<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23.15 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 23.15

# Maṇimēkalai's Renunciation 23.15

Maṇimēkalai urai 23.15

- **Language:** Tamil

### [23.15](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23.15)

சிறைசெய் காதை  
  
90  
புனையா வோவியம் புறம்போந் தென்ன  
மனையகம் நீங்கி வாணுதல் விசாகை  
உலக அறவியி னூடுசென் றேறி  
இலகொளிக் கந்தின் எழுதிய பாவாய்  
உலகர் பெரும்பழி யொழிப்பாய் நீயென  
மாநக ருள்ளீர் மழைதரு மிவளென  
நாவுடைப் பாவை நங்கையை யெடுத்தலும்  
  
88  
  
உரை  
  
94  
  
புனையா ஓவியம் புறம்போந்து என்ன மனையகம் நீங்கி வாணுதல் விசாகை-ஒள்ளிய நெற்றியையுடைய விசாகை இல்லத்தினின்றும் நீங்கி வண்ணங்களைக்கொண்டு எழுதாது வடிவம் மட்டும் அமைத்த ஓவியப்பாவை வெளிபோந்தாற்போல, உலக வறவியின் ஊடுசென்று ஏறி - சென்று உலகவறவியின்கண் ஏறி, இலகொளிக் கந்தின் எழுதிய பாவாய் - விளங்கும் ஒளியையுடைய தூணின்கண் எழுதப்பட்ட தெய்வப்பாவையே, உலகர் பெரும்பழி ஒழிப்பாய் நீ என - இவ்வூரிலுள்ளோர் கூறும் பெரிய பழியை நீ நீக்குவாயாக என்று வேண்ட, மாநகர் உள்ளீர் மழை தரும் இவள் என நாவுடைப்பாவை நங்கையை எடுத்தலும் - நாவுடைய அப் பாவை மாநகரிலுள்ளோர்களே இவள் மழையைத்தரும் கற்புடையாள் என்று விசாகையை உயர்த்திக் கூறுதலும்;  
  
செயற்கை யழகொன்றும் இன்மையானும், அலரெழுந்த வருத்தத்தால் ஒளி மாழ்கினமையானும் 'புனையாவோவியம்' போல என்றார். மழைதரும் என்றமையால் கற்பின் சிறப்புக் கூறப்பட்டது. எடுத்தல்- உயர்த்தல் ; உயர்த்துக் கூறுதல். விசாகை ஒழிப்பாய் நீ என, அப்பாவை நங்கையை எடுத்தலு மென்க.

- [Previous: 23.14](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23.14)
- [Next: 23.16](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23.16)
- [Up: 23](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.22.91) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23.15](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23.15) · Pramāṇa
