சிற் சித்திராபதிதான் - மாதவி தவத்திறம் பூண்டமையின் நகரில் அலர் பெருகியது என்று அழிந்த உள்ளமுடைய சித்திராபதி, வயந்தமாலையால் மாதவிக்கு  
உரைத்ததும் - தன் மகளின் தோழியாகிய வயந்தமாலை வாயிலாக மாதவிக்குக் கூறியதும், மணிமேகலைதான் மாமலர்கொய்ய அணி மலர்ப் பூம்பொழில் அகவயின் சென்றதும்-மணிமேகலை மாசற்ற மலர் கொய்யுமாறு அழகிய மலர்களையுடைய பூஞ்சோலையாகிய உவவனத்தின் உள்ளே சென்றதும், ஆங்கு அப் பூம்பொழில் அரசிளங் குமரனை - ஆண்டு அவ்வழகிய சோலையில் இளமைப் பருவமுடைய அரச குமாரனை, பாங்கில் கண்டு அவள் பளிக்கறை  
புக்கதும் - அண்மையிற் கண்டு மணிமேகலை பளிக்கறையுட் புகுந்ததும் ;  
  
ஊரில் அலர் பெருகியதென உரைத்ததும் என்க. சித்திராபதி -  
  
மாதவியின் நற்றாய். வயந்தமாலை - மாதவியின் தோழி ; இவள்  
கூனியென்றும் கூறப்படுவள். மாதவி - மணிமேகலையின் தாய்.  
பூம்பொழில் -உவவனம். அரசிளங்குமரன் - உதயகுமரன். பளிக்கறை  
- பளிங்காலாகிய அறை.

### [1.6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.1.6)

பதிகம்  
  
பளிக்கறை புக்க பாவையைக் கண்டவன்  
துளக்குறு நெஞ்சில் துயரொடும் போயபின்  
மணிமே கலாதெய்வம் வந்துதோன் றியதும்  
மணிமே கலையைமணி பல்லவத் துய்த்ததும்  
  
45  
  
உவவன மருங்கினவ் வுரைசால் தெய்வதம்  
சுதமதி தன்னைத் துயிலெடுப் பியதூஉம்  
ஆங்கத் தீவகத் தாயிழை நல்லாள்  
தான்றுயி லுணர்ந்து தனித்துய ருழந்ததும்  
  
41  
  
உரை  
  
48  
  
பளிக்கறை புக்க பாவையைக் கண்டவன் - பளிங்கறையுட் சென்ற மணிமேகலையைக் கண்ட உதயகுமரன், துளக்குறு நெஞ்சில் துயரொடும் போயபின் - நிலைகலங்கிய உளத்தில் துயருடன் சென்ற பின்னர், மணிமேகலா தெய்வம் வந்து தோன்றியதும் - அங்கு மணிமேகலா தெய்வம் வந்து வெளிப்பட்டதும், மணிமேகலையை மணி பல்லவத்து உய்த்ததும் - அத்தெய்வம் மணிமேலையை மணிபல்லவமென்னுந் தீவிற்கொண்டு சென்றதும், உவவன மருங்கின் அவ்வுரைசால் தெய்வதம் சுதமதி தன்னைத் துயில் எடுப்பியதூஉம் - புகழமைந்த அத்தெய்வம் பின்னர் மணிமேகலையுடன் துணையாக வந்த சுதமதியை உவவனத்தில் துயில் எழுப்பியதும், ஆங்கத் தீவகத்து ஆயிழை நல்லாள்தான் - மணிபல்லவத்தின்கண் மணிமேகலை, துயில் உணர்ந்து தனித்துயர் உழந்ததும்-உறக்கம் நீங்கித் தனியே துன்புற்று வருந்தியதும் ;  
  
கண்டு அவன் எனப் பிரித்தலுமாம். மணிமேகலா தெய்வம்-  
  
இராக் கதரால் துன்பமுண்டாகாமல் இந்திரன் ஏவலால் சிலதீவுகளைக் காக்குந் தெய்வம் : கோவலனது குல தெய்வம். மணிமேகலை - கோவலனுக்கு நாடகக் கணிகையாகிய மாதவி வயிற்றிற்பிறந்தவள் ; இக்காப்பியத்தின் தலைவி. மணிபல்லவம் - காவிரிப்பூம்பட்டினத்திற்குத் தெற்கேயுள்ளதொரு சிறு தீவு. உவவனம் - உபவனம். எடுப்பியது - எழுப்பியது ; ¹"உரவுநீர்ப் பரப்பி னூர்துயி லெடுப்பி" என்பதும் காண்க. தனித்துயர் - ஒப்பற்ற துயருமாம்.  
  
