<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.24 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 24

# Maṇimēkalai's Renunciation 24

Maṇimēkalai urai 24

- **Language:** Tamil

### [24.1](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.24.1)

சிறைவிடு காதை  
  
5  
  
10 மன்னவ னருளால் வாசந் தவையெனும்  
நன்னெடுங் கூந்தல் நரைமூ தாட்டி  
அரசற் காயினுங் குமரற் காயினும்  
திருநிலக் கிழமைத் தேவியர்க் காயினும்  
கட்டுரை விரித்துங் கற்றவை பகர்ந்தும்  
பட்டவை துடைக்கும் பயங்கெழு மொழியினள்  
இலங்கரி நெடுங்கண் இராசமா தேவி  
கலங்கஞ ரொழியக் கடிதுசென் றெய்தி  
¹அழுதடி வீழா தாயிழை தன்னைத்  
தொழுதுமுன் னின்று தோன்ற வாழ்த்திக்  
  
1  
  
உரை  
  
10  
  
மன்னவன் அருளால் வாசந்தவை எனும் நல் நெடுங்கூந்தல் நரை மூதாட்டி-அரசன் ஆணையால் அழகிய நீண்டகூந்தல்நரைத்த முதியோளாகிய வாசந்தவை என்பாள், அரசற்கு ஆயினும் குமரற்கு ஆயினும் திருநிலக் கிழமைத் தேவியர்க்கு ஆயினும் - அரசற்கும் அரச குமரற்கும் திருவனைய நிலவுரிமைத் தேவியர்க்கும், கட்டுரை விரித்துக் கற்றவை பகர்ந்தும் - பொருள் பொதிந்த சொற்களை விரித்துக் கூறியும் தாங்கற்றனவற்றை எடுத்துரைத்தும், பட்டவை துடைக்கும் பயங்கெழு மொழியினள் - அவர்கட்கு உண்டாகிய துன்பங்களை நீக்கும் பயன் சிறந்த மொழியினையுடையாள் ஆதலின், இலங்கு அரிநெடுங்கண் இராசமாதேவி-விளங்குகின்ற அரி படர்ந்த பெரிய கண்களையுடைய அரசன் பெருந்தேவி, கலங்கு அஞர் ஒழியக் கடிது சென்று எய்தி-கலங்குதற்குக் காரணமாகிய துன்பம் நீங்குமாறு விரைவிற் சென்று அவளிருப்பிடத்தையடைந்து, அழுது அடி வீழாது ஆயிழை தன்னைத் தொழுது முன்னின்று தோன்ற வாழ்த்தி-அவள் அடிகளில் வீழ்ந்து அழாமல் மன்னவன் றேவியை அஞ்சலி செய்து முன்னே நின்று நன்கு வாழ்த்தி ;  
  
மன்னவனருளாற் கடிது சென் றெய்தி என்க. மொழியினள் ஆகலின் என விரித்துரைக்க ; மொழியினளாகிய மூதாட்டி என்றியைத்தலுமாம். நிலக்கிழமை-அரசாளு முரிமை. ஆயினும் என்னும் இடைச்சொல் எண்ணுப் பொருளில் வந்தது ; விகற்பப் பொருட்டுமாம். ஆயிழை : சுட்டு.  
  
(பாடம்)¹அழுதனளடி வீழ்ந்து.

### [24.2](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.24.2)

சிறைவிடு காதை  
  
15 கொற்றங் கொண்டு குடிபுறங் ¹காத்தும்  
²செற்றத் தெவ்வர் தேஎந்தம தாக்கியும்  
தருப்பையிற் கிடத்தி வாளிற் போழ்ந்து  
செருப்புகன் மன்னர் செல்வழிச் செல்கென  
மூத்து விளிதலிக் குடிப்பிறந் தோர்க்கு  
நாப்புடை பெயராது நாணுத்தக வுடைத்தே  
  
11  
  
உரை  
  
16  
  
கொற்றம் கொண்டு குடி புறம் காத்தும்-வெற்றிகொண்டு குடிகளைப் பிறர் நலியாமற் பாதுகாத்தும். செற்றத்தெவ்வர் தேஎம் தமதாக்கியும் - பகைமையை யுடைய மாற்றாது நாட்டினைத் தம்முடையதாக்கியும் அன்றி, தருப்பையிற் கிடத்தி வாளிற் போழ்ந்து செருப்புகல் மன்னர் செல்வுழிச்செல்க என-தருப்பைப் புல்லிற் கிடத்தி வாளாற் பிளந்து போரில் வெற்றிகொண்டு உயிர் துறந்த மன்னர் செல்லும் உலகத்தின்கட் செல்க என்று கூறுமாறு, மூத்து விளிதல்-வாளா முதுமையுற்று இறத்தல், இக்குடிப் பிறந்தோர்க்கு நாப்புடை பெயராது நாணுத்தகவுடைத்தே - இச்சோழர் குடியிற் பிறந்தோர்க்கு நாணுந் தகுதியை யுடைத்து ஆகலான் இதனைக் கூறுதற்கு எனது நா எழுகின்றிலது ;  
  
பெற்ற சேனைத்தலைவன் என்பது பொருளாகும். ஏனாதி - தானைத கொற்றம் - அரச வுரிமையுமாம். செற்ற தெவ்வர் என்பது பாடமாயின் வெகுண்டெழுந்த பகைவர் என்க. தமதாக்கியும் அன்றி என ஒரு சொல் வருவித்துரைக்க ; தமதாக்கியும் மூத்து விளிதல் என்றியைத் துரைப்பாரு முளர். மூத்து விளிதலோடு பிணியால் விளிதலுங் கொள்க. போரிலுயிர் துறவாது நோயால் விளிந்த அரசரது யாக்கையை அந்தணர் தருப்பையிற் கிடத்தி வாளாற் பிளந்து அடக்குவரென்பது, ³"ஓடன் மரீஇய பீடின் மன்னர், நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக், காதன் மறந்தவர் தீதுமருங் கறுமார், அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்; திறம்புரி பசும்புற் பரப்பினர் கிடப்பி, மறங்கந் தாக நல்லமர் வீழ்ந்த, நீள்கழல் மறவர் செல்வுழிச்செல்கென, வாள்போழ்ந் தடக்கலு முய்ந்தனர்" என்பதனால் அறியப்படும்: ⁴"மூப்பினும் பிணியினும் இறவாது அமர்க்களத்து வீழ்ந்தாரே துறக்கம்  
பெறுவர்..." என்னும் நச்சினார்கினியர் உரையும் ஈண்டு அறியற்பாற்று. மேல், 'தன்மண் காத்தன்று, பிறர்மண் கொண்டன்று' என வருதற் கேற்ப, 'குடிபுறங்காத்தும்' எனப் பாடம் கொண்டாம்.  
  
¹ காத்துச் ² செற்ற தெவ்வர். ³ புறம். 93. ⁴ தொல். அகத். 44. உரை.  
  
