<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 23

# Maṇimēkalai's Renunciation 23

Maṇimēkalai urai 23

- **Language:** Tamil

### [23.1](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23.1)

சிறைசெய் காதை  
  
கடவுள் மண்டிலங் காரிருள் சீப்ப  
நெடுநிலைக் கந்தில் நின்ற பாவையொடு  
முதியோள் கோட்டம் வழிபடல் புரிந்தோர்  
உதய குமரற் குற்றதை யுரைப்பச்  
  
1  
  
உரை  
  
4  
  
கடவுள் மண்டிலம் கார்இருள் சீப்ப-ஞாயிற்று மண்டிலம் கரிய இருளை ஒட்டித் தோன்ற, நெடுநிலைக் கந்தின் நின்ற பாவையொடு- நெடிய நிலையாகிய தூணின்கண் உள்ள பாவையுடன், முதியோள் கோட்டம் வழிபடல் புரிந்தோர்-சம்பாபதி கோயிலையும் வழிபாடு செய்வோர், உதயகுமரற்கு உற்றதை உரைப்ப-உதய குமரனுக்கு நேர்ந்த துன்பத்தைக் கூற : கந்திலும் கோட்டத்திலுமுள்ள பாவையும் முதியோனையும் வழிபடல் புரிந்தோர் என்க.,

### [23.2](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23.2)

சிறைசெய் காதை  
  
5  
  
10 சாதுயர் கேட்டுச் சக்கர வாளத்து  
மாதவ ரெல்லாம் மணிமே கலைதனை  
இளங்கொடி யறிவது முண்டோ விதுவெனத்  
துளங்கா தாங்கவ ளுற்றதை யுரைத்தலும்  
ஆங்கவள் தன்னை யாருயிர் நீங்கிய  
வேந்தன் சிறுவனொடு வேறிடத் தொளித்து  
  
5  
  
உரை  
  
10  
  
சா துயர் கேட்டுக் சக்கரவாளத்து மாதவர் எல்லாம்-சக்கர வாளத்துள்ள அருந்தவரனைவரும் மன்னவன் புதல்வ னிறந்த துயரத்தைக் கேட்டு, மணிமேகலைதனை இளங்கொடி அறிவதும் உண்டோ இது என-மணிமேகலையை நோக்கி இளங்கொடியே நீ இச்செயல்பற்றி அறிந்திருக்கின்றனையோ எனவினவ, துளங்காது ஆங்கவள் உற்றதை உரைத்தலும் - மணிமேகலை நடுங்காமல் நிகழ்ந்தவற்றைக் கூறுதலும், ஆங்கவள் தன்னை ஆருயிர் நீங்கிய வேந்தன் சிறுவனொடு வேறிடத்து ஒளித்து - அவளை இறந்து கிடந்த அரசிளம் புதல்வனுடன் ஓரிடத்து ஒளித்துவைத்து ; தன்பாற் பிழையின்மையின் துளங்காதுரைத்தனள் என்க. வேறிடத்து - வேறு மறைவான இடத்தில்.

### [23.3](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23.3)

சிறைசெய் காதை  
  
15  
மாபெருங் கோயில் வாயிலுக் கிசைத்துக்  
கோயில் மன்னனைக் குறுகினர் சென்றீங்  
குயர்ந்தோங் குச்சி உவாமதி போல  
நிவந்தோங்கு வெண்குடை மண்ணகம் நிகற்செய  
வேலுங் கோலும் அருட்கண் விழிக்க  
தீதின் றுருள்கநீ யேந்திய திகிரி  
நினக்கென வரைந்த ஆண்டுக ளெல்லாம்  
மனக்கினி தாக வாழிய வேந்தே!  
  
11  
  
உரை  
  
18  
  
மாபெருங் கோயில் வாயிலுக்கு இசைத்து-மிக்க பெருமையுடைய மன்னவன் கோயிலையடைந்து வாயில்காப்போருக்குக் கூறி, கோயின் மன்னனைக் குறுகினர் சென்று ஈங்கு - மாளிகையிலுள்ள வேந்தனுக்கு அண்மையிற் சென்று, உயர்ந்தோங்கு உச்சி உவாமதிபோல-மிகவுயர்ந்த வானின் நடுவேயுள்ள முழுமதியைப் போல, நிவந்தோங்கு வெண்குடை மண்ணகம் நிழல் செய - மிகவுயரிய நினது வெண்கொற்றக்குடை நிலவுலகிற்குத் தண்ணிய நிழலைத் தருக, வேலும் கோலும் அருள்கண் விழிக்க - நீ ஏந்திய வேற்படையும் செங்கோலும் அருள்நோக்க முடையவாக, தீது இன்றி உருள்க நீ ஏந்திய திகிரி - நினது ஆணைச் சக்கரம் இடையூறின்றி இயல்வதாக, நினக்கென வரைந்த ஆண்டுகள் எல்லாம் மனக்கு இனிதாக வாழிய வேந்தே - நினக்கு என்று பால்வரை தெய்வத்தான் எல்லையிடப்பட்ட ஆண்டுகளனைத்திலும் மனத்திற்கு இனியவாக வாழ்வாயாக அரசே;  
  
வாயில் - வாயில் காவலரை உணர்த்திற்று. உயர்ந்தோங்கு, நிவந்தோங்கு என்பன ஒரு பொருட்பன்மொழிகள். செய, விழிக்க என்பன வியங்கோல்; செயவெனெச்சமாகக் கொண்டு வாழிய வென்பதனோடு முடித்தலுமாம். வேலும் கோலும் அருட்கண் விழிக்க என்றமையால், பகை வேறலும் குடியோம்பலும் அருளால் நிகழ வேண்டுமென்றவாறாயிற்று. ஏந்திய என்பதனை வேல் கோல் என்பவற்றோடு கூட்டுக, மனக்கு ; அத்துச்சாரியை தொக்கது. இனிதாக : பன்மை யொருமை மயக்கம்.  
  
மாதவரெல்லாம் இங்ஙனம் அரசர்க்கு ஓம்படை கூறியபின், அவருளொருவர், உதயகுமரன் கொலையுண்டமை கேட்டு அரசர்க்குச்செற்றம் நிகழாவண்ணம் முன்பு அப் பதியிலே கழிகாமத்தால் தீங்கிழைத்துக் கொலையுண்ட இருவர் வரலாறுகளை அரசர்க்குக் கூறுகின்றார்.

### [23.4](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23.4)

சிறைசெய் காதை  
  
20  
  
இன்றே யல்ல இப்பதி மருங்கில்.  
கன்றிய காமக் கள்ளாட் டயர்ந்து  
பத்தினிப் பெண்டிர் பாற்செறன் றணுகியும்  
நற்றவப் பெண்டிர் பின்னுளம் போக்கியும்  
தீவினை யுருப்ப உயிரீறு செய்தோர்  
பாராள் வேந்தே பண்டும் பலரால்  
  
19  
  
உரை  
  
24  
  
இன்றே அல்ல - இன்றுமட்டுமல்ல; இப் பதி மருங்கில் - இந் நகரத்தின்கண், கன்றிய காமக்கள்ளாட்டு அயர்ந்து - அடிப் பட்டகாமமாகிய கள்ளுண்டலைச் செய்து, பத்தினிப்பெண்டிர்பால் சென்று அணுகியும் - கற்புடைய மகளிரிடம் அவரை விரும்பிப் போய் நெருங்கியும், நற்றவப்பெண்டிர் பின் உளம் போக்கியும் - நல்ல தவஞ்செய்யும் மகளிரின் பின்னர் உளத்தைச்செலுத்தியும். தீவினை உருப்ப உயிர் ஈறுசெய்தோர்-ஊழ்வினை சினந்துவந்தூட்ட உயிர்துறந்தோர், பாராள் வேந்தே பண்டும் பலரால் - மண்ணுலகாளும் மன்னவர் ஏறே முன்னரும் பலர் இருந்திருக்கின்றனர் ;  
  
வாயில் - வாயில் காவலரை உணர்த்திற்று. உயர்ந்தோங்கு, கன்றிய - அடிப்பட்ட; முதிர்ந்த. நற்றவம் - வீடுபெறுதற்குச் செய்யுந் தவமுமாம்; ¹"நற்றவஞ்செய் வார்க்கிடந் தவஞ்செய்வார்க்கு மஃதிடம்" என்பது காண்க. இன்றேயல்ல பண்டும் பலரால் என்க.  
  
¹ சீவக : 77.

