<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26.32 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 26.32

# Maṇimēkalai's Renunciation 26.32

Maṇimēkalai urai 26.32

- **Language:** Tamil

### [26.32](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26.32)

ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை  
  
220  
  
225  
  
230  
  
மன்னவன் மயங்க மணிமே கலையெழுந்து  
என்னுற் றனையோ விலங்கிதழ்த் தாரோய்  
நின்னா ட்டைந்தியான் நின்னையீங் கழைத்தது  
மன்னா நின்றன் மறுபிறப் புணர்த்தி  
அந்தரத் தீ்வினு மகன்பெருந் தீவினும்  
நின்பெயர் நிறுத்த நீணில மாளும்  
அரசர் தாமே யருளறம் பூண்டால்  
பொருளு முண்டோ பிறபுரை தீர்த்தற்கு  
அறமெனப் படுவ தியாதெனக் கேட்பின்  
மறவா திதுகேள் மன்னுயிர்க் கெல்லாம்  
உண்டியு முடையு முறையுளு மல்லது  
கண்ட தில்லெனக் காவல னுரைக்கும்  
  
220  
  
உரை  
  
231  
  
மணிமேகலை எழுந்து - மணிமேகலை உடனே எழுந்து, என்னுற்றனையோ இலங்கிதழ்த் தாரோய் - விளங்குகின்ற இதழ்கள் பொருந்திய மலர்மாலையினையுடைய மன்னவனேநீ என்ன துன்பம் எய்தினையோ, நின்நாடு அடைந்து யான் நின்னைஈங்கு அழைத்தது - யான் நின்நாட்டினை யடைந்து நின்னை இத் தீவிற்கு அழைத்தது, மன்னா நின்றன் மறுபிறப்பு உணர்த்தி - அரசே நின்னுடைய பழம் பிறப்பினை நினக்கு அறிவித்து, அந்தரத் தீவினும் அகன்பெருந் தீவினும் நின்பெயர் நிறுத்த-இரண்டாயிரஞ் சிற்றிடைத் தீவுகளிலும் நான்கு பெருந் தீவுகளிலும் நினது புகழை நிலைபெறுத்துவதற்கே யாகும், நீணிலமாளும் அரசர் தாமே அருளறம் பூண்டால்- பெரிய நிலவுலகினை ஆள்வோராகிய அரசர்களே அருளாகியஅறத்தினை, மேற்கொண்டால் பொருளும் உண்டோ பிற புரை தீர்த்தற்கு - உலகில் குற்றந் தீர்த்தற்குப் பொருளும் உண்டோ, அற மெனப்படுவது யாது எனக் கேட்பின் மறவாது இதுகேள்-அறம் என்று கூறப்படுவது யாது என்று கேட்பின் யான் கூறுகின்ற இதனை மறவாது கேட்பாயாக, மன்னுயிர்க்கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல்லென - நிலைபெற்ற உயிர்கட்கெல்லாம் உணவும் ஆடையும் தங்குமிடமும் அளித்த லல்லது வேறு யாம் கண்டதில்லை என்று கூற;  
  
மறுபிறப்பு என்றது, ஈண்டுச் சென்ற பிறப்பினை. அந்தரத்தீவுபெருந் தீவு என்பவற்றை முன் ¹"நால்வகை மரபின் மாபெருந் தீவும், ஓரீ ராயிரஞ் சிற்றிடைத் தீவும்" என உரைத்தமையா னறிக. பொருளு முண்டோ புரைதீர்த்தற்கு என்றது, அரசர் அருளறம் பூண்டால் எல்லா வுயிர்களும் தாமே குற்றமற்றனவா மாதலின், உலகிலே குற்றந் தீர்த்தல் என்பதற்குப் பொருளே யிராதென்பெடி. பிற; அசைச்சொல்; பிறவற்றின் என்றுமாம். உண்டியும் உடையும் உறையுளும் அளித்தலல்லது என விரித்துரைக்க. ²"அற்றார்கட்கு, உண்டியுறையு ளுடுக்கை யிவை யீந்தார்" என்பது அறியற்பாலது.  
  
¹ மணி. 4 : 195 - 4. ² ஏலாதி. 9.

- [Previous: 26.31](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26.31)
- [Next: 26.33](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26.33)
- [Up: 26](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.25.226) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26.32](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26.32) · Pramāṇa