¹ சிலப். 4 : 79.

### [1.7](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.1.7)

பதிகம்  
  
உழந்தோ ளாங்கணோர் ஒளிமணிப் பீடிகைப்  
  
50  
  
பழம்பிறப் பெல்லாம் பான்மையி னுணர்ந்ததும்  
உணர்ந்தோள் முன்னர் உயர்தெய்வந் தோன்றி  
மனங்கவ லொழிகென மந்திரங் கொடுத்ததும்  
தீப திலகை செவ்வனந் தோன்றி  
மாபெரும் பாத்திரம் மடக்கொடிக் களித்ததும்  
  
55 பாத்திரம் பெற்ற பைந்தொடி தாயரொடு  
யாப்புறு மாதவத் தறவணர்த் தொழுததும்  
அறவண வடிகள் ஆபுத் திரன்றிறம்  
நறுமலர்க் கோதைக்கு நன்கனம் உரைத்ததும்  
  
49  
  
உரை  
  
58  
  
உழந்தோள் ஆங்கண் ஓர் ஒளிமணிப் பீடிகை - அங்ஙனம் வருந்தினவள் அவ்விடத்தில் ஒளிமிக்க மணிகளானாய ஒரு பாத பீடிகையினால், பழம்பிறப்பு எல்லாம் பான்மையின் உணர்ந்ததும்- முற்பிறப்பு நிகழ்ச்சியை யெல்லாம் முறையால் அறிந்ததும், உணர்ந்தோள் முன்னர் உயர் தெய்வம் தோன்றி மனங்கவல் ஒழிகென மந்திரம் கொடுத்ததும்-அங்ஙனம் அறிந்த மணிமேகலை முன் மணிமேகலா தெய்வம் வெளிப்பட்டு மனம் கவலுதல் ஒழிகவென்று கூறி மந்திரம் அருளியதும், தீப திலகை செவ்வனம் தோன்றி மாபெரும் பாத்திரம் மடக்கொடிக்கு அளித்ததும் - தீவதிலகை என்பாள் நன்கு வெளிப்பட்டுப் பெருமை பொருந்திய பாத்திரத்தினை மணிமேகலைக்குக் கொடுத்ததும், பாத்திரம்பெற்ற பைந்தொடி தாயரொடு - அப் பாத்திரத்தினைப்பெற்ற மெல்லியல் தன் தாயராகிய மாதவி சுதமதி என்னும் இருவருடனும், யாப்புறு மாதவத்து அறவணர்த் தொழுததும் - கட்டமைந்த பெருந்தவமுடைய அறவணவடிகளை வணங்கியதும், அறவண அடிகள் ஆபுத்திரன் திறம் - அறவண முனிவர் ஆபுத்திரன் வரலாற்றினை, நறுமலர்க் கோதைக்கு நன்கனம் உரைத்ததும் - நறிய மலர்மாலை போலும் நங்கைக்கு நன்கு மொழிந்ததும் ;  
  
கவல் - கவலுதல் : முதனிலைத் தொழிற் பெயர். ஒழிகென-ஒழிக  
  
என : அகரந் தொக்கது. மந்திரம் - வேற்றுரு அடைவிப்பதும், விசும்பிலே திரியச் செய்வதும், பசியைப் போக்குவதுமாகிய மந்திரங்கள். தீப திலகை - தீவுக்குத் திலகம் போன்றவள் ; மணிபல்லவத்திலே புத்தன் பாத பீடிகையை இந்திரன் ஏவலாற் காவல் செய்பவள் இவள். மாபெரும் பாத்திரம்-அமுதசுரபி எனப் பெயரிய பிச்சைப் பாத்திரம். தாயர் - மாதவியும் அவள் தோழியாகிய சுதமதியும் ; இக்காப்பியத்திற்பிறாண்டும் இவ்விருவரும் மணிமேகலையின் தாயரென வழங்கப்பெறுவர். யாப்பு - கட்டு ; உறுதி. அறவணர் - ஒரு புத்த முனிவர்

