Maṇimēkalai's Renunciation 21
Maṇimēkalai urai 21
- Language
- Tamil
21.1
உதயகுமரனை வாளால் எறிந்த காதை
அரசன் ஆணையின் ஆயிழை அருளால்
நிரயக் கொடுஞ்சிறை நீக்கிய கோட்டம்
தீப்பிறப் புழந்தோர் செய்வினைப் பயத்தான்
யாப்புடை நற்பிறப் பெய்தினர் போலப்
5 பொருள்புரி நெஞ்சிற் புலவோன் கோயிலும்
அருள்புரி நெஞ்சத் தறவோர் பள்ளியும்
அட்டிற் சாலையும் அருந்துநர் சாலையும்
கட்டுடைச் செல்வக் காப்புடைத் தாக
1
உரை
8
அரசன் ஆணையின் ஆயிழை அருளால் - மணிமேகலையின் அருண்மொழியினையேற்ற மன்னவனது ஆணையினாலே, நிரயக் கொடுஞ்சிறை நீக்கிய கோட்டம் - நிரயத் துன்பத்தைத் தரும் கொடிய சிறை நீக்கப்பெற்ற சாலை, தீப்பிறப் புழந்தோர்-தீக்கதியிற் பிறந்து வருந்தினோர், செய்வினைப் பயத்தால்-முன்செய்த நல்வினைப் பயனால், யாப்புடை நற்பிறப்பு எய்தினர்போல - உறுதியுடைய நற்பிறப்பினை அடைந்தமைபோல, பொருள்புரி நெஞ்சில் புலவோன் கோயிலும் - வாய்மை நான்கினையும் விரும்பிய உள்ளமுடைய மெய்யறிவினனாகிய புத்தன் கோயிலும், அருள்புரி நெஞ்சத்து அறவோர் பள்ளியும் - அருளை விரும்பும் மனத்தையுடைய அறவோர் வாழுமிடமும், அட்டிற் சாலையும் அருந்துநர் சாலையும்- மடைப் பள்ளியும் உணவுண்ணு மிடமுமாகி, கட்டுடைச் செல்வக் காப்புடைத்தாக - உறுதியுள்ள செல்வக் காவலை யுடையதாக ;
சிறை நீக்கிய - சிறையாந் தன்மையைப் போக்கிய. பொருள் - வாய்மை; ¹"பொருள் சேர் புகழ்" என்பதிற்போல. புரிதல்-விரும்புதல். ஆகி யென ஒரு சொல் விரித்துரைக்க. செல்வக் காப்பு-இனிய காவல். கோட்டம் காப்புடைத்தாக வென்க.
21.2
உதயகுமரனை வாளால் எறிந்த காதை
ஆயிழை சென்றதூஉம் ஆங்கவள் தனக்கு
10 வீயா விழுச்சீர் வேந்தன் பணித்ததூஉம்
சிறையோர் கோட்டஞ் சீத்தருள் நெஞ்சத்து
அறவோர் கோட்ட மாக்கிய வண்ணமும்
கேட்டன னாகியத் தோட்டார் குழலியை
9
உரை
13
ஆயிழை சென்றதூஉம் ஆங்கவள் தனக்கு வீயா விழுச்சீர் வேந்தன் பணித்ததூஉம்-மணிமேகலை அரசன்முன் சென்றதனையும் அவளுக்கு மாறாத சிறந்த புகழையுடைய அரசன் கூறியதனையும், சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து அறவோர் கோட்டம் ஆக்கிய வண்ணமும்-சிறைச்சாலையை அழித்து அருள்புரி உள்ளமுடைய முனிவர் வாழும் அறச்சாலையாக்கிய திறத்தையும், கேட்டனன் ஆகி - உதயகுமரன் கேட்டு ;
21.3
உதயகுமரனை வாளால் எறிந்த காதை
மதியோ ரெள்ளினும் மன்னவன் காயினும்
15 பொதியில் நீங்கிய பொழுதிற் சென்று
பற்றினன் கொண்டென் பொற்றே ரேற்றிக்
கற்றறி விச்சையுங் கேட்டவள் உரைக்கும்
முதுக்குறை முதுமொழி கேட்குவன் என்றே
மதுக்கமழ் தாரோன் மனங்கொண் டெழுந்து
20 பலர்பசி களையப் பாவைதான் ஒதுங்கிய
உலக வறவியின் ஊடுசென் றேறலும்
14
உரை
21
அத் தோட்டு ஆர் குழலியை - மலர்களை யணிந்த கூந்தலையுடைய அம் மணிமேகலையை, மதியோர் எள்ளினும் மன்னவன் காயினும் - என்னை அறிவுடையோர் இழித்துக் கூறினும் அரசன் சினப்பினும், பொதியில் நீங்கிய பொழுதிற் சென்று-அவள் அம்பலத்தினின்றும் வெளிப்படும் போதிற் சென்று, பற்றினன் கொண்டு என் பொற்றேர் ஏற்றி - பிடித்துக் கொண்டு எனது பொற்றேரில் ஏற்றி, கற்றறி விச்சையும் கேட்டு - அவள் கற்றுத் தெளிந்த வித்தையையும் கேட்டு, அவள் உரைக்கும் முதுக்குறை முதுமொழி கேட்குவன் என்றே - அவள் கூறும் பேரறிவுடைய முதுமொழியையும் கேட்பேன் என்று, மதுக்கமழ் தாரோன் மனங்கொண்டு எழுந்து-தேன் கமழும் மாலையையுடைய உதயகுமரன் உள்ளத்திற்கொண்டு எழுந்து, பலர் பசிகளையப் பாவை தான் ஒதுங்கிய - பலருடைய பசியையும் நீக்குமாறு மணிமேகலை ஒதுங்கியுள்ள, உலக வறவியின் ஊடு சென்று ஏறலும் - உலக வறவியினுள்ளே ஏறிச் செல்லலும் ;
தோடார் குழலி, தோட்டார் குழலி யென விகாரமாயிற்று. தோடு-இதழ்; பூவுக்கு ஆகுபெயர்; தொகுதி யென்றுமாம். பொதியில்- பொது இல் ; பலருக்கும் பொதுவான இடம் ; அம்பலம். பொதுவில் எனற்பாலது பொதியில் என மரூஉவாயிற்று. குழலியைப் பற்றனன் கொண்டு என இயைக்க. பற்றினன் கொண்டு - பற்றிக்கொண்டு.
