<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.20 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 20

# Maṇimēkalai's Renunciation 20

Maṇimēkalai urai 20

- **Language:** Tamil

### [20.1](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.20.1)

சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை  
  
5  
  
முதியாள் திருந்தடி மும்மையின் வணங்கி  
மதுமலர்த் தாரோன் வஞ்சினங் கூற  
ஏடவிழ் தாரோய் எங்கோ மகள்முன்  
நாடாது துணிந்துநா நல்கூர்ந் தனையென  
வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச்  
சித்திர மொன்று தெய்வங் கூறலும்  
  
1  
  
உரை  
  
6  
  
முதியாள் திருந்தடி மும்மையின் வணங்கி - சம்பாபதியின் திருந்திய அடிகளை மும்முறை வணக்கஞ்செய்து, மதுமலர்த் தாரோன் வஞ்சினம் கூற - தேன் பொருந்திய மலர்மாலைகளையுடைய உதயகுமரன் வஞ்சினங் கூறுதலும், ஏடு அவிழ்தாரோய் எங்கோமகள் முன் நாடாது துணிந்து நா நல்கூர்ந்தனை என - இதழ்விரிகின்ற மாலையை யுடையவனே எம் தலைமகள் முன்னர் ஆராயாது துணிவுடன் சூளுறவு செய்து நா வறுமை யுற்றனை என்று, வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச் சித்திரம் ஒன்று தெய்வம் கூறலும்-கைவல் சிற்பரால் இயற்றப்பட்டு விளங்கிய தொழில் அமைந்த சித்திரம் ஒன்றிற் பொருந்திய தெய்வம் உரைத்தலும் ;  
  
மும்மையின் - உளம் உரை உடல் என்னும் முக் கரணங்களால் என்றுமாம் ; முறைமையின் என்பதும் பாடம். நா நல்கூர்தலாவது பயனில மொழிதல். வித்தகர்-சிற்பம் வல்லோர் ; "வித்தக ரியற்றிய விளங்கிய கைவினைச், சித்திரச் செய்கை" (3: 167-8) என முன்னர் வந்தமையுங் காண்க. ஒன்று-பொருந்திய ; அதிட்டித்த.

### [20.2](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.20.2)

சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை  
  
உதய குமரன் உள்ளங் கலங்கிப்  
பொதியறைப் பட்டோர் போன்றுமெய் வருந்தி  
அங்கவள் தன்றிறம் அயர்ப்பா யென்றே  
  
10 செங்கோல் காட்டிய தெய்வமுந் திப்பியம்  
சபையர வல்குல் பலர்பசி களையக்  
கையி லேந்திய பாத்திரம் திப்பியம்  
முத்தை முதல்வி அடிபிழைத் தாயெனச்  
சித்திர முரைத்த இதூஉந் திப்பியம்  
  
15 இந்நிலை யெல்லாம் இளங்கொடி செய்தியின்  
பின்னறி வாமெனப் பெயர்வோன் றன்னை  
  
7  
  
உரை  
  
16  
  
உதயகுமரன் உள்ளம் கலங்கி - உதயகுமரன் மனக் கலக்க முற்று, பொதியறைப் பட்டோர்போன்று மெய் வருந்தி - சாளரமில்லாத கீழறையில் அகப்பட்டோரைப் போல உடல் வருந்தி, அங்கவள் தன்திறம் அயர்ப்பாய் என்றே - மணிமேகலைமீது கொண்ட எண்ணத்தை மறப்பாய் என்றோ, செங்கோல்காட்டிய தெய்வமும் திப்பியம் - செங்கோன் முறையை எடுத்துக் காட்டிய தெய்வங் கூறியதும் வியப்புடைத்து, பையர வல்குல் பலர் பசிகளையக் கையிலேந்திய பாத்திரம் திப்பியம் - மணிமேகலை பலருடைய பசியையும் நீக்குதற்குக் கையில் ஏந்திய கடிஞையும் வியப்புடைத்து, முத்தை முதல்வி அடிபிழைத்தாய் எனச் சித்திரம் உரைத்த இதூஉம் திப்பியம்-எம் தலைவியின் திருவடியில் பிழை புரிந்தாய் என்று இவ் வோவியங் கூறிய இதுவும் வியப்புடைத்து, இந்நிலை எல்லாம் இளங்கொடி செய்தியின் பின் அறிவாம் எனப் பெயர்வோன் தன்னை - இவற்றின் உண்மையை யெல்லாம் மணிமேகலையின் செயலால் பின்பு அறிவோமென எண்ணி அங்குநின்றும் மீண்ட உதயகுமரனை ;  
  
பொதியறை - புழுக்கறை : சிறு துவாரமுமின்றி மூடப்பட்ட  
  
கீழறை; ¹"போதார் பிறவிப் பொதியறையோர்" என்பது காண்க. தெய்வம்-மணிமேகலா தெய்வம். தெய்வம் கூறியதுமென்க. திப்பியம்- ஈண்டு வியப்பென்னும் பொருட்டு ; தெய்வத்தன்மையுமாம். அரவின் பை யென மாறுக. பை-படம். பாத்திரமும் என எண்ணும்மை விரிக்க முத்தை : விகாரம்.  
  
¹ சிலப். 10 : 191.

### [20.3](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.20.3)

சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை  
  
அகல்வாய் ஞாலம் ஆரிரு ளுண்ணப்  
பகலர சோட்டிப் பணையெழுந் தார்ப்ப  
மாலை நெற்றி வான்பிறைக் கோட்டு  
  
20 நீல யானை மேலோர் இன்றிக்  
காமர் செங்கை நீட்டி வண்டுபடு  
பூநாறு கடாஅஞ் செருக்கிக் கால்கிளர்ந்து  
நிறையழி தோற்றமொடு தொடர முறைமையின்  
  
17  
  
உரை  
  
23  
  
அகல்வாய் ஞாலம் ஆரிருள் உண்ண-இடமகன்ற பூமியை நிறைந்த இருளானது உண்ணுமாறு, பகல் அரசு ஓட்டி - கதிரவனாகிய அரசனை ஓட்டி, பணைஎழுந்து ஆர்ப்ப - பறையெழுந்து ஒலிக்க, மாலை நெற்றி வான்பிறைக் கோட்டு - அந்திக் காலமாகிய நெற்றியும் வானிலுள்ள பிறையாகிய மருப்பும் உடைய, நீலயானை- கரிய நிறமுடைய இரவாகிய யானை, மேலோர் இன்றி - பாகர் ஓரு வரும் இன்றி, காமர் செங்கைநீட்டி-விருப்பமாகிய துதிக்கையை  
நீட்டி, வண்டுபடு பூ நாறு கடா அம் செருக்கி - வண்டு மொய்க்கும் பூவின் மணம் பொருந்திய மதநீரைச் சொரிந்து களித்து, கால் கிளர்ந்து நிறையழி தோற்றமொடு தொடர - காற்றைப் போல  
எழுந்து காவலைக் கடந்த தோற்றத்துடன் தொடர்ந்து வர ;  
  
முன்னுள்ள விசேடணங்களால் 'நீலயானை' என்றது இரவாயிற்று.  
  
இராத்திரியை யானையாக உருவகிப்பவர் அதற் கியைபுபடப் பிறவற்றையும் உருவகஞ் செய்கின்றார். "ஞாலம் ஆரிருள் உண்ண' என்பது ¹"உண்டற்குரிய வல்லாப் பொருளை, யுண்டன போலக் கூறலூமரபே" என்பதனான் அமைக்கப்படும். கொல்களிற்றின் செல்கையை அறிவித்தற்குப் பறையறைவித்தலுண்மையின் 'பணையெழுந்தார்ப்ப' என்றார். ²"வெரூஉப் பறை நுவலும் பரூஉப் பெருந் தடக்கை, வெருவரு செலவின் வெகுளி வேழம்" என்பது காண்க ; வென்றி முரசுங் கொள்க. மேலோரின்றி என்றது பாகரை வீசி யென்றபடி ; ³ "மேலோர் வீசி" என்றார் பிற சான்றோரும், காமர் - காமம் என்னும் பொருட்டு. கடக்களிறு கைவீசிச் செல்லுமாகலின் ' காமர் செங்கை நீட்டி' என்றார். பூ - வேங்கைப்பூ ; ஏழிலைப் பாலையின் மலருமாம்; யானையின் மதம். அப்பூக்களின் மணமுடையதாதலை, ⁴ "விலக்கருங் கரிமதம் வேங்கை நாறுவ" ⁵"பாத்த யானையிற் பதங்களிற் படுமத நாறக், காத்த வங்குச நிமிர்ந்திடக் கால்பிடித் தோடிப், பூத்த வேழிலைப் பாலையைப் பொடிப் பொடி யாகக், காத்தி ரங்களாற் றலத்தொடுந் தேய்த்த தோர் களிறு" என்பவற்றானறிக. ⁶"கால்கிளர்ந் தன்ன வேழமேல் கொண்டு" என்பதனால் யானை காற்றுப்போற் கிளர்ந்தெழு மென்பதறிக.  
  
