<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.21.12 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 21.12

# Maṇimēkalai's Renunciation 21.12

Maṇimēkalai urai 21.12

- **Language:** Tamil

### [21.12](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.21.12)

உதயகுமரனை வாளால் எறிந்த காதை  
  
ஆங்குமுன் னிருந்த அலர்தார் விஞ்சையன்  
ஈங்கிவன் வந்தனன் இவள்பா லென்றே  
வெஞ்சின அரவ நஞ்செயி றரும்பத்  
  
105 தன்பெரு வெகுளியின் எழுந்துபை விரித்தென  
இருந்தோன் எழுந்து பெரும்பின் சென்றவன்  
சுரும்பறை மணித்தோள் துணிய வீசிக்  
காயசண் டிகையைக் கைக்கொண் டந்தரம்  
போகுவ லென்றே அவள்பாற் புகுதலும்  
  
102  
  
உரை  
  
109  
  
ஆங்கு முன் இருந்த அலர்தர் விஞ்சையன்-அங்கே முன்பு மறைந்திருந்த மலர்ந்த மாலையினையுடைய விஞ்சையன், ஈங்கிவன் வந்தனன் இவள்பால் என்றே - இவன் இப்பொழுது இவளிடமே வந்திருக்கின்றனன் என்று கருதி, வெஞ்சின அரவம் நஞ்சு எயிறு அரும்ப-நெடுஞ்சினமுடைய பாம்பு நஞ்சு பொதி பற்கள் தோன்றுமாறு, தன் பெரு வெகுளியின் எழுந்து பை விரித்தென - தனது மிக்க சீற்றத்துடன் எழுந்து படத்தை விரித்தாற்போல, இருத்தோன் எழுந்து - காஞ்சனன் எழுந்து, பெரும்பின் சென்று அவன் சுரும்பறை மணித்தோள் துணிய வீசி - உதயகுமரனது முதுகின் புறமாகச் சென்று அவனுடைய வண்டுகள் ஒலிக்கும் மாலையை யணிந்த அழகிய தோள்கள் துணிபடுமாறு வாளால் எறிந்து, காயசண்டிகையைக் கைக்கொண்டு அந்தரம் போகுவல் என்றே அவள்பால் புகுதலும் - காயசண்டிகையைக் கைப்பற்றிக் கொண்டு விசும்பிடைச் செல்லுவேன் என நினைந்து கரந்துரு வெய்திய மணிமேகலையிடஞ் செல்லுதலும் ;  
  
விஞ்சையன் இருந்தோன் எழுந்தென்க. பெரும்பின் சென்று நெடிது பின் சென்று என்றுமாம்.சுரும்பு அறை மணித்தோள்-மலையையொத்த அழகிய தோள் என்பாருமுளர் ; சுரும்பு-மலை; அறை: உவமவுருபு.

- [Previous: 21.11](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.21.11)
- [Next: 21.13](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.21.13)
- [Up: 21](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.21)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.20.106) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.21.12](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.21.12) · Pramāṇa
