<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.25 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 25

# Maṇimēkalai's Renunciation 25

Maṇimēkalai urai 25

- **Language:** Tamil

### [25.1](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.25.1)

ஆபுத்திரனாடு அடைந்த காதை  
  
5 மன்ன குமரனை வஞ்சம் புணர்த்த  
தொன்முது கணிகைதன் சூழ்ச்சியிற் போயவன்  
விஞ்சையன் வாளின் விளிந்தோ னென்பது  
நெஞ்சு நடுக்குறக் கேட்டுமெய் வருந்தி  
மாதவி மகள்தனை வான்சிறை நீக்கக்  
காவலன் றேவி காற்கீழ் வீழ்ந்தாங்கு  
  
1  
  
உரை  
  
6  
  
மன்ன குமரனை வஞ்சம் புணர்த்த தொன்முது கணிகை - அரசன் புதல்வனை வஞ்சனையாற் சேர்த்திய சித்திராபதி, தன் சூழ்ச்சியிற் போயவன் - தனது சூழ்ச்சியாற் சென்ற உதயகுமரன், விஞ்சையன் வாளின் விளந்தோன் என்பது - விஞ்சையனது வாளினால் இறந்தான் என்பதனை, நெஞ்சு நடுக்குறக் கேட்டு மெய் வருந்தி - உள்ளம் நடுங்கக் கேட்டு மிகவருந்தி, மாதவி மகள்தனை வான்சிறை நீக்க - மணிமேகலையைச் சிறையினின்றும் நீக்கும் பொருட்டு, காவலன் தேவி காற்கீழ் வீழ்ந்து - மன்னவன் தேவியின் அடிகளில் வீழ்ந்து பணிந்து;  
  
மணிமேகலையின் தாபதக் கோலத்தை அழித்து அவளை உதய குமரன் கைப்பற்றி நுகருமாறு செய்வேன் என வஞ்சினங் கூறி வந்து அவனை அவள்பாற் செலுத்தினவள் ஆகலின், மன்ன குமரனை வஞ்சம் புணர்த்த கணிகை எனச் சித்திராபதியைக் கூறினார். தொல்முது : ஒருபொருட் பன்மொழி.

### [25.2](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.25.2)

ஆபுத்திரனாடு அடைந்த காதை  
  
10  
  
15 அரவே ரல்கு லருந்தவ மடவார்  
உரவோற் களித்த வொருபத் தொருவரும்  
ஆயிரங் கண்ணோ னவிநயம் வழூஉக்கொள  
மாயிரு ஞாலத்துத் தோன்றிய வைவரும்  
ஆங்கவன் புதல்வனோ டருந்தவன் முனிந்த  
ஓங்கிய சிறப்பி னொருநூற்று நால்வரும்  
திருக்கிளர் மணிமுடித் தேவர்கோன் றன்முன்  
உருப்பசி முனிந்த வென்குலத் தொருத்தியும்  
ஒன்று கடைநின்ற வாறிரு பதின்மரித்  
தொன்றுபடு மாநகர்த் தோன்றிய நாண்முதல்  
யானுறு துன்ப மியாவரும் பட்டிலர்  
மாபெருந் தேவி மாதர் யாரினும்  
  
7  
  
உரை  
  
18  
  
அரவு ஏர் அல்குல் அருந்தவ மடவார் - பாம்பின் படம் போலும் அழகிய அல்குலையுடைய அரிய தவத்தினையுடைய மடவார், உரவோற்கு அளித்த ஒருபத் தொருவரும் - இந்திரனுக்கு ஈன்ற பதினொருவரும், ஆயிரங் கண்ணோன் அவிநயம் வழூஉக்கொள - இந்திரன்முன் அவிநயம் வழுவினமையால், மாயிரு ஞாலத்துத் தோன்றிய ஐவரும் - புவியிடைத் தோன்றிய ஐவரும, ஆங்கவன் புதல்வனோடு அருந்தவன் முனிந்த - இந்திரன் புதல்வனாகிய சயந்தனோடு அரிய தவத்தினையுடைய அகத்தியனால் முனியப்பட்ட, ஓங்கிய சிறப்பின் ஒரு நூற்று நால்வரும் - மிக்க சிறப்பினையுடைய நூற்றுநால்வரும், திருக்கிளர் மணி முடித்தேவர்கோன் தன் முன் - அழகு விளங்கும் மணிமுடி யணிந்த இந்திரன் முன், உருப்பசி முனிந்த என் குலத்து ஒருத்தியும் முனியப்பட்ட உருப்பசியாகிய என் குலத்து தோன்றிய ஒருத்தியும், ஒன்று கடை நின்ற ஆறு இருபதின்மர் - என்ற நூற்றிருபத்தொருவர், இத் தொன்றுபடு மாநகர்த் தோன்றிய நாள் முதல் - பழமையாகிய பெ,ரிய இந்நகரிலே தோன்றிய நாள் முதலாக, யான் உறு துன்பம் யாவரும் பட்டிலர் மாபெருந்தேவி மாதர் யாரினும் - அரசமாதேவியே! கணிகையர் யாரினும் யான் அடைந்தது போலும் துன்பத்தை வேறு யாரும் அடைந்திலர் ;  
  
ஈண்டுக் கூறிய நூற்றிருபத் தொருவரும் காவிரிப்பூம்பட்டினததிலே பிறந்து சிறப்பெய்திய நாடகக்கணிகைய ராவரென்க. கண்ணகி வஞ்சின மாலையில், புகார்நகரிலே பிறந்த கற்புடை மகளிர் எழுவருடைய வரலாற்றை எடுத்தியம்பி, ¹ 'மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன்' என்று கூறியது போலச் சித்திராபதி ஆண்டுப் பிறந்த நாடகக் கணிகையரை எடுத்துக் காட்டுவாளாயின ளென்க. உர வோன் - இந்திரன். அருந்தவன் - அகத்தியன். முனிந்த - வெகுண்டு சபிக்கப்பட்ட வென்க. இந்திரன் முன் சாபமேற்ற உருப்பசியானவள் புகாரிலே மாதவி யென்னும் பெயருடன் தோன்றி யிருந்தன ளென்பது சிலப்பதிகாரத்து அரங்கேற்று காதையாலும் கடலாடு காதையாலும் அறியப்படுவது. மாபெருந்தேவி: விளி.  
  
¹ சிலப். 21 : 35.

### [25.3](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.25.3)

ஆபுத்திரனாடு அடைந்த காதை  
  
20  
  
25 பூவிலை யீத்தவன் பொன்றின னென்று  
மாதவி மாதவர் பள்ளியு ளடைந்ததும் பரந்துபடு மனைதொறும் பாத்திர மேந்தி  
அரங்கக் கூத்திசென் றையங் கொண்டதும்  
நகுத லல்லது நாடகக் கணிகையர்  
தகுதி யென்னார் தன்மை யன்மையின்  
மன்னவன் மகனே யன்றியு மாதரால்  
இந்நக ருறூஉ மிதுக்கணு முண்டால்  
  