பெயர்வோன்றன்னை நீலயானை தொடர வென்க : இரவு வர  
  
என்றவாறாயிற்று.  
  
¹தொல். பொருளியல். 19. ² பொருந. 171-2. ³ மதுரைக். 381. ⁴ கம்ப. நகர. 58. ⁵ கம்ப. வரை. ⁶ 6 முருகு. 82. .

### [20.4](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.20.4)

சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை  
  
நகர நம்பியர் வளையோர் தம்முடன்  
  
25 மகர வீனையின் கிளைநரம்பு வடித்த  
இளிபுண ரின்சீர் எஃகுளங் கிழிப்பப்  
பொறாஅ நெஞ்சிற் புகையெரி பொத்திப்  
பறாஅக் குருகின் உயிர்த்தவன் போயபின்  
  
24  
  
உரை  
  
28  
  
முறைமையின் நகர நம்பியர் வளையோர் தம்முடன் - நக ரத்திலுள்ள காதலஞ்செல்வர் மகளிர் தம்மோடு முறைமையாக, மகர வீணையின் கிளை நரம்பு வடித்த இளிபுணர் இன்சீர் எஃகு உளம் கிழிப்ப - மகரயாழின் கிளைநரம்புகளைத் தெறித்த இசையுடன் சேர்ந்த இனிய தாளவொற்றாகிய வேல் உளத்தைக்கிழிப்ப, பொறாஅ நெஞ்சில் புகைஎரி பொத்தி-பொறுக்கலாற்றாத உள்ளத்தின்கண் புகைகின்ற காமத்தீயானது மூட்டப்பட்டு, பறாஅக் குருகின் உயிர்த்து அவன் போயபின்-கொல்லன் உலை மூக்கினைப் போல வெய்துயிர்த்து இளங்கோ சென்றபின்னர் ;  
  
வளையோர்-வளையணிந்த மகளிர். நம்பியரும் வளையோரும் வடித்த இளிபுணர் இன்சீர் என்க. மகர வீணை - மகரயாழ் ; நால்வகை யாழுளொன்று ; பதினேழு நரம்புகளையுடையது. கிளை - ஐந்தாம் நரம்பு ; உழை சட்சமாகலின், சடசக்கிரமத்தில் அதற்கைந்தாவதாகிய குரல் கிளையாகும்; அங்ஙனமே இளி, துத்தம், விளரி, கைக்கிளை என்பனகுரல் முதல் ஒன்றற்கொன்று கிளையாகும் ; ஆகலின் இவ்வைத்தனையுமே கிளைநரம் பென்றலுமுண்டு ; "கிளையெனப் படுவ கிளங்குங் காலைக், குரலே யிளியே துத்தம் விளரி, கைக்கிளை யெனவைந் தாகு மென்ப" என்னும் பழைய நூற்பாவுங் காண்க. வடித்தல் - நரம்பை உருவுதல் ; தெறித்தலுக்காயிற்று. இளியென்பது ஏழுநரம்பினுள் ஒன்றன் பெயராதலன்றி, இசையைக் குறிக்கும் பொதுப் பெயருமாம், சீருடன்கூடிய இளியாகிய எஃகு என்க. பறாஅக் குருகு - கொல்லன் உலைமூக்கு ; பூவா வஞ்சி முதலியன போல வெளிப்படையென்னும்இலக்கணத்தது. அவன் - உதயகுமரன்.

### [20.5](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.20.5)

சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை  
  
உறையுட் குடிகை உள்வரிக் கொண்ட  
  
30 மறுவில் செய்கை மணிமே கலைதான்  
மாதவி மகளாய் மன்றம் திரிதரின்  
காவலன் மகனோ கைவிட லீயான்  
காய்பசி யாட்டி காயசண் டிகையென  
ஊர்முழு தறியும் உருவங் கொண்டே  
  
35 ஆற்றா மாக்கட் காற்றுந் துணையாகி  
  
29  
  
உரை  
  
35  
  
உறையுட் குடிகை உள்வரிக் கொண்ட - உறைவிடமாகிய சிறிய கோயிலின்கண் வேற்றுருவ மெய்திய, மறுவில் செய்கை மணிமேகலைதான் - குற்றமற்ற செய்கையையுடைய மணிமேகலை, மாதவி மகளாய் மன்றம் திரிதரின்-மாதவியின் மகளாகவே உலக அறவியிற் சுற்றிக்கொண்டிருந்தால், காவலன் மகனோ கைவிடலீ யான் - மன்னவன் புதல்வன் கைவிடான் என நினைந்து, காய்பசி யாட்டி காயசண்டிகை என ஊர் முழுதறியும் உருவங்கொண்டே - ஊரிலுள்ளோர் அனைவராலும் நன்கறியப்பட்ட யானைத்தீ நோயினையுடைய காயசண்டிகையைப் போல உருவங்கொண்டு, ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணையாகி-வறியோர்க்கு உதவிபுரியும் அருந்துணையாகி ;  
  
உள்வரி - வேற்றுரு ; பொய்வேடம். விடலீயான் : வினைத்திரி  
  
சொல். கைவிடனென நினைந்து என ஒரு சொல் வருவித்துரைக்க.

### [20.6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.20.6)

சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை  
  
ஏற்றலும் இடுதலும் இரப்போர் கடனவர்  
மேற்சென் றளித்தல் விழுத்தகைத் தென்றே  
நூற்பொருள் உணர்ந்தோர் நுனித்தன ராமென  
முதியாள் கோட்டத் தகவையின் இருந்த  
  
40 அமுத சுரபியை அங்கையின் வாங்கிப்  
பதியகந் திரிதரும் பைந்தொடி நங்கை  
  
36  
  
உரை  
  
41  
  
ஏற்றலும் இடுதலும் இரப்போர் கடன் - வாங்குதலும் கொடுத்தலும் இரப்போர் கடனாம் ஆகலின், அவர் மேற்சென்று அளித்தல் விழுத்தகைத்து என்றே - அவர் எவ்விடத்தும் வலிந்து சென்று கொடுத்தல் சிறப்புடையது என்று, நூற்பொருள் உணர்ந்தோர் நுனித்தனராமென-நூற்பொருள்களை அறிந்தோர் ஆராய்ந்துரைத்தனர் என்று கருதி, முதியாள் கோட்டத்து அகவயின் இருந்த - சம்பாபதி கோயிலின் உள்ளே இருந்த, அமுதசுரபியை அங்கையின் வாங்கி - அமுதசுரபியை அழகிய கையிற்கொண்டு, பதியகம் திரிதரும் பைந்தொடி நங்கை - நகரத்தின்கண்ணே சுற்றுகின்ற பசிய வளையல்களை யணிந்த மணிமேகலை ;  
  
மேற்சென்று - வலிதிற் சென்று. நுனித்தல்-நுண்ணிதின் உணர்தல். என - என்று கருதி. பைந்தொடி மடந்தை என்பதும் பாடம்.