\`

### [24.3](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.24.3)

சிறைவிடு காதை  
  
20  
  
தன்மண் காத்தன்று பிறர்மண் கொண்டன்று  
என்னெனப் படுமோ நின்மகன் மடிந்தது  
மன்பதை காக்கு மன்னவன் றன்முன்  
துன்பங் கொள்ளே லென்றவள் போயபின்  
  
17  
  
உரை  
  
20  
  
தன் மண்காத்தன்று பிறர் மண்கொண்டன்று என்னெனப் படுமோ நின்மகன் மடிந்தது-நின் புதல்வ னிறந்தது தன் நிலத்தைக் காத்தமையாலன்று பகைவர் நிலத்தைக் கொண்டமையாலுமன்று காமத்தால் நிகழ்ந்த அவ்விறப்பு யாதென்று கூறப்படும், மன்பதை காக்கும் மன்னவன் தன் முன் துன்பங் கொள்ளேல் என்று அவள் போயபின் - உயிர்ப் பன்மைகளைக் காக்கின்ற அரசன் முன்னர்த் துன்பம் கொள்ளாதே என வுரைத்து வாசந்தவை சென்றபின்னர் ;  
  
காமத்தால் என்பது வருவித்துரைக்கப்பட்டது. எனனெனப்படும --எத்தகையதென்று கூறப்படும்; இக்குடிப் பிறந்தோர்க்கு ஏலாத இழிவுடைய தென்றபடி. அவள் துன்புறுதல் அரசற்கு வருத்தத்தைச் செய்யுமாகலின் 'மன்பதை காக்கு மன்னவன்றன்முன், துன்பங் கொள்ளேல்' என்றாள்.

### [24.4](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.24.4)

சிறைவிடு காதை  
  
25  
  
30 கையாற் றுள்ளங் கரந்தகத் தடக்கிப்  
பொய்யாற் றொழுக்கங் கொண்டுபுற மறைத்து  
வஞ்சஞ் செய்குவன் மணிமே கலையையென்  
றஞ்சி லோதி யரசனுக் கொருநாள்  
பிறர்பின் செல்லாப் பிக்குணிக் கோலத்  
தறிவு திரிந்தோ னரசியல் தானிலன்  
கரும்புடைத் தடக்கைக் காமன் கையற  
அரும்பெற லிளமை பெரும்பிறி தாக்கும்  
அறிவு தலைப்பட்ட ஆயிழை தனக்குச்  
சிறைதக் கன்று செங்கோல் வேந்தெனச்  
  
21  
  
உரை  
  
30  
  
கையாற்று உள்ளம் கரந்து அகத்து அடக்கி-செயலறவினையுடைய உள்ளத்தை மறைத்து அடக்கி, பொய்யாற்று ஒழுக்கம் கொண்டு புறமறைத்து - பொய்ந்நெறிக்கண் ஒழுகுதலைக்கொண்டு அதனைப் புறத்தே தோன்றாமல் மறைத்து, வஞ்சம் செய்குவன் மணிமேகலையை என்று-மணிமேகலையை வஞ்சித்து வருத்துவேன் என்று கருதி, அஞ்சில் ஓதி - அழகிய சிலவாகிய கூந்தலையுடைய பெருந்தேவி, அரசனுக்கு ஒரு நாள் - ஒரு நாள், அரசன் பால், பிறர் பின் செல்லாப் பிக்குணிக்கோலத்து-மற்றையோர் பின்னே செல்லாத பிக்குணி வடிவத்தைக் கண்டு, அறிவு திரிந்தோன் அரசியல் தானிலன் - அறிவு வேறுபட்ட உதயகுமரன் அரசாளும் தகுதியில்லாதவன், கரும்புடைத் தடக்கைக் காமன் கையற - கரும்பு வில்லையுடைய பெரிய கையையுடைய காமன் செயலறுமாறு, அரும் பெறல் இளமை பெரும் பிறிதாக்கும்-பெறுதற் கரிய இளமைப் பருவத்தைப் பயன்படாது கெடச் செய்த, அறிவு தலைப்பட்ட ஆயிழை தனக்கு - நல்லறிவு நேர்பட்ட மணிமேகலைக்கு, சிறை தக்கன்று செங்கோல் வேந்து என - செங்கோல் வேந்தே சிறை தக்கதன்று என மொழிய ;  
  
கையாற்றுள்ளம் - புதல்வ னிறந்த துயருடன் கூடிய உள்ளம் .தனது தீய எண்ணம் புறந்தோன்றாம் மறைத்தென்க. பிறர் பின் செல்லா-ஆடவர் விரும்பிப் பின் செல்லலாகாத, இவளால் முனிவருள்ளிட்ட பகையை வெல்லக் கருதியிருந்தானாகலின் காமன் கையறுவானென்க; ¹"உருவிலான னொருபெருஞ் சிலையொடு, விரைமலர் வாளி வெறு நிலத் தெறிய...; அறம்படுத்தனள்" என்பதுங் காண்க. பெரும் பிறிதாக்கல் - கெடுத்தல். தக்கதன்று என்பது விகாரப்பட்டது. வேந்து : அண்மை விளி. என - என்று சொல்ல ; அஞ்சிலோதி ஒரு நாள் அரசனுக்குச் சொல்ல வென்க.  
  
¹ சிலப். 30: 25-8

### [24.5](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.24.5)

சிறைவிடு காதை  
  
சிறப்பின் பாலார் மக்க ளல்லார்  
மறப்பின் பாலார் மன்னர்க் கென்பது  
அறிந்தனை யாயினிவ் வாயிழை தன்னைச்  
செறிந்த சிறைநோய் தீர்க்கென் றிறைசொல  
  
31  
  
உரை  
  
34  
  
சிறப்பின் பாலார் மக்கள் அல்லார் மறப்பின் பாலார் மன்னர்க்கு என்பது - அரசர்கட்கு அறிவொழுக்கம் முதலிய சிறப்பியல்புகளை யுடையவரே புதல்வர் ஆவர் அல்லாதார் மறத்தற்குரியர் என்பதனை, அறிந்தனை ஆயின்-உணர்ந்தனை யானால், இவ் ஆயிழை தன்னை - இந் நங்கையை, செறிந்த சிறை நோய் தீர்க்க என்று இறை சொல - நெருங்கிய சிறைத் ன்பத்தினின்றும் நீக்குவாயாக என்று அரசன் கூற ;  
  
மறப்பின் பாலார்-புதல்வரல்ல ரென மறக்கும் பகுதியின ரென்க. என்பது-என்னுமுண்மையை. நீயே அறிந்தனையாயின் தீர்க்கவென்று சொல்ல வென்க.

