<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26.28 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 26.28

# Maṇimēkalai's Renunciation 26.28

Maṇimēkalai urai 26.28

- **Language:** Tamil

### [26.28](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26.28)

ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை  
  
195 200  
  
கெடுகல மாக்கள் புதல்வனைக் கெடுத்தது  
வடிவேற் கிள்ளி மன்னனுக் குரைப்ப  
மன்னவன் மகனுக் குற்றது பொறாஅன்  
நன்மணி யிழந்த நாகம் போன்று  
கானலுங் கடலுங் கரையுந் தேர்வுழி  
வானவன் விழாக்கோள் மாநக ரொழிந்தது  
மணிமே கலாதெய்வம் மற்றது பொறாஅள்  
அணிநகர் தன்னை யலைகடல் கொள்கென  
விட்டனள் சாபம் பட்ட திதுவால்  
  
192  
  
உரை  
  
200  
  
கெடுகல மாக்கள் - அழிந்த மாக்கலத்திலிருந்து மீண்டோர், புதல்வனைக் கெடுத்தது-அரசகுமாரனை இழந்த செய்தியை, வடிவேற்கிள்ளி மன்னனுக்கு உரைப்ப - கூரிய வேலினையுடைய கிள்ளியாகிய அரசனுக்கு மொழிய, மன்னவன் மகனுக்கு உற்றது பொறாஅன்-வேந்தன் புதல்வனுக்கு நேர்ந்த துன்பத்தைப் பொறாதவனாய், நன்மணி இழந்த நாகம் போன்று - நல்ல மாணிக்கத்தை இழந்த பாம்பைப்போல வருந்தி, கானலும் கடலும் கரையும் தேர்வுழி -கடற் கானலிலும் கடலிலும் கடற்கரையிலும் தேடிக்கொண்டிருக்குமிடத்து, வானவன் விழாக்கோள் மாநகர் ஒழிந்தது - காவிரிப்பூம்பட்டினம் இந்திரவிழா வெடுத்தலை ஒழிந்தது, மணிமேகலா தெய்வம் மற்றது பொறாஅள்-மணிமேகலா தெய்வம் அக்குற்றத்தினைப் பொறாமல், அணிநகர்தன்னை அலைகடல் கொள்கென இட்டனள் சாபம் - அழகிய நகரத்தை அலைகள் செறிந்த கடல்கொள்வதாக என்று சாபமிட்டனள், பட்டது இதுவால் - கடல் கோள் நேர்ந்த செய்தி இதுவாகும்;  
  
1 'நன்மணி இழந்த நாகம்போன்று' என்னும் இவ் வுவமை முன்னரும் இந்நூலுட் போந்தமை காண்க. காரணங்கேளாய் இட்டனள் சாபம் பட்டது இது என ஒட்டுக.  
  
¹ மணி. 7: 131.

- [Previous: 26.27](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26.27)
- [Next: 26.29](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26.29)
- [Up: 26](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.25.196) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26.28](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26.28) · Pramāṇa
