<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.21.1 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 21.1

# Maṇimēkalai's Renunciation 21.1

Maṇimēkalai urai 21.1

- **Language:** Tamil

### [21.1](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.21.1)

உதயகுமரனை வாளால் எறிந்த காதை  
  
அரசன் ஆணையின் ஆயிழை அருளால்  
நிரயக் கொடுஞ்சிறை நீக்கிய கோட்டம்  
தீப்பிறப் புழந்தோர் செய்வினைப் பயத்தான்  
யாப்புடை நற்பிறப் பெய்தினர் போலப்  
  
5 பொருள்புரி நெஞ்சிற் புலவோன் கோயிலும்  
அருள்புரி நெஞ்சத் தறவோர் பள்ளியும்  
அட்டிற் சாலையும் அருந்துநர் சாலையும்  
கட்டுடைச் செல்வக் காப்புடைத் தாக  
  
1  
  
உரை  
  
8  
  
அரசன் ஆணையின் ஆயிழை அருளால் - மணிமேகலையின் அருண்மொழியினையேற்ற மன்னவனது ஆணையினாலே, நிரயக் கொடுஞ்சிறை நீக்கிய கோட்டம் - நிரயத் துன்பத்தைத் தரும் கொடிய சிறை நீக்கப்பெற்ற சாலை, தீப்பிறப் புழந்தோர்-தீக்கதியிற் பிறந்து வருந்தினோர், செய்வினைப் பயத்தால்-முன்செய்த நல்வினைப் பயனால், யாப்புடை நற்பிறப்பு எய்தினர்போல - உறுதியுடைய நற்பிறப்பினை அடைந்தமைபோல, பொருள்புரி நெஞ்சில் புலவோன் கோயிலும் - வாய்மை நான்கினையும் விரும்பிய உள்ளமுடைய மெய்யறிவினனாகிய புத்தன் கோயிலும், அருள்புரி நெஞ்சத்து அறவோர் பள்ளியும் - அருளை விரும்பும் மனத்தையுடைய அறவோர் வாழுமிடமும், அட்டிற் சாலையும் அருந்துநர் சாலையும்- மடைப் பள்ளியும் உணவுண்ணு மிடமுமாகி, கட்டுடைச் செல்வக் காப்புடைத்தாக - உறுதியுள்ள செல்வக் காவலை யுடையதாக ;  
  
சிறை நீக்கிய - சிறையாந் தன்மையைப் போக்கிய. பொருள் - வாய்மை; ¹"பொருள் சேர் புகழ்" என்பதிற்போல. புரிதல்-விரும்புதல். ஆகி யென ஒரு சொல் விரித்துரைக்க. செல்வக் காப்பு-இனிய காவல். கோட்டம் காப்புடைத்தாக வென்க.

- [Previous: 20.24](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.20.24)
- [Next: 21.2](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.21.2)
- [Up: 21](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.21)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.20.1-6) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.21.1](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.21.1) · Pramāṇa