19  
  
உரை  
  
26  
  
பூவிலே ஈத்தவன் பொன்றினன் என்று - அற்றைப் பரிசமளித்த கோவலன் இறந்தனன் என்று, மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்ததும் - மாதவி அறவணவடிகள் உறையுளிற் புக்கதும், பரந்துபடு மனைதொறும் பாத்திரம் ஏந்தி அரங்கக்கூத்தி சென்று ஐயங் கொண்டதும் - மணிமேகலை பாத்திரத்தை ஏந்திப் பரவித் தோன்றும் இல்லங்கள்தோறும் சென்று பிச்சை ஏற்றதும், நகுதல் அல்லது நாடகக் கணிகையர் தகுதி என்னார் தன்மை அன்மையின் - பரிகசித்தற்குக் காரணமாவனவேயன்றி நாடக மகளிரின் இயல்பன்மையால் அவர்க்குத் தகுதி என்று கூறார், மன்னவன் மகனே அன்றியும் மாதரால் இந்நகர் உறூஉம் இடுக்கணும் உண்டால் - உதயகுமரனுக்கு நேர்ந்த இடுக்கணே யன்றியும் மணிமே கலையால் இம்முதுநக ரடையும் துன்பமும் உண்டு ;  
  
ஈண்டுக் கூறிய நூற்றிருபத் தொருவரும் காவிரிப்பூம்பட்டினத் பூவிலை - பூவிற்கு விலை ; அற்றைப் பரிசம் என்பர் : ¹ "பூவிலை மடந்தையர்" என்பதன் உரை காண்க. மாதவர் பள்ளியுளடைந்தது என்றதனால் துறவு பூண்டமை பெற்றாம். அரங்கக்கூத்தி - மணிமேகலை; அரங்கிலே கூத்தியற்றுதற்குரியவள் என்றபடி.  
  
¹ சிலப். 5 : 51.

### [25.4](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.25.4)

ஆபுத்திரனாடு அடைந்த காதை  
  
30 உம்பளந் தழீஇய வுயர்மண னெடுங்கோட்டுப்  
பொங்குதிரை யுலாவும் புன்னையங் கானல்  
கிளர்மணி நெடுமுடிக் கிள்ள முன்னா  
இளவேனி லிறுப்ப விறும்பூது சான்ற  
பூநாறு சோலை யாருமி லொருசிறைத்  
தானோ தமிய ளொருத்தி தோன்ற  
  
27  
  
உரை  
  
32  
  
உம்பளம் தழீஇய உயர்மணல் நெடு்ங்கோட்டு - உப்பளத்தின் மருங்குள்ள உயரிய நெடிய மணற்கரையினை உடைய, பொங்கு திரை உலாவும் புன்னையங் கானல்-மிகுதியான அலைகள் உலாவுகின்ற புன்னைமரச் சோலையின்கண், கிளர்மணி நெடுமுடிக் கிள்ளி முன்னா இளவேனில் இறுப்ப - ஒளிப்பொருந்திய மணிகளானாய பெரியமுடியினையுடையகிள்ளி இளவேனிற்பருவத்தில் தங்குதலால் அவன் முன்னாக, இறும்பூது சான்ற பூநாறு சோலை யாருமில் ஒரு சிறை - வியக்குந் தன்மை யமைந்த மலர்மணம் வீசும் பொழிலில் யாருமில்லாத ஒரு பக்கலில், தானே தமியள் ஒருத்தி தோன்ற-தானே தனித்துப் போந்த மெல்லியல் ஒருத்தி தோன்ற;  
  
உம்பளம் - உப்பளம் : மெலித்தல் பெற்றது. நெடுமுடிக்கிள்ளி - ஓர் சோழமன்னன்; உதயகுமரன் றந்தை. கிளர்மணி என்பது முடிக்கு அடையாய் வந்தது. முன்னா - முன்னாக; எதிரே. இறும்பூது சான்ற ஒருத்தி யெனக் கூட்டுதலுமாம். நெடுமுடிக்கிள்ளி இளவேனிலில் புன்னையங் கானலிலே இறுப்ப, இவன் முன்னாக ஒருத்தி தோன்ற வென்க.

### [25.5](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.25.5)

ஆபுத்திரனாடு அடைந்த காதை  
  
35  
  
40  
  
இன்ன ளார்கொ லீங்கிவ ளென்று  
மன்னவ னறியான் மயக்க மெய்தாக்  
கண்ட கண்ணினுங் கேட்ட செவியினும்  
உண்ட வாயினு முயிர்த்த மூக்கினும்  
உற்றுண ருடம்பினும் வெற்றிச்சிலைக் காமன்  
மயிலையுஞ் செயலையு மாவுங் குவளையும்  
பயிலிதழ்க் கமலமும் பருவத் தலர்ந்த  
மலர்வா யம்பின் வாசங் கமழப்  
பலர்புறங் கண்டோன் பணிந்துதொழில் கேட்ப  
ஒருமதி யெல்லை கழிப்பினு முரையாள்  
பொருவரு பூங்கொடி போயின வந்நாள்  
  
33  
  
உரை  
  
43  
  
இன்னள் ஆர் கொல் ஈங்கிவள் என்று - இவ்வுழி இருப்பவளாய இத்தன்மையை யுடையாள் யாவளோ என்று, மன்னவன் அறியான் மயக்கம் எய்தா-அரசன் அறியானாய் மயக்க மடைந்து, கண்ட கண்ணினும் கேட்ட செவியினும் - கண்ட கண்களினும் கேட்ட காதுகளினும், உண்ட வாயினும் உயிர்த்த மூக்கினும் - அருந்திய நாவினும் மோந்த மூக்கினும், உற்றுணர் உடம்பினும் - தீண்டி யுணர்ந்த உடம்பினும், வெற்றிச் சிலைக் காமன் - வென்றி வில்லினையுடைய காமவேளின், மயிலையும் செயலையும் மாவும் குவளையும் - மல்லிகையும் அசோகும் மாவும் குவளையும், பயிலிதழ்க் கமலமும் - செறிந்த இதழ்களையுடைய தாமரையுமாகிய, பருவத்து அலர்ந்த - பருவத்தின்கண் மலரப் பெற்ற, மலர் வாய் அம்பின் வாசம் கமழ - மலர்களாகிய அம்பின் மணங் கமழ்தலால , பலர் புறம் கண்டோன் பணிந்து தொழில் கேட்ப - பல மன்னரை வென்று புறங்கண்ட அரசன் பணிந்து அவள் ஏவுந் தொழிலைக் கேட்ப, ஒரு மதி எல்லை கழிப்பினும் உரையாள் - ஒரு திங்களளவு அவனுடன் கழித்தாளாயினும் ஒன்றுங் கூறாதே, பொருவரு பூங்கொடி போயின அந்நாள் - ஒப்பற்ற பூங்கொடி போல்வாள் சென்றுவிட்ட அந்தநாளில் ;  
  
அவளுடைய உருவைக் கண்டும் மொழியைக் கேட்டும் இதழ் முதலியவற்றை உண்டும் உயிர்த்தும் உற்றும் உணர்ந்த அரசனுடைய கண் முதலிய ஐம்பொறிகளிலும் காமனுடைய மலரம்புகள் ஐந்தும் தைத்தன் வென்க. வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு பொருள்களால் நுகரப்படுவன ஒரே காலத்தில் அவள் கண்ணே நுகரப்பட்டன என்றார் ; ¹"கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும், ஒண் டொடி கண்ணே யுள" என்பது ஈண்டு நினைத்தற்குரியது. மயிலை முதலியன காமன் அம்புகள் ; மலர்களாதலின் வாசங் கமழ என்றார். போரிலே பலரைப் புறங்கண்ட வீரனாயினும் ஓர் மெல்லியற்கு எளிய னாயினான் என்பார், 'பலர் புறங் கண்டோன் பணிந்து தொழில் கேட்ப' என்றார். உரையாள்-தன் வரலாற்றினை உரைத்திலளாய். போயினள் என முடித்து, அங்ஙனம் போயின அந்நாளில் என்றுரைக்க.  
  