21.4
உதயகுமரனை வாளால் எறிந்த காதை
மழைசூழ் குடுமிப் பொதியிற்குன் றத்துக்
கழைவளர் கான்யாற்றுப் பழவினைப் பயத்தான்
மாதவன் மாதர்க் கிட்ட சாபம்
25 ஈரா றாண்டு வந்தது வாராள்
காயசண் டிகையெனக் கையுற வெய்திக்
22
உரை
26
மழைசூழ் குடுமிப் பொதியிற் குன்றத்து - முகில் சூழும் முடியையுடைய பொதியின்மலையின் மருங்கே, கழைவளர் கான்யாற்று - மூங்கில் வளர்ந்த கானியாற்றின்கண், பழவினைப் பயத்தால். - முற்செய்த தீவினைப்பயனால், மாதவன் மாதர்க்கு இட்ட சாபம் - விருச்சிகன் காயசண்டிகைக்கு இட்ட சாபத்தினது, ஈராறு ஆண்டு வந்தது - பன்னிரண்டாவது ஆண்டு வந்தது' இன்னும் வாராள் காயசண்டிகை எனக் கையறவு எய்தி-காயசண்டிகை இன்னும் வந்திலள் எனத் துன்பமெய்தி ;கையறவு - செயலறுதியாகிய துன்பம்.
21.5
உதயகுமரனை வாளால் எறிந்த காதை
காஞ்சன னென்னும் அவள்தன் கணவன்
ஓங்கிய மூதூர் உள்வந் திழிந்து
பூத சதுக்கமும் பூமரச் சோலையும்
30 மாதவ ரிடங்களும் மன்றமும் பொதியிலும்
தேர்ந்தனன் திரிவோன் ஏந்திள வனமுலை
மாந்தர் பசிநோய் மாற்றக் கண்டாங்கு
27
உரை
32
காஞ்சனன் என்னும் அவள்தன் கணவன் - அவளுடைய கணவனாகிய காஞ்சனன் என்போன், ஓங்கிய மூதூர்உள் வந்து இழிந்து - பெருஞ் சிறப்புடைய இத் தொன்னகரின் உள்ளே வந்திறங்கி, பூத சதுக்கமும் பூமலர்ச் சோலையும்-பூதசதுக்கத்திலும் பொலிவுள்ள மலர்ச்சோலைகளிலும், மாதவல் இடங்களும் மன்றமும் பொதியிலும் - தவத்தோர் உறையுமிடங்களிலும் மன்றங்களிலும் அம்பலங்களிலும், தேர்ந்தனன் திரிவோன்-தேடித் திரிகின்றவன், ஏந்திள வனமுலை மாந்தர் பசி நோய் மாற்றக் கண்டாங்கு - மணிமேகலை காயசண்டிகை வடிவத்துடன் மக்களது பசிப்பிணியைக் களையக் கண்டு ;
பூத சதுக்கம்-கூடா வொழுக்கினர் முதலிய அறுவகையோரையும் பாசத்தாற் பிணித்துப் புடைத்துண்ணும் பூதம் நிற்கும் சதுக்கம்; சதுக்கம் - நாற்சாந்தி. ¹"தவமறைந் தொழுகுந் தன்மையி லாளர், அவமறைந் தொழுகு மலவற் பெண்டிர், அறைபோ கமைச்சர் பிறர்மனை நயப்போர். பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளரென், கைக்கொள் பாசத்துக் கைப்படு வோரெனக், காத நான்குங் கடுங்குர லெடுப்பிப், பூதம் புடைத்துணும் பூத சதுக்கமும்" எனச் சிலப்பதிகாரத்து வருதல் காண்க. கணவன் வாராள் எனக் கையற வெய்தித் தோர்ந்தனன் திரிவோன் கண்டு என்க.
