<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26.21 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 26.21

# Maṇimēkalai's Renunciation 26.21

Maṇimēkalai urai 26.21

- **Language:** Tamil

### [26.21](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26.21)

ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை  
  
140  
  
145  
  
150  
  
155  
  
என்பிறப் பறிந்தே ணென்னிடர் தீர்ந்தேன்  
தென்றமிழ் மதுரைச் செழுங்கலைப் பாவாய்  
மாரி நடுநாள் வயிறுகாய் பசியால்  
ஆரிரு ளஞ்சா தம்பல மணைந்தாங்கு  
இரந்தூண் வாழ்க்கை யென்பால் வந்தோர்க்கு  
அருந்தூண் காணா தழுங்குவேன் கையின்  
நாடுவறங் கூரினுமிவ் வோடுவறங் கூராது  
ஏடா வழிய லெழுந்திது கொள்கென  
அமுத சுரபி யங்கையிற் றந்தென்  
பவமறு வித்த வானோர் பாவாய்  
உணர்விற் றோன்றி யுரைப்பொரு ளுணர்த்தும்  
அணிதிக ழவிரொளி மடந்தை நின்னடி  
தேவ ராயினும் பிரம ராயினும்  
நாமாசு கழூஉ நலங்கிளர் திருந்தடி  
பிறந்த பிறவிகள பேணுத லல்லது  
மறந்து வாழேன் மடந்தையென் றேத்தி  
மன்னவன் மணிமே கலையுட னெழுந்து  
தென்மேற் காகச் சென்று திரையுலாங்  
கோமுகி யென்னும் பொய்கையின் கரையோர்  
தூமலர்ப் புன்னைத் துறைநிழ லிருப்ப  
  
138  
  
உரை  
  
157  
  
என் பிறப்பு அறிந்தேன் என் இடர் தீர்ந்தேன் - எனது முற்பிறப்பினை உணர்ந்தேன் னது இடுக்கணினின்றும் நீங்கினேன், தென்றமிழ் மதுரைச் செழுங்கலைப் பாவாய் - தென்றமிழ் மதுரையின்கணுள்ள அழகு மிக்க கலைமகளே, மாரிநடுநாள் வயிறு காய் பசியால்-மாரிக்காலத்து நள்ளிரவில் வயிற்றினைக் காய்கின்ற பெரும்பசியினாலே, ஆரிருள் அஞ்சாது அம்பலம் அணைந்தாங்கு இரந்தூண் வாழ்க்கை என்பால் வந்தோர்க்கு - செறிந்திருக்கின்ற இருளையும் அஞ்சாதவராய் அம்பலத்தை அடைந்து இரந்துண்ணும் உணவையே பொருளாகவுடைய என்னிடம் வந்தவர்கட்கு, அருந்து ஊண் காணாது அழுங்குவேன் கையில் - உண்பதற்குரிய உணவொன்றையும் காணாமல் வருந்துவேனுடைய கைகளில், நாடு வறங் கூரினும் இவ்வோடு வறங்கூராது ஏடா அழியல் எழுந்து இது கொள்கென - ஏடா வருந்தற்க நாடெங்கும் மழையின்றி வறுமையுற்றாலும் இந்த வோடு வறுமையுறாது ஆகலின் நீ எழுந்து இதனைக் கொள்வாயாக என்று கூறி, அமுதசுரபி அங்கையில் தந்து என் பவம் அறுவித்த வானோர் பாவாய் - அமுதசுரபி என்னும் அரும்பெறற் பாத்திரத்தை எனது கையின்கண் கொடுத்தருளி என்னுடைய வினைத்தொடர்புகளை அறுவித்த இமையோர் பாவையே, உணர்வில் தோன்றி உரைப்பொருள் உணர்த்தும்- அறிவின்கண்ணே தோன்றிச் சொற்பொருள்களை உணர்த்தியருளும், மணிதிகழ் அவிரொளி மடந்தை - பளிக்குமணி போல விளங்குகின்ற ஒளிவிடும் திருமேனியையுடைய தேவியே, நின்அடி- நின்திருவடிகளை, தேவராயினும் பிரமராயினும் அவர்தம் நாமாசு கழூஉம் நலங்கிளர் திருந்தடி - தேவராயினும் பிரமராயினும் அவர் தம் நாக்குற்றத்தினைப் போக்கும் சிறப்புமிக்க திருந்திய அடிகளை, பிறந்த பிறவிகள் பேணுதல் அல்லது - யான் பிறக்கின்ற பிறவி கள்தோறும் உளத்திற்கொண்டு வழிபடலல்லது, மறந்து வாழேன் மடந்தை என்று ஏத்தி-மறந்து உயிர்வாழேன் மெல்லியால் எனத் துதித்து, மன்னவன் மணிமேகலையுடன் எழுந்து - அரசன் மணி மேகலையுடன் அங்கு நின்றும் எழுந்து, தென்மேற்காகச் சென்று- தென்மேற்றிசையின் கட்சென்று, திரைஉலாம் - அலைகள் உலாவுகின்ற, கோமுகி என்னும் பொய்கையின் கரை - கோமுகி என்ற வாவியின் கரையில், ஓர் தூமலர்ப் புன்னைத் துறை நிழல் இருப்பதுறையினருகே தூய மலர்களையுடைய ஒரு புன்னைமர நிழலின்கண் இருப்ப;  
  
பீடிகையாற் பழம் பிறப்பை யணர்ந்த புண்ணியராசன் சென்றபிறப்பிலே மதுரையிற் கலைநியமத்தில் சிந்தாதேவி அமுதசுரபியைத் தனக்கு அளித்ததனை அறிந்தானாகலின் அத்தேவியைப் பரவுகின்றான். இங்ஙனம் அவன் அமுதசுரபி பெற்ற வரலாற்றினை மேலே பாத்திர மரபு கூறிய காதையில் அறிக. ஏடா: கெழுதகைச் சொல், பவம் - கன்மக் கூட்டம். நின்னடி, நலங்கிளர் திருந்தடி என ஒருபொருண் மேல் அடுக்கிவந்தன. கழூஉம்-போக்கும். பிறவிகள் - பிறவிகடோறும், மன்னவன் ஏத்தி எழுந்து சென்று கரையில் நிழலில் இருப்பவென்க. என்னிடர் தீர்த்த; ஏடா பரியல்; என்பனவும் பாடம்.

- [Previous: 26.20](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26.20)
- [Next: 26.22](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26.22)
- [Up: 26](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.25.146-156) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26.21](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26.21) · Pramāṇa