¹ குறள், 1101.

### [25.6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.25.6)

ஆபுத்திரனாடு அடைந்த காதை  
  
45 யாங்கொளித் தனளவ் விளங்கொடி யென்றே  
வேந்தரை யட்டோன் மெல்லியற் றேர்வுழி  
  
44  
  
உரை  
  
45  
  
யாங்கு ஒளித்தனள் அவ்விளங்கொடி என்றே - அவ்விளங் கொடி போல்வாள் யாண்டுச் சென்று மறைந்தனள் என, வேந்தரை அட்டோன் மெல்லியல் தேர்வுழி - பகை மன்னரை வென்ற வேந் தன் அவளைத் தேடும்பொழுது, நிலத்திற் குளித்து நெடுவிசும்பு ஏறிச் சலத்தில் திரியும் ஓர் சாரணன் தோன்ற-நிலத்துட் புகுந்து நீண்டவானில் இவர்ந்து நீர்மீது திரியும் ஒரு சாரணன் தோன்ற ;  
  
நீரிற் குளித்தல்போல் நிலத்திற் குளித்து எனவும், நிலத்திலிரிதல்போல் சலத்தில் திரியும் எனவும் விரித்துரைத்துக் கொள்க. நிலத்திற் குளித்தல் முதலியன சித்தி எனவும் இருத்தியெனவும் படும் ; ¹"நீரினிற் பூவில் வானில் நினைத்துழியொதுங்குகின்ற, சாரணரெண்ம ராவார் சமணரி லிருத்தி பெற்றோர்" என்பதுங் காண்க. இனி ²"இருநிலம் புகுதலும் ஒருவிசும் பிவர்தலும், வருதிரை நெடுங்கடல் வாய்க்கொண் டுமிழ்தலும், மந்தர மேந்தலு மென்றிவை பிறவும், பண்டியல் விச்சை பயிற்றிய மாக்களைக், கண்டுமறிதும்" என்பதனால் நிலத்திற் குளித்தல் முதலியன சில வித்தைகளாதலும் பெற்றாம்.  
  
¹ சூடா நிகண்டு. 2 ; 4. ² பெருங்கதை. 3 - 4 : 86 - 90.

### [25.7](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.25.7)

ஆபுத்திரனாடு அடைந்த காதை  
  
50 நிலத்திற் குளித்து நெடுவிசும் பேறிச்  
சலத்திற் றிரியுமோர் சாரணன் றோன்ற  
மன்னவ னவனை வணங்கி முன்னின்று  
என்னுயி ரனையா ளீங்கொளித் தாளுளள்  
அன்னா ளொருத்தியைக் கண்டிரொ வடிகள்  
சொல்லுமி னென்று தொழவவ னுரைப்பான்  
கண்டிலே னாயினுங் காரிகை தன்னைப்  
பண்டறி வுடையேன் பார்த்திப கேளாய்  
  
48  
  
உரை  
  
53  
  
மன்னவன் அவனை வணங்கி முன் நின்று - அரசன் அம் முனிவனை வணக்கஞ் செய்து முன்னே நின்று, என் உயிரனையாள் ஈங்கொளித்தாள் உளள் - என் உயிர்போல்வாள் ஈண்டு நின்றும் மறைந்தாள் உளள், அன்னாள் ஒருத்தியைக் கண்டிரோ அடிகள் சொல்லுமின் என்று தொழ அவன் உரைப்பான் - அத் தன்மை யுடையாளாகிய நங்கை ஒருத்தியை அடிகள் கண்டீரோ கூறுவீராக என்று பணிய அச் சாரணன் மொழிவான், கண்டிலேன் ஆயினும் காரிகை தன்னை-அம் மங்கையை யான் இப்பொழுது கண்டிலேன் ஆனாலும், பண்டறிவுடையேன் பார்த்திப கேளாய் - முன்னர் அவளைப்பற்றி அறிதலுடையேன் அரசனே கேட்பாயாக ; அறிவு உடையேன் - அறிதலுடையேன்.

### [25.8](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.25.8)

ஆபுத்திரனாடு அடைந்த காதை  
  
55 நாக நாடு நடுக்கின் றாள்பவன்  
வாகை வேலோன் வளைவணன் றேவி  
வாச மயிலை வயிற்றுட் டோன்றிய  
பீலிவளை யென்போள் பிறந்த வந்நாள்  
இரவிகுலத் தொருவ னிணைமுலை தோயக்  
கருவொடு வருமெனக் கணியெடுத் துரைத்தனன்  
  
54  
  
உரை  
  
59  
  
நாக நாடு நடுக்கின்று ஆள்பவன் - நாக நாட்டினை இடுக்கண் நீக்கி அரசு புரிவோனாகிய, வாகை வேலோன் வளைவணன்- வெற்றி பொருந்திய வேற்படையினையுடைய வளைவணனின், தேவி வாச மயிலை வயிற்றுள் தோன்றிய - மனைவியாகிய வாசமயிலை என்பாளது வயிற்றில் உதித்த, பீலிவளை என்போள் பிறந்த அந் நாள் - பீலிவளை எனப் பெயரிய இம் மங்கை பிறந்த அந்நாளில், இரவிகுலத்து ஒருவன் இணைமுலை தோயக் கருவொடு வரும் எனக் கணி எடுத்து உரைத்தனன் - பரிதி குல மன்னவ னொருவன்பாற் கூடிக் கருப்பத்துடன் வருவாள் என்று சோதிட நூல்வல்லான் எடுத்துக்கூறினன் ;  
  
நடுக்கு இன்று - நடுங்குதல் இல்லையாக. கணி - நிமித்திகன்.

### [25.9](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.25.9)

ஆபுத்திரனாடு அடைந்த காதை  
  
60  
  
65 ஆங்கப் புதல்வன் வரூஉ மல்லது  
பூங்கொடி வாராள் புலம்ப லிதுகேள்  
தீவகச் சாந்தி செய்யா நாளுன்  
காவன் மாநகர் கடல்வயிறு புகூஉம  
மணிமே கலைதன் வாய்மொழி யாலது  
தணியா திந்திர சாபமுண் டாகலின்  
  
60  
  
உரை  
  
65  
  
ஆங்கு அப் புதல்வன் வரூஉம் அல்லது பூங்கொடி வாராள் - அவள் வயிற்றில் தோன்றிய புதல்வன் வருவானே யன்றி அவள் வாராள், புலம்பல் - அதன் பொருட்டு வருந்தாதே, இதுகேள் - இதனைக் கேட்பாயாக, தீவகச்சாந்தி செய்யாநாள் உன் காவல் மாநகர் கடல் வயிறு புகூஉம் - இந்திரவிழவினைச் செய்யாது கைவிட்ட நாளில் நினது காவலமைந்த பெரிய நகரம் கடல் வயிற்றில் புகும், மணிமேகலை தன் வாய்மொழியால் அது - அங்ஙனம் கடல்கோள் நிகழ்வதுமணிமேகலா தெய்வத்தின் மெய்ம்மொழியாலாம், தணியாது இந்திர சாப முண்டாகலின் - இந்திரனது சாபமும் உண்மையான் அது தவிராது ;  
  
அப் புதல்வன் - அங்ஙனம் அவள் கருவில் உதித்த புதல்வன். தீவகச் சாந்தி - இந்திர விழா. மணிமேகலை - மணிமேகலா தெய்வம் அது - நகர் கடலிற் புகுவது. ஆல் என்பதனை அசையாக்கி, அதுவாய் மொழி என்றுரைத்தலுமாம். இந்திர சாபமும் என உம்மை விரிக்க

### [25.10](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.25.10)

ஆபுத்திரனாடு அடைந்த காதை  
  
70 ஆங்குப்பதி யழிதலு மீங்குப்பதி கெடுதலும்  
வேந்தரை யட்டோய் மெய்யெனக் கொண்டிக்  
காசின் மாநகர் கடல்வயிறு புகாமல்.  
வாசவன் விழாக்கோள் மறவே லென்று  
மாதவன் போயின வந்நாட் டொட்டுமிக்  
காவன் மாநகர் கலக்கொழி யாதால்  
  
66  
  
உரை  
  
71  
  
ஆங்குப் பதி அழிதலும் ஈங்குப் பதி கெடுதலும்-அவ்வாறு நகரம் அழிவெய்துதலும் இவ்விடத்து அரசு கேடுறலும், வேந்தரை அட்டோய் மெய்யெனக் கொண்டு-பகை மன்னரை வென்ற பெரு வேந்தே உண்மை என்று கொண்டு, இக் காசு இல் மா நகர் கடல் வயிறு புகாமல்-குற்றமற்ற இப் பெருநகரம் கடல் வயிற்றுட் புகா திருக்கும் பொருட்டு, வாசவன் விழாக்கோள் மறவேல் என்று - இந்திரவிழாக் கொண்டாடுதலை மறவாதே என வுரைத்து, மாதவன் போயின அந்நாள் தொட்டும் - சாரணன் சென்ற அந் நாள் தொடங்கி, இக் காவன் மாநகர்க் கலக்கு ஒழியாதால் - காவலமைந்த இப் பெரிய நகரிலுள்ளார் கலக்கம் நீங்கப்பெறார் ;  
  
ஆங்கு - அந்நாளில் என்றுமாம். ஈங்கு: அசையுமாம். மாதவன் போயினன் ; போயின அந்நாள்தொட்டு என வேறு அறுத்துரைக்க.

### [25.11](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.25.11)

ஆபுத்திரனாடு அடைந்த காதை  
  
75 தன்பெயர் மடந்தை துயருறு மாயின்  
மன்பெருந் தெய்வம் வருதலு முண்டென  
அஞ்சினே னரசன் றேவியென் றேத்தி  
நன்மனம் பிறந்த நாடகக் கணிகையை  
என்மனைத் தருகென விராசமா தேவி  
  
72  
  
உரை  
  
76  
  
தன் பெயர் மடந்தை துயருறுமாயின் - தன் பெயரினைக் கொண்ட மணிமேகலை துன்புறுவாளானால், மன்பெருந் தெய்வம் வருதலும் உண்டு என-நிலைபெற்ற பெரிய மணிமேகலா தெய்வம் தோன்றுதலும் உண்டு என்று, அஞ்சினேன் அரசன் தேவி என்று ஏத்தி-மன்னவன் மாதேவி! அச்சமுற்றேன் எனத் துதித்து, நன் மனம் பிறந்த நாடகக் கணிகையை என்மனைத் தருக என - நல்லுள்ளம் தோன்றிய மணிமேகலையை என தில்லத்தின்கண் தருக என வேண்ட ;  
  
அரசன் தேவி ! அஞ்சினேன் எனத்துதித்து, நாடகக் கணிகையை என் மனைத் தருக என்று சித்திராபதி கேட்ப வென்க. நன்மனம் நன்னெறிக்கண் செல்லும் மனம்.

### [25.12](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.25.12)

ஆபுத்திரனாடு அடைந்த காதை  
  
80 கள்ளும் பொய்யும் காமமும் கொலையும்  
உள்ளக் களவுமென் றுரவோர் துறந்தவை  
தலைமையாக் கொண்டநின் தலைமையில் வாழ்க்கை  
புலைமையென் றஞ்சிப் போந்த பூங்கொடி  
நின்னொடு போந்து நின்மனைப் புகுதாள்  
என்னோ டிருக்குமென் றீங்கிவை சொல்வுழி  
  
76  
  
உரை  
  
82  
  
இராசமாதேவி - மன்னன் மனைவி, கள்ளும் பொய்யும் காமமும் கொலையும் உள்ளக் கனவும் என்று உரவோர் துறந்தவை- கள்ளும் பொய்யும் காமமும் கொலையும் மனத்திற்றோன்றுங் களவும் தீயனவென்று அறிவுடையோரால் நீக்கப்பட்டவற்றை, தலைமையாகக் கொண்ட நின் தலைமை இல் வாழ்க்கை-முதன்மையாகக் கொண்ட நினது கடையான பரத்தமைத் தொழிலை, புலைமை என்று அஞ்சிப் போந்த பூங்கொடி-புன்மையுடைத்தென அஞ்சி வெளிப்பட்ட மணிமேகலை, நின்னோடு போந்து நின்மனைப் புகுதாள் - நின்னுடன் வந்து நின் மனையை அடைதற் குரிய ளாகாள், என்னோடு இருக்கும் என்று ஈங்கிவை சொல்வுழி-என்னுடன் இருப்பாள் என்று இவ்வாறு கூறும்பொழுது ;  
  
உரவோர் துறந்தனவாகிய கள் முதலியவற்றைப்புலைமை யென்று அஞ்சிப் போந்த வென்க. தலைமை இல் வாழ்க்கை - கடைப்பட்ட வாழ்க்கை ; ¹" மேலோ ராயினும் நூலோ ராயினும், பால்வகை தெரிந்த பகுதியோ ராயினும், பிணியெனக் கொண்டு பிறக்கிட்டொழியும், கணிகையர் வாழ்க்கை கடையே" என்பதுங் காண்க. பூங்கொடி புகுதாள் இருக்கும் என்று இராசாமாதேவி சொல்வுழி யென்க,.  
  
¹ சிலப் 11 : 180-3.

### [25.13](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.25.13)

ஆபுத்திரனாடு அடைந்த காதை  
  
85 மணிமே கலைதிற மாதவி கேட்டுத்  
துணிகயந் துகள்படத் துளங்கிய வதுபோல்  
தெளியாச் சிந்தையள் சுதமதிக் குரைத்து  
வளியெறி கொம்பின் வருந்திமெய்ந் நடுங்கி  
அறவண ரடிவீழ்ந் தாங்கவர் தம்முடன்  
மறவேன் மன்னவன் றேவிதன் பால்வரத  
  
82  
  
உரை  
  
88  
  
மணிமேகலை திறம் மாதவி கேட்டு-மாதவி மணிமேகலை காவலிலிருக்குஞ் செய்தியைக் கேட்டு, துணி கயம் துகள்படத் துளங்கிய வதுபோல்-தெளிந்த நீரினையுடைய குளம் புழுதி படிதலால் கலங்கிய தன்மைபோல, தெளியாச் சிந்தையள்-கலக்கமுற்ற உள்ளமுடையளாய், சுதமதிக்கு உரைத்து-அதனைச் சுதமதிக்குக் கூறி, வளி ஏறி கொம்பின் வருந்தி மெய்ந்நடுங்கி - காற்றா னலைக் கப்பட்ட பூங்கொம்பு போல வருந்தி உடல் நடுங்கி, அறவணர் அடி வீழ்ந்து ஆங்கவர் தம்முடன்-அறவணவடிகள் அடிமிசை வீழ்ந்து அவருடன், மற வேல் மன்னன் தேவி தன்பால் வர - வெற்றி வேல் வேந்தனது தேவியிடம் வர ;  
  
துணி - தெளிந்த. துளங்குதல் - நடுங்குதல்; ஈண்டுக் கலங்குதல். துகள்பட - சோறுண்டாக என்றுமாம். தெளிந்த உள்ளம் கலங்கிய தென்பது உவமையாற் பெற்றாம்:

### [25.14](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.25.14)

ஆபுத்திரனாடு அடைந்த காதை  
  
90 தேவியு மாயமுஞ் சித்திரா பதியும்  
மாதவி மகளு மாதவர்க் காண்டலும்  
எழுந்தெதிர் சென்றாங் கிணைவளைக் கையால்  
தொழுந்தகை மாதவன் துணையடி வணங்க  
  
89  
  
உரை  
  
92  
  
தேவியும் ஆயமும் சித்திராபதியும் மாதவி மகளும் மாதவர்க் காண்டலும்-அறவண முனிவரைக் கண்டவளவில் இராசமா தேவியும் சிலதியர் கூட்டமும் சித்திராபதியும் மணிமேகலையும், எழுந்து எதிர் சென்றாங்கு - எழுந்து எதிரே சென்று, இணை வளைக் கையால் தொழுந்தகை மாதவன் துணைஅடி வணங்க - வணங்குந் தகுதியுடைய அறவணர் இணையடிகள் இரண்டு வளைய லணிந்த கைகளாலும் வணக்கஞ் செய்ய அறிவுண்டாக என்று ஆங்கவன் கூறலும் - அடிகள் அறிவுண்டாக என வாழ்த்தலும்;

### [25.15](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.25.15)

ஆபுத்திரனாடு அடைந்த காதை  
  
95  
  
100 அறிவுண் டாகவென் றாங்கவன் கூறலும்  
இணைவளை நல்லாள் இராசமா தேவி  
அருந்தவர்க் கமைந்த வாசனங் காட்டித்  
திருந்தடி விளக்கிச் சிறப்புச் செய்தபின்  
யாண்டுபல புக்கநும் மிணையடி வருந்தவென்  
காண்டகு நல்வினை நும்மையீங் கழைத்தது  
நாத்தொலை வில்லா யாயினுந் தளர்ந்து  
மூத்தவிவ் யாக்கை வாழ்கபல் லாண்டெனத்  
  
94  
  
உரை  
  
100  
  
இணைவனை நல்லாள் இராசமாதேவி - வளையல் சேர்ந்த கைகளையுடைய அரசன் பெருந்தேவி, அருந்தவர்க்கு அமைந்த ஆசனம் காட்டி-தவத்தோர்க்கு உரியஆதனத்தைக்காட்டி, திருந்து அடி விளக்கிச் சிறப்புச் செய்தபின் - அவரது திருந்திய அடியினை விளக்கிச் சிறப்புச் செய்த பின்னர், யாண்டுபல புக்க நும் இணையடி வருந்த என காண்டகு நல்வினை நும்மை ஈங்கு அழைத்தது - காணுதற்குத்தக்க எனது நல்வினையானது யாண்டு பல சென்று மூத்த நும் திருவடிகள் வருந்துமாறு நும்மை ஈண்டு அழைத்தது, நாத்தொலைவு இல்லையாயினும் தளர்ந்து மூத்தது இவ் யாக்கை வாழ்க பல்லாண்டு என - நாமெலிதலில்லையாயினும் தளர்ந்து முதிர்ந்த இவ்வுடம்பு பன்னெடுநாள் வாழ்வதாக எனத் துதிக்க;  
  
காட்டி அதில் இருக்கச்செய்து எனவும், இணையடி வருந்த வருமாறு அழைத்தது எனவும் விரித்துரைத்துக் கொள்க. நாத்தொலை வின்மை- சொற் சோர்வின்மை; சொல்வன்மை. "நரைமுதிர் யாக்கை நடுங்கா நாவின், உரை மூதாளன்" (12 : 3-4) என முன்னரும் வந்துளது.

### [25.16](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.25.16)

ஆபுத்திரனாடு அடைந்த காதை  
  
தேவி கேளாய் செய்தவ யாக்கையின்  
மேவினே னாயினும் வீழ்கதிர் போன்றேன்.  
பிறந்தார் மூத்தார் பிணிநோ யுற்றார்  
இறந்தா ரென்கை யியல்பே யிதுகேள்  
  
101  
  
உரை  
  
104  
  
தேவி கேளாய் - அரச மாதேவியே கேட்பாயாக, செய்தவ யாக்கையின் மேவினேனாயினும் வீழ்கதிர்போன்றேன் - தவம் புரியும் உடலிற் பொருந்தினேனாயினும் மறையுங் கதிரவனைப் போன்றேன், பிறந்தார் மூத்தார் பிணிநோ யுற்றார் இறந்தார் என்கை இயல்பே - உலகின்கட் பிறந்தோ ரனைவரும் பிணி மூப்புற்று இறப்பார் என்பது இயற்கையே;  
  
தவயாக்கை-தவத்தால் வந்த உடம்பென்றுமாம், இறப்பிற்கு அத்தமிக்கும் ஞாயிற்றை உவமை கூறுதல் பௌத்த நூன் மரபாதலை, "சாக்கா டென்ப தருவுருத் தன்மை, யாக்கை வீழ்கதி ரெனமறைந்திடுதல்" (30: 102-3) என, இந் நூலிற் பின் வருதலானு மறிக. பிணி நோய் - பிணித்துன்பம் என்றும், பிணித்தலையுடைய நோய் என்றும் உரைத்தலுமாம். உலகில் யாவரும் பிறந்தார் மூத்தார் நோயுற்றார் இறந்தார் என்று கூறப்படுதல் இயல்பே என்றலுமாம். பிறப்புப் பிணி மூப் பிறப்புக்கள் உடம்பிற்கு இயற்கை யென்றபடி இது கேள் - இதனைக் கேட்பாயாக;

### [25.17](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.25.17)

ஆபுத்திரனாடு அடைந்த காதை  
  
105  
  
110 பேதைமை செய்கை யுணர்வே யருவுரு  
வாயி லூறே நுகர்வே வேட்கை  
பற்றே பவமே தோற்றம் வினைப்பயன்  
இற்றென வகுத்த இயல்பீ ராறும்  
பிறந்தோ ரறியிற் பெரும்பே றறிகுவர்  
அறியா ராயி னாழ்நர கறிகுவர  
  
105  
  
உரை  
  
110  
  
பேதைமை செயகை உணர்வே அருவுரு வாயில் ஊறே நுகர்வே வேட்கை பற்றே பவமே தோற்றம் வினைப்பயன் இற்றென வகுத்த இயல்பு ஈராறும் - பேதைமை முதல் வினைப்பயன் ஈறாக இவையென வகுக்கப்பட்ட பன்னிரண்டு இயல்புகளையும் பிறந்தோர் அறியில் பெரும்பேறு அறிகுவர் - பிறவியெடுத்தோர் அறிந்திடின் ஒப்பற்ற பெரும் பேற்றினை யறிவர், அறியார் ஆயின் ஆழ் நரகு அறிகுவர் - அவற்றை அறியாரானால் துன்பம் நிறைந்த நிரயத்தினை யறிவர்;  
  
பேதைமை-அவிச்சை, செய்கை - கன்மம். உணர்வு - விஞ்ஞானம், அருவுரு - நாமரூபம். வாயில் - ஐம்பொறிகளும் உள்ளமும். ஊறு- பொறிபுலன்களின் இயைபு. நுகர்வு-இன்பதுன்ப நுகர்ச்சி. வேட்கை- அவா. பற்று - புலன்களைப் பற்றிக்கொள்ளுதல் - பவம் - கன்மவீட்டம் பயன்றரு முறைப்படி சார்தல். தோற்றம் - கதிகளிற் பிறத்தல். வினைப் பயன் - கன்மபலம். இவற்றைப் பன்னிரு நிதானம் என்பர். இப் பன்னிரண்டின் இயல்புகளையும் இந்நூலின் 30ஆம் காதையால் அறிக. பெரும்பேறு - நிருவாணம் எனப்படும். நரகு அறிகுவர் என்றது அதனில் அழுந்துவர் என்றபடி.

### [25.18](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.25.18)

ஆபுத்திரனாடு அடைந்த காதை  
  
பேதைமை யென்ப தியாதென வினவின்  
ஓதிய விவற்றை யுணராது மயங்கி  
இயற்படு பொருளாற் கண்டது மறந்து  
முயற்கோ டுண்டெனக் கேட்டது தெளிதல்  
  
111  
  
உரை  
  
114  
  
பேதைமை என்பது யாது என வினவின் - பேதைமை யெனப்படுவது எத்தகைத்து என வினவினால், ஓதிய இவற்றை உணராது மயங்கி - கூறப்பட்ட இவ்வியல்புகளை யறியாமல் மயங்கி, இயற்படு பொருளால் கண்டது மறந்து - இயற்கையாகத் தோன்றும் பொருள்களால் தான் கண்டதனை மறந்து, முயற்கோடு உண்டு எனக் கேட்டது தெளிதல் - முயற்கொம்பு உண்டு என்று கேட்டதனைத் தெளிதலாம்;  
  
இவற்றை-இப் பன்னிரண்டினையும். கேட்டது தெளிதல்-கேட்ட தாகிய பொய்யைமெய்யெனத் தெளிதல். பேதைமை என்பது மயங்கிக் கண்டது மறந்து கேட்டது தெளிதல் என்க.

### [25.19](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.25.19)

ஆபுத்திரனாடு அடைந்த காதை  
  
115  
  
120  
உலக மூன்றினு முயிரா முலகம்  
அலகில பல்லுயி ரறுவகைத் தாகும்  
மக்களுந் தேவரும் பிரமரும் நரகருந்  
தொக்க விலகும் பேயு மென்றே  
நல்வினை தீவினை யென்றிரு வகையால்  
சொல்லப் பட்ட கருவினுட் டோன்றி  
வினைப்பயன் விளையுங் காலை யுயிர்கட்கு  
மனப்பே ரின்பமுங் கவலையுங் காட்டும்  
  
115  
  
உரை  
  
122  
  
உலகம் மூன்றினும் உயிராம் உலகம் அலகில - மூன்றுலகின் கண்ணும் உயிராகிய உலகம் அளவிறந்தனவாம், பல்லுயிர் அறுவகைத்து ஆகும் மக்களும் தேவரும் பிரமரும் நரகரும் தொக்க விலங்கும் பேயும் என்றே - அப் பல வுயிர்களும் மக்கள் தேவர் பிரமர் நரகர் தொகுதியாய விலங்கு பேய் என்று ஆறு வகையினை யுடையவாம், நல்வினை தீவினை என்ற இருவகையால் சொல்லப்பட்ட கருவினுள் தோன்றி - நல்வினை தீவினை என்ற இருதிறத்தானும் மேற்கூறிய அறுவகைப்பட்ட கருவினுள்ளே தோன்றி, வினைப்பயன் விளையும் காலை உயிர்கட்கு மனப்பேரின்பமும் கவலையும் காட்டும் - வினைகளானாய பயன் உண்டாகும் பொழுது உயிர்களுக்கு உளத்தில் பேரின்பமும் கவலையும் காட்டும்;  
  
பௌத்தநூல் கூறும் உலகம் முப்பத்தொன்றும் மேல் கீழ் நடு என்னும் மூன்றனுள் அடங்குதலின் 'உலகம் மூன்றினும்' என்றார். உயிராம் உலகம் - சேதனப் பிரபஞ்சம் என்றபடி. பல்லுயிர் - அள விறந்த உயிர். அப் பல்லுயிரும் என்று அறுவகைத்தாகு மென்க. செய்கை கூறத் தொடங்கினவர் அதற்கு அங்கமாக உயிர்களை முதலிற் கூறின ரென்க. செய்கை யென்பதனை வருவித்து, செய்கை இருவகையால் தோன்றிக் காட்டும் என முடிக்க.

### [25.20](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.25.20)

ஆபுத்திரனாடு அடைந்த காதை  
  
125  
  
130  
தீவினை யென்ப தியாதென வினவின்  
ஆய்தொடி நல்லா யாங்கது கேளாய்  
கொலையே களவே காமத் தவிழைவு  
உலையா வுடம்பிற் றோன்றுவ மூன்றும்  
பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில்  
சொல்லெனச் சொல்லிற் றோன்றுவ நான்கும்  
வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சியென்று  
உள்ளந் தன்னி னுருப்பன மூன்றுமெனப்  
பத்து வகையாற் பயன்றெரி புலவர்  
இத்திறம் படரார் படர்குவ ராயின்  
விலங்கும் பேயு நரகரு மாகிக்  
கலங்கிய வுள்ளக் கவலையிற் றோன்றுவர்  
  
123  
  
உரை  
  
134  
  
தீவினை என்பது யாது என வினவின் ஆய்தொடி நல்லாய் ஆங்கது கேளாய் - தீவினை எனப்படுவது யாது என்று வினவினால் ஆராய்ந்த வளையல்களை அணிந்த நங்காய் அதனைக் கேட்பாயாக, கொலையே களவே காமத் தீவிழைவு உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும் - கொலையும் களவும் காமமாகிய கொடிய விருப்பமும் என்று உடலின்கண் தோன்றுவன மூன்றும், பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில் சொல் எனச் சொல்லில் தோன்றுவ நான்கும்-பொய் குறளை கடுஞ்சொல் பயனில்சொல் என்று சொல்லிற் பிறப்பன நான்கும், வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சி என்று உள்ளந்தன்னில் உருப்பன மூன்றும் எனப் பத்து வகையாம் - விரும்பல் சினத்தல் மயக்க மெய்துதல் என மனத்தின்கண் எழுவன மூன்றும் எனப் பத்து வகையாகும், பயன்தெரி புலவர் இத்திறம் படரார் - வினைகளின் பயனை உணர்ந்த அறிஞர் கொலை முதலிய இத் தீய வழிகளிற் செல்லார், படர்குவர் ஆயின் - யாரேனும் அந்நெறிகளிற் செல்வராயின் அங்ஙனம் செல்லுபவர், விலங்கும் பேயும் நரகரும் ஆகிக் கலங்கிய உள்ளக் கவலையில் தோன்றுவர் - விலங்கும் பேயும் நரகருமாய்க் கலக்கமுற்ற உள்ளக் கவலையின்கட்படுவர்;  
  
காமத் தீவிழைவு - இணை விழைச்சு. எனவென ஒரு சொல் வருவிக்க. உலையா உடம்பு - தளராத வுடம்பு. குறளை - கோட்சொல், பயனில் சொல்-அறம் பொருள் இன்பங்களில் ஒன்றும் பயவாத சொல், வெஃகல் - விரும்புதல், பொல்லாக்காட்சி - மயக்க வறிவு. வெஃகல் முதலிய மூன்றும் முறையே காமம் வெகுளி மயக்கம் எனப்படும். படர் குவராயின் அங்ஙனம் படர்வோர் என விரித்துரைக்க.

### [25.21](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.25.21)

ஆபுத்திரனாடு அடைந்த காதை  
  
135  
  
140  
நல்வினை யென்ப தியாதென வினவில்  
சொல்லிய பத்தின் றொகுதியினீங்கிச்  
சீலந் தாங்கித் தானந் தலைநின்று  
மேலென வகுத்த வொருமூன்று திறத்துத்  
தேவரு மக்களும் பிரமரு மாகி  
மேவிய மகிழ்ச்சி வினைப்பய னுண்குவர்  
  
135  
  
உரை  
  
140  
  
நல்வினை என்பது யாது என வினவின் - நல்வினை எனப்படுவது எத்தகைத்து என்று வினவினால், சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கி-கூறப்பட்ட பத்துவகைக் குற்றங்களினின்றும் நீங்கி, சீலம் தாங்கித் தானம் தலை நின்று - சீலத்தை மேற்கொண்டு தானம் வழங்குதலில் நிற்றல்; அங்ஙனம் நிற்போர், மேல் என வகுத்த ஒரு மூன்று திறத்து - உயர்வுடையன என்று வகுக்கப் பட்ட மூவகையினை யுடைய, தேவரும் மக்களும் பிரமரும் ஆகி-வானவர் மக்கள் பிரமர் என்போராய், மேவிய மகிழ்ச்சி வினைப் பயன் உண்குவர் - பொருந்திய நல்வினைப் பயனை அனுபவிப்பர்.  
  
சீலம் - விலக்கியன வொழித்து விதித்தன செய்தல். கள்ளுண்ணாமை முதலிய ஐந்தும் ஐவகைச் சீலம் எனப்படும்; இவை இல்லறத்தார்க்குரியன. ஏனோர்க்கு இவற்றுடன் மூன்றும் ஐந்தும் கூட்டி எட்டும் பத்துமாம் என்பர். தானம் தலை நின்று என்புழித் தலைநின்று என்னும் எச்சத்தைத் தலைநிற்றல் எனத் திரித்தும், அங்ஙனம் நிற்போர் என விரித்தும் உரைக்க. நல்வினை என்பது நீங்கித் தாங்கி நிற்றல் என்க. மகிழ்ச்சிவினை-நல்வினை. செய்கையை நல்வினை தீவினை எனப் பாகுபாடு செய்தவர் பின் அவற்றி னியல்பை எதிர் நிரனிறை வகையால் விளக்கின ரென்க. "பேதைமை செய்கை" என்பது முதல் ஈண்டுக் கூறப்பட்ட முப்பத்தைந்து அடிகளும் இந்நூலின் 30ஆம் காதையில் இவ்வாறே வந்துள்ளமை அறியற்பாலது.

### [25.22](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.25.22)

ஆபுத்திரனாடு அடைந்த காதை  
  
145  
அரசன் றேவியொ டாயிழை நல்லீர்  
புரைதீர் நல்லறம் போற்றிக் கேண்மின்  
மறுபிறப் புணர்ந்த மணிமே கலைநீ  
பிறவறங் கேட்ட பின்னாள் வந்துனக்  
கித்திறம் பலவு மிவற்றின் பகுதியும்  
முத்தேர் நகையாய் முன்னுறக் கூறுவல்  
என்றவ னெழுதலு மிளங்கொடி யெழுந்து  
  
141  
  
உரை  
  
147  
  
அரசன் தேவியோடு ஆயிழை நல்லீர் - இராசமாதேவியுடனிருக்கின்ற மங்கைமீர், புரைதீர் நல்லறம் போற்றிக் கேண்மின் - குற்றமற்ற அருளறத்தினைப் போற்றிக் கேட்பீராக, மறு பிறப்பு உணர்ந்த மணிமேகலை நீ - மணிமேகலை! மறுபிறப்பினை யறிந்த நீ, பிறவறங் கேட்ட பின்னாள் - பிறசமய அறங்களைக் கேட்ட பின்னர், வந்து உனக்கு - உன்பால் வந்து, இத்திறம் பலவும் இவற்றின் பகுதியும் - இவ்வறநெறிகள் பலவற்றையும் இவற்றின் பகுதிகளையும், முத்தேர் நகையாய் முன்னுறக் கூறுவல் - முத்துப்போலும் பற்களையுடையாய் முற்படக் கூறுவேன், என்று அவன் எழுதலும் - என்று கூறி அறவண முனிவன் எழுந்தவளவில்;  
  
ஆயிழை நல்லீர் என்றது மாதவியையும் சுதமதியையும் ஆயத்தையும், அரசன் றேவியையும் விளித்தலுமாம். மாதவி முதலியோரை நோக்கிப் போற்றிக் கேண்மின் என்றுரைத்துப் பின் மணிமேகலையை நோக்கிப் பின்னான் வந்து முன்னுறக் கூறுவல் என்றுரைத்து எழுந்தனன் என்க.

### [25.23](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.25.23)

ஆபுத்திரனாடு அடைந்த காதை  
  
150  
  
155  
  
நன்றறி மாதவ னல்லடி வணங்கித்  
தேவியு மாயமுஞ் சித்திரா பதியும்  
மாதவர் நன்மொழி மறவா துய்ம்மின்  
இந்நகர் மருங்கின்யா னுறைவே னாயின்  
மன்னவன் மகற்கிவள் வருங்கூற் றென்குவர்  
ஆபுத் திரனா டடைந்ததற் பின்னாள்  
மாசின் மணிபல் லவந்தொழு தேத்தி  
வஞ்சியுட் புக்கு மாபத் தினிதனக்  
கெஞ்சா நல்லறம் யாங்கணுஞ் செய்குவல்  
எனக்கிட ருண்டென் றிரங்கல் வேண்டா  
மனக்கினி யீரென் றவரையும் வணங்கி  
  
147  
  
உரை  
  
158  
  
இளங்கொடி எழுந்து நன்று அறி மாதவன் நல்லடி வணங்கி - மணிமேகலை எழுந்து நன்னெறிகளை யுணர்ந்த பெருந்தவன் திருந்தடிகளை வணக்கஞ்செய்து, தேவியும் ஆயமும் சித்திராபதியும் -பெருந்தேவியும் ஆயத்தினரும் சித்திராபதியும், மாதவர் நன்மொழி மறவாது உய்ம்மின் - அறவணவடிகளின் அறமொழிகளை மறவாமல் உய்ப்பீராக, இந்நகர் மருங்கின் யான் உறைவேனாயின் - யான் இந்நகரத்தின்கண் தங்குவேனானால், மன்னவன் மகற்கு இவள் வருங் கூற்று என்குவர் - ஊரோர் இவள் அரசன் புதல்வனுக்குக் கூற்றாய் வந்தவள் என்று கூறுவர்; ஆகலின், ஆபுத்திரன் நாடு அடைந்து அதற்பின்னாள் - யான் ஆபுத்திரனது நாட்டை அடைந்து அதன் பின்னர், மாசில் மணி பல்லவம் தொழுது ஏத்தி-குற்றமற்ற மணிபல்லவத்தை வணங்கித்துதித்து, வஞ்சியுள் புக்கு மாபத்தினி தனக்கு எஞ்சா நல்லறம் யாங்கணும் செய்குவல் - வஞ்சி நகரத்துட் சென்று பத்தினித் தேவியாகிய கண்ணகியின் பொருட்டுக் குறைவில்லாத நல்லறத்தை எவ்விடத்தும் இயற்றுவேன், எனக்கு இடர் உண்டு என்று இரங்கல் வேண்டா - எனக்கு இன்னல் உண்டாகும் என்று நீவிர் வருந்தல் வேண்டா, மனக்கினியீர் என்று அவரையும் வணங்கி - உளத்திற் கினிமையுடையீர் என்று அவர்களையும் பணிந்து;  
  
மாதவியையும் சுதமதியையும் ஆயம் என அடக்கி, தேவியும் ஆயமும் சித்திராபதியும் என்றாள். தேவி முதலியன முன்னிலையிற் படர்க்கை. உய்த்தல்-கொண்டு செலுத்தல். மனக்கு: அத்துச்சாரியை தொக்கது. அவரையும் - தேவி முதலியோரையும்; உம்மை இறந்தது தழுவியது.

### [25.24](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.25.24)

ஆபுத்திரனாடு அடைந்த காதை  
  
160  
  
165  
  
வெந்தாறு பொன்போல் வீழ்கதிர் மறைந்த  
அந்தி மாலை யாயிழை போகி  
உலக வறவியு முதியாள் குடிகையும்  
இலகொளிக் கந்தமு மேத்தி வலங்கொண்டு  
அந்தர மாறாப் பறந்துசென் றாயிழை  
இந்திரன் மருமா னிரும்பதிப் புறத்தோர்  
பூம்பொழி லகவயி னிழிந்து பொறையுயிர்த்து  
ஆங்குவாழ் மாதவ னடியிணை வணங்கி  
இந்நகர்ப் போயா திந்நக ராளும்  
மன்னவன் யாரென மாதவன் கூறும்  
  
156  
  
உரை  
  
168  
  
வெந்து ஆறு பொன்போல் வீழ்கதிர் மறைந்த அந்தி மாலை ஆயிழை போகி-வெந்து ஆறியபொன்னைப்போல் வீழ்கின்ற கதிர்களையுடைய ஞாயிறு மறைந்த அந்திப்பொழுதில் மணிமேகலை அங்கு நின்றுஞ் சென்று, உலக வறவியும் முதியாள் குடிகையும் - உலக வறவியையும் சம்பாபதி கோயிலையும், இலகொளிக் கந்தமும் ஏத்தி வலங்கொண்டு - விளங்குகின்ற ஒளியினையுடைய கந்திற் பாவையையும் துதித்து வலங்கொண்டு, அந்தரம் ஆறாப் பறந்து சென்று ஆயிழை-இளங்கொடி விசும்பேவழியாகப் பறந்துசென்று, இந்திரன் மருமான் இரும்பதிப் புறத்து-இந்திரன் வழித்தோன்ற லாகிய புண்ணியராசனது பெரிய நகரத்தின். புறத்தில், ஓர் பூம் பொழில் அகவயின் இழிந்து பொறையுயிர்த்து - ஒரு பூஞ்சோலை யின் உள்ளிடத்தில் இறங்கி இளைப்பாறி, ஆங்கு வாழ் மாதவன் அடியிணை வணங்கி - ஆண்டுறையும் அருந்தவனாகிய தருமசாவகன் திருவடிகளை வணக்கஞ் செய்து, இந்நகர்ப் பேர் யாது இந்நகர் ஆளும் மன்னவன் யார் என - இந் நகரத்தின் பெயர் யாது இப் பதியை ஆளும் அரசன் யாவன் என வினவ ;  
  
அந்திப்பொழுதின் செக்கர் வானத்திற்குத் தீயில் வெந்து ஆறிய பொன் உவமம்; ¹ "வெந்தாறு பொன்னி னந்தி பூப்ப" என்பதுங் காண்க. மருமான் - வழித்தோன்றல்.  
  
¹ அகம்: 71.

### [25.25](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.25.25)

ஆபுத்திரனாடு அடைந்த காதை  
  
170  
  
175  
நாக புரமிது நன்னக ராள்வோன்  
பூமிசந் திரன்மகன் புண்ணிய ராசன்  
ஈங்கிவன் பிறந்த வந்நாட் டொட்டும்  
ஓங்குயர் வானத்துப் பெயல்பிழைப் பறியாது  
மண்ணு மரனும் வளம்பல தரூஉம்  
உண்ணின் றுருக்கு நோயுயிர்க் கில்லெனத்  
தகைமலர்த் தாரோன் றன்றிறங் கூறினன்  
நகைமலர்ப் பூம்பொழி லருந்தவன் றானென்.  
  
168  
  
உரை  
  
176  
  
மாதவன் கூறும்-அருந்தவனுரைப்பான், நாகபுரம் இது- இந்நகரத்தின் பெயர் நாகபுரம், நன்னகர் ஆள்வோன் - இந் நற் பதியை ஆள்வோன், பூமிசந்திரன் மகன் புன்னியராசன் - பூமி சந்திரன் புதல்வனாகிய புண்ணியராசன் என்போன், ஈங்கு இவன் பிறந்த அந்நாள்தொட்டு-இங்கு இவன் பிறந்த அந்நாள்தொடங்கி, ஓங்குயர் வானத்துப் பெயல் பிழைப்பு அறியாது - மிகவுயர்ந்த விசும்பின் மழை பிழைத்தலை யறியாது, மண்ணும் மரனும் வளம் பல தரூஉம்-பூமியும் மரங்களும் பல வளங்களையும் அளிக்கும், உள்நின்று உருக்கும் நோய் உயிர்க்குஇல்என-உயிர்கட்கு உள்ளே நின்று உருக்குகின்ற பிணிகள் இல்லை என்று, தகை மலர்த் தாரோன் தன் திறம் கூறினன் நகை மலர்ப் பூம்பொழில் அருந் தவன்தான் என்க-கட்டப்பட்ட மலர் மாலையினையுடைய அரசனது வரலாற்றினை ஒளி பொருந்திய மலர்களையுடைய பூஞ்சோலையின்க ணிருந்த பெருந்தவன் மொழிந்தனன்.  
  
தகை - கட்டிய. அகை மலர் எனப் பிரித்து, மலர்ந்த மலர் என்றலுமாம்.  
  
தொன்முது கணிகை கேட்டு வருந்தி வீழ்ந்து, "நகர் கலக்கொழி யாது; அஞ்சினேன்" என்று ஏத்தி, "கணிகையை என்மனைத் தருக" என, இராசமாதேவி ஈங்கிவை சொல்வுழி, மாதவி அறவணவடிகளுடன் வர, காண்டலும், எதிர் சென்று துணையடி வணங்க, அவன் 'அறிவுண் டாக' என்று கூறலும், இராசமாதேவி காட்டி விளக்கிச் செய்தபின், 'வாழ்க' என, 'தேவி கேளாய்; நல்லீர் கேண்மின்; மணிமேகலை, முன் னுறக் கூறுவல்' என்று அவனெழுதலும், இளங்கொடி எழுந்துவணங்கி நின்று வணங்கிப் போகி ஏத்தி வலங்கொண்டு சென்று இழிந்து பொறையுயிர்த்து வணங்கி, "யாது? யார்?" என, மாதவன் கூறும்; அங்ஙனம் கூறும் அருந்தவன் கூறினன் என, வினை முடிவு செய்க.

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.24.1) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.25](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.25) · Pramāṇa