### [20.7](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.20.7)

சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை  
  
அதிர்கழல் வேந்தன் அடிபிழைத் தாரை  
ஒறுக்குந் தண்டத் துறுசிறைக் கோட்டம்  
விருப்பொடும் புகுந்து வெய்துயிர்த்துப் புலம்பி  
  
45 ஆங்குப் பசியுறும் ஆருயிர் மாக்களை  
வாங்கு கையகம் வருந்தநின் றூட்டலும்  
  
42  
  
உரை  
  
46  
  
அதிர்கழல் வேந்தன் அடிபிழைத்தாரை - ஒலிக்கின்ற வீரக் கழலையுடைய மன்னவன் அடிக்குப் பிழைசெய்தாரை, ஒறுக்கும் தண்டத்து உறுசிறைக்கோட்டம் - தண்டிக்கும்டத்தினையுடைய  
சிறைச்சாலையின்கண், விருப்பொடும் புகுந்து - விருப்பத்துடன் சென்று, வெய்துயிர்த்துப் புலம்பி - வெய்தாக உயிர்த்து வருந்தி, ஆங்குப் பசியுறும் ஆருயிர் மாக்களை-அவ்விடத்திலே பசியுற்றிருக்கும் அரிய உயிரையுடைய மக்களை, வாங்கு கையகம் வருந்த நின்று ஊட்டலும் - வாங்குகின்ற கையினிடம் வருந்துமாறு நின்று உண்பித்தலும் ;  
  
இறைவனுக்கும் பெரியார்க்கும் பிழைசெய்தாரைத் திருவடி பிழைத்தாரென்று கூறுதல் மரபு. தண்டத்து உறு - தண்டத்தினைப் பொருந்தி நுகரும். பசியுற்று வெய்துயிர்த்துப் புலம்பும் மாக்களென மாறுக. ஆருயிர் மாக்கள் என்றது, பெறுதற்கரிய மக்களுயிரைப் பெற்றார் இங்ஙனம் வருந்துகின்றனரே யென இரங்கிக் கூறியபடி. ஈண்டுக் கூறியவாறு "வாங்குநர் கையகம் வருத்துத லல்லது" (11 : 49) "வாங்குகை வருந்த மன்னுயி ரோம்பலின்" (14 : 23) "வாங்குகை வருந்த மன்னுயிர்க் களித்து" (17 : 5) என முன்னர்ப் போந்தமையுங் காண்க.

### [20.8](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.20.8)

சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை  
  
ஊட்டிய பாத்திரம் ஒன்றென வியந்து  
கோட்டங் காவலர் கோமகன் றனக்கிப்  
பாத்திர தானமும் பைந்தொடி செய்தியும்  
  
50 யாப்புடைத் தாக இசைத்துமென் றேகி  
  
47  
  
உரை  
  
50  
  
ஊட்டிய பாத்திரம் ஒன்றென வியந்து-இங்ஙனம் பலரையும் உண்பித்த பாத்திரம் ஒன்றே என வியப்புற்று, கோட்டங் காவலர் - சிறைக்கோட்டங் காப்பவர், கோமகன் தனக்கு - அரசனுக்கு, இப் பாத்திர தானமும் பைந்தொடி செய்தியும் - இப் பாத்திரத்தின் தானச் சிறப்பையும் இதனைக் கொண்ட இளங்கொடியின் செயலையும், யாப்புடைத்தாக இசைத்தும் என்று ஏகி - உறுதி யுடைத்தாகக் கூறுவோம் எனச் சென்று ;  
  
கோட்டங் காவலர் வியந்து தானமும் செய்தியும் கோமகனுக்கு இசைத்துமென் றேகி யென்க,

### [20.9](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.20.9)

சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை  
  
நெடியோன் குறளுரு வாகி நிமிர்ந்துதன்  
அடியிற் படியை யடக்கிய அந்நாள்  
நீரிற் பெய்த மூரி வார்சிலை  
மாவலி மருமான் சீர்கெழு திருமகள்  
  
55 சீர்த்தி யென்னுந் திருத்தகு தேவியொடு  
போதவிழ் பூம்பொழில் புகுந்தனன் புக்குக்.  
  
51  
  
உரை  
  
56  
  
நெடியோன் குறள் உருவாகி நிமிர்ந்து தன் அடியிற்படியை அடக்கிய-திருமால் வாமன வடிவங்கொண்டு பின் பேருருவமாய்ப் பூமியைத் தன் திருவடியின்கண் அடக்க, அந்நாள்-அற்றைநாளில், நீரிற்பெய்த - பூமியை நீருடன் அளித்த, மூரி வார் சிலை மாவலி மருமான் சீர்கெழு திருமகள்-வலிய பெரிய வில்லையுடைய மாவலியின் வழித்தோன்றலாகிய அரசுனுடைய புகழ்மிக்க திருமகளாகிய, சீர்த்தி என்னும் திருத்தகு தேவியொடு - சீர்த்தி என்னும் பெயருடைய செல்வமிக்க தேவியுடன், போது அவிழ்பூம்பொழில் புகுந்தனன்புக்கு - பூக்கள் விரிந்த அழகிய சோலையிற் சென்று புகுந்து ;  
  
குறள் - குறிய வடிவமுடைய வாமனன் ; காசிபனுக்கும்  
  
அதிதிக்கும் பிறந்தவன் ; திருமாலின் ஐந்தாவது தோற்றமாயவன் ; இவன் மாபலியிடத்து மூன்றடிமண் இரந்து பெற்று, புவியையும் வானையும் ஈரடியால் அளந்து, மூன்றாமடியைப் பலியின் தலையில் வைத்து அவனைப பாதலத்தில் இருத்தினன் என்பது வரலாறு. அடக்கிய-அடக்க: செய்யிய வென்னும் வினையெச்சம் ; பெயரெச்சமாக்கோடலுமாம். நீரிற் பெய்த-நீருடன் பெய்த; தாரை வார்த்தளித்த என்றபடி. மாவலி: மாபலியென்பதன் திரிபு. பாண குலத்தரசர்கள் மாவலியின் வழியினரெனக் கூறப்படுவர். இன்னோர் வாணகப்பாடி முதலிய இடங்களிலிருந்து அரசுபுரிந்தோராவர். அக் குலத்தரசருளொருவன உமகளென்க.

### [20.10](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.20.10)

சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை  
  
கொம்பர்த் தும்பி குழலிசை காட்டப்  
பொங்கர் வண்டினம் நல்லியாழ் செய்ய  
வரிக்குயில் பாட மாமயில் ஆடும்  
  
60 விரைப்பூம் பந்தர் கண்டுளஞ் சிறந்தும  
  
57  
  
உரை  
  
60  
  
கொம்பர்த் தும்பி குழலிசை காட்ட - கொம்புகளிலுள்ள தும்பிகள் வேய்ங்குழ லோசையைக் காட்ட, பொங்கர் வண்டினம் நல்லியாழ்செய்ய - சோலையிலுள்ள வண்டினங்கள் நல்ல யாழினி சையை முரல, வரிக்குயில் பாட மாமயில் ஆடும் - வரிகளையுடைய குயில்கள் பாட அழகிய மயில்கள் ஆடுகின்ற, விரைப்பூம் பந்தர் கண்டு உளம் சிறந்தும்-மணம் பொருந்திய மலர்ப்பந்தரைக் கண்டு மனமகிழ்ச்சி மிக்கும் ;  
  
வரி - கீற்று ; வரிப்பாட்டுமாம். பந்தரில் ஆடுதலைக் கண்டு  
  
என மாறுதலுமாம். 'குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட, மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய, வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பின், மயிலா டரங்கின்' (4 : 3-6) என முன்னர் வந்திருத்தல் அறியற் பாலது.