### [23.5](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23.5)

சிறைசெய் காதை  
  
25  
  
30 மன்மருங் கறுத்த மழுவாள் நெடியோன்  
தன்முன் தோன்றல் தகா ¹தொழி நீயெனக்  
கன்னி யேவலின் காந்த மன்னவன்  
இந்நகர் காப்போர் யாரென நினைஇ  
நாவலந் தண்பொழில் நண்ணார் நடுக்குறக்  
காவற் கணிகை தனக்காங் காதலன்  
இகழ்ந்தோர் காயினும் எஞ்சுத லில்லோன்  
ககந்த னாமெனக் காதலிற் கூஉய  
  
25  
  
உரை  
  
32  
  
மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன் தன்முன் - அரசர் குலத்தைப் பான்றக்கெடுத்த பரசுராமன்முன், தோன்றல் தகாது ஒழி நீ என - நீ வெளிப்படுதல் தகாது இந் நகரை விட்டு நீங்குவாயாக என்று, கன்னி ஏவலில் - சம்பாபதி ஆணையிட்டமையால், காந்த மன்னவன் - காந்தன் என்ற அரசன், இந்நகர் காப்போர் யார் என நினைஇ-தான் நீங்கின். இந் நகரைப் காப்போர் யாவர் என நினைத்து, நாவலந் தண் பொழில் நண்ணார் நடுக்குற - சம்புத்தீவிலுள்ள பகைவர்கள் நடுக்கமடையுமாறு, காவற் கணிகை தனக்கு ஆம் காதலன் - காவற்கணிகையிடத்து தோன்றிய புதல்வனும், இகழ்ந்தோர் காயினும் எஞ்சுதல் இல்லோன்- பகைவர் வெகுண்டு எதிர்ப்பினும் அவர்க்கு வலி குறைதல் இல்லதவனும் ஆகிய, ககந்தன் ஆம் என-ககந்தன் என்பவனே காத்தற்குப் பொருந்தியவனாவான் என்று, காதலின் கூஉய் - அவனை அன்பொடும் அழைத்து;  
  
மருங்கு-குலம்; ²"சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி" என்பதன் உரை காண்க. மழுவாள் நெடியோன்-பரசுராமன்; திருமாலின் தோற்றமாகலின் 'நெடியோன்' எனப்பட்டான் : மழுவாள்-மழுவாகிய வாள்; சிவன்பால் தவஞ்செய்து பெற்ற பரசு. இவன் தன்னாற் கொலையுண்ட கார்த்தவீரியன் என்னும் அரசனுடைய புதல்வர்கள் தான் இல்லாதபொழுதில் தன் தந்தையாகிய சமதக்கினி முனிவரைக் கொன்றமைபற்றி எழுந்த செற்றத்தால் இருபத்தொரு தலைமுறைகாறும் அரசர்குலத்தை அழித்தலை நோன்பாகக் கொண்டனனென்பது வரலாறு. நெடியோன்றன் முன் தோன்றல் தகாது என்றமையின் அவன் ஈண்டுப் போந்தமை பெற்றாம். 'ஒளி' என்பது பாடமாயின் மறைந்து கொள் என்பது பொருளாகும். கன்னி-துர்க்கையுமாம். நடுக்குறத் தோன்றிய காதலன் என்க. காவற் கணிகை-அரங்காடுங் கூத்தி, அரசனுடைய காமக்கிழத்தி. இகழ்ந்தோர்-அவமதித்த பகைவர்-எஞ்சுதலில் லோன்-வலிகுறையாதவன்; தோலாதவன். என-என்றுநினைந்து.  
  
¹ தொளி. ² முருகு : 275.

### [23.6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23.6)

சிறைசெய் காதை  
  
35  
அரசா ளுரிமை நின்பா லின்மையின்  
பரசு ராமனின் பால்வந் தணுகான்  
அமர முனிவ னகத்தியின் றனாது  
துயர்நீங்கு கிளவியின் யான்தோன் றளவும்  
ககந்தன் காத்தல் காகந்தி யென்றே  
இயைந்த நாமம் இப்பதிக் கிட்டீங்  
குள்வரிக் கொண்டவ் வுரவோன் பெயர்நாள  
  
33  
  
உரை  
  
39  
  
அரசாள் உரிமை நின்பால் இன்மையின் - அரசு புரியும உரிமை நின்னிடம் இல்லாமையால், பரசுராமன் நின்பால் வந்து அணுகான் - பரசுராமன் நின்னிடம் போர்புரியுமாறு வாரான், அமர முனிவன் அகத்தியன் தனாது துயர்நீங்குகிளவியின் யான் தோன்று அளவும் - கடவுண் முனிவராகிய அகத்தியரது அருண்மொழியால் யான் மீண்டு இந் நகரை அடையுமளவும், ககந்தன் காத்தல் - ககந்தனே காப்பாயாக என வுரைத்து, காகந்தி என்று இயைந்த நாமம் இப் பதிக்கு இட்டு - ககந்தனாற் காக்கப்படுதலின் காகந்தி என்று பொருந்திய பெயரை இந் நகருக்கு இட்டு, ஈங்கு உள்வரிக்கொண்டு அவ் வுரவோன் பெயர்நாள் - காந்தன் வேற்றுருக்கொண்டு சென்ற நாளில் ;  
  
கணிகை மகனாதலின் அரசாளுரிமை யிலனாயின னென்க. துயர நீங்குகிளவி-துன்பம் ஒழிதற்கேதுவாகிய சொல். ககந்தன் : அண்மை விளி. காத்தல் : வியங்கோள், காக்க 'என்று கூறி' என வருவித்துரைக்க. உள்வரி - வேற்றுரு. இவ் வரசன் அகத்தியரை வேண்டி, அவரது கரகத்திலுள்ள காவிரிநீரைப் பெற்றனனென்பது பதிகத்தால்¹ அறியப்படும்.  
  
¹ மணி. பதிகம் : 10-12.

### [23.7](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23.7)

சிறைசெய் காதை  
  
40  
  
தெள்ளுநீர்க் காவிரி யாடினள் வரூஉம்  
பார்ப்பனி மருதியைப் பாங்கோ ரின்மையின்  
யாப்பறை யென்றே யெண்ணின னாகிக்  
காவிரி வாயிலில் ககந்தன் சிறுவன்  
நீவா என்ன நேரிழை கலங்கி  
  
40  
  
உரை  
  
44  
  
தெள்ளுநீர்க் காவிரி ஆடினள் வரூஉம்-தெளிந்தநீரினையுடைய காவிரியில் நீராடி வருகின்ற, பார்ப்பனி மருதியைப் பாங்கோர், இன்மையின் - பார்ப்பனியாகிய மருதியைப் பக்கத்திலுள்ளோர் ஒருவரும் இல்லாமையால், யாப்பறை என்றே எண்ணினன் ஆகி -உறுதியற்றவள் என நினைந்தவனாய், காவிரி வாயிலில் ககந்தன் சிறுவன் நீ வா என்ன - காவிரியின கரையில் ககந்தனுடைய புதல்வன் நீ வா என அழைக்க, நேரிழை கலங்கி - அவள் கலக்கமுற்று ;  
  
காவிரி வாயில் - சங்கமுகத் துறையுமாம். பாங்கோரின்மையின் நீ வா என்ன என்றியையும்.

### [23.8](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23.8)

சிறைசெய் காதை  
  
45  
  
மண்திணி ஞாலத்து மழைவளந் தரூஉம்  
பெண்டி ராயின் பிறர்நெஞ்சு புகாஅர்  
புக்கேன் பிறனுளம் புரிநூன் மார்பன்  
முத்தீப் பேணும் முறையெனக் கில்லென  
மாதுய ரெவ்வமொடு மனையகம் புகாஅள்  
  
45  
  
உரை  
  
49  
  
மண்திணி ஞாலத்து - அணுச்செறிந்த நிலவுலகத்தில், மழைவளம் தரூஉம் பெண்டிராயின்-வேண்டுங்கால் மழையினைப் பெய்விக்கும் கற்புடை மகளிராயின், பிறர் நெஞ்சு புகாஅர் - ஏதிலார் உள்ளத்திற் புகுதலிலர், புக்கேன் பிறன் உளம்-யானோ அயலான் உள்ளத்திற் புகுந்தேன், புரிநூல் மார்பன் முத்தீப்பேணும் முறை எனக்கு இல் என - ஆகலின் முந்நூலணிந்த மார்பினையுடைய அந்தணனது முத்தீயைக் காக்கும் தகுதி எனக்கு இல்லை என்று மாதுயர் எவ்வமொடு மனையகம் புகாள் - மிகப் பெரிய துன்பத்துடன் தன் மனையின்கண் செல்லாளாய் ;  
  
மழைவளம் - மழையாகிய வளம் ; வளம் - வருவாய். புக்கேன் ஆகலின் என விரித்துரைக்க. புரிநூன் மார்பன் - கணவன். முத்தீ - காருகபத்தியம் ஆகவனீயம் தென்றிசையங்கி என்பன. பேணுதல் - கணவற்குத் துணையாயிருந்து அதனை வளர்த்தல்.