¹ சிலப். 5 : 128-34.
21.6
உதயகுமரனை வாளால் எறிந்த காதை
இன்றுநின் கையின் ஏந்திய பாத்திரம்
ஒன்றே யாயினும் உண்போர் பலரால்
35 ஆனைத் தீநோய் அரும்பசி களைய
வான வாழ்க்கையர் அருளினர் கொல்லெனப்
பழைமைக் கட்டுரை பலபா ராட்டவும்
33
உரை
37
இன்று நின் கையின் ஏந்திய பாத்திரம் ஒன்றே ஆயினும் உண்போர் பலரால்-இப்பொழுது நின் கையில் ஏந்தியுள்ள பாத்திரம் ஒன்றாயிருந்தும் அதன்கணுள்ள உணவினை யுண்போர் பலராகலின், ஆனைத்தீ நோய் அரும்பசி களைய-யானைத்தீ யென்னும் தீர்த்தற்கரிய பசிநோயைத் தீர்க்க, வான வாழ்க்கையர் அருளினர் கொல் என - விசும்பில் வாழும் வானவர் நினக்கு இதனை அளித்தனரோ என்று, பழைமைக் கட்டுரை பல பாராட்டவும் - பழைய கேண்மையைப் புலப்படுத்தும் பல கட்டுரைகளைக் கூறிப் பாராட்டவும் ;
அருளினர் கொல் என்றும், கட்டுரை பல கூறியும் பாராட்ட வென்க.
21.7
உதயகுமரனை வாளால் எறிந்த காதை
விழையா உள்ளமொ டவன்பால் நீங்கி
உதய குமரன் றன்பாற் சென்று
38
உரை
39
விழையா உள்ளமொடு அவன் பால் நீங்கி - மணிமேகலை விரும்பாத உள்ளத்துடன் அவனிடமிருந்து நீங்கி, உதயகுமரன் தன்பாற் சென்று - உதயகுமரன் நிற்குமிடத்தை யடைந்து ;
21.8
உதயகுமரனை வாளால் எறிந்த காதை
நரைமூ தாட்டி ஒருத்தியைக் காட்டித்
தண்ணறல் வண்ணந் திரிந்துவே றாகி
வெண்மண லாகிய கூந்தல் காணாய்
பிறைநுதல் வண்ணங் காணா யோநீ
நரைமையிற் றிரைதோற் றகையின் ராயது
45 விறல்விற் புருவம் இவையுங் காணாய்
இறவி னுணங்கல் போன்றுவே றாயின
கழுநீர்க் கண்காண் வழுநீர் சுமந்தன
குமிழ்மூக் கிவைகாண் உமிழ்சீ யொழுக்குவ
நீரைமுத் தனைய நகையுங் காணாய்
50 சுரைவித் தேய்ப்பப் பிறழ்ந்துவே றாயின
இலவிதழ்ச் செவ்வாய் காணா யோநீ
புலவுப் புண்போற் புலால்புறத் திடுவது
வள்ளைத் தாள்போல் வடிகா திவைகாண்
உள்ளூன் வாடிய உணங்கல் போன்றன
55 இறும்பூது சான்ற மூலையுங் காணாய்
வெறும்பை போல வீழ்ந்துவே றாயின
தாழ்ந்தொசி தெங்கின் மடல்போற் றிரங்கி
வீழ்ந்தன விளவேய்த் தோளுங் காணாய்
நரம்பொடு விடுதோ லுகிர்த்தொடர் கழன்று
60 திரங்கிய விரல்க ளிவையுங் காணாய்
வாழைத் தண்டே போன்ற குறங்கிணை
தாழைத் தண்டின் உணங்கல் காணாய்
ஆவக் கணைக்கால் காணா யோநீ
மேவிய நரம்போ டென்புபுறங் காட்டுவ
65 தளிரடி வண்ணங் காணோ யோநீ
முளிமுதிர் தெங்கின் உதிர்கா யுணங்கல்
பூவினுஞ் சாந்தினும் புலான்மறைத் தியாத்துத்
தூசினும் மணியினுந் தொல்லோர் வகுத்த
வஞ்சந் தெரியாய் மன்னவன் மகனென
70 விஞ்சை மகளாய் மெல்லிய லுரைத்தலும்
40
உரை
70
நரை மூதாட்டி ஒருத்தியைக் காட்டி-நரை மிக்க முதுமையுடையாள் ஒருத்தியைக் காட்டி, தண் அறல் வண்ணம் திரிந்து வேறாகி வெண்மணல் ஆகிய கூந்தல் காணாய் - குளிர்ந்த கரு மணல் போன்ற நிறம் திரிந்து வேறுபட்டு வெள்ளிய மணலைப் போல் நரைத்த கூந்தலைக் காண்பாய், பிறைநுதல் வண்ணம் காணாயோ நீ நரைமையில் திரைதோல் தகையின்று ஆயது - வெண்மையுடன் திரைந்த தோலினால் அழகின்றி யிருக்கும் பிறைபோன்ற நுதலின் இயல்பை நீ காணவில்லையோ, விறல் விற்புருவம் இவையும் காணாய் இறவின் உணங்கல் போன்று