<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.24.9 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 24.9

# Maṇimēkalai's Renunciation 24.9

Maṇimēkalai urai 24.9

- **Language:** Tamil

### [24.9](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.24.9)

சிறைவிடு காதை  
  
50  
  
55 ஆங்கவன் சென்றவ் வாயிழை யிருந்த  
பாங்கி லொருசிறைப் பாடுசென் றணைதலும்  
தேவி வஞ்ச மிதுவெனத் தெளிந்து  
நாவியன் மந்திரம் நடுங்கா தோதி  
ஆண்மைக் கோலத் தாயிழை யிருப்பக்  
காணம் பெற்றோன் கடுந்துய ரெய்தி  
அரச ருரிமையி லாடவ ரணுகார்  
நிரயக் கொடுமகள் நினைப்பற்றி யேனென்  
றகநகர் கைவிட்ட டாங்கவன் போயபின்  
  
49  
  
உரை  
  
57  
  
ஆங்கவன் சென்று அவ்வாயிழை இருந்த பாங்கில் ஒரு சிறைப் பாடு சென்று அணைதலும்-அறிவற்ற அவ்விளைஞன் மணிமேகலை இருந்த அழகிலாத ஒரு புறத்திலே பக்கலிற் சென்று அடைதலும், தேவி வஞ்சம் இது எனத் தெளிந்து - அரசன் மனைவியினுடைய வஞ்சமாகும் இது என்று உணர்ந்து, நா இயல் மந்திரம் நடுங்காது ஓதி - நாப் புடை பெயருமளவில் கூறும் மந்திரத்தைச் செவ்வனம் ஓதி, ஆண்மைக் கோலத்து ஆயிழை இருப்ப ' மணிமேகலை ஆடவன் வடிவத்துட னிருக்க, காணம் பெற்றோன் கடுந்துயர் எய்தி - பொன் பெற்ற கயவன் மிகுந்த துன்பத்தை யடைந்து, அரசர் உரிமை இல் ஆடவர் அணுகார் - அரசன் மனைவியரிருக்கும் அந்தப்புரத்தில் ஆண் மக்கள் குறுகார், நிரயக் கொடுமகள் நினைப்பு அறியேன் என்று-நிரயத்தை யடைதற்குரிய கொடுமையை உடைய இவளது தீய எண்ணத்தை யான் அறிந்திலேன் என்று கருதி, அகநகர் கைவிட்டு ஆங்கவன் போய பின் - அவன் ஊரைவிட்டு ஓடிய பின்னர் ;  
  
மந்திரம் - வேற்றுரு எய்துவிக்கும் மந்திரம் மந்திரம் பிறர் செவிக்குப் புலனாகாவாறு நாப்புடைபெயரும் அளவானே ஓதல் பெறல் வேண்டுமென்பது ¹"ஆறெழுத் தடக்கிய அருமறைக் கேள்வி, நாவியன் மருங்கின் நவிலப் பாடி" என்பதனாலும் அறியப்படும். ஆயிழை தெளிந்து ஓதி இருப்ப வென்க. உரிமைஇல்-உரிமை மகளிர் இருக்கும் இல்லம்; இஃது அந்தப்புரம் எனப்படும்; அதன்கண் ஆடவர் எய்தப் பெறார் என்பதனை ²"ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின்" என்பதனா னறிக ; மகளிராலேயே காக்கப்படுதலின் இதனைக் ³"குழை முகப் புரிசை" என்பர் திருத்தக்க தேவர்.  
  
¹ முருகு. 186-7. ² நெடுநல். 107. ³ சீவக. 275.

- [Previous: 24.8](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.24.8)
- [Next: 24.10](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.24.10)
- [Up: 24](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.24)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.23.51-56) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.24.9](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.24.9) · Pramāṇa