### [23.9](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23.9)

சிறைசெய் காதை  
  
50  
  
55 பூத சதுக்கம் புக்கனள் மயங்கிக்  
கொண்டோற் பிழைத்த குற்றந் தானிலேன்  
கண்டோன் நெஞ்சில் கரப்பெளி தாயினேன்  
வான்தரு கற்பின் மனையறம் பட்டேன்  
யான்செய் குற்றம் யானறி கில்லேன்  
பொய்யினை கொல்லோ பூத சதுக்கத்துத்  
தெய்வம் நீயெனச் சேயிழை யரற்றலும்  
  
50  
  
உரை  
  
56  
  
பூத சதுக்கம் புக்கனள் மயங்கி-பூத சதுக்கத்தை யடைந்து வருந்தி, கொண்டோன் பிழைத்த குற்றம்தான் இலேன் - கணவனைப் பிழைத்த குற்றமொன்றும் இல்லேன், கண்டோன் நெஞ்சில் கரப்பு எளிதாயினேன் - அயலானுடைய உள்ளத்தில் எளிதல் ஒளித்தேன், வான்தரு கற்பின் மனையறம் பட்டேன் - மழையைத் தரும் கற்புடைய மகளிர்க்குரிய இல்லறத்திற் பொருந்தினேன், யான் செய் குற்றம் யான் அறிகில்லேன் - நான் செய்த குற்றம் ஒன்றையும் யானறியேன், பொய்யினைகொல்லோ பூதசதுக்கத்துத் தெய்வம் நீ எனச் சேயிழை அரற்றலும் - அல்லவை செய்தோரைப் புடைத்துண்பாய் என்று கூறப்படுகின்ற பூதசதுக்கதுக் கடவுளாய நீ பொய்ம்மையை யுடையாயோ என மருதி பலவாறு புலம்புதலும் ;  
  
பூத சதுக்கம் - பூதம் நிற்றலையுடைய சதுக்கம் ; சதுக்கம் - நாற்சந்தி. கொண்டோற் பிழைத்தல் - கற்பிற்கு மாறாக ஒழுகுதல் கற்பின் மனையறம் - கற்புடை மகளிர் புரியும் மனையறம். குற்றந்தான் இலேன், மனையறம் பட்டேன், யானறிகில்லேன்: அங்ஙனமாகவும் கரப்பெளிதாயினேன்; ஆகலின் பொய்யினை கொல்லோ? என்றாள் என்க; பிறனுளம்புக்க தன்னைப் புடைத்துண்ணாமையால் 'பொய்யின் கொல்லோ' என்றாள். சதுக்கப் பூதத்தின் இயல்பு ¹"தவமறைந் தொழுகும்... பூதம் புடைத்துணும் பூதசதுக்கமும்" என்பதனால் அறியப்படும். மனையறம்பட்டேன் என்பதற்கு 'இல்லறத்திற்குத் துணைறயாக நிற்றலை யொழிந்தேன்' என்று பொருள் கூறினர் டாக்டர் வே. சாமிநாதையர்.  
  
¹ சிலப். 5; 128 - 34.

### [23.10](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23.10)

சிறைசெய் காதை  
  
மாபெரும் பூதந் தோன்றி மடக்கொடி  
நீகே ளென்றே நேரிழைக் குரைக்கும்  
  
57  
  
உரை  
  
58  
  
மாபெரும் பூதம் தோன்றி - மிகப் பெரிய சதுக்கப்பூதம் தோன்றி, மடக்கொடி நீ கேள் என்றே நேரிழைக்கும் உரைக்கும் - மடக்கொடியே நீ கேட்பாயாக என்று அவட்குக் கூறும்.

### [23.11](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23.11)

சிறைசெய் காதை  
  
60  
  
65 தெய்வம் தொழாஅள் கொழுநற் றெழுதெழுவாள்  
பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றஅப்  
பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்  
பிசியும் நொடியும் பிறர்வாய்க் கேட்டு  
விசிபிணி முழவின் விழாக்கோள் விரும்பிக்  
கடவுள் பேணல் கடவியை யாகலின்  
மடவரல் ஏவ மழையும் பெய்யாது  
நிறையுடைப் பெண்டிர் தம்மே போலப்  
பிறர்நெஞ்சு சுடூஉம் பெற்றியு மில்லை  
ஆங்கவை யொழிகுவை யாயி னாயிழை  
ஓங்கிரு வானத்து மழையுநின் மொழியது  
  
59  
  
உரை  
  
69  
  
தெய்வந்தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை என்ற-பிற தெய்வத்தை வணங்காது தன் தெய்வமாகிய கணவனைத் தொழுது எழுகின்ற கற்புடை நங்கை பெய்யென்று சொல்லப் பெருமழை பெய்யும்எனவுரைத்த, அப் பொய்யில் புலவன் பொருளுரை தேறாய் - தெய்வப் புலவராகிய திருவள்ளுவனாரது அப் பொருண்மொழியைத் தெளியாயாய், பிசியும் நொடியும் பிறர்வாய்க் கேட்டு-பொருளொடு புணராப் பொய்ம்மொழிகளையும் பொருளொடு புணர்ந்த நகைமொழிகளையும் பிறரிடம் கேட்டு, விசிபிணி முழவின் விழாக்கோள் விரும்பி- கட்டப்பட்ட கட்டினையுடைய முழவுடன்கூடிய விழாக்காண்டலை விரும்பி, கடவுள் பேணல் கடலியை ஆகலின் - வேறு கடவுளை வணங்கும் கடப்பாடுடைய ஆயினையாகலின், மடவரல் ஏவ மழையும் பெய்யாது - நங்காய் நீ ஏவினாள் மழையும் பெய்யாது, நிறையுடைப் பெண்டிர் தம்மே போல - நிறையுடைய மகளிரைப் போல, பிறர் நெஞ்சு சுடூஉம் பெற்றியும் இல்லை - பிறருடைய உள்ளத்தைச் சுடுகின்ற தன்மையுடையையும் அல்லை, ஆங்கவை ஒழிகுவை ஆயின் - முற்கூறிய நின் செயல்களை நீங்குவாயானால், ஆயிழை ஓங்கிரு வானத்து மழையும் நின் மொழியது - நங்காய் உயர்ந்த வானத்து மழையும் நீ 'பெய்' என மொழியிற் பெய்யா நிற்கும் ;  
  
"தெய்வந் தொழாஅள...தேறாய்" என்றது இந்நூலாசிரியர் கருத்துத் தெய்வத்தின் கூற்றில் வைத்துணர்த்தப்பட்டது. சாத்தனார் இக் குறளை ¹உரையளவையாகக் கொண்டு, வள்ளுவரைப் பொய்யில் புலவன் என்று கூறியது தெய்வப் புலவர்பால் அவருக்குள்ள பெருமதிப்பை இனிது புலப்படுத்தும். பொருளுரை - முனிவர் புரிந்து கண்ட பொருளுடன் கூடியவுரை ; மெய்யுரையுமாம்; பொருள் - மெய்ம்மையாதலைப் 'பொருள்சேர் புகழ்' என்பதனாலறிக. பிசி - பொய்ம்மொழியும் நகைமொழியுமாவது; இது பிதிர் எனவும், விடுகதையெனவும் வழங்கும். ஆசிரியர் தொல்காப்பியனார் ²"நொடியொடு புணர்த்த பிசியி னான" என நொடியைப் பிசிக்கு அடையாகவே கூறி யுள்ளார். ஈண்டு நொடி என்பதற்கு வறுமொழி என்று கூறுதல் சாலும். மடவரல் : முன்னிலைப் பெயர்.  
  
¹ குறள் : 55. ² தொல், செய், 165.

### [23.12](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23.12)

சிறைசெய் காதை  
  
70  
  
75 பெட்டாங் கொழுகும் பெண்டிரைப் போலக்  
கட்டா துன்னையென் கடுந்தொழிற் பாசம்  
மன்முறை யெழுநாள் வைத்தவன் வழூஉம்  
பின்முறை யல்ல தென்முறை யில்லை  
ஈங்கெழு நாளில் இளங்கொடி நின்பால்  
வரங்கா நெஞ்சின் மயரியை வாளால்  
ககந்தன் கேட்டுக் கடிதலு முண்டென  
இகந்த பூதம் எடுத்துரை செய்ததப்  
பூத முரைத்த நாளா லாங்கவன்  
தாதை வாளால் தடியவும் பட்டனன்  
  
70  
  
உரை  
  
79  
  
பெட்டாங்கு ஒழுகும் பெண்டிரைப் போல - விரும்பிய வண்ணம் ஒழுகும் பெண்டிரைக் கட்டுவதுபோல, கட்டாது உன்னை என் கடுந் தொழிற்பாசம் - எனது கொடிய தொழிலையுடைய பாச மானது நின்னைப் பிணியாது, மன்முறை எழுநாள்வைத்து-அரசன் முறை செய்தற்குக் காலவளவாக ஏழுநாள் நிறுத்தி, அவன் வழுஉம் பின் முறை அல்லது - அந்நாட்களுள் அவன் முறை செய்யாது தவறிய பின்பல்லது, என்முறை இல்லை - யான் முறை செய்யுமாறில்லை, ஈங்கெழுநாளில் இளங்கொடி நின்பால் வாங்கா நெஞ்சின் மயரியை - மெல்லியலே இன்றைக்கு ஏழாம் நாளில் நின்னிடம் வைத்த உள்ளத்தை மீட்காத மயக்கமுடையோனை, வாளால் ககந்தன் கேட்டுக் கடிதலும் உண்டு என - ககந்தன் கேள்வியுற்று வாளினால் ஒறுத்தலும் உண்டு என்று, இகந்த பூதம் எடுத்துரை செய்தது-தீமையைக் கடந்த பூதம் எடுத்துக் கூறியது, அப்பூதம் உரைத்த நாளால் ஆங்கவன் தாதைவாளால் தடியவும் பட்டனன்- அப்பூதங் கூறிய நாளிலேயே அவன் தன் தந்தையின் வாளால் வெட்டப்பட்டனன் ;  
  