வேறாயின - வெற்றிபொருந்திய விற்படை போன்ற புருவங்களாகிய இவையும் இறால் மீனின் வற்றல் போல் வேறு பட்டன காண்பாய், கழுநீர்க் கண்காண் வழுநீர் சுமந்தன - கழு நீர் மலரனைய கண்கள் வழுவாகிய நீரைச் சுமந்தன காண். குமிழ்மூக்கு இவை காண் உமிழ் சீ ஒழுக்குவ-குமிழம் பூப்போலும் மூக்காகிய இவை உமிழுகின்ற சீயைச் சொரிவனகாண், ரீரை முத்தனைய நகையும் காணாய் சுரை வித்து ஏய்ப்பப் பிறழ்ந்து வேறாயின - வரிசைப் படுத்திய முத்துக்களைப் போன்ற பற்களும் சுரைவிதையைப் போலப் பிறழ்ந்து வேறுபட்டன காண்பாய், இலவிதழ்ச் செவ்வாய் காணோயோ நீ புலவுப் புண்போல் புலால் புறத்திடுவது - முருக்கமலர்போன்ற சிவந்த வாய் புலால்நாற்றம் பொருந்திய புண்ணைப்போல் தீநாற்றத்தை வெளியிடுவதை நீ காணோயா, வள்ளைத் தாள்போல் வடிகாது இவை காண்உள்ளூன் வாடிய உணங்கல் போன்றன-வள்ளைத் தண்டுபோல் வடிந்த காதுகளாகிய இவைகள் உள்ளிருந்த ஊன் வாடிய வற்றலைப் போன்றிருப்பன பாராய், இறும்பூது சான்ற முலையும் காணாய் வெறும்பை போல வீழ்ந்து வேறாயின - வியப்பு மிக்க கொங்கைகளும் உள்ளீடில்லாத பையைப் போல வீழ்ந்து வேறுபட்டன காண்பாய், தாழ்ந்து ஒசி தெங்கின் மடல்போல் திரங்கி வீழ்ந்தன இளவேய்த் தோளுங் காணாய் - இளைய மூங்கில் போன்ற தோள்களும் தாழ்ந்து வளைந்த தென்னை மடல்போல் திரைந்து வீழ்ந்தன காணாய், நரம்பொடு விடுதோல் உதிர்தொடர் கழன்று திரங்கிய விரல்கள் இவையும் காணாய் - நரம்புடன் தோலும் நகத்தின் தொடர்ச்சியைக் கழன்று திரைந்த விரல்களாகிய இவற்றையும் காண்பாய், வாழைத் தண்டே போன்ற குறங்கிணை தாழைத் தண்டின்
உணங்கல் காணாய் - வாழ்த் தண்டு போன்ற துடைகளிரண்டும் தாழைத் தண்டுபோல் வற்றியிருத்தலைக் காண்பாய், ஆவக் கணைக்கால் காணாயோ நீ மேவிய நரம்பொடு என்பு புறங்காட்டுவ - அம்புப் புட்டிலைப் போன்ற கணைக்கால்கள் தம்மிடம் பொருந்திய நரம்பினையும் என்பினையும் வெளியே காட்டுவனவற்றை நீ காணவில்லையோ, தளிரடிவண்ணம் காணாயோ நீ முளி முதிர் தெங்கின் உதிர்காய் உணங்கல்-தளிர்போலும் அடிகளின் வண்ணம் முதிர்ந்த தென்னையில் உலர்ந்து உதிர்ந்த காயின்வற்றல் போன்றிருப்பதை நீ காணாயோ, பூவினும் சாந்தினும் புலால் மறைத்து யாத்து-மலராலும் சாந்தாலும் புலால் நாற்றத்தை மறைத்து, தூசினும் அணியினும் தொல்லோர் வகுத்த - ஆடையாலும் அணிகலனாலும் முன்னோர் அமைத்த, வஞ்சம் தெரியாய் மன்னவன் மகன் என - வஞ்சத்தைத் தெரிந்துகொள்வாய் இளங்கோனே என்று, விஞ்சை மகளாய் மெல்லியல் உரைத்தலும் -மணிமேகலை காயசண்டிகை வடிவத்துடன் கூறுதலும்;
நரைமை - வெண்மை. தகையின்றாயது-தன்மையதாயது என்றுமாம். மூக்கின்றுளை நோக்கி 'இவை'யெனப்பட்டன. உமிழ்சீ-வெறுக்கத்தக்க
சீயுமாம். இறும்பூது சான்ற-புதுமையும் பெருமையும் பற்றிய வியப்பு விளைத்த வென்க. வாழைத்தண்டு - இளவாழையின் தலை நீங்கிய அடிமரம். தாழைத்தண்டின் - தாழையின் அடிமரம்போல். உணங்கல் போல்வன என விரித்துரைக்க. மறைத்தியாத்தல் - மறைத்தல். "புனைவனை நீங்கிற் புலால் புறத்திடுவது" (4 : 114) என முன்னும் வந்தது.
