<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.24.23 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 24.23

# Maṇimēkalai's Renunciation 24.23

Maṇimēkalai urai 24.23

- **Language:** Tamil

### [24.23](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.24.23)

சிறைவிடு காதை  
  
30  
  
35  
  
40 கற்ற கல்வி யன்றாற் காரிகை  
செற்றஞ் செறுத்தோர் முற்ற வுணர்ந்தோர்  
மல்லன்மா ஞாலத்து வாழ்வோ ரென்போர்  
அல்லன் மாக்கட் கில்லது நிரப்புநர்  
திருந்தே ரெல்வளை செல்லுல கறிந்தோர்  
வருந்தி வந்தோ ரரும்பசி களைந்தோர்  
துன்ப மறுக்குந் துணிபொரு ளுணர்ந்தோர்  
மன்பதைக் கெல்லா மன்பொழி யாரென  
ஞான நன்னீர் நன்கனந் தெளித்துத்  
தேனா ரோதி செவிமுதல் வார்த்து  
மகன்றுயர் நெருப்பா மனம்விற காக  
அகஞ்சுடு வெந்தீ யாயிழை யவிப்பத  
  
130  
  
உரை  
  
141  
  
கற்ற கல்வி அன்றால் காரிகை-காரிகையே கற்ற கல்வியே மெய்யுணர்வாகாது, செற்றம் செறுத்தோர் முற்ற உணர்ந்தோர் - அகத்தில் வெகுளி தோன்றாமல் அடக்கினோரே முழுவதும் உணர்ந்தோராவார், மல்லல் மா ஞாலத்து வாழ்வோர் என்போர் அல்லல் மாக்கட்க் இல்லது நிரப்புநர் - வறுமைத் துன்பமுடைய மக்களுக்கு வேண்டுவனவற்றை அளிப்போரே வளப்பமுடைய பெரிய பூமியின்கண் வாழ்வோர் எனப்படுவர், திருந்தேர் எல்வளை- திருந்திய அழகமைந்த ஒள்ளிய வளையினையுடையாய். செல்லுலகு அறிந்தோர் வருந்தி வந்தோர் அரும்பசி களைந்தோர் - பசியால் வருந்தி வந்தோரது தீர்த்தற்கரிய பசியை நீக்கினோரே செல்லுலகம் அறிந்தவராவர், துன்பம் அறுக்கும் துணி பொருள் உணர்ந்தோர் மன்பதைக்கு எல்லாம் அன்பு ஒழியார் என - உயிர்ப்பன்மைகட் கெல்லாம் அன்பு நீங்காதோரே துன்பத்தினை யறுக்கும் மெய்ப் பொருளை யறிந்தோராவர் என்று, ஞான நன்னீர் நன்கனம் தெளித்து - ஞானமாகிய நல்ல நீரை நன்றாகத் தெளித்து, தேனார் ஓதி செவி முதல் வார்த்து - வண்டுகள் ஒலிக்கின்ற கூந்தலையுடைய இராசமாதேவியின் செவியிடம் வார்த்து, மகன் துயர் நெருப்பா மனம் விறகாக அகம் சுடும் வெந்தீ ஆயிழை அவிப்ப - புதல்வ னிறந்த துன்பம் நெருப்பாக மனமே விறகாக உள்ளத்தைச் சுடுகின்ற கொடிய தீயை மணிமேகலை அவிக்க;  
  
செற்றஞ் செறுத்தல் முதலியன இல்வழிக் கற்றகல்வி பயனுடைத்தன்று என்றுமாம்; மேலுரைத்த துன்பந்தரும் காம முதலியவற்றைத் துறவாவழி, கல்வி பயனுடைத் தன்று என்றுரைத்தலுமாம். கல்வி காரிகையன்று எனக் கூட்டி, கல்வி அழகுடைத்தன்று என்றுரைப்பாரு முளர். செல்லுல கறிதலாவது மறுமையுலகம் உண்டென்பதையும் ஆண்டு இன்புறுதற்கு இவண் செய்யற்பாலது இது வென்பதனையும் அறிதல். துணிபொருள்-தத்துவ ஞானம். தெளிந்து - தெளிவித்து என்றுமாம்.

- [Previous: 24.22](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.24.22)
- [Next: 24.24](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.24.24)
- [Up: 24](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.24)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.23.136) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.24.23](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.24.23) · Pramāṇa