நீ அங்ஙனம் விழாக் காண்டல் முதலியன செய்து போந்தாயாயினும கற்பு நெறி கடந்து அவமைறந் தொழுகும் அலவற்பெண்டிர் போலாகாயாகலின் என் பாசம் உன்னைக் கட்டாதென்றும், நின்பால் உள்ளத்தைச் செல்ல விடுத்துப் பிறர்மனை நயத்தலாகிய குற்ற மிழைத்தோனைப் புடைத்துண்டல் வழுவன்றாயினும் ஏழுநாளளவில் அரசன் முறை செய்யா தொழியினே அங்ஙனம் செய்யலாகுமென்றும் பூதங் கூறிற்றென்க. முறை செய்தல் - குற்றஞ் செய்தாரை அதற்குத்தக ஒறுத்தல்; ¹"முறையெனப் படுவது கண்ணோடா துயிர்வவ்வல்" என்றார் பிறசான்றோரும். பின்முறை - பின்பு. எழுநாளில் - ஏழாவது நாளில். மயரி - மயக்கமுடையான். நாளால் - நாளில்.  
  
¹ கலி. நெய்தல்: 16.

### [23.13](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23.13)

சிறைசெய் காதை  
  
80 இன்னுங் கேளாய் இருங்கட லுடுத்த  
மண்ணாள் செல்வத்து மன்னவ ரேறே  
  
80  
  
உரை  
  
81  
  
இன்னும் கேளாய் இருங்கடல் உடுத்த மண்ணாள் செல்வத்து மன்னவர் ஏறே-பெரிய கடலை ஆடையாக வுடைய நிலவுலகினை யாளும் செல்வமுடைய அரசர்களுள் ஏறனையாய் இன்னும் கேட்பாயாக ;

### [23.14](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23.14)

சிறைசெய் காதை  
  
85  
தரும தத்தனுந் தன்மா மன்மகள்  
பெருமதர் மழைக்கண் விசாகையும் பேணித்  
தெய்வுங் காட்டுந் திப்பிய ஓவியக்  
கைவினை கடந்த கண்கவர் வனப்பினர்  
மைத்துனன் முறைமையால் யாழோர் மணவினைக்  
¹ கொத்தன ளென்றே யூர்முழு தலரெழப்  
  
82  
  
உரை  
  
87  
  
தருமதத்தனும் தன் மாமன்மகள் பெருமதர் மழைக்கண் விசாகையும் - தருமதத்தன் என்னும் வணிகனும் அவன்றன் மாமன் மகளாகிய அழகிய பெரிய கண்களையுடைய விசாகை என்பவளும், பேணி தெய்வம் காட்டும் திப்பிய ஓவியக் கைவினை கடந்த கண்கவர் வனப்பினர்-தெய்வத்தால் விரும்பி வியப்புடைத்ததாக எழுதப்பட்ட செய்தொழிலின் எல்லை கடந்த ஓவியம்போலக் கண்களைக் கவரும் எழிலுடையர், மைத்துனன் முறைமையால் யாழோர் மணவினைக்கு ஒத்தனள் என்றே ஊர்முழுது அலர் எழ- அவருள் தருமதத்தன் மைத்துனன் முறைமையுடையனாதலின் விசாகை அவனுடன் காந்தருவ மணத்திற்கு இயைந்தனள் என்று ஊரெங்கும் அலருண்டாக ;  
  
தெய்வம் பேணிக் காட்டும் ஓவியம் எனவும், கைவினை கடந்த ஒவியம் எனவும் கூட்டுக; ²"ஆதரித் தமுதிற் கோல்தோய்த் தவயவமமைக்குந் தன்மை, யாதெனத் திகைக்கு மல்லால் மதனற்கு மெழுத வொண்ணாச், சீதை" என்பது ஈண்டு அறியற்பாலது. தருமதத்தனும் விசாகையும் வனப்பினர்; அவருள் அவன் மைத்துனன் முறைமையால் அவள் ஒத்தனள் என விரித்துரைக்க.  
  
¹ கம்ப. பால. மிதிலைக். 5. ² கொத்தன ரென்றே.

### [23.15](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23.15)

சிறைசெய் காதை  
  
90  
புனையா வோவியம் புறம்போந் தென்ன  
மனையகம் நீங்கி வாணுதல் விசாகை  
உலக அறவியி னூடுசென் றேறி  
இலகொளிக் கந்தின் எழுதிய பாவாய்  
உலகர் பெரும்பழி யொழிப்பாய் நீயென  
மாநக ருள்ளீர் மழைதரு மிவளென  
நாவுடைப் பாவை நங்கையை யெடுத்தலும்  
  
88  
  
உரை  
  
94  
  
புனையா ஓவியம் புறம்போந்து என்ன மனையகம் நீங்கி வாணுதல் விசாகை-ஒள்ளிய நெற்றியையுடைய விசாகை இல்லத்தினின்றும் நீங்கி வண்ணங்களைக்கொண்டு எழுதாது வடிவம் மட்டும் அமைத்த ஓவியப்பாவை வெளிபோந்தாற்போல, உலக வறவியின் ஊடுசென்று ஏறி - சென்று உலகவறவியின்கண் ஏறி, இலகொளிக் கந்தின் எழுதிய பாவாய் - விளங்கும் ஒளியையுடைய தூணின்கண் எழுதப்பட்ட தெய்வப்பாவையே, உலகர் பெரும்பழி ஒழிப்பாய் நீ என - இவ்வூரிலுள்ளோர் கூறும் பெரிய பழியை நீ நீக்குவாயாக என்று வேண்ட, மாநகர் உள்ளீர் மழை தரும் இவள் என நாவுடைப்பாவை நங்கையை எடுத்தலும் - நாவுடைய அப் பாவை மாநகரிலுள்ளோர்களே இவள் மழையைத்தரும் கற்புடையாள் என்று விசாகையை உயர்த்திக் கூறுதலும்;  
  
செயற்கை யழகொன்றும் இன்மையானும், அலரெழுந்த வருத்தத்தால் ஒளி மாழ்கினமையானும் 'புனையாவோவியம்' போல என்றார். மழைதரும் என்றமையால் கற்பின் சிறப்புக் கூறப்பட்டது. எடுத்தல்- உயர்த்தல் ; உயர்த்துக் கூறுதல். விசாகை ஒழிப்பாய் நீ என, அப்பாவை நங்கையை எடுத்தலு மென்க.

### [23.16](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23.16)

சிறைசெய் காதை  
  
95  
  
100 தெய்வங் காட்டித் தெளித்திலே னாயின்  
மைய லூரோ மனமா சொழியாது  
மைத்துனன் மனையாள் மறுபிறப் பாகுவேன்  
இப்பிறப் பிவனொடுங் கூடே னென்றே  
நற்றாய் தனக்கு நற்றிறஞ் சாற்றி  
மற்றவள் கன்னி மாடத் தடைந்தபின்  
  
95  
  
உரை  
  
100  
  
தெய்வம் காட்டித் தெளித்திலேன் ஆயின் - இன்னணம் கடவுண்மொழியால்மெய்ம்மை காட்டித்தெளிவிக்கப்பெற்றிலேன் ஆயின், மையல் ஊரோ மனமாசு ஒழியாது - மயக்கங்கொண்ட ஊரவரின் மனவிருள் நீங்காது, மைத்துனன் மனையாள் மறுபிறப்பு ஆகுவேன்-மறுபிறப்பின்கண் மைத்துனற்கு மனைவியாகுவேன், இப்பிறப்பு இவனொடும் கூடேன் என்றே-இப்பிறப்பில் இவனொடு மணம் பொருந்தேன் என்று, நற்றாய் தனக்கு நற்றிறம் சாற்றி - தன் அன்னைக்கு நல்லியல்புகளை எடுத்துக்கூறி, மற்று அவள் கன்னிமாடத்து அடைந்த பின்-விசாகை கன்னிமாடத்திற் சேர்ந்த பின்னர்;  
  
மனமாசு - திரிபான எண்ணம், மைத்துனன் - அத்தை மகன் - தருமதத்தன். தான் குமரி மூத்தலால் தாய் துன்புறாவண்ணம் அவட்கு நற்றிறம் மொழிந்தாள் என்க. நற்றிறம் - விரதமுமாம்.