### [20.11](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.20.11)

சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை  
  
புணர்துணை நீங்கிய பொய்கை அன்னமொடு  
மடமயிற் பேடையுந் தோகையுங் கூடி  
இருசிறை விரித்தாங் கெழுந்துடன் கொட்பன  
ஒருசிறைக் கண்டாங் குண்மகிழ் வெய்தி  
  
65 மாமணி வண்ணனுந் தம்முனும் பிஞ்ஞையும்  
ஆடிய குரவையிஃ தாமென நோக்கியும்  
  
61  
  
உரை  
  
66  
  
புணர்துணை நீங்கிய பொய்கை அன்னமொடு - தன் துணையாகிய பேட்டினைப் பிரிந்த குளத்தில் வாழும் அன்னப்புள்ளுடன், மடமயிற் பேடையும் தோகையும் கூடி - மடப்பம் பொருந்திய மயிற்பேடையும் ஆண் மயிலும் சேர்ந்து, இருசிறை விரித்தாங்கு. எழுந்துடன் கொட்பன-இரண்டு சிறகுகளையும் விரித்து ஒருங்கே எழுந்து சுழல்வனவற்றை, ஒரு சிறைக் கண்டாங்கு உள்மகிழ்வு எய்தி - ஆண்டு ஒரு பக்கத்திற் கண்டு மனக் களிப்புற்று, மா மணி வண்ணனும் தம் முனும் பிஞ்ஞையும் - நீல மணிபோன்ற நிறமுடைய கண்ணனும் அவன் முன்னவனாகிய பலதேவனும் நப்பின்னையும், ஆடியகுரவை இஃதாமென நோக்கியும் - துவரா பதியில் எருமன்றத்தே ஆடிய குரவையாகும் இஃது என்று நோக்கி வியந்தும்;  
  
வெண்ணிற முடைமையால் ஆண் அன்னத்திற்குப் பலதேவனும், கருநிறமுடைமையால் ஆண் மயிலுக்கும் பெண் மயிலுக்கும் முறையே கண்ணனும் நப்பின்னையும் உவமைகள். குரவை - வினோதக் கூத்து  
  
ஆறினுள் ஒன்று ; காம்மும் வென்றியும் பொருளாகக் குரவைச் செய்யுள் பாட்டாக் எழுவரேனும் எண்மரேனும் ஒன்பதின்மரேனும் கைபிணைந்தாடுவது. கண்ணன் முதலியோர் குரவையாடியதனை,  
  
¹"மாயவன்றம் முன்னினொடும் வரிவளைக்கைப் பின்னையொடும் கோவலர்தஞ் சிறுமியர்கள் குழற்கோதை புறஞ்சோர  
ஆய்வளைச்சீர்க் கடிபெயர்த்திட் டசோதையார் தொழுதேத்தத் தாதெருமன் றத்தாடுங் குரவையோ தகவுடைத்தே."  
  
என்பதனானறிக.  
  
¹ சிலப். 17.

### [20.12](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.20.12)

சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை  
  
கோங்கலர் சேர்ந்த மாங்கனி தன்னைப்  
பாங்குற விருந்த பல்பொறி மஞ்ஞையைச்  
செம்பொற் றட்டில் தீம்பா லேந்திப்  
  
70 பைங்கிளி யூட்டுமோர் பாவையா மென்றும்  
  
67  
  
உரை  
  
70  
  
கோங்கலர் சேர்ந்த மாங்கனி தன்னைப் பாங்குற இருந்த பல்பொறி மஞ்ஞையை - கோங்கம் பூவினுடன் சேர்ந்திருந்த மாங்கனியின் பக்கத்தில் இருந்த பல பொறிகளையுடைய மயிலை, செம்பொன் தட்டில் தீம்பால் ஏந்தி-சிவந்த பொற்றட்டில் இனிய பாலை ஏந்திக் கொண்டு, பைங்கிளி ஊட்டும் ஓர் பாவையாம் என்றும் - பசிய கிளியை உண்பிக்கும் ஒரு அழகிய பெண்ணாகும் என்றும்;  
  
கோங்கலர்க்குப் பாலையுடைய பொற்றட்டும், மாங்கனிக்குக் கிளியும், மயிலுக்குப் பெண்ணும் உவமைகள். மாங்கனிக்குக் கிளி வடிவும் வண்ணமும் பற்றி உவமையாகும் ; ¹"வண்டளிர் மாஅத்துக், கிளி போல் காய கிளைத்துணர்" என்பதுங் காண்க. மற்றும், மாவடுவிற்குக் கிளி உவமையாதலும், மகடூஉ ஒருத்தி பொன்வள்ளத்திலே பாலையேந்திக் கிளியை உண்பிப்பதுமாகிய கருத்துக்கள் ²"சேடியல் வள்ளத்துப் பெய்தபால் சில காட்டி, ஊடுமென் சிறுகிளி யுணர்ப்பவள் முகம்போல,...கடிகயத் தாமரைக் கமழ்முகை கரைமாவின், வடிதீண்ட வாய்விடூஉம் வயலணி நல்லூர" என்னுஞ் சான்றோர் செய்யுளில் அமைந்திருத்தல் காண்க.  
  
¹ அகம். 37. ² கலி. மருதம். 7.

### [20.13](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.20.13)

சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை  
  
அணிமலர்ப் பூம்பொழில் அகவையி னிருந்த  
பிணவுக்குரங் கேற்றிப் பெருமதர் மழைக்கண்  
மடவோர்க் கியற்றிய மாமணி யூசல்  
கடுவனூக் குவது கண்டுநகை எய்தியும்  
  
71  
  
உரை  
  
74  
  
அணிமலர்ப் பூம்பொழில் அகவயின் இருந்த - அழகிய மலர்களையுடைய பூஞ்சோலையில் உள்ளிடத்திருந்த, பிணவுக் குரங்கு ஏற்றிப் பெருமதர் மழைக்கண் மடவோர்க்கு இயற்றிய மாமணி ஊசல் - மதர்த்த நோக்கமுடைய மழை போலும் பெரிய கண்களையுடைய மகளிருக்குச் செய்யப்பட்ட அழகிய மணிகளானாகிய ஊசலில் பெண் குரங்கினை ஏற்றி, கடுவன் ஊக்குவது கண்டு நகை எய்தியும் - ஆண் குரங்கு ஆட்டுவது கண்டு மகிழ்ச்சி யடைந்தும்;  
  
பிணவுக் குரங்கு - பெண் குரங்கு; ¹"பன்றி புல்வாய் நாயென மூன்றும், ஒன்றிய வென்ப பிணவின் பெயர்க் கொடை" என்னுஞ் சூத்திரத்து, 'ஒன்றிய' என்றதனால், பிணவு என்பது குரங்குக்கும் கொள்ளப்பட்டது. கடுவன் ஊசலில் பிணவுக் குரங்கை யேற்றி ஊக்குவது கண்டு நகையெய்தியும் என்க.  
  
¹ தொல். மரபு. 58.

### [20.14](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.20.14)

சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை  
  
75 பாசிலை செறிந்த பசுங்காற் கழையொடு  
வால்வீச் செறிந்த மராஅங் கண்டு  
நெடியோன் முன்னொடு நின்றன னாமெனத்  
தொடிசேர் செங்கையிற் றொழுதுநின் றேத்தியும்  
  
75  
  
உரை  
  
78  
  
பாசிலை செறிந்த பசுங்காற் கழையொடு - பசிய இலைகள் நெருங்கிய பசிய தண்டினையுடைய மூங்கிலுடன், வால் வீசெறிந்த மராஅம் கண்டு-வெள்ளிய பூக்கள் நெருங்கிய வெண்கடம்பினைக் கண்ணுற்று, நெடியோன் முன்னொடு நின்றனன் ஆம்என - கண்ணன் தன் முன்னோனொடு நிற்கின்றனனாம் என்று, தொடிசேர் செங்கையில் தொழுது நின்று ஏத்தியும்-வீரவளை யணிந்த சிவந்த கைகளாற் கும்பிட்டு நின்று துதித்தும் ;  
  
முன் - தமையன் ; பலதேவர். கழைக்குக் கண்ணனும் வெண் கடம்பிற்குப் பலதேவரும் உவமைகள். வெண்கடம்பிற்குப் பலதேவர் உவமையாதல் ¹"ஒருகுழை யொருவன்போ லிணர்சேர்ந்த மராஅமும்" ² நாஞ்சில் வலவ னிறம்போலப் பூஞ்சினைச், செங்கான் மராஅந் தகைந்தன" என்பவற்றுள்ளும் காணப்படுமாறறிக.  
  
¹ கலி. 26. ² கார். 19.