21.9
உதயகுமரனை வாளால் எறிந்த காதை
தற்பா ராட்டுமென் சொன்ற்பயன் கொள்ளாள்
பிறன்பின் செல்லும் பிறன்போ னோக்கும்
மதுக்கம ழலங்கன் மன்னவன் மகற்கு
முதுக்குறை முதுமொழி எடுத்துக் காட்டிப்
75 பவளக் கடிகையிற் றவளவாள் நகையுங்
குவளைச் செங்கணுங் குறிப்பொடு வழாஅள்
ஈங்கிவன் காதலன் ஆதலின் ஏந்திழை
ஈங்கொழிந் நனளென இகலெரி பொத்தி
மற்றவள் இருந்த மன்றப் பொதியினுள்
80 புற்றடங் காவிற் புக்கொளித் தடங்கினன்
காஞ்சன னென்னுங்க கதிர்வாள் விஞ்சையன்
71
உரை
81
தன் பாராட்டும் என் சொற்பயன் கொள்ளான் - தன்னைப் பாராட்டுகின்ற என்னுடைய சொற்களின் பயனைக் கொள்ளானாய், பிறன்பின் செல்லும் - அயலான் பின்னே செல்லுகின்றனள், பிறன்போல் நோக்கும் - என்னைப் பிறன்போல் நோக்குகின்றனள், மதுக்கமழ் அலங்கள் மன்னவன் மகற்கு - தேன் மணக்கும் மாலையினையுடைய அரசன மகனுக்கு, முதுக்குறை முதுமொழி எடுத்துக்காட்டி - பேரறிவுடைய முதுமொழிகளை எடுத்துக்கூறி, பவளக் கடிகையில் தவள வாள் நகையும் குவளைச் செங்கணும் குறிப்பொடு வழா அள்-பவளத் துண்டத்தின்கணுள்ள வெள்ளிய ஒளி பொருந்திய பற்களின் முறுவலும் குவளை மலர் போலும் சிவந்த கண்களின் நோக்கும் காதற் குறிப்புடன் வழுவா தவளாயினள், ஈங்கிவன் காதலன் ஆதலின் ஏந்திழை ஈங்கொழிந்தனள் என - இவன் இவட்குக் காதலனனாமையின் இவள் இவ்விடத்திலேயே தங்கினள் என்று, இகல் எரி பொத்தி - மாறுபாட்டா லுண்டாகிய சினத்தீ மூள, மற்றவள் இருந்த மன்றப் பொதியிலுள் - மணிமேகலை இருந்த மன்றமாகிய பொதியிலின் உள்ளே, புற்று அடங்கு அரவின் புக்கு ஒளித்த அடங்கினன் - புற்றினுள் அடங்கிய பாம்பைப் போலப் புகுந்து மறைந்திருந்தனன், காஞ்சனன் என்னும் கதிர்கள் விஞ்சையன் - ஒளி பொருந்திய வாட்படையின் யுடைய காஞ்சனன் என்னும் விஞ்சையன் ;
பவளக்கடிகை - பவளத்துண்டு போலும் இதழ் ; உதடு. இகல் எரி - பகையாகிய தீ என்றுமாம். மன்றப் பொதியில் : இருபெயரொட்டு. விஞ்சையன் இகலெரி பொத்திப் பொதியிலுட் புக்கொளித் தடங்கினன் என்க.
21.10
உதயகுமரனை வாளால் எறிந்த காதை
ஆங்கவ ளுரைத்த அரசிளங் குமரனும்
களையா வேட்கை கையுதிர்க் கொள்ளான்
வளைசேர் செங்கை மணிமே கலையே
85 காயசண் டிகையாய்க் கடிஞை யேந்தி
மாய விஞ்சையின் மனமயக் குறுத்தனள்
அம்பல மருங்கில் அயர்ந்தறி வுரைத்தவிவ்
வம்பலன் றன்னொடிவ் வைகிரு ளொழியாள்
இங்கிவள் செய்தி இடையிருள் யாமத்து
90 வந்தறி குவனென மனங்கொண் டெழுந்து
வான்றேர்ப் பாகனை மீன்றிகழ் கொடியினைக்
கருப்பு வில்லியை அருப்புக்கணை மைந்தனை
உயாவுத் துணையாக வயாவொடும் போகி
82
உரை
93
ஆங்கவள் உடைத்த அரசினங்குமரனும் - மணிமேகலை கூறியதைக் கேட்ட மன்னவன் சிறுவனும், களையா வேட்கை கையுதிர்க்கொள்ளான் - களையாத விருப்பத்தைக் கைவிடானாய்,.