### [23.17](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23.17)

சிறைசெய் காதை  
  
105  
தரும தத்தனும் தந்தையுந் தாயரும்  
பெருநகர் தன்னைப் பிறகிட் டேகித்  
தாழ்தரு துன்பந் தலையெடுத் தாயென  
நாவுடைப் பாவையை நலம்பல ஏத்தி  
மிக்கோ ருறையும் விழுப்பெருஞ் செல்வத்துத்  
தக்கண மதுரை தான்சென் றடைந்தபின்  
  
101  
  
உரை  
  
106  
  
தருமதத்தனும் தந்தையும் தாயரும் - தரும தத்தனும் அவனுடைய தந்தை தாயரும், பெருநகர் தன்னைப் பிறகிட்டேகி - காவிரிபூம்பட்டினத்தைப் பின் வைத்துச் சென்று, தாழ்தரு துன்பம் தலையெடுத்தாய் என - யாங்கள் அழுந்திய துன்பத்தினின்றும் நீக்கியருளினாய் என்று, நாவுடைப்பாவை நலம்பலஏத்தி- கந்திற் பாவையின் சிறப்புகளைப் பலவாறு துதித்து, மிக்கோர் உறையும் விழுப்பெரும் செல்வத்து-மேலோர் வாழ்கின்ற சிறந்த பெருஞ்செல்வத்தினையுடைய, தக்கண மதுரை தான் சென்று அடைந்தபின்-தென்றிசையிலுள்ள கூடற்பதியிற் சென்று சேர்ந்த பின்னர்;  
  
பிறகிட்டேகுதல்-பின்னே யிருக்கும்படி கடந்து செல்லுதல். தலையெடுத்தாய் ; நீக்கினாய் என்னும் பொருட்டு.

### [23.18](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23.18)

சிறைசெய் காதை  
  
110  
  
தரும தத்தனுந் தன்மா மன்மகள் விரிதரு பூங்குழல் விசாகையை யல்லது பெண்டிரைப் பேணேன் இப்பிறப் பொழிகெனக் கொண்ட விரதந் தன்னுட் கூறி  
  
107  
  
உரை  
  
110  
  
தருமதத்தனும் தன் மாமன் மகள் விரிதரு பூங்குழல் விசா கையை அல்லது - தருமதத்தனும் தன் அம்மான் மகளாகிய மலர்ந்த பூக்களையணியும் கூந்தலையுடைய விசாகையை அன்றி, பெண்டிரைப் பேணேன்-வேறு மகளிரை விரும்பேன், இப்பிறப்பு ஒழிகென - இப்பிறப்பு இவ்வாறே நீங்குவதாகவென்று, கொண்டே விரதம் தன்னுட் கூறி-மேற்கொண்ட விரதத்தைத் தன்னுள்ளே கூறிக்கொண்டு;  
  
தருமதத்தனும் : உம்மை இறந்தது தழீஇ எச்சம். விரிதரு பூங்குழல் - அடர்ந்த பொலிவுள்ள கூந்தல் என்றுமாம்.

### [23.19](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23.19)

சிறைசெய் காதை  
  
வாணிக மரபின் வருபொரு ளீட்டி  
நீள்நிதிச் செல்வனாய் நீள்நில வேந்தனின்  
எட்டிப் பூப்பெற் றிருமுப் பதிற்றியாண்  
டொட்டிய செல்வத் துயர்ந்தோ னாயினன்  
  
111  
  
உரை  
  
114  
  
வாணிக மரபின் வருபொருள் ஈட்டி - முறைமையாற்செய்யும் வாணிகத்தால் வளரும் பொருளைத் தொகுத்து, நீள் நிதிச் செல்வனாய்-பெருநிதி படைத்த செல்வனாய், நீள்நீல வேந்தனின் - பெரிய நிலத்தினை ஆளும் அரசனால், எட்டிப்பூப்பெற்று - எட்டியென்னும் பட்டமும் அதற்குரிய பொற்பூவும் பெற்று, இரு முப்பதிற்று யாண்டு ஒட்டிய செல்வத்து உயர்ந்தோன் ஆயினன் - நீங்காத செல்வத்தில் மேம்பட்டவனாய் அறுபதாம் ஆண்டினை எய்தினன்.  
  
முறைமையால் வாணிகஞ் செய்தலாவது பிறர் பொருளையும் தம் பொருளை யொத்த மதித்து மிகையாகக் கொள்ளாதும் குறையாகக் கொடாதும் செய்தலாம்; அங்ஙனஞ்செய்வார்க்கு அந் நல்வாணிகத்தால் மேன்மேற் பொருள் வளருமாகலின் 'வாணிக மரபின் வருபொருளீட்டி' என்றார். ருபொருள்-வளரும் பொருள். அவ்வாறு பெரும் பொரு ளீட்டிய வாணிக வாகையுடையார்க்கு அரசன் எட்டிப் பூ அளிப்பனென்க.

### [23.20](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23.20)

சிறைசெய் காதை  
  
115 120  
  
அந்த ணாள னொருவன் சென்றீங் கென்செய் தனையோ விருநிதிச் செல்வ பத்தினி யில்லோர் பலவறஞ் செய்யினும் புத்தே ளுலகம் புகாஅ ரென்பது கேட்டு மறிதியோ கேட்டனை யாயின் நீட்டித் திராது நின்னக ரடைகெனத் தக்கண மதுரை தான்வறி தாக இப்பதிப் புகுந்தனன் இருநில வேந்தே !  
  
111  
  
உரை  
  
114  
  
அந்தணாளன் ஒருவன் சென்று - அப்பொழுது மறையவனொருவன் அவன்பாற் சென்று, ஈங்கு என்செய்தனையோ இரு நிதிச் செல்வ, பெருநிதிச் செல்வனே நீ என் செய்தனை, பத்தினி இல்லோர் பலறம் செய்யினும் - மனைவி யில்லதோர் பலதிறப்பட்ட அறங்களைச் செய்தாலும், புத்தேள் உலகம் புகாஅர் என்பது- வானவருலகிற் செல்லுதற் குரியராகார் என்பதனை, கேட்டும் அறிதியோ - கேட்டறிதலும் உடையையோ, கேட்டனையாயின் - அங்ஙனம் கேட்டறிந்தனையானால், நீட்டித்து இராது நின் நகர் அடைக என-இங்கே நெடிது தங்கியிராமல் நின் நகரத்தை அடைவாயாக என்று கூற, தக்கண மதுரை தான் வறிதாக இப்பதிப் புகுந்தனன்-தருமதத்தன் தென்மதுரை வறிதாகுமாறு இப்பதியை அடைந்தனன்;  
  
நீட்டித் திராது நின்னகர் அடைக என்றது, விரைவில் நின்பதியை அடைந்து மணஞ்செய்து மனைவியுடன் இல்லறம் நிகழ்த்துக என்னும் குறிப்பிற்று. மதுரை வறிதாக என்றதனால் அவனது செல்வ மிகுதி குறிக்கப்பட்டது.

### [23.21](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23.21)

சிறைசெய் காதை  
  
125  
  
மற்றவ னிவ்வூர் வந்தமை கேட்டுப் பொற்றொடி விசாகையும் மனைப்புறம் போந்து. நல்லாள் நாணாள் பல்லோர் நாப்பண் அல்லவை கடிந்த அவன்பாற் சென்று  
  
122  
  
உரை  
  
126  
  
இருநில வேந்தே - புலியை ஆளும் அரசே, மற்றவன் இவ்வூர் வந்தமை கேட்டு தருமதத்தன் இப்பகுதிக்கு வந்தது கேட்டு, பொற்றொடி விசாகையும் மனைப்புறம் போந்து நல்லாள் நாணாள்- பொன்வளையுடைய விசாகையாகிய நல்லாளும் நாணாது மனையின் புறத்தே வந்து, பல்லோர் நாப்பண் அல்லவை கடிந்த அவன்பாற் சென்று - பலர் நடுவே தீயனவற்றை நீங்கிய அவ்வணிகனிடம் சென்று ;  
  
இருநில வேந்து - சோழ மன்னன்: மாதவர் இங்ஙனம் விளித துரைக்கின்றனர். அவன் பலர் சூழ இருந்தமையின் பல்லோர் நாப்பண் அவன்பாற் சென்று என்றார். அல்லவை - பொய் முதலிய தீமைகள்.