### [24.6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.24.6)

சிறைவிடு காதை  
  
35 என்னோ டிருப்பினு மிருக்கஇவ் விளங்கொடி  
தன்னோ டெடுப்பினுந் தகைக்குந ரில்லென்று  
அங்கவள் தனைக்கூஉய் அவள்தன் னோடு  
கொங்கவிழ் குழலாள் கோயிலுட் புக்காங்கு  
  
35  
  
உரை  
  
38  
  
என்னோடு இருப்பினும் இருக்க இவ்விளங்கொடி தன் ஓடு எடுப்பினும் தகைக்குநர் இல்லென்று - இவ்விளங்கொடி போல்வாள் என்னுடன் இருப்பினும் இருக்க அன்றித் தனக்குரிய ஓட்டினை ஏந்திப் பிச்சைக்குச் செல்லினும் தடுப்பவர் இல்லை என்று, அங்கவள்தனைக் கூஉய் - மணிமேகலையை அழைத்து, அவள் தன்னோடு - அவளுடன், கொங்கு அவிழ் குழலாள் கோயிலுட் புக்கு - மணம் விரியும் கூந்தலையுடைய இராசமாதேவி அரண்மனையுட் புகுந்து ;

### [24.7](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.24.7)

சிறைவிடு காதை  
  
40 அறிவு திரித்திவ் வகனக ரெல்லாம்  
எறிதரு கோலம்யான் செய்குவ லென்றே  
மயற்பகை யூட்ட மறுபிறப் புணர்ந்தாள்  
அயர்ப்பது செய்யா அறிவின ளாகக்  
  
39  
  
உரை  
  
42  
  
அறிவு திரித்து - இவளது அறிவை மருந்தினால் வேறுபடுத்தி, இவ்வகல் நகர் எல்லாம் எறிதரு கோலம் யான் செய்குவல் என்றே - இவ்வகன்ற ஊரிலுள்ளோ ரனைவரும் இவளை அடிக்கும் கோலத்தைச் செய்வேன் என்று கருதி; மயற்பகை யூட்ட - பித்தேறுதற்குக் காரணமாகிய மருந்தை யூட்ட, மறு பிறப்பு உணர்ந்தாள் அயர்ப்பது செய்யா அறிவினள் ஆக-மறு பிறப்பினை அறிந்த மணிமேகலை மறத்தலில்லா அறிவுடன் விளங்க ;  
  
எறிதல் - கோலால் அடித்தல்; கல்லெறிதலுமாம். மயல் - மருள்; பித்து. மயலாகிய பகை யென்க. மயலூட்டலாவது - மருளுதற்குக் காரணமாகிய மருந்தை யூட்டல். ¹"வஞ்சமுண்டு மயற்பகை யுற்றோர்" என்றார் இளங்கோ வடிகளும். "மயற்பகை யூட்டினை மறுபிறப் புணர்ந்தேன், அயர்ப்பது செய்யா அறிவினே னாயினோன்" என இக்காதையுட் பின் வருதலும் அறியற்பாற்று.  
  
¹ சிலப், 1:122.

### [24.8](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.24.8)

சிறைவிடு காதை  
  
45 கல்லா விளைஞ னொருவனைக் கூஉய்  
வல்லாங்குச் செய்து மணிமே கலைதன்  
இணைவள ரிளமுலை யேந்தெழி லாகத்துப்  
புணர்குறி செய்து பொருந்தின ளென்னும்  
பான்மைக் கட்டுரை பலர்க்குரை யென்றே  
காணம் பலவுங் கைநிறை கொடுப்ப  
  
43  
  
உரை  
  
48  
  
கல்லா இளைஞன் ஒருவனைக் கூஉய் - கல்வி யில்லாத இளைஞன் ஒருவனை அழைத்து, வல்லாங்குச் செய்து-வல்லமை செய்து, மணிமேகலை தன் இணைவளர் இளமுலை-மணிமேகலை தன் இளங்க கொங்கைகள், ஏந்து எழில் ஆகத்துப் புணர் குறி செய்து பொருந்தினள் என்னும்-எனது மிக்க அழகினையுடைய மார்பின்கண பொருந்தும் குறியினைச் செய்து கூடினள் என்னும், பான்மைச் கட்டுரை பலர்க்கு உரை என்றே-முறைமையுடைய கட்டுரையைப் பலர்க்கும் கூறுவாயாக என்று, காணம் பலவும் கைநிறை கொடுப்ப - பொற்காசுகள் பலவற்றைக் கைநிறையக் கொடுக்க ;  
  
அரசன் றேவி கூஉய் உரை யென்று கொடுப்ப வென்க. வல்லாங்கு-வல்லமை ; ¹"வல்லாங்கு வாழ்து மென்னாது" என்பது காண்க. நிறைய என்பது நிறை என விகாரமாயிற்று.  
  
¹ புறம். 163.

### [24.9](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.24.9)

சிறைவிடு காதை  
  
50  
  
55 ஆங்கவன் சென்றவ் வாயிழை யிருந்த  
பாங்கி லொருசிறைப் பாடுசென் றணைதலும்  
தேவி வஞ்ச மிதுவெனத் தெளிந்து  
நாவியன் மந்திரம் நடுங்கா தோதி  
ஆண்மைக் கோலத் தாயிழை யிருப்பக்  
காணம் பெற்றோன் கடுந்துய ரெய்தி  
அரச ருரிமையி லாடவ ரணுகார்  
நிரயக் கொடுமகள் நினைப்பற்றி யேனென்  
றகநகர் கைவிட்ட டாங்கவன் போயபின்  
  
49  
  
உரை  
  
57  
  
ஆங்கவன் சென்று அவ்வாயிழை இருந்த பாங்கில் ஒரு சிறைப் பாடு சென்று அணைதலும்-அறிவற்ற அவ்விளைஞன் மணிமேகலை இருந்த அழகிலாத ஒரு புறத்திலே பக்கலிற் சென்று அடைதலும், தேவி வஞ்சம் இது எனத் தெளிந்து - அரசன் மனைவியினுடைய வஞ்சமாகும் இது என்று உணர்ந்து, நா இயல் மந்திரம் நடுங்காது ஓதி - நாப் புடை பெயருமளவில் கூறும் மந்திரத்தைச் செவ்வனம் ஓதி, ஆண்மைக் கோலத்து ஆயிழை இருப்ப ' மணிமேகலை ஆடவன் வடிவத்துட னிருக்க, காணம் பெற்றோன் கடுந்துயர் எய்தி - பொன் பெற்ற கயவன் மிகுந்த துன்பத்தை யடைந்து, அரசர் உரிமை இல் ஆடவர் அணுகார் - அரசன் மனைவியரிருக்கும் அந்தப்புரத்தில் ஆண் மக்கள் குறுகார், நிரயக் கொடுமகள் நினைப்பு அறியேன் என்று-நிரயத்தை யடைதற்குரிய கொடுமையை உடைய இவளது தீய எண்ணத்தை யான் அறிந்திலேன் என்று கருதி, அகநகர் கைவிட்டு ஆங்கவன் போய பின் - அவன் ஊரைவிட்டு ஓடிய பின்னர் ;  
  