வளைசேர் செங்கை மணிமேகலையே-வளைகள் பொருந்திய சிவந்த கைகளையுடைய மணிமேகலையே; காயசண்டிகையாய்க் கடிஞை ஏந்தி - காயசண்டிகையாய்ப் பிச்சைப் பாத்திரத்தை ஏந்தி, மாய விஞ்சையின் மன மயக்குறுத்தனள் - மாய வித்தையினாலே உள்ளத்தை மயக்குமுறச் செய்தனள், அம்பல மருங்கில் அயர்ந்து அறிவுரைத்த - உலக வறவியின் பக்கலில் வருந்திப் பழமைக் கட்டுரை கூறிய, இவ் வம்பலன் தன்னோடு - இவ் வயலானுடன், இவ் வைகு இருள் ஒழியாள்-இருள் தங்கிய இவ் விரவில் நீங்காள், இங்கிவள் செய்தி இடையிருள் யாமத்து வந்தறிகுவன் எனமனங் கொண்டு எழுந்து - இவளதுசெயலை இருளையுடைய இடையாமத்தில் வந்து அறிவேன் என்று உளத்திற்கொண்டு புறப்பட்டு, வான் தேர்ப்பாகனை மீன் திகழ் கொடியனை கருப்பு வில்லியை அருப்புக் கணை மைந்தனை - வானிலுலாவும் தென்றலந் தேர்ப்பாகனை மீன் விளங்கும் கொடியுடையானைக் கரும்பாகிய வில்லுடையானை அரும்புகளாகிய அம்புகளை யுடையவனை, உயாவுத் துணையாக வயாவொடும் போகி - வினாவுந் துணையாகக்கொண்டு வேட்கை நோயுடன் சென்று ;
ஆங்கவள் உரைத்த-மணிமேகலையால் அறிவுறுக்கப்பட்ட.அயர்ந்து-மறந்து என்றுமாம். அறிவுரைத்த - பண்டு அறிந்தவர் போலுரைத்த. வம்பலன் - புதியன் ; ஏதிலான். இவனிருத்தலின் இவ் விரவில் புறம் போகாளெனக் கருதினானென்க. வான்தேர் - வானிலுலாவும் தென்றலாகிய தேர். பாகன் கொடியன் வில்லி மைந்தன் என ஒரு பொருள் மேற் பல பெயர்கள் வந்தன. பாகனும் கொடியனும் வில்லியும் மைந்தனுமாகிய காமனை யென்க. அரும்பு, அருப்பென்றாயது. துணையாக்கொண்டு என விரித்துரைக்க.
21.11
உதயகுமரனை வாளால் எறிந்த காதை
ஊர்துஞ் சியாமத் தொருதனி யெழுந்து
95 வேழம் வேட்டெழும் வெம்புலி போலக்
கோயில் கழிந்து வாயில் நீங்கி
ஆயிழை யிருந்த அம்பல மணைந்து
வேக வெந்தீ நாகங் கிடந்த
போகுயர் புற்றளை புகுவான் போல
100 ஆகந் தோய்ந்த சாந்தல ருறுத்த
ஊழடி யீட்டதன் உள்ளகம் புகுதலும்
94
உரை
101
ஊர் துஞ்சு யாமத்து ஒரு தனி எழுந்து-ஊர் முழுவதும் உறங்கும் நள்ளிரவில் தான் மட்டும் தனியாக எழுந்து, வேழம் வேட்டு எழும் வெம்புலிபோல, - யானையை விரும்பிப் புறப்படும் கொடிய புலியைப்போல, கோயில் கழிந்து வாயில் நீங்கி - அரண் மனையை நீங்கி வாயிலைக் கடந்து, ஆயிழை இருந்த அம்பலம் அணைந்து-மணிமேகலை இருந்த ஊரம்பலத்தை அடைந்து, வேக வெந்தீ நாகம் கிடந்த போகுயர் புற்றளை புகுவான் போல - வேகத்தினையுடைய கொடிய நஞ்சினைக் கொண்ட பாம்பு கிடந்த மிக வுயர்ந்த புற்றின் துவாரத்தில் நுழைகின்றவனைப்போல, ஆகம் தோய்ந்து சாந்து அலர் உறுத்த - மார்பிற் பூசப்பெற்ற
சாந்தமானது தனது வரவை ஆண்டுள்ளோருக்கு அறிவுறுத்த, ஊழ் அடியிட்டு அதன் உள்ளகம் புகுதலும்-முறையாக அடியை வைத்து அவ் வம்லபத்தின் உள்ளே புகுதலும் ;
வேகம் - விடவேகம். தீ - நஞ்சு. முன்பு 'புற்றடங் கரவிற் புக் கொளித் தடங்கினன்' என்றதற்கேற்ப, ஈண்டு 'நாகங்கிடந்த புற்றளை புகுவோன் போல' என்றார். பின் 'அரவம் பை விரித்தென. எழுந்து' என்பதும் இதுபற்றியே, போகு - நீண்ட; ¹"வார்தல் போகல் ஒழுகல் மூன்றும், நேர்பும் நெடுமையுஞ் செய்யும் பொருள" என்பது காண்க. அலருறுத்த - பலரறியச் செய்ய.