### [23.22](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23.22)

சிறைசெய் காதை  
  
130  
  
நம்முணா மறிந்திலம் நம்மை முன்னாள் மம்மர் செய்த வனப்பியாங் கொளித்தன ஆறைந் திரட்டி யாண்டுனக் காயதென் நாறைங் கூந்தலும் நரைவிரா வுற்றன இளமையுங் காமமும் யாங்கொளித் தனவோ உளனில் லாள எனக்கீங் குரையாய் இப்பிறப் பாயின்யான் நின்னடி யடையேன் அப்பிறப் பியான்நின் னடித்தொழில் கேட்குவன்  
  
127  
  
உரை  
  
134  
  
நம்முள் நாம் அறிந்திலம்-நாம் நம்முள் ஒருவரை யொரு வர் அறிகின்றிலம், நம்மை முன்னாள் மம்மர் செய்த வனப்பு யாங்கு ஒளித்தன - முன்னாளில் நம்மை மருளச்செய்த இருவே முடைய அழகும் எங்கே மறைந்தன, ஆறைந்து இரட்டி ஆண்டு ஆயது-உனக்கு அறுபது யாண்டாயிற்று, என் நாறுஐங் கூந்தலும் நரை விராவுற்றன-நாறுகின்ற என் ஐம்பாலாகிய கூந்தலும் நரை விரவுதலுற்றன, இளமையும் காமமும் யாங்கொளித்தனவோ - இளமைப்பருவமும் அப்பருவத்தில் உண்டாம் வேட்கையும் இப் பொழுது எங்கு ஒளித்தனவோ, உளனில்லாள எனக்கு ஈங்கு உரையாய் - மனத்திட்பம் இல்லாதோய் எனக்கு இப்பொழுது கூறுவாயாக, இப்பிறப்பாயின் யான் நின் அடி அடையேன் - இப் பிறப்பிலே யான் நின் அடிகளை அடைவேனல்லேன், அப்பிறப்பு யான் நின் அடித்தொழில் கேட்குவன் - மறுப்பிறப்பில் யான் நின் குற்றேவல் கேட்கப் பெறுவேன் ;  
  
பல்யாண்டின் முன் இருந்த தம் வடிவு பெரிதும் மாறி ஒருவரை யொருவர் கண்டுகொள்ளுதற் கரிதாயினமையின் 'நம்முள் நாம் அறிந் திலம்' என்றாள். கூந்தலும்: உம்மை எச்சப் பொருட்டு. கூந்தலின் ஐவகையுங் கருதி விராவுற்றன வெனப் பன்மை கூறினார். மேல் பத்தினியில்லோர் பல அறஞ் செய்யினும் புத்தேளுலகம் புகார் ஆகலின் விரைவில் நின்னக ரடைகவென அந்தணன் கூறியது கேட்டுப் போந் தான் என்றலின், தருமதத்தன் விசாகையை மணம்புரியும் கருத்துடன் வந்தானாவன் ; அறுபது யாண்டாகித் தலைநரைத்த பின்னும் மனம் நெகிழ்ந்து மணத்தை விரும்பினமையில் விசாகை அவனை 'உளனில் லாள' என விளிப்பாளாயினள். உளன்-ஊக்கம்; மனவுறுதி. ஆயின் : உரைநடை. கற்புடை மனைவி கணவனை வழிபடுமியல்பினளாகலின். நினக்கு மனையாகேன், மனைவியாகுவேன் என்பாள் முறையே நின் அடி யடையேன், அடித்தொழில் கேட்குவன் என்றாள் என்க.

### [23.23](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23.23)

சிறைசெய் காதை  
  
135 140  
  
இளமையும் நில்லா யாக்கையும் நில்லா வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா புத்தே ளுலகம் புதல்வருந் தாரார் மிக்க அறமே விழுத்துனை யாவது தானஞ் செய்யெனத் தரும தத்தனும் மாமன் மகள்பால் வான்பொருள் காட்டி ஆங்கவ னவளுடன் செய்த நல்லறம் ஓங்கிரு வானத்து மீனினும் பலவால்  
  
135  
  
உரை  
  
142  
  
இளமையும் நில்லா யாக்கையும் நில்லா - இளமையும் நிலை பெறாது உடம்பும் நிலைபெறாது, வளவிய வான் பெருஞ் செல்வ மும் நில்லா-வளமுடைய சிறந்த பொருளும் நிலைபெறாது, புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்-உம்பருலகத்தைப் புதல்வராலும் பெற வியலாது, மிக்க அறமே விழுத்துணையாவது - எவற்றினும் மேம் பட்ட அறமேசிறந்த துணையாகுவது, தானம் செய் என-ஆதலின் அறம்புரிவாய் என்று கூற, தருமதத்தனும் மாமன்மகள்பால் வான் பொருள்காட்டி - தருமதத்தன் விசாகையிடம் தனது சிறந்த நிதி களைக் காட்டி, ஆங்கவன் அவளுடன் செய்த நல்லறம்-அவன் அவ ளுடன் சேர்ந்து செய்த நல்லறங்கள், ஓங்கிரு வானத்து மீனினும் பலவால்-மிகப்பெரிய விசும்பின்கணுள்ள மீனினும் பலவாகும் ;  
  
நில்லாது எனபன, ஈறு தொக்கன. 'யாக்கையு நிலையா' எனபதும பாடம். புதல்வருந்த தாரார் என்னும் உம்மை பத்தினியுந் தாராள் என்பதுபடநிற்றலின் எச்சவும்மை; இதுவும், மிக்க அறமே விழுத் துணையாவது என்பது "பத்தினி யில்லோர் பலவறஞ் செய்யினும், புத்தே ளுலகம் புகா அர்" என்பதற்கு மறுப்பாகும். தருமதத்தனாகிய அவனும் என்க.

### [23.24](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23.24)

சிறைசெய் காதை  
  
145 150  
  
குமரி மூத்தஅக் கொடுங்குழை நல்லாள் அமர னருளால் அகனக ரிடூஉம் படுபழி நீங்கிப் பல்லோர் நாப்பண் கொடிமிடை வீதியில் வருவோள் குழல்மேல் மருதி பொருட்டான் மடிந்தோன் தம்முன் கருகிய நெஞ்சினன் காமங் காழ்கொளச் சுரியிரும் பித்தை சூழ்ந்துபுறந் தாழ்ந்த விரிபூ மாலை விரும்பினன் வாங்கித் தொல்லோர் கூறிய மணமீ தாமென எல்லவிழ் தாரோன் இடுவான் வேண்டி மாலை வாங்க ஏறிய செங்கை நீலக் குஞ்சி நீங்கா தாகலின்  
  
143  
  
உரை  
  
154  
  
குமரிமூத்த அக்கொடுங்குழை நல்லாள்-மணமின்றிக் கன்னியாகவே மூப்புற்ற அவ்விசாகையானவள், அமரன் அருளால் அகல்நகர் இடூஉம் படுபழிநீங்கி-உலக அறவியிற் கந்திற்பாவையிலுள்ள துவதிகனென்னும் தேவன் அருளினாலே ஊரிலுள்ளோர் கூறிய அலரினின்றும் நீங்கி, பல்லோர்நாப்பண்-பலர் நடுவண், கொடிமிடை வீதியில் வருவோள் குழல்மேல்-கொடிகள் செறிந்த வீதியின் வருகின்றவள் கூந்தல்மேல், மருதி பொருட்டால் மடிந்தோன்தம்முன் - முன்னர் மருதியின்பொருட்டு இறந் தோனின் முன்னவனாகிய ஒருவன், கருகிய நெஞ்சினன் காமம் காழ்கொள-காமம் வயிரங்கொள்ள இருண்ட உள்ளமுடையவனாய், சுரியிரும்பித்தை சூழ்ந்து புறந்தாழ்ந்த-தனது சுரிந்த கரிய குடுமியைச் சுற்றிப் புறத்தே தாழ்ந்த, விரி பூ மாலை விரும்பினன் வாங்கி-விரிந்த மலர்மாலையை விருப்பத்துடன் எடுத்து, தொல்லோர் கூறிய மணம் ஈது ஆமென - இது பண்டையோர் உரைத்த மணம் ஆகும் என்று, எல் அவிழ் தாரோன் - விளக்க மிக்க மாலையை யணிந்த அவன், இடுவான் வேண்டி - அவட்கு இட விரும்பி, மாலை வாங்க - மாலையை எடுத்தற்குக் கையினைத் தலையி லேற்ற, ஏறிய செங்கை நீலக்குறிஞ்சி நீங்காது ஆகலின்-அங்ஙனம் ஏறிய கையானது கருநிறம் வாய்ந்த குடுமியினின்றும் நீங்கவில்லை யாகலின் ;  
  
குமரிமூத்தல்-மணமின்றித் தமியளாய் மூத்தல். படுபழி-மைத்துனன் முறையால் யாழோர் மணவினைக்கு ஒத்தனளென்று ஊர் கூறிய பொய்ப்பழி. விசாகையின் வரலாற்றைக் கூறிமுடித்தவர் முன்புதெய் வத்தினருளாற் பழிநீங்கி அவள் வீதியில் வருங்கால் நிகழ்ந்ததனைஈண் டெடுத்துக் கூறுகின்றனரென்க. மடிந்தோன் - ககந்தன் சிறுவன். மாலையை விரும்பினன் வாங்கி இடுவான் வேண்டி யென்க. மாலை வாங்க - மாலையை எடுத்தற்குக் கையினை ஏற்ற என வருவித்துரைக்க.

### [23.25](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23.25)

சிறைசெய் காதை  
  
155  
  
ஏறிய செங்கை யிழிந்தில திந்தக் காரிகை பொருட்டெனக் ககந்தன் கேட்டு கடுஞ்சினந் திருகி மகன்றுயர் நோக்கான் மைந்தன் றன்னை வாளா லெறிந்தனன்  
  
155  
  
உரை  
  
158  
  
ஏறிய செங்கை இழிந்திலது இந்தக் காரிகை பொருட்டு எனக் ககந்தன் கேட்டு-விசாகைக்குச் சூட்டுதற் பொருட்டு மாலை வாங்குவதற்கு ஏறிய கை மீட்டும் இறங்கவில்லை என்பதைக் ககந்தன் கேள்வியுற்று, கடுஞ்சினம் திருகி - கடிய சினம் மிக்கு, மகன் துயர் நோக்கான் மைந்தன் தன்னை வாளால் எறிந்தனன் - மகன் இறக்கும் துன்பத்தை நோக்காதவனாய் அவனை வாளால் வெட்டினான் ; நோக்கான் : நோக்கல் நோக்கம்.

