<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.22.26 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 22.26

# Maṇimēkalai's Renunciation 22.26

Maṇimēkalai urai 22.26

- **Language:** Tamil

### [22.26](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.22.26)

கந்திற்பாவை வருவதுரைத்த காதை  
  
165 170  
  
பிறவற முரைத்தோர் பெற்றிமை யெல்லாம்  
அறவணன் றனைக்குநீ யுரைத்த அந்நாள்v தவமுந் தருமமும் சார்பிற் றோற்றமும்  
பவமுறு மார்க்கமும் பான்மையி னுரைத்து  
மறவிரு ளிரிய மன்னுயி ரேமுற  
அறவெயில் விரித்தாங் களப்பி லிருத்தியொடு  
புத்த ஞாயிறு தோன்றுங் காறும்  
செத்தும் பிறந்துஞ் செம்பொருள் காவா  
இத்தலம் நீங்கேன் இளங்கொடி யானும்  
தாயரும் நீயுந் தவறின் றாக  
வாய்வ தாகநின் மனப்பாட் டறமென  
ஆங்கவ னுரைத்துலும் அவன்மொழி பிழையாய்  
  
161  
  
உரை  
  
172  
  
பிறவறம் உரைத்தோர் பெற்றிமை எல்லாம் - வஞ்சி நகரில் பிற சமய உண்மைகளைக் கூறினோர் கொள்கைகள் அனைத்தையும், அறவணன் தனக்கு நீ உரைத்த அந்நாள் - அறவணவடிகளுக்கு நீ கூறிய அந்நாளில், தவமும் தருமமும் சார்பில் தோற்றமும் பவம்அறு மார்க்கமும் பான்மையின் உரைத்து - தவமும் தன்மமும் சார்பினால் தோன்றும் நிதானம் பன்னிரண்டும் பிறவியறும் நெறியும் ஆகியவற்றை முறையால் உரைத்து - மற இருள் இரிய மன்னுயிர் எமுற - பாவமாகிய இருளானது ஓடவும் நிலைபெற்ற உயிர்கள் இன்பமுறவும், அறவெயில் விரித்தாங்கு அளப்பில் இருத்தியோடு - அறமாகிய ஒளியைப் பரப்பி அளவற்ற சித்திகளுடன், புத்த ஞாயிறு தோன்றும்காறும் - புத்தனாகிய ஞாயிறு உதிக்குமளவும், செத்தும் பிறந்தும் செம்பொருள் காவா- இறந்தும் பிறந்தும் அறத்தினைக் காத்து, இத் தலம் நீங்கேன் இளங்கொடி யானும் - இந் நகரந்தை நீங்கேன் யான் இளங்கொடியே, தாயரும் நீயும் தவறின்றாக - நீயும் நின் அன்னையரும் தவறின்றி வாழ்வீராக வாய்வதாக நின் மனப்பாட்டு அறம் என - நின் மனத்தின்கட் டோன்றிய அறம் வாய்ப்புடைத்தாக என்று, ஆங்கவன் உரைத்தலும் - அறவண முனிவன் கூறுதலும் ;  
  
சார்பிற்றோற்றம்-பேதைமை, செய்கை, உணர்வு, அருவுரு,  
  
வாயில், ஊறு, நுகர்வு, வேட்கை, பற்று, பவம், தோற்றம், வினைப்பயன்என்னும் பன்னிரண்டுமாம்; இவை பேதைமை சார்பாகச் செய்கையும் செய்கை சார்பாக உணர்வும் இங்ஙனம் ஒன்றை யொன்று சார்ந்து தோன்றுதலின் 'சார்பிற் றோற்றம்' எனப்பட்டன; இவற்றினியல்பு இந் நூலின் இறுதிக் காதையால் விளக்கமாம். இருத்தி-சித்தி; அணிமா முதலியன. தவம் முதலியவற்றை உரைத்து, புத்தஞாயிறு தோன்றுங்காறும் யானும் இத்தலம் நீங்கேன், தாயரும் நீயும் தவறின்றாக, அறம் வாய்வதாக என அவன் உரைத்தலுமென்க.

- [Previous: 22.25](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.22.25)
- [Next: 22.27](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.22.27)
- [Up: 22](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.22)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.21.161-171) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.22.26](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.22.26) · Pramāṇa