மந்திரம் - வேற்றுரு எய்துவிக்கும் மந்திரம் மந்திரம் பிறர் செவிக்குப் புலனாகாவாறு நாப்புடைபெயரும் அளவானே ஓதல் பெறல் வேண்டுமென்பது ¹"ஆறெழுத் தடக்கிய அருமறைக் கேள்வி, நாவியன் மருங்கின் நவிலப் பாடி" என்பதனாலும் அறியப்படும். ஆயிழை தெளிந்து ஓதி இருப்ப வென்க. உரிமைஇல்-உரிமை மகளிர் இருக்கும் இல்லம்; இஃது அந்தப்புரம் எனப்படும்; அதன்கண் ஆடவர் எய்தப் பெறார் என்பதனை ²"ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின்" என்பதனா னறிக ; மகளிராலேயே காக்கப்படுதலின் இதனைக் ³"குழை முகப் புரிசை" என்பர் திருத்தக்க தேவர்.  
  
¹ முருகு. 186-7. ² நெடுநல். 107. ³ சீவக. 275.

### [24.10](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.24.10)

சிறைவிடு காதை  
  
60  
  
65 மகனைநோய் செய்தாளை வைப்ப தென்னென்று  
உய்யா நோயி னூணொழிந் தனளெனப்  
பொய்ந்நோய் காட்டிப் புழுக்கறை யடைப்ப  
ஊணொழி மந்திர முடைமையின் அந்த  
வாணுதல் மேனி வருந்தா திருப்ப  
ஐயென விம்மி யாயிழை நடுங்கிச்  
செய்தவத் தாட்டியைச் சிறுமை செய்தேன்  
என்மகற் குற்ற இடுக்கண் பொறாது  
பொன்னே ரனையாய் பொறுக்கென றவள்தொழ  
  
58  
  
உரை  
  
66  
  
மகனை நோய் செய்தாளை வைப்பது என் என்று - உதயகுமரனுக்குக் காம நோயை உண்டாக்கி அவனைக் கொல்லுவித்த இவளை உயிருடன் வைத்திருப்பதால் யாது பயன் என்று கருதி, உய்யா நோயின் ஊண் ஒழிந்தனள் என்று பொய் நோய்காட்டிப் புழுக்கறை அடைப்ப - உயிரைத் தாங்கியிராமைக்குக் காரணமாகிய நோயினால் மணிமேகலை உணவுண்டல் நீங்கினாள் என்று அவள்பால் பொய் நோயைக் கூறி அவளைப் புழுக்கமுடைய ஓர் அறையில் அடைத்து வைக்க, ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அந்த வாள் நுதல் மேனி வருந்தாது இருப்ப-மணிமேகலை பசியை ஒழிக்கும் மந்திரம் உடையளாயினமையால் உடல் வாடாது மகிழ்ச்சியுடன் இருக்க, ஐயென விம்மி ஆயிழை நடுங்கி-அரசன் றேவி விரைவுடன் பொருமி நடுக்கமெய்தி, செய்தவத் தாட்டியைச் சிறுமை செய்தேன் - தவமகளாகிய நினக்குத் துன்பத்தைச் செய்தேன், என்மகன் உற்ற இடுக்கண் பொறாது-என் மகனுக்கு நேர்ந்த துன்பத்தைப் பொறாதவளாய், பொன் னேரனையாய் பொறுக்க என்று அவள் தொழ - திருமகள் போல்வாய் பொறுத்துக் கொள்க என்று பெருந்தேவி வணங்க;  
  
மணிமேகலை காரணமாக உதயகுமரன் இறந்தமையின் 'மகனை நோய் செய்தாளை' என்றாள். என்னென்று - பொருந்தாதென்று என்ற படி. புழுக்கறை - புழுங்கச் செய்யும் அறை ; 'புழுக்கறைப் பட்டோர் போன்று" (3.95) என முன் வந்தமையுங் காண்க. (இராச மாதேவி) என்னென்று காட்டி அடைப்ப வென்க. செய்தவத்தாட்டியை: முன்னிலையிற் படர்க்கை. சிறுமை - துன்பம், குற்றம்; என்றது மயற்கை யூட்டியது முதலிய மூன்றையும். பொறாது சிறுமைசெய்தேன் எனக் கூட்டுக.

### [24.11](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.24.11)

சிறைவிடு காதை  
  
70  
  
75 நீல பதிதன் வயிற்றிற் றோன்றிய  
ஏலங் கமழ்தா ரிராகுலன் றன்னை  
அழற்கண் நாகம் ஆருயி ருண்ண  
விழித்த லாற்றே னென்னுயிர் சுடுநாள்  
யாங்கிருந் தழுதனை யிளங்கோன் றனக்குப்  
பூங்கொடி நல்லாய் பொருந்தாது செய்தனை  
உடற்கழு தனையோ வுயிர்க்கழு தனையோ  
உடற்கழு தனையோ லுன்மகன் றன்னை  
எடுத்துப் புறங்காட் டிட்டனர் யாரே  
உயிர்க்கழு தனையே லுயிர்புகும் புக்கில்  
செயப்பாட்டு வினையாற் றெரிந்துணர் வரியது  
அவ்வுயிர்க் கன்பினை யாயி னாய்தொடி  
எவ்வுயிர்க் காயினு மிரங்கல் வேண்டும்  
  
67  
  
உரை  
  
79  
  
நீலபதிதன் வயிற்றில் தோன்றிய - நீலபதி என்பவளது வயிற்றிற் பிறந்த, ஏலம் கமழ்தார் இராகுலன் தன்னை - மணங்கமழும் மாலையினையுடைய இராகுலனை, அழற் கண் நாகம் ஆருயிர் உண்ண - நஞ்சுவிழி அரவு உயிரைக்கொள்ள, விழித்தல் ஆற்றேன் என்னுயிர் சுடு நாள் - உயிர் வாழ்தலைப் பொறாமல் யான் என துயிரைத் தீயிலிட்ட ஞான்று, யாங்கிருந்து அழுதனை இளங்கோன் தனக்கு - நீ இளங்கோவிற்கு எங்கிருந்து அழுதாய், பூங்கொடி நல்லாய் பொருந்தாது செய்தனை-பூங்கொடியனைய தேவி பொருந்தாதனவற்றைச் செய்தாய், உடற்கு அழுதனையோ உயிர்க்கு அழுதனையோ - நீ நின் மகனது உடலுக்கு அழுதாயோ அன்றி உயிரினுக்கு அழுதாயோ, உடற்கு அழுதனையேல் உன் மகன் தன்னை எடுத்துப் புறங்காட்டு இட்டனர் யாரே - உடலின் பொருட்டு அழுதாயானால் நின் மகனைப் புறங்காட்டிலிட்டோர் யாவர், உயிர்க்கு அழுதனையேல் உயிர் புகும் புக்கில் செயப்பாட்டு வினையால் தெரிந்துணர் வரியது - உயிரின் பொருட்டு அழுதாயேல் செய்வினை வழியே அவ்வுயிர் புகுமிடத்தைத் தெளிய அறிய ஒண்ணாது, அவ்வுயிர்க்கு அன்பினை ஆயின் ஆய் தொடி எவ்வுயிர்க்கு ஆயினும் இரங்கல் வேண்டும்-ஆராய்ந்த வளையல்களையுடையவளே நின் மகனது உயிரினிடம் நீ அன்புடைமை யானால் எல்லாவுயிர்களிடத்தும் இரக்கங் கொள்ளல் வேண்டும் ;  
  