### [23.26](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23.26)

சிறைசெய் காதை  
  
160 165  
  
ஊழிதோ றூழி யுலகங் காத்து வாழி யெங்கோ மன்னவ என்று மாதவர் தம்முளோர் மாதவன் கூறலும் வீயா விழுச்சீர் வேந்தன் கேட்டனன் இன்றே யல்ல என்றெடுத் துரைத்து நன்றறி மாதவிர் நலம்பல காட்டினிர் இன்று முளதோ இவ்வினை யுரைமென  
  
159  
  
உரை  
  
165  
  
ஊழிதோ றூழி உலகம் காத்து வாழி எங்கோ மன்னவ என்று-எம்மரசர் பெருமானே நீ ஊழியூழிதோறும் உலகங்காத்து வாழ்வாயாகவென்று, மாதவர் தம்முள் ஓர் மாதவன் கூறலும் - அவணிருந்த அருந்தவர்களுள் ஒருவன் உரைத்தலும், வீயா விழுச் சீர் வேந்தன் கேட்டனன் - மாறாக பெருஞ்சிறப்புடைய மன்னவன் அவற்றைக் கேட்டிருந்து, இன்றே அல்ல என்று எடுத்துரைத்து-இன்று மட்டுமல்ல என எடுத்துக்கூறி, நன்றறி மாதவிர் நலம்பல காட்டினிர் - உறுதியை உணர்ந்த மாதவத்தீர் பல நன் னெறியைக் காட்டினீர் - இன்றும் உளதோ இவ்வினை உரைம் என- இந்நாளிலும் இத்தகைய தீவினை உண்டு கொல்லோ உரைத்தருளும் என ;  
  
"இன்றே யல்ல" என்று தொடங்கியதனை இக்காதையின் 19-ஆம் அடியிற் காண்க. உரைம்என-உரையுமென் றுரைக்க.

### [23.27](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23.27)

சிறைசெய் காதை  
  
வென்றி நெடுவேல் வேந்தன் கேட்பத்  
தீதின் றாக செங்கோல் வேந்தென  
மாதவர் தம்முளோர் மாதவ னுரைக்கும்  
  
166  
  
உரை  
  
168  
  
வென்றி நெடுவேல் வேந்தன் கேட்ப-வெற்றி பொருந்திய பெரிய வேற்படையையுடைய மன்னவன் கேட்குமாறு, தீ தின்றாக செங்கோல் வேந்து என-அரசே நின் செங்கோல் தீ தின்றியிருக்க என்று கூறி, மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைக்கும்-அம்முனி வர்களுள் ஒருவன் உரைப்பான் ;

### [23.28](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23.28)

சிறைசெய் காதை  
  
170 175  
  
முடிபொரு ளுணர்ந்தோர் முதுநீ ருலகில் கடியப் பட்டன வைந்துள அவற்றில் கள்ளும் பொய்யுங் களவுங் கொலையும் தள்ளா தாகுங் காமம் தம்பால் ஆங்கது கடிந்தோ ரல்லவை கடிந்தோரென நீங்கின ரன்றே நிறைதவ மாக்கள் நீங்கா ரன்றே நீணில வேந்தே தாங்கா நரகந் தன்னிடை யுழப்போர்  
  
169  
  
உரை  
  
176  
  
முடிபொருள் உணர்ந்தோர் முதுநீர் கடியப்பட் டன ஐந்து உள - தத்துவத்தை யுணர்ந்த பெரியோரால் கடல் சூழ்ந்த உலகில் விலக்கப்பட்டன ஐந்து உள்ளன, அவற்றில் - அவற்றுள்ளே, கள்ளும் பொய்யும் களவும் கொலையும் தள்ளா தாகும் காமம்-கள் பொய் களவு கொலை ஆகிய நான்கு குற்றங்களையும் காமம் நீக்காதாகும், தம்பால் ஆங்கது கடிந்தோர் அல்லவை கடிந்தோர் என-ஆகலின் தம்மிடத்து அக்காமத்தை நீக்கினோர் ஏனைய குற்றங்களையும் நீக்கினோராவர் என்று, நீங்கினர் அன்றே நிறைதவமாக்கள்-காமத்தை ஒழிந்தோரே நிறைந்த தவமுடையவர்கள், நீங்கார் அன்றே நீள்நில வேந்தே தாங்கா நரகம் தன்னிடை உழப்போர்-புவியினை ஆளும் அரசே அத்தகையகாமத்தினின்றும் நீங்காதோரே பொறுக்கவொண்ணாத நிரயத்தின்கண் வருந்துவோராவர் ;  
  
முடிபொருள்-வேதாகமங்களால் அறுதியிடப்பட்ட பொருள் : பர தத்துவம். "அவற்றில்...தள்ளாதாகும் காமம்" என்றதனால் கடியப் பட்ட ஐந்தாவன : கள், பொய், களவு, கொலை, காமம் என்பனவாதல் போதரும் கள் முதலிய நான்கினையும் காமம் தள்ளாது எனவே காம முடையோர் ஏனைய நான்கு குற்றங்களையும் உடையராவ ரென்ப தாயிற்று.

### [23.29](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23.29)

Try error :java.lang.NullPointerException

### [23.30](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23.30)

சிறைசெய் காதை  
  
185  
  
ஆங்கவ ளவ்வியல் பினளே யாயினும் நீங்கா னவளை நிழல்போல் யாங்கணும் காரிகை பொருட்டாள் காமங் காழ்கொள ஆரிரு ளஞ்சான் அம்பல மடைந்தனன் காயசண் டிகைவடி வாயினள் காரிகை காயசண் டிகையும் ஆங்குள ளாதலின்  
  
184  
  
உரை  
  
189  
  
ஆங்கவள் அவ்வியல்பினளே ஆயினும் - மணிமேகலை அவ் வியல்பினை உடையவளாயினும், நீங்கான் அவளை நிழல்போல் யாங்கணும் - அவளை எவ்விடத்தும் நிழல்போல நீங்காதவனாய், காரிகை பொருட்டால் காமம் காழ்கொள - அவள் பொருட்டுக் காமம் முற்றி, ஆரிருள் அஞ்சான் அம்பலம் அடைந்தனன் - அரிய இருளிலே அஞ்சானாய் அம்பலத்தை அடைந்தனன், காயசண்டிகை வடிவாயினள் காரிகை-மணிமேகலை காயசண்டிகை என்னும் விஞ்சைமாதின் வடிவமெய்தினள், காயசண்டிகையும் ஆங்குளள் ஆதலின் - காயசண்டிகை என்பாள் முன்னர் ஆங்கு இருந்தன ளாதலால் ;  
  
அரசனுக்குக் கடிதின் வெகுளியுண்டாகாமைப் பொருட்டு அடைந் தவன் உதயகுமரன் என்பதனை மாதவன் முதற்கண் வெளிப்படைக் கூறிற்றிலனென்க. காயசண்டிகை பசிநீங்கி வானிலே செல்வுழி விந்த மலையின் மேற்சென்று விந்தாகடிகையின் வயிற்றில் அடங்கினள் என (20: 114-21) மேல் உரைத்தமையின், ஈண்டு "ஆங்குளளாதலின் கணவனாகிய விஞ்சைய னொருவன்தோன்றி' எனக் கூட்டியுரைத் தலுமாம்.

### [23.31](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23.31)

சிறைசெய் காதை  
  
190  
  
காயசண் டிகைதன் கணவ மாகிய வாய்வாள் விஞ்சைய னொருவன் தோன்றி ஈங்கிவள் பொருட்டால் வந்தன னிவனென ஆங்கவன் தீவினை யுருத்த தாகலின்  
  
190  
  
உரை  
  
193  
  
காயசண்டிகையின் கணவனாகிய வாய்வாள் விஞ்சையன் ஒருவன் தோன்றி - காயசண்டிகையின் கொழுநனாகிய தப்பாத வாளினையுடைய விஞ்சையன் ஒருவன் தோன்றி, ஈங்கிவள் பொருட்டால் வந்தனன் இவன் என! ஆங்கவன் தீவினை உருத்தது ஆகலின் - காயசண்டிகை பொருட்டு இவன் ஈண்டு வந்தனன் என்று கருத அவனது தீவினையானது சினந்து பற்றியதாதலால்; 'என' என்பதனை, என்று கருத என விரித்துத் தோன்றி என்பதற்கு முடிபாக்குக. ஆங்கவன் தீவினை - உதயகுமரனது தீவினை; காஞ்சனனது தீவினையுமாம்.