### [20.15](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.20.15)

சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை  
  
80 85  
  
90  
  
ஆடற் கூத்தினோ டவிநயந் தெரிவோர்  
நாடகக் காப்பிய நன்னூல் நுனிப்போர்  
பண்ணியாழ் நரம்பிற் பண்ணுமுறை நிறுப்போர்  
தண்ணுமைக் கருவிக் கண்ணெறி தெரிவோர்  
குழலொடு கண்டங் கொளச்சீர் நிறுப்போர்  
ஆரம் பரிந்த முத்தங் கோப்போர்  
ஈரம் புலர்ந்த சாந்தந் திமிர்வோர்  
குங்கும வருணங் கொங்கையின் இழைப்போர்  
அஞ்செங் கழுநீர் ஆயிதழ் பிணிப்போர்  
நன்னெடுங் கூந்தல் நறுவிரை குடைவோர்  
பொன்னின் ஆடியிற் பொருந்துபு நிற்போர்  
ஆங்கவர் தம்மோ டகலிரு வானத்து  
வேந்தனிற் சென்று விளையாட் டயர்ந்து  
  
79  
  
உரை  
  
92  
  
ஆடற் கூத்தினோடு அவிநயம் தெரிவோர்-கதை தழுவாது ஆடுதலையுடைய கூத்தினோடு பாட்டின் பொருள் தோன்றக் கை காட்டும் அவிநயத்தினை அறிவோரும், நாடகக் காப்பிய நன்னூல் நுனிப்போர் - நாடகக் காப்பியமாகிய நல்ல நூல்களைக் கூர்ந்து ஆராய்வோரும், பண் யாழ் நரம்பில் பண்ணுமுறை நிறுப்போர் - பண்களையுடைய யாழ் நரம்பில் பண்களை முறையே நிறுத்துவோரும், தண்ணுமைக் கருவிக் கண் எறி தெரிவோர் - தோற் கருவியாகிய மத்தளத்தின் முகத்தில் அடித்தலை ஆராய்வோரும், குழலொடு கண்டம் கொளச்சீர் நிறுப்போர்-வேய்ங் குழலுடன் மிடற்றோசையும் பொருந்தும் வண்ணம் தாளவறுதி செய்வோரும், பழு நிய படால் பலரொடு மகிழ்வோர்-முற்றுப் பெற்ற இசைப் பாடல்களைப் பலருடன் பாடி மகிழ்வோரும், ஆரம் பரிந்த முத்தம்கோப் போர்-மாலைகள்அறுபடுதலாற் சிந்திய முத்துக்களைக் கோப்போரும், ஈரம் புலர்ந்த சாந்தம் திமிர்வோர் - ஈரம் உலர்ந்த சந்தனத்தைத் திமிர்வோரும், குங்கும வருணம் கொங்கையின் இழைப் போர் - சிவந்த தொய்யிற் குழம்பைக் கொங்கைகளில் எழுதுவோரும், அம் செங்கழுநீர் ஆயிதழ் பிணிப்போர்-அழகிய செங்கழுநீர் மலரின் அழகிய இதழ்களைக் கட்டுவோரும், நல்நெடுங் கூந்தல் நறுவிரை குடைவோர் - நல்ல நீண்ட குழலில் நறுமணங்களைப் புகுத்தி அப்புவோரும், பொன்னின் ஆடியிற் பொருந்துபு நிற்போர் - பொன்னாலாகிய சுற்றுவட்டத்தினையுடைய கண்ணாடியிற் பொருந்திக் கண்டு நிற்போரும் ஆகிய, ஆங்கவர் தம்மோடு - அவர்களுடன், அகலிரு வானத்து வேந்தனிற் சென்று விளையாட்டு அயர்ந்து - அகன்ற பெரிய விண்ணுலகத்து வேந்தனாகிய இந்திரனைப் போலச் சென்று விளையாட்டை விரும்பிச் செய்து;  
  
நாடகம் - கதை தழுவிவருங் கூத்து. நாடகக் காப்பியமாகிய  
  
நன்னூலென்க; இன்பத் துறையில் நிற்பவராகலின் நாடகக் காப்பியங் கூறினார். முன்னின்ற பண் யாழுக்கு அடை. யாழ்-பேரியாழ் முதலிய நால்வகை யாழ். நரம்பு - குரல், துத்தும், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன. பண் - பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி என்னும் பெரும்பண்களும், அவற்றின் திறங்களும், அவ்விரு கூற்றின் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என்னும் இன வேறுபாடுகளும் ஆகிய பண்கள். எறி: முதனிலைத் தொழிற் பெயர் ; ¹"பண்ணமை முழவின் கண்ணெறியறிந்து" என்பதுங் காண்க. பழுநிய - இசை முற்றிய. திமிர்தல்-தடவி யுதிர்த்தல்; குடைவோர் - துவரினும் ஓமாலிகையினும் ஊறிய நன்னீரால் கூந்தலை ஆட்டுவோர் என்றுமாம். அவிநயந் தெரிவோர் முதலாகிய அவர்தம்மோடு சென்று விளையாட்டயர்ந்து என்க.  
  
¹ சிலப். 3: 61.

### [20.16](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.20.16)

சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை  
  
95  
  
குருந்துந் தளவுந் திருந்துமலர்ச் செருந்தியும்  
முருகுவிரி முல்லையுங் கருவிளம் பொங்கரும்  
பொருந்துபு நின்று திருந்துநகை செய்து  
குறுங்கால் நகுலமும் நெடுஞ்செவி முயலும்  
பிறழ்ந்துபாய் மானும் இறும்பகலா வெறியும்  
வம்மெனக் கூஉய் மகிழ்துணை யொடுதன்  
செம்மலர்ச் செங்கை காட்டுபு நின்று  
  
93  
  
உரை  
  
99  
  
குருந்தும் தளவும் திருந்து மலர்ச் செருந்தியும் - குருந்தும் செம்முல்லையும் அழகிய பூக்களையுடைய செருந்தியும், முருகுவிரி முல்லையும் கருவிளம் பொங்கரும் - மணம் விரிகின்ற முல்லையும் கருவிள மரச்செறிவும், பொருந்துபு நின்று திருந்து நகைசெய்து- அமர்ந்திருந்து இன்ப நகை புரிந்து, குறுங்கால நகுலமும் நெடுஞ்செவி முயலும் - குறிய கால்களையுடைய கீரியையும் நீண்ட காதுகளையுடைய முயலையும், பிறழ்ந்து பாய் மானும் இறும்பு அகலா வெறியும் - துள்ளிக் குதிக்கின்ற மானையும் குறுங்காடுகளினின்று நீங்காத ஆட்டையும், வம்மெனக் கூஉய் மகிழ்துணையொடு தன் செம்மலர்ச் செங்கை காட்டுபு நின்று - வாருமென அழைத்துப் பெருந்தேவியுடன் தன் சிவந்த மலர் போன்ற செவ்விய கையாற் காட்டி நின்று ;  
  
செருந்தி, கருவிளை யென்பன மர வேறுபாடுகள். பொங்கர் -  
  
சோலை; சோலை போலும் மரச் செறிவு. இறும்பு - குறுங்காடு. வெறி- ஆடு. மகிழ்துணை - இராமாதேவி. மகிழ்துணையொடு பொருந்துபு நின்று நகைசெய்து வம்மெனக் கூஉய்ச் செங்கை காட்டுபு நின்று என்க.