### [1.8](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.1.8)

பதிகம்  
  
அங்கைப் பாத்திரம் ஆபுத் திரன்பால  
  
60  
  
சிந்தா தேவி கொடுத்த வண்ணமும்  
மற்றப் பாத்திரம் மடக்கொடி யேந்திப்  
பிச்சைக் கவ்வூர்ப் பெருந்தெரு வடைந்ததும்  
பிச்சை யேற்ற பெய்வளை கடிஞையிற்  
பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஈத்ததும்  
  
68 காரிகை நல்லாள் காயசண் டிகைவயிற்று  
ஆனைத் தீக்கெடுத் தம்பலம் அடைந்ததும்  
அம்பலம் அடைந்தனள் ஆயிழை யென்றே  
கொங்கலர் நறுந்தார்க் கோமகன் சென்றதும்  
  
59  
  
உரை  
  
68  
  
அங்கைப் பாத்திரம் ஆபுத்திரன்பால் சிந்தாதேவி கொடுத்தவண்ணமும்-அகங்கையிலிருந்த பிச்சைப் பாத்திரத்தை ஆபுத்திரனிடம் கலைமகள் அளித்தவாறும், மற்று அப்பாத்திரம் மடக்கொடி ஏந்திப் பிச்சைக்கு அவ்வூர்ப் பெருந்தெரு அடைந்ததும் - மணிமேகலை பிக்குணிக் கோலத்துடன் அப்பாத்திரத்தைக் கையிலேந்திப் பிச்சை யேற்றற்கு அந்நகரின் பெருந்தெருவினை யடைந்ததும், பிச்சை ஏற்ற பெய்வளை கடிஞையில் பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஈத்ததும் - பிச்சை ஏற்ற மணிமேகலையின் தெய்வக் கடிஞையிற் கற்பிற் சிறந்த ஆதிரைநல்லாள் பலர்க்கும் பகுத்துண்ணும் உணவினை இட்டதும், காரிகை நல்லாள் காய சண்டிகை வயிற்று ஆனைத்தீக் கெடுத்து அம்பலம் அடைந்ததும்- அழகின் மிக்க மணிமேகலை காயசண்டிகை என்னும் விஞ்சை மகளின் வயிற்றிலுள்ள ஆனைத்தீ யென்னும் தீராப் பசி நோயை அழித்து உலகவறவி என்னும் ஊரம்பலத்தை யடைந்ததும், அம்பலம் அடைந்தனள் ஆயிழை என்றே கொங்கு அலர் நறுந்தார்க் கோமகன் சென்றதும்-தேன் பொருந்திய நறிய மலர் மாலையினை யுடைய அரச குமரன் மணிமேகலை உலகவறவியை அடைந்தாள் என்று ஆண்டுச் சென்றதும் ;  
  
ஆங்கப் பாத்திரம் என்பதும் பாடம். ஆபுத்திரன் -  
  
ஓரந்தணன் ; தன்னைப் பெற்றவுடன் தாய் நீங்கிவிட, ஏழுநாள் வரையில் ஓர் ஆவினாற் பாலூட்டிப் பாதுகாக்கப் பெற்றமையின் இவன் இப் பெயரெய்தினன். சிந்தாதேவி-கலைமகள்; கற்றோர் சிந்தையில் இருப்பவள் என்பது பொருள். மற்று : அசை. மடக்கொடி-இளங்கொடி போல்பவள். பெய்வளை-இடப்பட்ட வளையினையுடையாள். அவ்வூர் - காவிரிப் பூம்பட்டினம். பத்தினிப் பண்டிர் - ஆதிரை : ஒருமை. கடிஞை - பிச்சைப் பாத்திரம். பாத்தூண் - பகுத்துண்டற்குரிய உணவு. பாத்து - பகுத்து என்பதன் மரூஉ. ஈத்தது: வலித்தல் விகாரம். காயசண்டிகை: ஒரு வித்தியாதர மாது. ஆனைத்தீ - தணியாத பெரும் பசியைச் செய்வதொரு நோய்.