¹தொல். உரி: 19.
21.12
உதயகுமரனை வாளால் எறிந்த காதை
ஆங்குமுன் னிருந்த அலர்தார் விஞ்சையன்
ஈங்கிவன் வந்தனன் இவள்பா லென்றே
வெஞ்சின அரவ நஞ்செயி றரும்பத்
105 தன்பெரு வெகுளியின் எழுந்துபை விரித்தென
இருந்தோன் எழுந்து பெரும்பின் சென்றவன்
சுரும்பறை மணித்தோள் துணிய வீசிக்
காயசண் டிகையைக் கைக்கொண் டந்தரம்
போகுவ லென்றே அவள்பாற் புகுதலும்
102
உரை
109
ஆங்கு முன் இருந்த அலர்தர் விஞ்சையன்-அங்கே முன்பு மறைந்திருந்த மலர்ந்த மாலையினையுடைய விஞ்சையன், ஈங்கிவன் வந்தனன் இவள்பால் என்றே - இவன் இப்பொழுது இவளிடமே வந்திருக்கின்றனன் என்று கருதி, வெஞ்சின அரவம் நஞ்சு எயிறு அரும்ப-நெடுஞ்சினமுடைய பாம்பு நஞ்சு பொதி பற்கள் தோன்றுமாறு, தன் பெரு வெகுளியின் எழுந்து பை விரித்தென - தனது மிக்க சீற்றத்துடன் எழுந்து படத்தை விரித்தாற்போல, இருத்தோன் எழுந்து - காஞ்சனன் எழுந்து, பெரும்பின் சென்று அவன் சுரும்பறை மணித்தோள் துணிய வீசி - உதயகுமரனது முதுகின் புறமாகச் சென்று அவனுடைய வண்டுகள் ஒலிக்கும் மாலையை யணிந்த அழகிய தோள்கள் துணிபடுமாறு வாளால் எறிந்து, காயசண்டிகையைக் கைக்கொண்டு அந்தரம் போகுவல் என்றே அவள்பால் புகுதலும் - காயசண்டிகையைக் கைப்பற்றிக் கொண்டு விசும்பிடைச் செல்லுவேன் என நினைந்து கரந்துரு வெய்திய மணிமேகலையிடஞ் செல்லுதலும் ;
விஞ்சையன் இருந்தோன் எழுந்தென்க. பெரும்பின் சென்று நெடிது பின் சென்று என்றுமாம்.சுரும்பு அறை மணித்தோள்-மலையையொத்த அழகிய தோள் என்பாருமுளர் ; சுரும்பு-மலை; அறை: உவமவுருபு.
21.13
உதயகுமரனை வாளால் எறிந்த காதை
110 நெடுநிலைக் கந்தின் இடவயின் விளங்கக்
கடவு ளெழுதிய பாவையாங் குரைக்கும்
அணுகல் அணுகல் விஞ்சைக் காஞ்சன
மணிமே கலையவள் மறைந்துரு வெய்தினள்
காயசண் டிகைதன் கடும்பசி நீங்கி
115 வானம் போவுழி வந்தது கேளாய்
110
உரை
115
நடுநிலைக் கந்தின் இடவயின் விளங்க கடவுள் எழுதிய பாவை ஆங்கு உரைக்கும் - நெடிய நிலையாகிய தூணினிடத்தில் விளங்கும் கடவுட் டச்சனாகிய மயனால் எழுதப்பட்ட பாவை அப் பொழுது கூறும், அணுகல் அணுகல் விஞ்சைக் காஞ்சன - விஞ்சையனாகிய காஞ்சனனே அணுகாதே அணுகாதே, மணிமேகலை அவள் மறைந்துரு எய்தினள் - அவள் மணிமேகலை காய சண்டிகையின் வடிவத்தைக் கொண்டுள்ளாள், காயசண்டிகை தன் கடும்பசி நீங்கி - நின் மனைவி தனது கொடிய பசிநோய் நீங்கப் பெற்று, வானம் போவுழி வந்தது கேளாய் - விசும்பின் வழியே செல்லும்பொழுது நிகழ்ந்த துன்பத்தைக் கேள்; கடவுள் - தெய்வத் தச்சன் ; ¹"மயனெனக் கொப்பா வகுத்த பாவையின், நீங்கேன்" எனப் பின் வருதலுங் காண்க. வந்தது - நிகழ்ந்த துன்பம்; வினைப்பெயர்.
¹மணி. 21: 132 - 3.