### [23.32](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23.32)

சிறைசெய் காதை  
  
195 200  
  
மதிமருள் வெண்குடை மன்ன நின்மகன் உதய குமரன் ஒழியா னாக ஆங்கவள் தன்னை யம்பலத் தேற்றி ஓங்கிருள் யாமத் திவனையாங் குய்த்துக் காயசண் டிகைதன் கணவ னாகிய வாய்வாள் விஞ்சையன் தன்னையுங் கூஉய் விஞ்சை மகள்பால் இவன்வந் தனனென வஞ்ச விஞ்சையன் மனத்தையும் கலக்கி ஆங்கவன் தன்கை வாளா லம்பலத் தீங்கிவன் றன்னை யெறிந்ததென் றேத்தி மாதவர் தம்முளோர் மாதவ னுரைத்தலும  
  
194  
  
உரை  
  
204  
  
மதிமருள் வெண்குடை மன்ன-திங்கள்போலும் வெண் குடையினையுடைய வேந்தே, நின்மகன் உதயகுமரன் ஒழியானாக - நின் புதல்வனாகிய உதயகுமரன் நீங்காதிருக்க, ஆங்கவன் தன்னை அம்பலத்து ஏற்றி-காயசண்டிகை யுருங்கொண்ட மணிமேகலையை அம்பலத்தில் ஏற்றுவித்து, ஓங்கிருள் யாமத்து இவனை ஆங்கு உய்த்து - மிகுந்த இருளையுடைய இடையாமத்தில் இவனை அவ்விடத்திற் செலுத்தி, காயசண்டிகையின் கணவன் ஆகிய வாய் வாள் விஞ்சையன் தன்னையும் கூஉய் - காயசண்டிகையின் கணவனாகிய கூரிய வாட்படையுடைய காஞ்சனனையும் அழைத்து, விஞ்சை மகள்பால் இவன் வந்தனன் என வஞ்ச விஞ்சையன் மனத்தையும் கலக்கி - அவன் மனைவியாகிய விஞ்சைமகளிடம் இவன் வந்தனன் என்று வஞ்சமுள்ள விஞ்சையனது உள்ளத்தை யும்மயக்கி, ஆங்கவன்தன் கை வாளால் அம்பலத்து ஈங்கிவன் தன்னை எறிந்தது என்று - அவனது கைவாளினால் உலகவறவியில் இவனை வெட்டி வீழ்த்தியது என்று, ஏத்தி மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைத்தலும்-மாதவருள் ஒருவன் அரசனை வாழ்த்தி உரைத்தவளவில்;  
  
ஒழியானாக-அம்பலத்தை விட்டு நீங்காதிருக்க. அத்தீவினை ஏற்றி, உய்த்து, கூஉய், கலக்கி, எறிந்தது என எழுவாய் வருவித்து முடிக்க. இந் நிகழ்ச்சிக்கு காரணம் பழவினையே யன்றி, காஞ்சனன், மணிமேகலை, உதயகுமரன் என்பவருள் ஒருவரும் அல்லர் என்றபடியாயிற்று.

### [23.33](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23.33)

சிறைசெய் காதை  
  
205 210 215  
  
சோழிக ஏனாதி தன்முகம் நோக்கி யான்செயற் பால திளங்கோன் தன்னைத் தான்செய் ததனால் தகவிலன் விஞ்சையன் மாதவர் நோன்பும் மடவார் கற்பும் காவலன் காவல் இன்றெனின் இன்றால் மகனை முறைசெய்த மன்னவன் வழியோர் துயர்வினை யாளன் தோன்றினன் என்பது வேந்தர் தஞ்செவி யுறுவதன் முன்னம் ஈங்கிவன் தன்னையும் ஈமத் தேற்றிக் கணிகை மகளையுங் காவல்செய் கென்றனன் அணிகிளர் நெடுமுடி யரசாள் வேந்தென்.  
  
205  
  
உரை  
  
215  
  
சோழிக எனாதி தன்முகம் நோக்கி - சோழிக ஏனாதியின் முகத்தை நோக்கி, யான் செயற்பாலது இளங்கோன்தன்னைத் தான் செய்ததனால் தகவிலன் விஞ்சையன்-இளங்கோலை யான் செயற்பாலதனை விஞ்சையன் தான்செய்ததனால் தகுதியிலாதவனா யினான், மாதவர் நோன்பும் மடவார் கற்பும் காவலன் காவல் இன்றெனில் இன்றால்-அரசனது காவல் இல்லையானால் தாபதர்களின் தவமும் மகளிர் கற்பும் இல்லையாகும், மகனை முறைசெய்த மன்னவன் வழி ஓர் துயர் வினையாளன் தோன்றினன் என்பது-கன்றையிழந்த பசுவின் துயரினைப் பொறாமல் தன் மகனைத் தேர்க்காலிற் கிடத்தி முறைபுரிந்த மனு வேந்தனின் மரபில் ஒரு தீவினையாளன் தோன்றினன் என்னும் சொல், வேந்தர்தம் செவி உறுவதன் முன்னம்-ஏனைய அரசர்கள் காதில் புகுவதன்முன், ஈங்கிவன் தன்னையும் ஈமத்து ஏற்றி-இவனை ஈமத்தில் ஏற்றி, கணிகை மகளையும் காவல்செய்க என்றனன் அணிகிளர் நெடுமுடி அரசன் வேந்து என்-கணிகையின் மகளாகிய மணிமேகலையையும் சிறை செய்க என்றுரைத்தனன் அழகு விளங்குகின்ற பெரிய முடியினையுடைய அரசாளும் மன்னன் என்க.  
  
சோழிக எனாதி என்பதற்குச் சோழனுடைய ஏனாதிப் பட்டம் பெற்ற சேனைத்தலைவன் என்பது பொருளாகும். ஏனாதி - தானைத் தலைவர்க்கு அரசர் அளிக்கும் பட்டப்பெயர் என்பதும், அதனுடன் மோதிரம் ஒன்றும் அளிக்கப்படும் என்பதும் தொல்காப்பியத்தில் ¹"மாராயம் பெற்ற நெடுமொழியானும்" என்பதற்கும், சீவகசிந்தாமணியில் ² "ஆழி தொட்டான்" என்பதற்கும் நச்சினார்க்கினியர் எழுதிய உரையால் அறியப்படும். ஒரே வழி அமைச்சராயினார் தானைத் தலைமை பூண்டு படையை நடத்துவரேல் அச்சார்பு பற்றி அவர்க்கும் இப்பட்டப்பெயர் பொருந்துமென்க. விஞ்சையன், மைந்தன், மணிமேகலை என்னும் மூவரிடத்தும் குற்றமில்லையாக மாதவன் தீவினை மேல் ஏற்றி உரைத்திருப்பினும் அரசனுக்கு ஒவ்வோரியல்பு பற்றி அம் மூவர் பாலுமே வெறுப்புளதாயிற்றென்பது "தகவிலன் விஞ்சையன்," "துயர்வினை யாளன் றோன்றினன்", "கணிகை மகளையும் காவல் செய்க," என்னும் அவன் கூற்றால் அறியப்படும். விஞ்சையன் செய்கையால் தான் முறைசெய்தற்கு இடனில்லாமற் போனமையின் "தகவிலன் விஞ்சையன்" என்றானென்க.  
  
காவலின்றெனின், நோன்புமின்று கற்புனின்று எனத் தனித்தனி முடிக்க. மனு வேந்தன் மகனை முறை செய்த வரலாறு பெரியபுரா ணத்திலுள்ள திருவாரூர்ச் சிறப்பால் அறியப்படும். இதனை ³ "மேலைக் கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையு மூர்ந்தான், முறைமைக்கு மூப்பிளமை யில்" ⁴"வாயிற் கடைமணி நடுநா நடுங்க; ஆவின் கடைமணி யுகுநீர் நெஞ்சுசுடத் தான்றன், அரும்பெறற் புதல்வனை யாழியின் மடித்தோன், பெரும்பெயர்ப் புகாரென் பதியே" ⁵"சிந்தனை யாவிற்குமுற்றத் திருத்தேரின், மைந்தனை யூர்த்த மனுவோனும்" என்பவற்றானு மறிக: துயர்வினை துயருக்கு ஏதுவாகிய வினை; தீவினை.  
  
மண்டிலம் சீப்புப் புரிந்தோர் உரைப்பக் கேட்டு, மாதவரெல்லாம் மணிமேகலையை நோக்கி, 'இதனை நீ அறிவதுமுண்டோ' என, அவள் உரைத்தலும், அவளைச் சிறுவனோடு வேறிடத் தொளித்து இசைத்துச் சென்று குறுகி ஒரு மாதவனுரைத்தலும், கேட்டு வேந்தன், 'உரையும்' என ஒரு மாதவன் உரைக்கும்; அங்ஙனம் உரைக்கும் மாதவன் ஏத்தி உரைத்தலும் வேந்து காவல் செய்கென்றனன் என, வினைமுடிவு செய்க.  
  
¹ தொல். புறத். 8. ² சீவக. 2167. ³ பழ. 242. ⁴ சிலப். 20: 53-9. ⁵ விக்கிரம சோழனுலா. 4

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.22.1) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23) · Pramāṇa