### [1.9](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.1.9)

பதிகம்  
  
அம்பல மடைந்த அரசிளங் குமரன்முன்  
  
70  
  
வஞ்ச விஞ்சையன் மகள்வடி வாகி  
மறஞ்செய் வேலோன் வான்சிறைக் கோட்டம்  
அறஞ்செய் கோட்டம் ஆக்கிய வண்ணமும்  
காயசண் டிகையென விஞ்சைக் காஞ்சனன்  
ஆயிழை தன்னை அகலா தணுகலும  
  
75 வஞ்ச விஞ்சையன் மன்னவன் சிறுவனை  
மைந்துடை வாளில் தப்பிய வண்ணமும்  
ஐயரி யுண்கண் அவன்றுயர் பொறாஅள  
தெய்வக் கிளவியிற் றெளிந்த வண்ணமும்  
  
69  
  
உரை  
  
78  
  
அம்பலம் அடைந்த அரசிளங் குமரன்முன் வஞ்ச விஞ்சையன் மகள் வடிவாகி-அம்பலத்தினை அடைந்த மன்னவன் சிறுவன் முன் மணிமேகலை விஞ்சையன் மனைவியாகிய காயசண்டிகையினுரு வினைக் கொண்டு வஞ்சித்துச்சென்று, மறஞ்செய் வேலோன் வான்சிறைக் கோட்டம் - வென்றிதரும் வேற்படையினையுடைய சோழனது பெரிய சிறைச்சாலையை, அறஞ்செய் கோட்டம் ஆக்கிய வண்ணமும்-அறச்சாலையாக்கிய திறமும், காயசண்டிகை என விஞ்சைக் காஞ்சனன் - விஞ்சையனாகிய காஞ்சனன் மணிமேகலையைக் காயசண்டிகை என நினைந்து, ஆயிழை தன்னை அகலாது அணுகலும் - உதயகுமரன் அவளை நீங்காது அணுகுதலும், வஞ்ச விஞ்சையன் மன்னவன் சிறுவனை மைந்துடை வாளில் தப்பிய வண்ணமும் - வலிபொருந்திய வாளினால் வஞ்சங்கொண்ட அவ் விஞ்சையன் அரசிளம் புதல்வனை வீழ்த்திய வண்ணமும், ஐயரி யுண்கண் அவன் துயர் பொறாஅள் தெய்வக் கிளவியில் தெளிந்த வண்ணமும் - அழகிய அரி படர்ந்த மையுண்ட கண்களையுடைய மணிமேகலை முற்பிறப்பிற் கணவனாயிருந்த மன்னிளம் புதல்வன் இறந்த துக்கத்தினைப் பொறுக்க இயலாதவளாய்த் தெய்வத்தின் மொழியால் தேறிய வண்ணமும் ;  
  
விஞ்சையன் மகள் - விஞ்சையன் மனைவி ; ¹"நினக்கிவன்  
  
மகனாத தோன்றியதூஉம், மனக்கினி யாற்குநீ மகளாயதூஉம்" என்றவிடத்து மகன், மகள் என்பன முறையே கணவன், மனைவி என்ற பொருளில் வந்திருத்தல் காண்க. கருத்து நோக்கி வஞ்சித்துச் சென்றஎன்றுரைக்கப்பட்டது. மன்னவன்சிறுவன் ஆயிழையை அகலா தணுகலும் அவனை என்றியைக்க. வஞ்ச விஞ்சையன் : சுட்டு. உண்கண் : ஆகு பெயர். தெய்வம் - கந்திற் பாவை.  
  
¹ மணி. 21 : 29-30.