அழற்கண் நாகம் - திட்டிவிடம் என்னும் பாம்பு ; பார்வையால் உயிர் கொல்வது. விழத்தல் என்பது பாடமாயின், இழத்தல் எனப் பிரித்துக் கணவனை யிழந்திருத்தலை ஆற்றேனாய் எனப் பொருள் கொள்க. யாங்கிருந்தழுதனை - அழுதிலாய் என்றபடி, புக்கில்-புகும் இடம்; உடம்பு. வினையால் உயிர் புகும் புக்கில் உணர்வரிய தென்க. ஆய் தொடி: விளி. எவ்வயிர்காயினும் - எல்லாவுயிர்கட்கும். உடம்பிலன்றி உயிரின்கண் வேற்றுமை யின்மையால் அவ்வுயிர்க் கன்பினையாயின் எவ்வுயிர்க் காயினும் இரங்கல் வேண்டும் என்றாள் ; அன்றி, எல்லாவுயிர்க்கும் அன்பு செய்வுழி நின் மகனுயிர்க்கும் அன்பு செய்தாயாவை என்றாளுமாம்.

### [24.12](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.24.12)

சிறைவிடு காதை  
  
80  
  
85 மற்றுன் மகனை மாபெருந் தேவி  
செற்ற கள்வன் செய்தது கேளாய்  
மடைக்கலஞ் சிதைய வீழ்ந்த மடையனை  
உடற்றுணி செய்தாங் குருத்தெழும் வல்வினை  
நஞ்சுவிழி யரவின் நல்லுயிர் வாங்கி  
விஞ்சையன் வாளால் வீட்டிய தன்றே  
  
80  
  
உரை  
  
85  
  
மற்று உன் மகனை மாபெருந்தேவி செற்றகள்வன் செய்தது கேளாய் - அரசமாதேவி, மற்றும் நின்மகனைச் சினந்த காஞ்சனன் கொலைபுரிதற்குக் காரணமான தீவினையைக் கேட்பாயாக, மடைக்கலம் சிதைய வீழ்ந்த மடையனை உடல் துணிசெய்தாங்கு உருத்தெழும் வல்வினை - சோற்றுக் கலம் சிதைமாறு வீழ்ந்த அட்டிலாளனை உடலைத் துண்டமாக வெட்டியமையால் தோன்றி எழுந்த வலிய வினையானது, நஞ்சு விழி அரவின் நல்லுயிர் வாங்கி-விழியில் நஞ்சினைக் கொண்ட பாம்பினால் அவனது நல்லுயிரைக் கொண்டு, விஞ்சையன் வாளால் வீட்டியது அன்றே-இப்பிறவியில் விஞ்சையனது வாளினால் வீழ்த்தியது ;  
  
மாபெருந்தேவி: விளி. கள்வன் - காஞ்சனன். செற்றக் கள்வன் என்பது பாடமாயின், செற்றமாகிய கள்வன் என உருவக மாக்குக. உருத்து - உருக்கொண்டு, சென்ற பிறப்பிலே அரவினால் உயிர் வாங்கி இப்பிறப்பிலே வாளல் வீட்டியது என்க. வீட்டியது - கொன்றது ; வீழ்த்தியது என்பதன் மரூஉவுமாம்.

### [24.13](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.24.13)

சிறைவிடு காதை  
  
90 யாங்கறிந் தனையோ ஈங்கியது நீயெனிற்  
பூங்கொடி நல்லாய் புகுந்த திதுவென  
மொய்ம்மலர்ப் பூம்பொழில் புக்கது முதலாத்  
தெய்வக் கட்டுரை தெளிந்ததை யீறா  
உற்றதை யெல்லா மொழிவின் றுரைத்து  
  
86  
  
உரை  
  
90  
  
யாங்கறிந்தனையோ ஈங்கிது நீ எனில்-நீ இதனை எங்ஙனம் அறிந்தனை என வினாவின், பூங்கொடி நல்லாய்புகுந்ததுஇது என - பூங்கொடி போல்வாய் நிகழ்ந்தது இது வென்று, மொய்ம்மலர்ப் பூம்பொழில் புக்கது முதலா-மலர் கொய்யும் பொருட்டுச் சுதமதியுடன் தான் உவவனம் சென்றது முதலாக, தெய்வக் கட்டுரை தெளிந்ததை ஈறா - கந்திற்பாவையின் பொருண்மொழிகளைக் கேட்டுத் தெளிவுற்றது இறுதியாக, உற்றதை எல்லாம் ஒழிவின்று உரைத்து - நிகழ்ந்தன அனைத்தையும் தப்பாமற் கூறி ;  
  
ஈங்கிது - இச் செய்தி. கட்டுரையால் தெளிந்ததென்க. தெளிந்ததை: ஐ: அசை. உற்றதை யெல்லாம் ஒருமைப் பன்மை மயக்கம்.

### [24.14](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.24.14)

சிறைவிடு காதை  
  
95  
  
மற்று முரைசெயும் மணிமே கலைதான்  
மயற்பகை யூட்டினை மறுபிறப் புணர்ந்தேன்  
அயர்ப்பது செய்யா அறிவினே னாயினேன்  
கல்லாக் கயவன் காரிருட் டான்வர  
நல்லாய் ஆணுரு நான்கொண் டிருந்தேன்  
ஊணொழி மந்திர முடைமையி னன்றோ  
மாணிழை செய்த வஞ்சம் பிழைத்தது  
  
91  
  
உரை  
  
97  
  
மற்றும் உரை செய்யும் மணிமேகலை தன்-மணிமேகலை பின்னுங் கூறுவாள், மயற்பகை ஊட்டினை மறு பிறப்பு உணர்ந்தேன் அயர்ப்பது செய்யா அறிவினேன் ஆயினேன் - பித்தேற்றும் மருந்தை யுண்பித்தாயாகவும் மறு பிறப்பினை அறிந்தேன் ஆகலின் மறத்தலில்லா அறிவுடையேனாயினேன், கல்லாக் கயவன் கார் இருள் தான்வர நல்லாய் ஆணுரு நான் கொண்டு இருந்தேன் - மெல்லியலே அறிவிலாக் கீழ்மகன் கரிய இருளின்கண் வர யான் ஆண் வடிவங்கொண்டு இருந்தேன், ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அன்றோ மாணிழை செய்த வஞ்சம் பிழைத்தது-பசி நீக்கும் மந்திரம் பெற்றிருந்தமையாலன்றோ நீ செய்த வஞ்சத்தினின்றும் தப்பியது ;  
  
மறுபிறப் புணர்ந்தேன் ஆகலின் என விரித்துரைக்க. வேற்றுரு வெய்துவிக்கும் மந்திரம் உடைமையினால் ஆணுரு நான் கொண்டிருந்தேன் எனவும் ஏது விரித்துரைக்க. மாணிழை: முன்னிலையிற் படர்க்கை. வஞ்சம் - உய்யா நோயின் ஊணொழிந்தனள் எனப் புழுக்கறை யடைத்தது.