### [20.17](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.20.17)

சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை  
  
100 105  
  
மன்னவன் றானும் மலர்க்கணை மைந்தனும்  
இன்னிள வேனிலும் இளங்காற் செல்வனும்  
எந்திரக் கிணறும் இடுங்கற் குன்றமும்  
வந்துவீ ழருவியும் மலர்ப்பூம் பந்தரும்  
பரப்புநீர்ப் பொய்கையுங் கரப்புநீர்க் கேணியும்  
ஒளித்துறை யிடங்களும் பளிக்கறைப் பள்ளியும்  
யாங்கணுந் திரிந்து தாழ்ந்துவிளை யாடி  
  
100  
  
உரை  
  
106  
  
மன்னவன்தானும் மலர்க்கணை மைந்தனும் - அரசர் பெருமானும் மலராகிய அம்புகளையுடைய காமவேளும், இன்னிள வேனிலும் இளங்காற் செல்வனும் - இன்பம் பயக்கும் இளவேனிலும் தென்றற் காற்றாகிய செல்வனும், எந்திரக் கிணறும் இடுங்கற் குன்றமும் - நீரை நிறைக்கவேண்டுமாயின் நிறைத்துப் போக்க வேண்டுமாயிற் போக்குதற்குரிய எந்திரம் அமைந்த கிணறும்செய் குன்றும், வந்து வீழ் அருவியும் மலர்ப்பூம்பந்தரும் - வந்து விழுகின்ற அருவியும் மலர்க்களாகிய அழகிய பந்தரும், பரப்புநீர்ப் பொய்கையும் கரப்பு நீர்க்கேணியும் - நீர்ப்பரப்பினையுடைய வாலியும் மறைந்திருக்கின்ற நீரையுடைய கிணறும், ஒளித்து உறை இடங்களும் பளிக்கறைப் பள்ளியும் - ஒளிந்து வாழ்கின்ற மறைவிடங்களும் பளிக்கறையாகிய இடமும் ஆகிய, யாங்கணும் திரிந்து தாழ்ந்து விளையாடி- எவ்விடத்தும் திரிந்து தங்கி விளையாடி ;  
  
இளவேனில் - சித்திரையும் வைகாசியுமாகிய இரு திங்கள்கள்.  
  
இளங்கால்-இளந் தென்றற்காற்று, மந்தமாருதம். இளவேனிற் காலத்திலே இளந் தென்றல் வீசாநிற்கக் காமவேட்கை விஞ்ச மன்னவன் விளையாடினான் என்பார், 'மன்னவன்றானும் மைந்தனும் வேனிலும் செல்வனும் விளையாடி' என்றார். ¹"அந்தக் கேணியு மெந்திரக் கிணறும், தண்பூங் காவுந் தலைத்தோன் றருவிய, வெண்சுதைக் குன்றொடு வேண்டுவ பிறவும், இளையோர்க் கியற்றிய விளையாட் டிடத்த, சித்திரப் பூமி வித்தக நோக்கி" என வருவது ஈண்டு அறியற்பாலது.  
  
¹ பெருங். 1, 33: 3-7.

### [20.18](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.20.18)

சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை  
  
110 115  
  
மகத வினைஞரும் மராட்டக் கம்மரும்  
அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்  
தண்டமிழ் வினைஞர் தம்மொடு கூடிக்  
கொண்டினி தியற்றிய கண்கவர் செய்வினைப்  
பவளத் திரள்காற் பன்மணிப் போதிகைத்  
தவள நித்திலத் தாமந் தாழ்ந்த  
கோணச் சந்தி மாண்வினை விதானத்துத்  
தமனியம் வேயந்த வகைபெறு வனப்பிற்  
பைஞ்சேறு மெழுகாப் பசும்பொன் மண்டபத்து  
இந்திர திருவன் சென்றினி தேறலும்  
  
107  
  
உரை  
  
116  
  
மகதவினைஞரும் மராட்டக் கம்மரும்-மகத நாட்டிற் பிறந்த மணி வேலைக்காரரும் மகாராட்டிரத்திற் பிறந்த பொற்கம்மியரும், அவந்திக்கொல்லரும் யவனத்தச்சரும்-அவந்திநாட்டுக் கொல்லரும் யவனநாட்டுத் தச்சரும், தண்டமிழ் வினைஞர் தம்மொடு கூடி-தண்ணிய தமிழ்நாட்டுத் தோன்றிய தொழில் வல்லாருடன் கூடி, கொண்டினிது இயற்றிய கண்கவர் செய்வினை-உள்ளங் கொண்டு நன்கு செய்தமைத்த கண்களைக் கவரும் தொழிற் சிறப்பினையுடைய, பவளத் திரள்கால் பன்மணிப் போதிகை - பவளத்தாற் சமைத்த திரட்சியுடைய தூண்களும் பல்வகை மணிகளாலாகிய போதிகைக் கட்டைகளும், தவள நித்திலத் தாமம் தாழ்ந்த-வெள்ளிய முத்துமாலைகள் தொங்கவிடப்பட்ட, கோணச் சந்தி மாண்வினை விதானத்து - கோணமாகிய சந்தினையுடைய மாட்சிமைப்பட்ட தொழிலமைந்த மேற்கட்டியும் அமைந்த, தமனியம் வேய்ந்த வகைபெறு வனப்பின்-பொன்னால் வேயப்பெற்ற வகையமைந்த அழகினையுடைய, பைஞ்சேறு மெழுகாப் பசும் பொன் மண்டபத்து-பசிய சாணத்தான் மெழுகப்படாத பசும் பொன் மண்டபத்தின்கண், இந்திர திருவன் சென்று இனிது ஏறலும் - இந்திரச் செல்வத்தினையுடைய மன்னவன் இனிது சென்று ஏறுதலும் ;  
  
மராட்டம் : மகாராட்டிரம் என்பதன் மரூஉ. யவனம் என்பது  
  
பரத கண்டத்தின் புறத்ததாகிய ஓர் நாடு. இங்ஙனம் ஒவ்வொரு நாட்டு வினைஞர் ஒவ்வொரு தொழிலிற் சிறந்திருந்தன ரென்பது, ¹ "யவனத் தச்சருமவந்திக் கொல்லரும், மகதத்துப் பிறந்த மணிவினைக் காரரும், பாடலிப் பிறந்த பசும்பொன் வினைஞரும், கோசலத் தியன்ற வோவியத் தொழிலரும், வந்த நாட்டு வண்ணக் கம்மரும்" என்பதனாலும் அறியப்படும். தமிழ் - தமிழ் நாடு ; தமிழ் வினைஞர் எனப் பொதுப் படக் கூறினமையின் அவர் பல தொழிலினும் வல்லுநராதல் பெற்றாம். போதிகை-தூணின் மேல் உத்தரம் முதலியவற்றைத் தாங்குங் கட்டை; கோணச் சந்தி - கூடல்வாய். பைஞ்சேறு - கோமயம் ; ஆவின்சாணம். ²"பைஞ்சேறு மெழுகிய நன்னகர்" என்றார் பிறரும். பொன் மண்டப மாகையாற் பைஞ்சேற்றால் மெழுகப் படாதாயிற்று ; சந்தனத்தால் மெழுகப்பட்ட தென்னலுமாம் ; ³"மங்கல வெள்ளை வழித்து முத்தீர்த்தபின்" என வருதல் காண்க. செய்வினையையுடைய மண்டபம், கால் முதலியவற்றையுடைய பொன் மண்டபமென்க.  
  
¹ பெருங். 1, 58 : 40 - 4. ² பெரும்பாண், 218. ³ சீவக. 1414.

### [20.19](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.20.19)

சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை  
  
120  
  
125  
  
130  
  
வாயிலுக் கிசைத்து மன்னவன் அருளால்  
சேய்நிலத் தன்றியுஞ் செவ்விதின் வணங்கி  
எஞ்சா மண்ணசைஇ இகலுளந் துரப்ப  
வஞ்சியி னிருந்து வஞ்சி சூடி  
முறஞ்செவி யானையுந் தேரும் மாவும்  
மறங்கெழு நெடுவாள் வயவரு மிடைந்த  
தலைத்தார்ச் சேனையொடு மலைத்துத்தலை வந்தோர்  
சிலைக்கயல் நெடுங்கொடி செருவேற் றடக்கை  
ஆர்புனை தெரியல் இளங்கோன் றன்னால்  
காரியாற்றுக் கொண்ட காவல் வெண்குடை  
வலிகெழு தடக்கை மாவண் கிள்ளி  
ஒளியொடு வாழி ஊழிதோ றூழி  
வாழி யெங்கோ மன்னவர் பெருந்தகை  
கேளிது மன்னோ கெடுகநின் பகைஞர்  
  
