<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.20.19 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 20.19

# Maṇimēkalai's Renunciation 20.19

Maṇimēkalai urai 20.19

- **Language:** Tamil

### [20.19](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.20.19)

சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை  
  
120  
  
125  
  
130  
  
வாயிலுக் கிசைத்து மன்னவன் அருளால்  
சேய்நிலத் தன்றியுஞ் செவ்விதின் வணங்கி  
எஞ்சா மண்ணசைஇ இகலுளந் துரப்ப  
வஞ்சியி னிருந்து வஞ்சி சூடி  
முறஞ்செவி யானையுந் தேரும் மாவும்  
மறங்கெழு நெடுவாள் வயவரு மிடைந்த  
தலைத்தார்ச் சேனையொடு மலைத்துத்தலை வந்தோர்  
சிலைக்கயல் நெடுங்கொடி செருவேற் றடக்கை  
ஆர்புனை தெரியல் இளங்கோன் றன்னால்  
காரியாற்றுக் கொண்ட காவல் வெண்குடை  
வலிகெழு தடக்கை மாவண் கிள்ளி  
ஒளியொடு வாழி ஊழிதோ றூழி  
வாழி யெங்கோ மன்னவர் பெருந்தகை  
கேளிது மன்னோ கெடுகநின் பகைஞர்  
  
117  
  
உரை  
  
130  
  
வாயிலுக்கு இசைத்து மன்னவன் அருளால் - வாயில் காப்போர்க்கு உரைத்து அரசன் பணியால். சேய்நிலத்தன்றியும் செவ்வியின் வணங்கி - தூரமான இடத்தில் தாம் நின்றதன்றியும் முறைமையால் வணக்கஞ்செய்து, எஞ்சா மண் நசைஇ இகல்உளம் துரப்ப - குறையாத நிலத்தை விரும்பி மாறுபாடானது உள்ளத்தைச் செலுத்த, வஞ்சியின் இருந்து வஞ்சி சூடி-வஞ்சி நகரத்தின் கண்ணிருந்து வஞ்சிமாலை சூடி, முறஞ்செவி யானையும் தேரும் மாவும்-முறம் போன்ற காதுகளையுடைய யானையும் தேரும் குதிரையும், மறங்கெழு நெடுவாள் வயவரும் மிடைந்த-பெரிய வாட்படையைக் கையிற்கொண்ட ஆண்மைமிக்க வீரரும் செறிந்த, தலைத்தார்ச் சேனையொடு-முதன்மையாகிய தூசிப் படையோடு, மலைத்துத் தலைவந்தோர் - பொருதற்குவந்த இருபெரு வேந்தராகிய சேரபாண்டியருடைய, சிலைக்கயல் நெடுங்கொடி - வில்லும் கயலு மாகிய நெடிய கொடிகளை, செருவேல் தடக்கை ஆர்புனை தெரியல் இளங்கோன் தன்னால் - போர்புரியும் வேற்படையைக் கொண்ட பெரிய கைகளையுடைய ஆத்திமலரால் தொடுக்கப்பட்ட கண்ணியையுடைய இளங்கோவினால், காரியாற்றுக் கொண்ட - காரி யாற்றின்கண் கைப்பற்றிய' காவல் வெண்குடை வலிகெழு தடக்கை மாவண்கிள்ளி - உயிர்களைக் காக்கும் வெண் குடையினையும் வலிமிக்க பெருங் கைகளையும் உடைய மாவண்கிள்ளி, ஒளியொடு வாழி ஊழிதோ றூழி - நீ பல்லூழி காலம் ஒளியுடன் வாழ்வாயாக, வாழி எங்கோ மன்னவர் பெருந்தகை - எம் தலைவனாகிய அரசர் பெருந்தகையே வாழ்வாயாக, கேளிது மன்னோ கெடுகநின் பகைஞர் - நின் பகைஞர் ஒழிக ! அரசே இதனைக் கேட்பாயாக ;  
  
(48) கோட்டங் காவலர் (50) இசைத்து மென்றேகி, (117) வாயிலுக்கிசைத்து, மன்னவனருளால் (138) மன்னவ என்றலும்என முடியும் ; மன்னவனருளால் வணங்கி யென்றலுமாம். பகைவர் மண்ணினை விரும்பி வஞ்சிசூடிப் போருக்குச் செல்லுதல் வஞ்சித்திணையாகும் இதனை, ¹"எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன், அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே" என்பதனானறிக. வஞ்சியினிருந்து வஞ்சி சூடிச் சேனையொடு தலைவந்தோர் என்க. மலைந்து என்பதனை மலையவெனத் திரிக்க. இளங்கோன்-தம்பியாகிய நலங்கிள்ளி. மாவண்கிள்ளி : பெயர்; மிக்க வண்மையையுடைய கிள்ளி யென்றுமாம்; இவன் கிள்ளிவளவன் எனப்படுபவன். கிள்ளி : விளி. கிள்ளிவளவன் பகைவனாகிய காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளியையும், அவனுக்குத் துணை யாக வந்தெதிர்த்த சேர பாண்டியர்களையும் தன் தம்பியாகிய நலங்கிள்ளியால் காரியாறு என்னும் யாற்றின் பாங்கர் வென்றன னென்க. காரியாறு ஓர் நதி என்பதனை, ² "செல்கதிமுன் னளிப்பார்தந் திருக்காரிக் கரைபணிந்து" என்பதனானறிக, ஒளி - கடவுட்டன்மை ; ³"உறங்கு மாயினு மன்னவன் றன்னொளி, கறங்கு தெண்டிரை வையகங் காக்குமால்" என்பது காண்க : பரிமேலழகரும் இம் மேற் கோள் கொண்டே ⁴"இளைய ரினமுறைய ரென்றிகழார் நின்ற, ஒளியோ டொழுகப் படும்" என்னுங் குறளுரையில் 'ஒளி - உறங்கா நிற்கவும் உலகங் காக்கின்ற அவரது கடவுட்டன்மை,' என்றுரைத்தார்.  
மன்னும் ஓவும் அசைகள்.  
  
¹ தொல். புறம், 7. ² பெரிய. திருநா. 343. ³சீவக. 248. ⁴ குறள். 698-

- [Previous: 20.18](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.20.18)
- [Next: 20.20](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.20.20)
- [Up: 20](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.20)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.19.121-126) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.20.19](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.20.19) · Pramāṇa
