<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26.22 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 26.22

# Maṇimēkalai's Renunciation 26.22

Maṇimēkalai urai 26.22

- **Language:** Tamil

### [26.22](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26.22)

ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை  
  
160 165  
  
ஆபுத் திரனோ டாயிழை யிருந்தது  
காவற் றெய்வதங் கண்டுவந் தெய்தி  
அருந்துயிர் மருந்துமுன் னங்கையிற் கொண்டு  
பெருந்துயர் தீர்த்தவப் பெரியோய் வந்தனை  
அந்நாள் நின்னை யயர்த்துப் போயினர்  
பின்னாள் வந்துநின் பெற்றிமை நோக்கி  
நின்குறி யிருந்து தம்முயிர் நீத்தோர்  
ஒன்பது செட்டிக ளுடலென் பிவைகாண்  
ஆங்கவ ரிடவுண் டவருடன் வந்தோர்  
ஏங்கிமெய் வைத்தோ ரென்பு மிவைகாண்  
  
158  
  
உரை  
  
167  
  
ஆபுத்திரனோடு ஆயிழை இருந்தது காவற்றெய்வதம் கண்டு உவந்து எய்தி - ஆபுத்திரனுடன் மணிமேகலை கோமுகிக் கரையில் இருந்தனை மணிபல்லவத்தின் காவற்றெய்வமாகிய தீவ திலகை கண்டு மகிழ்ச்சியுடன் ஆண்டு அடைந்து, அருந்து உயிர் மருந்து முன் அங்கையில் கொண்டு - முற்பிறப்பில் உண்ணப்படும் அரிய உயிர் மருந்தினைக் கையகத்திற்கொண்டு, பெருந்துயர் தீர்த்த அப் பெரியோய் வந்தனை-உயிர்களின் பெரிய துன்பத்தை நீக்கிய பெரியோய் ஈண்டு வந்தாய், அந்நாள் நின்னை அயர்த்துப் போயினர்-அந்நாளில் நின்னை இங்குவிட்டு மறந்நு சென்றோர்கள், பின்னாள் வந்து நின் பெற்றிமை நோக்கி - பின்னாட்களில் ஈண்டு வந்து நின் தன்மையைக் கண்டு, நின்குறி இருந்து தம்முயிர் நீத்தோர் -நீ இறந்தவிடத்தில் உண்ணாநோன்புடனிருந்து தம் உயிரை விட்டோராகிய, ஒன்பது செட்டிகள் உடல் என்பு இவைகாண் ஒன்பது வணிகர்களின் உடல் எலும்புகளாகிய இவற்றைக் காண்பாயாக, ஆங்கு அவர் இட உண்டு அவருடன் வந்தோர் ஏங்கி மெய் வைத்தோர் என்பும் இவைகாண் - அச் செட்டிகள் உணவளிக்க உண்டு அவர்களுடன் வந்தோர்கள் ஏக்கமுற்று உயிர் நீங்கினோர்களுடைய என்புகளாகிய இவற்றையுங் காண்பாயாக;  
  
ஆபுத்திரனோடு மணிமேகலை இருந்ததனைக் கண்டு அடைந்த தீவதிலகை முறைய அவ்விருவரையும் நோக்கிப் பின்வருமாறு கூறுவதாயிற்று. கண்டு வந்தெய்தி என்று பிரித்தலுமாம். உயிர் மருந்து-சோறு. அப் பெரியோய் - அத்தகு பெரியோய் குறி - இடம். போயினர், நீத்தோர், வந்தோர், வைத்தோர் வினைப்பெயர்கள். போயினவர் வந்து நீத்தார்; அங்ஙனம் நீத்தவராகிய செட்டிகள் எனவும், வந்தோராகிய வைத்தோருடைய என்பு எனவும் கொள்க.

- [Previous: 26.21](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26.21)
- [Next: 26.23](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26.23)
- [Up: 26](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.25.161) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26.22](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26.22) · Pramāṇa