117  
  
உரை  
  
130  
  
வாயிலுக்கு இசைத்து மன்னவன் அருளால் - வாயில் காப்போர்க்கு உரைத்து அரசன் பணியால். சேய்நிலத்தன்றியும் செவ்வியின் வணங்கி - தூரமான இடத்தில் தாம் நின்றதன்றியும் முறைமையால் வணக்கஞ்செய்து, எஞ்சா மண் நசைஇ இகல்உளம் துரப்ப - குறையாத நிலத்தை விரும்பி மாறுபாடானது உள்ளத்தைச் செலுத்த, வஞ்சியின் இருந்து வஞ்சி சூடி-வஞ்சி நகரத்தின் கண்ணிருந்து வஞ்சிமாலை சூடி, முறஞ்செவி யானையும் தேரும் மாவும்-முறம் போன்ற காதுகளையுடைய யானையும் தேரும் குதிரையும், மறங்கெழு நெடுவாள் வயவரும் மிடைந்த-பெரிய வாட்படையைக் கையிற்கொண்ட ஆண்மைமிக்க வீரரும் செறிந்த, தலைத்தார்ச் சேனையொடு-முதன்மையாகிய தூசிப் படையோடு, மலைத்துத் தலைவந்தோர் - பொருதற்குவந்த இருபெரு வேந்தராகிய சேரபாண்டியருடைய, சிலைக்கயல் நெடுங்கொடி - வில்லும் கயலு மாகிய நெடிய கொடிகளை, செருவேல் தடக்கை ஆர்புனை தெரியல் இளங்கோன் தன்னால் - போர்புரியும் வேற்படையைக் கொண்ட பெரிய கைகளையுடைய ஆத்திமலரால் தொடுக்கப்பட்ட கண்ணியையுடைய இளங்கோவினால், காரியாற்றுக் கொண்ட - காரி யாற்றின்கண் கைப்பற்றிய' காவல் வெண்குடை வலிகெழு தடக்கை மாவண்கிள்ளி - உயிர்களைக் காக்கும் வெண் குடையினையும் வலிமிக்க பெருங் கைகளையும் உடைய மாவண்கிள்ளி, ஒளியொடு வாழி ஊழிதோ றூழி - நீ பல்லூழி காலம் ஒளியுடன் வாழ்வாயாக, வாழி எங்கோ மன்னவர் பெருந்தகை - எம் தலைவனாகிய அரசர் பெருந்தகையே வாழ்வாயாக, கேளிது மன்னோ கெடுகநின் பகைஞர் - நின் பகைஞர் ஒழிக ! அரசே இதனைக் கேட்பாயாக ;  
  
(48) கோட்டங் காவலர் (50) இசைத்து மென்றேகி, (117) வாயிலுக்கிசைத்து, மன்னவனருளால் (138) மன்னவ என்றலும்என முடியும் ; மன்னவனருளால் வணங்கி யென்றலுமாம். பகைவர் மண்ணினை விரும்பி வஞ்சிசூடிப் போருக்குச் செல்லுதல் வஞ்சித்திணையாகும் இதனை, ¹"எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன், அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே" என்பதனானறிக. வஞ்சியினிருந்து வஞ்சி சூடிச் சேனையொடு தலைவந்தோர் என்க. மலைந்து என்பதனை மலையவெனத் திரிக்க. இளங்கோன்-தம்பியாகிய நலங்கிள்ளி. மாவண்கிள்ளி : பெயர்; மிக்க வண்மையையுடைய கிள்ளி யென்றுமாம்; இவன் கிள்ளிவளவன் எனப்படுபவன். கிள்ளி : விளி. கிள்ளிவளவன் பகைவனாகிய காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளியையும், அவனுக்குத் துணை யாக வந்தெதிர்த்த சேர பாண்டியர்களையும் தன் தம்பியாகிய நலங்கிள்ளியால் காரியாறு என்னும் யாற்றின் பாங்கர் வென்றன னென்க. காரியாறு ஓர் நதி என்பதனை, ² "செல்கதிமுன் னளிப்பார்தந் திருக்காரிக் கரைபணிந்து" என்பதனானறிக, ஒளி - கடவுட்டன்மை ; ³"உறங்கு மாயினு மன்னவன் றன்னொளி, கறங்கு தெண்டிரை வையகங் காக்குமால்" என்பது காண்க : பரிமேலழகரும் இம் மேற் கோள் கொண்டே ⁴"இளைய ரினமுறைய ரென்றிகழார் நின்ற, ஒளியோ டொழுகப் படும்" என்னுங் குறளுரையில் 'ஒளி - உறங்கா நிற்கவும் உலகங் காக்கின்ற அவரது கடவுட்டன்மை,' என்றுரைத்தார்.  
மன்னும் ஓவும் அசைகள்.  
  
¹ தொல். புறம், 7. ² பெரிய. திருநா. 343. ³சீவக. 248. ⁴ குறள். 698-

### [20.20](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.20.20)

சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை  
  
135  
  
யானைத் தீநோய்க் கயர்ந்துமெய் வாடியிம்  
மாநகர்த் திரியுமோர் வம்ப மாதர்  
அருஞ்சிறைக் கோட்டத் தகவயிற் புகுந்து  
பெரும்பெயர் மன்ன நின்பெயர் வாழ்த்தி  
ஐயப் பாத்திரம் ஒன்றுகொண் டாங்கு  
மொய்கொண் மாக்கண் மொசிக்கவூண் சுரந்தனள்  
ஊழிதோ றூழி உலகங் காத்து  
வாழி யெங்கோ மன்னவ என்றலும்  
  
131  
  
உரை  
  
138  
  
யானைத்தீ நோய்க்கு அயர்ந்து மெய் வாடி இம் மாநகர்த் திரியும் ஓர் வம்ப மாதர் - யானைத்தீ என்னும் பசிநோயால் சோர்ந்து உடல் வாட்டமுற்று இப் பெரிய நகரத்தின்கண் சுற்றிக்கொண்டிருந்த ஒரு புதிய மங்கை, அருஞ்சிறைக் கோட்டத்து அகவயிற் புகுந்து - அரிய சிறைச்சாலையின் உள்ளே நுழைந்து, பெரும் பெயர் மன்ன நின்பெயர் வாழ்த்தி - பெரிய புகழுடைய அரசே நினது பெயரை வாழ்த்தி, ஐயப் பாத்திரம் ஒன்றுகொண்டு ஆங்கு மொய்கொள் மாக்கள் மொசிக்க ஊண் சுரந்தனள் - ஒரே பிச்சைப் பாத்திரத்தைக் கொண்டு அங்கு நெருங்குதலையுடைய மக்கள் அனைவரும் உண்ணுமாறு உணவினைச் சுரந்தளித்தனள், ஊழிதோறூழி உலகம் காத்து வாழி எங்கோ மன்னவ என்றலும்- ஊழியூழியளவும் உலகினைக் காத்து எம் தலைவனாகிய அரசே வாழ்வாயாக என வுரைத்தலும் ;  
  
நோய்க்கு அயர்ந்து - நோயால் அயர்ந்து. வம்பு - புதுமை;  
  
ஈறு திரிந்தது. பெரும்பெயர்-மிக்க புகழ். மொசிக்க-உண்ண; ¹ "மையூன் மொசித்த வொக்கலொடு" என்பது காண்க.  
  
¹ புறம். 96.

### [20.21](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.20.21)

சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை  
  
140 145  
  
வருக வருக மடக்கொடி தானென்று  
அருள்புரி நெஞ்சமொ டரசன் கூறலின்  
வாயி லாளரின் மடக்கொடி தான்சென்று  
ஆய்கழல் வேந்தன் அருள்வா ழியவெனத்  
தாங்கருந் தன்மைத் தவத்தோய் நீயார்  
யாங்கா கியதிவ் வேந்திய கடிஞையென்று  
அரசன் கூறலும் ஆயிழை உரைக்கும்  
  
139  
  
உரை  
  
145  
  
வருக வருக மடக்கொடிதான் என்று அருள்புரி நெஞ்சமொடு அரசன் கூறலின் - அங்ஙனமாயின் அவ் விளங்கொடி ஈண்டு வருக வருக என்று அரசன் அருண்மிகுந்த உளத்தினோடும் உரைத்தலின், வாயிலாளரின் மடக்கொடிதான் சென்று- வாயில் காவலரால் மணிமேகலை அரசன்முன் சென்று, ஆய்கழல் வேந்தன் அருள் வாழிய என - ஆராய்ந்து வீரக் கழலை யணிந்த மன்னவனது அருள் வாழ்க என்று கூற, தாங்கரும் தன்மைத் தவத்தோய் நீ யார் - பொறுத்தற்கரிய தன்மைகளையுடைய தவத்தினை யுடையோய் நீ யார், யாங்காகியது இவ் வேந்திய கடிஞை என்று - நின் கையிலேந்திய இப் பாத்திரம் யாண்டுக் கிடைத்தது என்று, அரசன் கூறலும் - வேந்தன் வினவுதலும், ஆயிழை உரைக்கும் - அவள் கூறுவாள் ;  
  
அடுக்கு விரைவு பற்றியது. அழைத்து வருக வென்று வாயிலாளர்க்குக் கூற வென்க. தாங்கருந் தன்மை-பிறராற் பொறுத்தற்கரிய தன்மை.