### [1.10](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.1.10)

பதிகம்  
  
அறைகழல் வேந்தன் ஆயிழை தன்னைச்  
  
80  
  
சிறைசெய் கென்றதுஞ் சிறைவீடு செய்ததும  
நறுமலர்க் கோதைக்கு நல்லற முரைத்தாங்கு  
ஆய்வளை ஆபுத் திரனா டடைந்ததும்  
ஆங்கவன் றன்னோ டணியிழை போகி  
ஓங்கிய மணிபல் லவத்திடை யுற்றதும்  
  
85 உற்றவ ளாங்கோர் உயர்தவன் வடிவாய்ப்  
பொற்கொடி வஞ்சியிற் பொருந்திய வண்ணமும்  
நவையறு நன்பொரு ளுரைமி னோவெனச்  
சமயக் கணக்கர் தந்திறங் கேட்டதும்  
ஆங்கத் தாயரோ டறவணர்த் தேர்ந்து  
  
90 பூங்கொடி கச்சி மாநகர் புக்கதும்  
  
79  
  
உரை  
  
90  
  
அறைகழல் வேந்தன் ஆயிழை தன்னைச் சிறை செய்கென்றதும் - ஒலிக்கின்ற வீரக்கழலினை யணிந்த மன்னவன் மணிமேகலையைச் சிறைப்படுத்தியதும், சிறைவீடு செய்ததும் - பின் சிறையினின்று விடுவித்ததும், நறுமலர்க் கோதைக்கு நல்லறம் உரைத்து ஆங்கு - இராசமாதேவிக்குப் புத்த தருமங்களை ஆண்டு எடுத்துரைத்து, ஆய்வளை ஆபுத்திரன் நாடு டைந்ததும்-மணிமேகலை ஆபுத்திரனுடைய நாட்டினை அடைந்ததும், ஆங்கவன் தன்னோடு அணியிழை போகி-சிறுமுதுக்குறைவி ஆபுத்திரனோடு சென்று, ஓங்கிய மணிபல்லவத்திடை உற்றதும்-பெருமையுடைய மணி பல்லவத்தின்கண் சேர்ந்ததும், உற்றவள் ஆங்கோர் உயர் தவன் வடிவாய்ப் பொற்கொடி வஞ்சியில் பொருந்திய வண்ணமும்-மணிபல்லவமடைந்த மணிமேகலை ஆங்கு ஒரு பெரிய தவத்தினன் வடிவத்தோடு அழகிய கொடிகளையுடைய வஞ்சி நகரத்திற் சேர்ந்தவாறும், நவை அறு நன்பொருள் உரைமினோ எனச் சமயக் கணக்கர் தந்திறம் கேட்டதும்-குற்றமற்ற நல்ல தத்துவங்களைக் கூறுவீர் என வினாவிச் சமய வாதியர் கூறிய திறங்களைக் கேட்டதும், ஆங்குஅத் தாயரோடு அறவணர்த்தேர்த்து பூங்கொடி கச்சிமாநகர் புக்கதும் - அங்கே மணிமேகலை தன் தாயருடன் அறவணவடிகளைத் தேடிக் காஞ்சிமாநகரத்தை அடைந்ததும்;  
  
வேந்தன் - மாவண்கிள்ளி : உதயகுமரன் தந்தை. செய்கென்றது :  
  
அகரந் தொக்கது. அரசன் ஏவும் வினைமுதலாகலின் சிறை செய்ததனைச் சிறை செய்கென்றான் என்றார். வீடு-விடுதல் : முதனிலை திரிந்த தொழிற் பெயர். ஆங்கவன் : ஒரு சொல். வஞ்சி - சேர மன்னர்களின் தலைநகர். நன்பொருள் - தத்துவம் : நன்மையென்பதன் ஈறுகெட்டது- உரைமினோ, ஓ; இசைநிறை. சமயக் கணக்கர்-சமய வாதியர்; ¹"சமயக் கணக்கர் மதிவழி கூறாது", "சமயக்கணக்கர் தந்திறங்கடந்து" என்பர் பிற சான்றோரும். திறம்-இயல்பு, கொள்கை. ஆங்கு-வஞ்சிப்பதியில்; வஞ்சியில் தேர்ந்துபின் கச்சி புக்கதுமென்க; தாயரையும் அறவணரையும் தேர்ந்தென்க. ²"இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும்" என்னும் விதியால் அறவணர்த் தேர்ந்து என வலி மிக்கது.  
  
¹ கல். 17: 65. ² தொல், தொகை: 15.