### [24.15](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.24.15)

சிறைவிடு காதை  
  
100  
  
அந்தரஞ் சேறலும் அயலுருக் கோடலும்  
சிந்தையிற் கொண்டிலேன் சென்ற பிறவியில்  
காதலற் பயந்தோய் கடுந்துயர் களைந்து  
தீதுறு வெவ்வினை தீர்ப்பது பொருட்டால்  
  
98  
  
உரை  
  
101  
  
அந்தரஞ் சேறலும் அயலுருங்கோடலும் - விசும்பூடு செல்லுதலையும் வேற்றுருக் கொள்ளுதலையும், சிந்தையிற் கொண்டிலேன் சென்ற பிறவியில் காதலற் பயந்தோய் கடுந்துயர் களைந்து தீதுறு வெவ்வினை தீர்ப்பது பொருட்டால்-முற்பிறப்பில் கணவனாயிருந்தோனைப் பெற்ற நினது கொடிய துன்பத்தை நீக்கித் தீவினைகளை ஒழிக்கும் பொருட்டு உளத்தி லெண்ண வில்லை ; வெவ்வினை தீர்ப்பது பொருட்டால் அந்தரஞ் சேறலும் அயலுருக் கோடலும் சிந்தையிற் கொண்டிலேன் என்க.

### [24.16](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.24.16)

சிறைவிடு காதை  
  
தையா லுன்றன் றடுமாற் றவலத்து  
எய்யா மையல்தீர்ந் தின்னுரை கேளாய்  
  
102  
  
உரை  
  
103  
  
தையால்-தையலே, உன்றன்-உனது, தடுமாற்று அவலத்து எய்யா மையல் தீர்ந்து-தடுமாற்றத்துக்குக் காரணமாகிய வருத்தத்தைச் செய்யும் அறியாமையாகிய மயக்கத்தின் நீங்கி, இன்னுரை கேளாய் - யான் கூறும் இவ்வினிய மொழிகளைக் கேட்பாயாக ; எய்யாமை - அறியாமை. மையல் - செல்வச் செருக்குமாம்.

### [24.17](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.24.17)

சிறைவிடு காதை  
  
105  
  
110 ஆள்பவர் கலக்குற மயங்கிய நன்னாட்டுக்  
காருக மடந்தை கணவனுங் கைவிட  
ஈன்ற குழவியொடு தான்வே றாகி  
மான்றோர் திசைபோய் வரையாள் வாழ்வுழிப்  
புதல்வன் றன்னையோர் புரிநூன் மார்பன்  
பதியோ ரறியாப் பான்மையின் வளர்க்க  
ஆங்கப் புதல்வன் அவள்திற மறியான்  
தான்புணர்ந் தறிந்துபின் றன்னுயிர் நீத்ததும்  
  
104  
  
உரை  
  
111  
  
ஆள்பவர் கலக்குற மயங்கிய நன்னாட்டுக் காருக மடந்தை- அரசரது கொடுங்கோன்மையால் அனைவரும் தத்தம் நிலைகலங்கிய நல்ல நாட்டில் இல்லற ஒழுக்கினளாகிய ஒருத்தி, கணவனும் கைவிட-கணவனும் கைவிட்டமையான், ஈன்ற குழவியொடு தான் வேறாகி - தான் ஈன்ற குழந்தையினின்றும் தான் வேறிடத்துப் பிரிவுற்று, மான்று ஓர் திசை போய் வரையாள் வாழ்வுழி - மயங்கி ஒரு திக்கிற் சென்று வரைவின்றி வாழுமிடத்து, புதல்வன் தன்னை ஓர் புரிநூன் மார்பன் பதியோர் அறியாப் பான்மையின் வளர்க்க - அக்குழவியை ஓரந்தணன் ஊரிலுள்ளோர் அறியாதவாறு வளர்த்து வர, ஆங்கப் புதல்வன் அவள் திறம் அறியான் தான் புணர்ந்து அறிந்து பின் தன்னுயிர் நீத்தலும் - அப்புதல்வன் அவள் தன் தாய் என்னுந் தன்மையை அறியானாய் அவளுடன் கூடிப் பின்னர் உணர்ந்து தனது உயிரைத் துறந்ததனையும் ;  
  
1"ஆள்பவர் கலக்குற அலைபெற்ற நாடுபோல்" என்பது ஈண்டு அறியற்பாலது. "மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் காவலின்றெனில் இன்றால்" (22: 208--9) என முன்னரும் இக் கருத்து வந்துள்ளமை காண்க. காருக மடந்தை-நெய்வோர் குலத்துப் பிறந்த மாது எனவும் பொருள் படும். வரையாள் - தனது நலத்தினை நுகர்தற்குரியவர் உரியரல்லாதவர் என்னும் வரையறை யில்லாளாய்; பொருள் கொடுப்பார் யாவர்க்கும் விற்று என்றபடி. இதனால் காமத்தின் தீமை கூறப்பட்டது.  
  
¹ கலி. 5.

