<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26.16 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 26.16

# Maṇimēkalai's Renunciation 26.16

Maṇimēkalai urai 26.16

- **Language:** Tamil

### [26.16](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26.16)

ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை  
  
115  
  
துயர்நிலை யுலகங் காத்த லின்றிநீ  
உயர்நிலை யுலகம் வேட்டனை யாயின்  
இறுதி யுயிர்க ளெய்தவு மிறைவ  
பெறுதி விரும்பினை யாகுவை யன்றே  
தன்னுயிர்க் கிரங்கான் பிறவு யிரோம்பு  
மன்னுயிர் முதல்வ னறமுமீ தன்றால்  
மதிமா றோர்ந்தனை மன்னவ வென்றே  
முதுமொழி கூற முதல்வன் கேட்டு  
  
112  
  
உரை  
  
119  
  
துயர்நிலை உலகம் காத்தல் இன்றி நீ-நீ துன்புறும் நிலையில் உள்ள உலகத்தினைப் பாதுகாத்தலின்றி, உயர்நிலை உலகம் வேட்டனையாயின்-முத்தியுலக மெய்துதலை விரும்பினையானால், இறுதி உயிர்கள் எய்தவும் இறைவ - அரசே! உயிர்கள் துன்புற்று மரணமடையவும், பெறுதி விரும்பினை ஆகுவை அன்றே - நீ நினக்கு ஊதியமாகிய நிருவாணத்தையே விரும்பினாயாவையன்றே, தன் உயிர்க்கு இரங்கான் பிறவுயிர் ஓம்பும் - தனது உயிர் துன்பத்தால் வருந்துதற்கு இரங்காமல் பிறவுயிர்களைப் பாதுகாக்கும், மன்னுயிர் முதல்வன் அறமும் ஈது அன்றால் - புத்த தேவனது அறமும் இதுவன்று ஆகலான், மதிமாறு ஓர்ந்தனை மன்னவ என்றே - மன்னவனே நீ மாறுபட்ட சிந்தனையைக் கடைப்பிடித்தனை என, முதுமொழி கூற முதல்வன் கேட்டு - அறிவுரைகளைக் கூறப் புண்ணியராசன் அதனைக் கேட்டு;  
  
துயர் நிலை யுலகம் என்புழி உலகம் உயிர்களை யுணர்த்திற்று. உயர்நிலை யுலகம் - வீட்டுலகம்; ¹"உயர்நிலை யுலகமுஞ் சிறிது" என்பதுங் காண்க. பெறுதி - பேறு; ஊதியம். இரங்குதல் ஓம்புதல் என்னும் வினைகளை ஏனையிடத்துங் கூட்டி, இரங்கிக் காவாமல் என்றும் இரங்கிக் காக்குமென்றும் முறையே பொருள் கொள்க. முதுமொழி - அறிவு வாய்ந்த மொழி.  
  
¹ குறுந். 361.

- [Previous: 26.15](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26.15)
- [Next: 26.17](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26.17)
- [Up: 26](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.25.111-116) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26.16](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26.16) · Pramāṇa