### [1.11](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.1.11)

பதிகம்  
  
புக்கவள் கொண்ட பொய்யுருக் களைந்து  
மற்றவர் பாதம் வணங்கிய வண்ணமும்  
தவத்திறம் பூண்டு தருமங் கேட்டுப்  
பவத்திற மறுகெனப் பாவை நோற்றதும்  
  
95  
  
இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப  
வளங்கெழு கூல வாணிகன் சாத்தன்  
மாவண் தமிழ்த்திறம் மணிமே கலை துறவு  
ஆறைம் பாட்டினுள் அறியவைத் தனனென்.  
  
91  
  
உரை  
  
98  
  
புக்கவள் கொண்ட பொய்யுருக் களைந்து - கச்சியிற் புகுந்த மணிமேகலை தான் கொண்ட பொய் வேடத்தினை நீக்கி, மற்றவர் பாதம் வணங்கிய வண்ணமும் - அவருடைய அடிகளை வணக்கஞ் செய்தவாறும், தவத்திறம் பூண்டு தருமம் கேட்டு பவத்திறம் அறுக எனப் பாவை நோற்றதும் - தவநெறி பூண்டு அறவுரை கேட்டுப் பிறவியொழிக என்று மணிமேகலை தவம் புரிந்ததும் ஆகியவற்றை, இளங்கோ வேந்தன் அருளிக்கேட்ப - இளங்கோவடிகள் கேட்டருள், வளங்கெழு கூலவாணிகன் சாத்தன் - வளப்பமிக்க கூலவாணிகனாகிய சாத்தன் என்னும் நல்லிசைப் புலவன், மாவண் தமிழ்த்திறம் மனிமேகலை துறவு ஆறைம்பாட்டினுள் அறிய வைத்தனன் என்-பெருமை மிக்க தமிழிலக்கண நெறியால் மணிமேகலை துறவு என்னுந் தொடர்நிலைச் செய்யுளை முப்பது பாட்டினுள்ளே யாவரும் அறியுமாறு செய்து வைத்தனன் என்க.  
  
மற்றவர் : மற்று, அசை, அவர் - அறவணர். தருமம் - புத்த  
  
தருமம். மற்றவர் பாதம் வணங்கிய வண்ணமும் என்பதனை நெகிழ விடுத்தும், கேட்டு நோற்றதும் என்பதைக் கேட்டதும் நோற்றதும், என இரண்டாகக் கொண்டும் ஈற்றிலுள்ள இரு காதைகளின் பெயரை முன்னர் யாரோ திரித்து அமைத்துள்ளனர். உம்மை கொடுத்து எண்ணிய வற்றுள் ஒன்றை விடுத்தலும் ஒன்றைப் பகுத்தலும் கூடாமையானும், இறுதிக் காதையின் ஈற்றிலும் "தவத்திறம்...பாவை நோற்றனளென்" எனக் கேட்டு நோற்றமை ஒன்றாக உரைத்திருத்தலானும் அங்ஙனம் அமைத்தல் பொருந்தா தென்க. இளங்கோ வேந்தன் - இளங்கோவாகிய வேந்தன்; இளங்கோவடிகள்: இவர் சேரன் செங்குட்டுவனுக்குத் தம்பி; துறவு பூண்டவர்; சிலப்பதிகாரம் இயற்றியவர். அருளிக்கேட்ப-அருள்செய்து கேட்ப என்றுமாம். வளங்கெழு கூலமென்க. கூலம்-நெல்லு, புல்லு, வரகு, தினை, சாமை, இறுங்கு, தோரை, இராகி என்னும் எண்வகைத் தானியமாம். கூலம் பதினெட் டென்பர் கூத்த நூலார். சாத்தனார் கூலவாணிகன் சாத்தனார் எனவும் சீத்தலைச் சாத்தனார் எனவும் கூறப்படுவர். இக்காப்பியத்திற்கு மணிமேகலை துறவு என்னும் பெயருண்மை இதனாற் பெற்றாம். நோற்றது ஈறாகவுள்ளவற்றை அறிய வைத்தனன் என்க. என்: அசை.

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.0.1-6) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.1](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.1) · Pramāṇa