### [24.18](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.24.18)

சிறைவிடு காதை  
  
115  
நீர்நசை வேட்கையி னெடுங்கட முழலும்  
சூன்முதிர் மடமான் வயிறுகிழித் தோடக்  
கான வேட்டுவன் கடுங்கணை துரப்ப  
மான்மறி விழுந்தது கண்டு மனமயங்கிப்  
பயிர்க்குரல் கேட்டதன் பான்மைய னாகி  
உயிர்ப்பொடு செங்க ணுகுத்த நீர்கண்டு  
ஓட்டி யெய்தோ னோருயிர் துறந்ததுங்  
கேட்டு மறிதியோ வாட்டடங் கண்ணி  
  
112  
  
உரை  
  
119  
  
நீர் நசை வேட்கையின் நெடுங்கடம் உழலும் சூல்முதிர் மடமான் வயிறு கிழித்து ஓட-நீரை நச்சிய விருப்பத்தால் பெரிய காட்டின்கண் வருந்துகின்ற சூல் முதிர்ந்த இளையமானினது வயிற்றைக் கிழித்துச் செல்லுமாறு, கானவேட்டுவன் கடுங்கணை துரப்ப - காட்டில் வேட்டையாடுவோன் கடிய அம்பினைச் செலுத்த, மான் மறி விழுந்தது கண்டு மனமயங்கி - மான்குட்டி வயிற்றினின்றும் விழுந்தனைக் கண்டு உளங் கலங்கி, பயிர்க்குரல் கேட்டு அதன் பான்மைய னாகி - அதனது விளியோசையைக் கேட்டு அதன் பக்கத்தோனாகி, உயிர்ப்பொடு செங்கண் உகுத்த நீர் கண்டு-நெட்டுயிர்ப்புடன் அதனது சிவந்த கண்களினின்று சிந்துகின்ற நீரினைக் கண்ணுற்று, ஓட்டி எய்தோன் ஓருயிர் துறந்ததும் - அம்பினை வீசி எய்த வேட்டுவன் தன் உயிரைத் துறந்தனையும், கேட்டும் அறிதியோ வாள் தடங் கண்ணி - வாள்போலும் பெரிய கண்களையுடையாய் நீ கேள்வியுற்றும் அறிவாயோ ;  
  
தன்னுயிர் நீத்ததும் ஓருயிர் துறந்ததும் கேட்டும் அறிதியோ என்க. மான்மறி - பெண் மானுமாம். பயிர்தல் - அழைத்தல். அதன் பான்மையனாகி - அதன் இயல்பினனாகி என்றுமாம். ஓட்டி எய்தோன் வேட்டுவன்: சுட்டு. இதனால் கொலையின் தீமை கூறப்பட்டது.

### [24.19](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.24.19)

சிறைவிடு காதை  
  
120  
கடாஅ யானைமுன் கட்கா முற்றோர்  
விடாஅது சென்றதன் வெண்கோட்டு வீழ்வது  
உண்ட கள்ளி னுறுசெருக்காவது  
கண்டு மறிதியோ காரிகை நல்லாய்  
  
120  
  
உரை  
  
123  
  
கடாஅ யானைமுன் கட் காமுற்றோர் விடாஅது சென்று அதன் வெண் கோட்டு வீழ்வது-கள்ளை விரும்பி யுண்டோர் மதம் பொருந்திய யானையின் முன்னர் நீங்காமற் சென்று அதன் வெள்ளிய மருப்பிலே வீழ்வது, உண்ட கள்ளின் உறுசெருக்காவது கண்டும் அறிதியோ காரிகை நல்லாய்-அழகிய நங்காய் அவர் கள்ளுண்டதனாற் போந்த பெருங்களிப்பினால் நிகழ்வதனைக் கண்டிருக்கின்றனையோ ;  
  
கள்ளுண்டு களித்தோர் இங்ஙனம் யானைமுன் சென்று உயிர் துறத்தல் ¹"புதுக்கோள் யானைமுன் போற்றாது சென்று, மதுக்களி மயக்கத்து வீரை மாய்ந்ததூஉம்" என்பதனாலும் அறியப்படும். இதனால் கள்ளின் தீமை கூறப்பட்டது.  
  
¹ மணி. 32: 45--6.

### [24.20](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.24.20)

சிறைவிடு காதை  
  
125  
பொய்யாற் றொழுக்கம் பொருளெனக் கொண்டோர்  
கையாற் றவலங் கடந்தது முண்டோ  
  
124  
  
உரை  
  
125  
  
பொய்யாற்று ஒழுக்கம் பொருள் எனக் கொண்டோர் - பொய்ந் நெறிக்கண் ஒழுகுதலைக் காரியமாகக் கொண்டவர்கள், கையாற்று அவலம் கடந்ததும் உண்டோ - செயலறவாகிய துன்பத்தினின்றும் நீங்கியதும் உண்டோ ;  
  
எஞ்ஞான்றும் துன்புறுவர் என்றபடி. இதனால் பொய்ம்மையின் தீமை கூறப்பட்டது.

### [24.21](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.24.21)

சிறைவிடு காதை  
  
களவேர் வாழ்க்கைய ருறூஉங் கடுந்துயர்  
இளவேய்த் தோளாய்க் கிடுவென வேண்டா  
  
126  
  
உரை  
  
127  
  
களவு ஏர் வாழ்க்கையர் உறூஉங் கடுந்துயர் - களவாகிய ஏரால் உழுதலைச் செய்து வாழ்வோர் அடையுங் கொடிய துன்பத்தை, இளவேய்த் தோளாய்க்கு இது என வேண்டா - இளைய மூங்கிலனைய தோள்களையுடைய நினக்கு யான் இத்தகைத்து எனக் கூறுதல் வேண்டா;  
  
உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவினை யளிப்பது உழவுத்தொழிலாகலின், பிற சில தொழில்களையும் உழவாக உருவகப்படுத்தி, வில்லேருழவர் சொல்லேருழவர் என்றிங்ஙனங் கூறுவர் சான்றோர் களவாகிய ஏரால் உழுது வாழ்தலாவது களவினாற் பிறர் பொருளை வௌவி உண்டு வாழ்தலாம்: ¹"கைப்பொருள் வௌவுங் களவேர் வாழ்க்கைக் கொடியோர்" என்றார் பிறரும். களவு செய்தோர் கடுந்துயர் உறுதல் வெளிப்படையாகலின் 'இதுவென வேண்டா' என்றாளென்க. இதனால் களவின் தீமை கூறப்பட்டது.  
  
¹ பெரும்பாண். 40-1.

### [24.22](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.24.22)

சிறைவிடு காதை  
  
மன்பே ருலகத்து வாழ்வோர்க் கிங்கிவை  
துன்பந் தருவன துறத்தல் வேண்டும்  
  
128  
  
உரை  
  
129  
  
மன்பே ருலகத்து வாழ்வோர்க்கு - மிகப் பெரிய உலகத்தில் வாழும் மக்களுக்கு, இங்கிவை துன்பம் தருவன துறத்தல் வேண்டும் - ஈண்டுக் கூறப்பட்ட காமம் முதலிய ஐந்தும் துன்பந் தருவன வாகலின் அவற்றைக் கைவிடல் வேண்டும்;

### [24.23](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.24.23)

சிறைவிடு காதை  
  
30  
  
35  
  
40 கற்ற கல்வி யன்றாற் காரிகை  
செற்றஞ் செறுத்தோர் முற்ற வுணர்ந்தோர்  
மல்லன்மா ஞாலத்து வாழ்வோ ரென்போர்  
அல்லன் மாக்கட் கில்லது நிரப்புநர்  
திருந்தே ரெல்வளை செல்லுல கறிந்தோர்  
வருந்தி வந்தோ ரரும்பசி களைந்தோர்  
துன்ப மறுக்குந் துணிபொரு ளுணர்ந்தோர்  
மன்பதைக் கெல்லா மன்பொழி யாரென  
ஞான நன்னீர் நன்கனந் தெளித்துத்  
தேனா ரோதி செவிமுதல் வார்த்து  
மகன்றுயர் நெருப்பா மனம்விற காக  
அகஞ்சுடு வெந்தீ யாயிழை யவிப்பத  
  