### [20.22](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.20.22)

சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை  
  
150  
  
வவிரைத்தார் வேந்தே நீநீடு வாழி  
விஞ்சை மகள்யான் விழவணி மூதூர்  
வஞ்சந் திரிந்தேன் வாழிய பெருந்தகை  
வானம் வாய்க்க மண்வளம் பெருகுக  
தீதின் றாக கோமகற் கீங்கீது  
ஐயக் கடிஞை அம்பல மருங்கோர்  
தெய்வந் தந்தது திப்பிய மாயது  
யானைத் தீநோய் அரும்பசி கெடுத்தது  
ஊனுடை மாக்கட் குயிர்மருந் திதுவென  
  
146  
  
உரை  
  
154  
  
விரைத்தார் வேந்தே நீ நீடுவாழி - மணம் பொருந்திய மாலையை யணிந்த மன்னவ ! நீ நீடுழி வாழ்வாயாக, விஞ்சை மகள் யான் - யான் ஓர் வித்தியாதர மகள், விழவணி மூதூர் வஞ்சந் திரிந்தேன் - விழாவாலாகிய எழில் நிறைந்த இத் தொன்னகரில் வஞ்சத்தால் திரிந்தேன், வாழிய பெருந்தகை - அரசர் பெருந்தகை வாழ்க, வானம் வாய்க்க - மழை தவறாது பொழிக, மண்வளம் பெருகுக - புவியில் வளம்பெருகுக, தீதின்றாக கோமகற்கு - அரசனுக்குத் தீதீன்றி நன்மையுண்டாகுக, ஈங்கிது ஐயக் கடிஞை-இஃது ஓர் பிச்சைப் பாத்திரம், அம்பல மருங்கு ஓர் தெய்வம் தந்தது - உலக வறவியிலுள்ள ஒரு தெய்வத்தாற் றரப் பட்டது, திப்பியமாயது - தெய்வத்தன்மை யுடையது, யானைத்தீ நோய் அரும்பசி கெடுத்தது - யானைத்தீ யென்னும் போக்குதற் கரிய பசிநோயைப் போக்கியது, ஊன் உடை மாக்கட்கு உயிர் மருந்து இது என-இஃது உடம்பு மெலிந்த மக்களுக்கு உயிரை நிறுத்தும் மருந்தாவது என்று கூற ;  
  
விஞ்சை மகள் என்பதற்கு மந்திரத்தால் உருமாறிய மகள் என்று மணிமேகலைக் கேற்பப் பொருள்கொள்க. வஞ்சத் திரிந்தேன் என்பதற்கும் எனது தீவினையால் திரிந்தேன் என்றும், வேற்றுருக்கொண்டு திரிந்தேன் என்றும் இருபொருள் கொள்க. உடை : வினைத்தொகை ; உடையவென்றுமாம் ; பிறிதொன்றுமில்லாத வென்றபடி.

### [20.23](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.20.23)

சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை  
  
155  
  
யான்செயற் பாலதென் இளங்கொடிக் கென்று  
வேந்தன் கூற மெல்லியல் உரைக்கும்  
சிறையோர் கோட்டஞ் சீத்தருள் நெஞ்சத்து  
அறவோர்க் காக்கும் அதுவா ழியரென.  
  
131  
  
உரை  
  
138  
  
யான் செயற்பாலது என்இளங்கொடிக்கு என்று வேந்தன் கூற - அரசன் யான் நினக்குச் செய்யவேண்டியது யாது என வினவ, மெல்லியல் உரைக்கும் - அவள் கூறுவாள், சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து அறவோர்க்கு ஆக்கும் அது வாழியர் என - சிறைச்சாலையை அழித்து அருள் உள்ளமுடைய  
அறவோர் வாழுங் கோட்டமாக்கும் அச் செயலே வாழ்வாயாக என்றுரைக்க ;  
  
இளங்கொடிக்கு முன்னிலையிற் படர்க்கை. ஆக்குமது நீ செயற் பாலதென என்க.

### [20.24](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.20.24)

சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை  
  
160  
  
அருஞ்சிறை விட்டாங் காயிழை உரைத்த  
பெருந்தவர் தம்மாற் பெரும்பொரு ளெய்தக்  
கறையோ ரில்லாச் சிறையோர் கோட்டம்  
அறவோர்க் காக்கினன் அரசாள் வேந்தென்.  
  
159  
  
உரை  
  
162  
  
அருஞ்சிறை விட்டு ஆங்கு ஆயிழை உரைத்த பெருந்தவர் தம்மால் பெரும்பொருள் எய்த - அரிய சிறையிலுள்ளோரை விடுத்து அவ்விடத்தில் மணிமேகலை கூறிய பெருந் தவமுடை யோர்களால் பெரும் பொருளை எய்துமாறு, கறையோர் இல்லாச் சிறையோர் கோட்டம் அறவோர்க்கு ஆக்கினன் அரசாள் வேந்து என்-கறைப்பட்டோரில்லாத சிறைக்கோட்டத்தை அறக்கோட்ட மாக்கினான் அரசுபுரியும் வேந்தன் என்க.  
  
பெரும் பொருள் - அறம் ; ஞானமுமாம். கறையோர் - கடமை  
  
(இறை) செலுத்த வேண்டியவரகள். கறையோரில்லா என்றமையால் அரசன் கறை வீடு செய்தமை பெற்றாம். செங்கோல் வேந்தர் கறைவீடு செய்வராதலை. ¹"சிறைப்படு கோட்டஞ் சீமின் யாவதுங், கறைப்படு மாக்கள் கறைவீடு செய்ம்மின்......கோன்முறை யறைந்த கொற்ற வேந்தன்" ²"சிறையோர் கோட்டஞ் சீமின் யாங்கணுங், கறைகெழு நாடு கறைவீடு செய்ம்மென" என்பவற்றானறிக. சிறையோர் கோட்டம்- சிறைக் கோட்டம்.  
  
தாரோன் வணங்கி வஞ்சினங்கூறத் தெய்வங் கூறலும்  
  
அவன் உள்ளங் கலங்கி வருந்தி அறிவாமெனப் பெயர்வோன்றன்னை (இரவாகிய) நீலயானை தொடர எஃகு உளங்கிழிப்ப அவன் பொத்தி உயிர்த்துப் போயபின், மணிமேகலை நுனித்தனரென்று கருதிவாங்கிக் கோட்டம் புகுந்து மாக்களை ஊட்டலும், காவலர் வியந்து கோமகனுக்கு இசைத்துமென்றேகி, திருவன் சென்று ஏறலும், வாயிலுக்கிசைத்து வணங்கி, 'மன்னவ, வம்பமாதர் ஊண் சுரந்தனள்' என்றலும், 'வருக வருக என்று அரசன் கூறலின், மடக்கொடி வாயிலாளரிற் சென்று, 'நின் அருள் வாழிய' என 'யாங்காகியது" என்று அரசன் கூறலும், ஆயிழை உரைப்பவள் 'உயிர் மருந்து இது' என, 'யான் செயற்பாலது என்' என்று வேந்தன் கூற, மெல்லியல் உரைப்பவள், 'நீ செயற்பாலது அறவோர்க்கு ஆக்குமது' என, வேந்து பெரும்பொரு ளெய்துதற்குக் கோட்டத்தை அறவோர்க்கு ஆக்கினன் என வினை முடிவு செய்க.  
  
¹ சிலப். 23: 126-31. ² சிலப். 28: 203-4.

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.19.1-6) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.20](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.20) · Pramāṇa