21.14
உதயகுமரனை வாளால் எறிந்த காதை
அந்தரஞ் செல்வோர் அந்தரி இருந்த
விந்த மால்வரை மீமிசைப் போகார்
போவா ருளரெனிற் பொங்கிய சினத்தள்
சாயையின் வாங்கித் தன்வயிற் றிடூஉம்
120 விந்தங் காக்கும் விந்தா கடிகை
அம்மலை மிசைப்போய் அவள்வயிற் றடங்கினள்
கைம்மை கொள்ளேல் காஞ்சன இதுகேள்
116
உரை
122
அந்தரம் செல்வோர் அந்தரி இருந்த விந்த மால்வரை மீமிசைப் போகார் - வானிலே செல்வோர் துர்க்கை எழுந்தருளியுள்ள பெரிய விந்த மலையின் மேலே செல்லார், போவார் உளரெனில் பொங்கிய சினத்தள் - அங்ஙனம் போவார் உளராயின் மூண்டெழுஞ் சீற்றமுடையளாய், சாயையின் வாங்கிக் தன்வயிற்று இடூஉம் - தன் சாயையினால் இழுத்துத் தன் வயிற்றில் அடக்கும். விந்தம் காக்கும் விந்தா கடிகை - விந்த மலையைக் காவல் புரியும் விந்தாகடிகை எனபவள், அம் மலைமிசைப் போய் அவள் வயிற்று அடங்கினள் - காயசண்டிகை அம் மலையின்மீது சென்று அவ் விந்தா கடிகையின் வயிற்றில் அடங்கினள் ஆகலின், கைம்மை கொள்ளேல் காஞ்சன - காஞ்சனனே சிறுமையைக் கொள்ளாதே, இது கேள் - இதனைக் கேட்பாயாக ;
அந்தரி யென்பதும் விந்தாகடிகை யென்பதும் ஒரு பொருட் பெயர்கள். விந்தமலையைக் காத்தலின் விந்தாகடிகை யென்பதும் காரணப்பெயர். விந்தாகடிகை தன் வயிற்றிடூஉம் என்க. கைம்மை - சிறுமை; தனக்குரியளல்லாதாளை விரும்புதல் ; உதயகுமரன் மணிமேகலைக்குப் பழம் பிறப்பின் நாயகனாதலின் அவன் இறந்ததுபற்றி மணிமேகலையைக் கைம்மையாகக் கருதிக் தெய்வங் கூறிற்றெனலுமாம் என்பர், டாக்டர் உ. வே. சாமிநாதையர்.
21.15
உதயகுமரனை வாளால் எறிந்த காதை
ஊழ்வினை வந்திங் குதய குமரனை
ஆருயி ருண்ட தாயினும் அறியாய்
125 வெவ்வினை செய்தாய் விஞ்சைகெ காஞ்சன்
அவ்வினை நின்னையும் அகலா தாங்குறும்
என்றிவை தெய்வங் கூறலும் எழுந்து
கன்றிய நெஞ்சிற் கடுவினை யுருத்தெழ
விஞ்சையன் போயினன் விலங்குவிண் படர்ந்தென்.
123
உரை
129
ஊழ்வினை வந்து இங்கு உதயகுமாரனை ஆருயிர் உண்டதாயினும் - இப்பொழுது ஊழ்வினையானது உருத்து வந்து உதயகுமரன் அரிய உயிரை உண்டதாயினும், அறியாய் வெவ்வினை செய்தாய் விஞ்சைக் காஞ்சன் - விஞ்சையானாகிய காஞ்சனனே ஆராயாது கொடிய தீவினையைச் செய்தாய், அவ் வினை நின்னையும் அகலாது ஆங்குறும்-அக் கொடுவினை நின்னையும் நீங்காமல் வந்து பற்றும், என்று இவை தெய்வம் கூறலும் - என்று இவைகளைக் கந்திற்கடவுள் உரைத்தலும், எழுந்து கன்றிய நெஞ்சிற் கடுவினை உருத்து எழ விஞ்சையன் போயினன் விலங்கு விண் படர்ந்து என் - காஞ்சனன் துன்புற்ற வுளத்தோடு எழுந்து தான் செய்த கொடிய வினை வெகுண்டெழுந்து பற்ற வானிலே குறுக்காகப் படர்ந்துபோயினன் என்க.
கடுவினை - உதயகுமரனைக் கொன்ற தீவினை. உருத்து - உருக்கொண்டு என்றுமாம்.
கோட்டம் செல்வக் காப்புடைத்தாக, தாரோன் கேட்டு மனங் கொண்டு எழுந்து சென்று ஏறலும், கணவன் கையறவெய்தி வந்து இழிந்து தேர்ந்து திரிவோனாய்க் கண்டு பல பாராட்டவும், நீங்கிச் சென்று காட்டி மெல்லியல் உரைத்தலும், விஞ்சையன் புக்கு ஒளித்து அடங்கினன்; அரசிளங் குமரனும் கொள்ளான் மனங்கொண்டு எழுந்து போகி எழுந்து கழிந்து நீங்கி அணைந்து புகுதலும், விஞ்சையன் எழுந்து சென்று விசிப் புகுதலும, பாவை உரைக்கும்; அங்ஙனம் உரைப்பது கூறலும், விஞ்சையன் எழுந்து படர்ந்து போயினன் என வினைமுடிவு செய்க.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil