<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26.12 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 26.12

# Maṇimēkalai's Renunciation 26.12

Maṇimēkalai urai 26.12

- **Language:** Tamil

### [26.12](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26.12)

ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை  
  
80  
  
85  
  
90  
செருவேன் மன்னர் செவ்விபார்த் துணங்க  
அரைசுவீற் றிருந்து புரையோர்ப் பேணி  
நாடகங் கண்டு பாடற் பான்மையில்  
கேள்வி யின்னிசை கேட்டுத் தேவியர்  
ஊடற் செவ்வி பார்த்துநீ டாது  
பாடகத் தாமரைச் சீறடி பணிந்து  
தேமரு கொங்கையிற் குங்கும மெழுதி  
அங்கையிற் றுறுமலர் சுரிகுழற் சூட்டி  
நறுமுகை யமிழ்துறூஉந் திருநகை யருந்தி  
மதிமுகக் கருங்கட் செங்கடை கலக்கக்  
கருப்பு வில்லி யருப்புக்கணை தூவத்  
தருக்கிய காமக் கள்ளாட் டிகழ்ந்து  
தூவறத் துறத்தல் நன்றெனச் சாற்றித  
  
80  
  
உரை  
  
92  
  
செருவேல் மன்னர் செவ்விபார்த்து உணங்க-போர் புரியும் வேற்படையினையுடைய வேந்தர் தம் குறை கூறுதற்கேற்ற காலத்தினை நோக்கி வாட, அரைசு வீற்று இருந்து புரையோர்ப்பேணி-பெரியோரை விரும்பித் துணைக்கொண்டு அரசு புரிந்து செம்மாந்திருந்து, நாடகம் கண்டு - நாடகத்தினைக் கண்டு, பாடற்பான்மையின் கேள்வி இன்னிசை கேட்டு, பாடுதன் முறைமையுடைய கேள்விபொருந்திய இனியிசையைக் கேட்டு, தேவியர் - மனைவியரின் ஊடற் செவ்வி பார்த்து - ஊடுஞ் செவ்வியை நோக்கி,நீடாது - அது நீட்டியாவாறு, பாடகத் தாமரைச் சீறடி பணிந்து- பாடகமணிந்துள்ள தாமரை மலரைப் போன்ற சிறிய அடிகளை வணங்கி, தேமரு கொங்கையில் குங்குமம் எழுதி-அழகிய கொங்கைகளில் குங்குமக் குழம்பால் எழுதி, அங்கையில் துறுமலர் சுரிகுழல் சூட்டி - நெருங்கிய மலர்களை அழகிய கையினால் சுரிந்த கூந்தலின் கண் சூட்டி, நறுமுகை அமிழ்து உறூஉந் திருநகை அருந்தி-நறிய முகிழ்போலும் அழகிய பற்களிற் பொருந்திய அமிழ்தினையுண்டு, மதிமுகக் கருங்கண் செங்கடை கலக்க-திங்களனையமுகத்திலுள்ள கரிய கண்களின் சிவந்த கடை கலக்குறுத்த, கருப்பு வில்லி அருப்புக்கணை தூவ - கரும்பினை வில்லாகக்கொண்ட காமன் முகையறா மலராகிய அம்புகளைப் பொழிய, தருக்கிய காமக் கள்ளாட்டு இகழ்ந்து - செருக்குற்ற காமமாகிய கள்ளையுண்டு விளையாடும் விளையாட்டினை இகழ்ந்து, தூ அறத்துறத்தல் நன்று எனச் சாற்றிபற்றுக்கோடு இல்லையாகத் துறத்தல் நல்லது எனக் கூறி;  
  
மன்னர் செவ்விபார்த்தலாவது தம் குறை கூறுதற் கேற்ற மனமொழி மெய்கள் இனியனாங் காலம் பார்த்தல். 1 "செவ்வி அறம்பார்க்கும்" என்புழிப் பரிமேலழகர் உரைத்தமை காண்க. புரையோர் - அறிவில் மேம்பட்ட அமைச்சர் புரோகிதர் முதலாயினர். கேள்வி - சுருதி. ஊடல்-கலவியின்பம் பற்றிப் புலத்தல்; அஃது அளவிற் பெருகலாகா தென்பதை, 2 "உப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது, மிக்கற்றால் நீளவிடல்" என்பதனா லறிக. ஊடல் நீடாது பணிந்து எழுதிச் சூட்டி யென்க. திரு நகை உறும் அமிழ்து என மாறுக. உணங்க வீற்றிருந்து கண்டு கேட்டு அருந்தித் தருக்கிய காமக் கள்ளாட்டு என முடிக்க. துவரத் துறத்தல் என்னும் பாடத்திற்கு முற்றத் துறத்தல் என்று பொருள் கொள்க.  
  
1 குறள். 130. 2 குறள். 1302.

- [Previous: 26.11](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26.11)
- [Next: 26.13](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26.13)
- [Up: 26](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.25.86-91) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26.12](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26.12) · Pramāṇa