130  
  
உரை  
  
141  
  
கற்ற கல்வி அன்றால் காரிகை-காரிகையே கற்ற கல்வியே மெய்யுணர்வாகாது, செற்றம் செறுத்தோர் முற்ற உணர்ந்தோர் - அகத்தில் வெகுளி தோன்றாமல் அடக்கினோரே முழுவதும் உணர்ந்தோராவார், மல்லல் மா ஞாலத்து வாழ்வோர் என்போர் அல்லல் மாக்கட்க் இல்லது நிரப்புநர் - வறுமைத் துன்பமுடைய மக்களுக்கு வேண்டுவனவற்றை அளிப்போரே வளப்பமுடைய பெரிய பூமியின்கண் வாழ்வோர் எனப்படுவர், திருந்தேர் எல்வளை- திருந்திய அழகமைந்த ஒள்ளிய வளையினையுடையாய். செல்லுலகு அறிந்தோர் வருந்தி வந்தோர் அரும்பசி களைந்தோர் - பசியால் வருந்தி வந்தோரது தீர்த்தற்கரிய பசியை நீக்கினோரே செல்லுலகம் அறிந்தவராவர், துன்பம் அறுக்கும் துணி பொருள் உணர்ந்தோர் மன்பதைக்கு எல்லாம் அன்பு ஒழியார் என - உயிர்ப்பன்மைகட் கெல்லாம் அன்பு நீங்காதோரே துன்பத்தினை யறுக்கும் மெய்ப் பொருளை யறிந்தோராவர் என்று, ஞான நன்னீர் நன்கனம் தெளித்து - ஞானமாகிய நல்ல நீரை நன்றாகத் தெளித்து, தேனார் ஓதி செவி முதல் வார்த்து - வண்டுகள் ஒலிக்கின்ற கூந்தலையுடைய இராசமாதேவியின் செவியிடம் வார்த்து, மகன் துயர் நெருப்பா மனம் விறகாக அகம் சுடும் வெந்தீ ஆயிழை அவிப்ப - புதல்வ னிறந்த துன்பம் நெருப்பாக மனமே விறகாக உள்ளத்தைச் சுடுகின்ற கொடிய தீயை மணிமேகலை அவிக்க;  
  
செற்றஞ் செறுத்தல் முதலியன இல்வழிக் கற்றகல்வி பயனுடைத்தன்று என்றுமாம்; மேலுரைத்த துன்பந்தரும் காம முதலியவற்றைத் துறவாவழி, கல்வி பயனுடைத் தன்று என்றுரைத்தலுமாம். கல்வி காரிகையன்று எனக் கூட்டி, கல்வி அழகுடைத்தன்று என்றுரைப்பாரு முளர். செல்லுல கறிதலாவது மறுமையுலகம் உண்டென்பதையும் ஆண்டு இன்புறுதற்கு இவண் செய்யற்பாலது இது வென்பதனையும் அறிதல். துணிபொருள்-தத்துவ ஞானம். தெளிந்து - தெளிவித்து என்றுமாம்.

### [24.24](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.24.24)

சிறைவிடு காதை  
  
145 தேறுபடு சின்னீர் போலத் தெளிந்து  
மாறுகொண் டோரா மனத்தின ளாகி  
ஆங்கவள் தொழுதலு மாயிழை பொறாஅள்  
தான்றொழு தேத்தித் தகுதி செய்திலை  
காதலற் பயந்தோ யன்றியுங் காவலன்  
மாபெருந் தேவியென் றெதிர்வணங் கினளென்.  
  
142  
  
உரை  
  
147  
  
தேறுபடு சின்னீர் போலத் தெளிந்து - தேற்றாங்கொட்டையால் தேற்றப் பெற்ற சிலவாகிய நீரைப் போல மனந் தெளிந்து, மாறுகொண்டு ஓரா மனத்தினள் ஆகி - பகைமை கொண்டு சிந்தியாத மனத்தினையுடையளாகி, ஆங்கவள் தொழுதலும் - மாதேவி வணங்குதலும், ஆயிழை பொறாஅள் தான் தொழுது ஏத்தி-மணிமேகலை அதனைப் பொறாமல் தான் வணங்கித் துதித்து, தகுதி செய்திலை காதலற் பயந்தோய் அன்றியும் காவலன் மாபெருந் தேவி என்று - என் நாயகனைப் பெற்ற தாய் அன்றியும் அரசனுடைய பட்டத்துத் தேவியாக உள்ளாய் ஆகலின் நீ தக்க தொன்றினைச் செய்திலை என்று கூறி, எதிர் வணங்கினள் என் - மணிமேகலை எதிர் தொழுதனள் என்க. தேறு - தேற்றாம் வித்து, கலக்கமுற்ற சிறிய நீரானது தேற்றாம் வித்தினால் தெளிவடைதல் போல இராசமா தேவியின் கலங்கிய உள்ளம் மணிமேகலையின் அறிவுரையால் தெளிந்த தென்க. முற் பிறப்பில் எனக்குக் கணவனாயிருந்தோனை இப்பிறப்பிற் பெற்றாய் என்க. தகுதி செய்திலை - நீ வணங்கியது தகுதியன்று என்றபடி.  
  
வாசந்தவை யென்னும் மூதாட்டி மன்னவனருளாற்சென்றெய்தித தொழுது முன்னின்று வாழ்த்தி, "மன்னவன்றன்முன் துன்பங்கொள்ளேல்" என்று போயபின் அஞ்சலோதி கரந்து அடக்கிக்கொண்டு மறைத்து, ஒரு நாள் அரசன்பால் 'ஆயிழை தனக்கு சிறைதக்கன்று' என, 'சிறை நோய் தீர்க்க' என்று இறை சொல, குழலாள் அவளைக் கூஉய்க் கோயிலுட்புக்கு மயற்பகை யூட்ட, அறிவினளாக, கொடுப்ப அணைதலும், ஆயிழையிருப்ப, போயபின் அடைப்ப, இருப்ப, அவள் தொழ, மணிமேகலை ஒழிவின்றுரைத்து மற்றும் உரை செய்யும்; அங்ஙனம் உரை செய்பவள் அகஞ் சுடு வெந்தீ அவிப்ப, அவள் தொழுதலும், ஆயிழை பொறாஅளாய் 'மாபெருந்தேவி என்று எதிர் வணங்கினளென, வினை முடிவு செய்க.

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.23.1-6) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.24](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.24) · Pramāṇa
