<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.27.1 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 27.1

# Maṇimēkalai's Renunciation 27.1

Maṇimēkalai urai 27.1

- **Language:** Tamil

### [27.1](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.27.1)

வஞ்சிமா நகர் புக்க காதை  
  
5  
  
அணியிழை யந்தர மாறா வெழுந்து  
தணியாக் காதற் றாய்கண் ணகியையுங்  
கொடைகெழு தாதை கோவலன் றன்னையுங்  
கடவு ளெழுதிய படிமங் காணிய  
வேட்கை துரப்பக் கோட்டம் புகுந்து  
வணங்கி நின்று குணம்பல வேத்தி  
அற்புக்கட னில்லாது நற்றவம் படராது  
கற்புக்கடன் பூண்டு நுங்கடன் முடித்தது  
அருளல் வேண்டுமென் ¹றழுதுமுன் னிற்ப  
  
1  
  
உரை  
  
9  
  
அணியிழை அந்தரம் ஆறா எழுந்து-மணிமேகலைவிசும்பின்வழியாக எழுந்து சென்று வஞ்சி நகரத்தின் புறத்தே இறங்கி, தணியாக் காதல் தாய கண்ணகியையும்-குறையாத அன்புடையளாகிய அன்னை கண்ணகியையும், கொடைகெழுதாதை கோவலன் தன்னையும்-ஈதற்றன்மை மிக்குடையானாகிய தந்தை கோவலனையும், கடவுள் எழுதிய படிமம் காணிய - தெய்வமாக எழுதியமைக்கப்பட்ட வடிவத்தைக் காணும் பொருட்டு, வேட்கை துரப்பக் கோட்டம் புகுந்து - ஆசை மேன்மேலுந் தூண்டுதலால் அக் கோயிலிற் புகுந்து, வணங்கி நின்று குணம் பல ஏத்தி - வணக்கஞ் செய்து நின்று அவளுடைய சிறந்த குணங்கள் பலவற்றையும் எடுத்துத் துதித்து, அற்புக்கடன் நில்லாது நற்றவம் படராது - அன்பாகிய கடனிலே நில்லாமலும் நல்ல தவநெறியில் செல்லமாலும், கற்புக் கடன் பூண்டு நுங்கடன் முடித்தது - கற்பினையே கடனாக மேற் கொண்டு நுமது கடனை முடித்ததன் காரணத்தை, அருளல் வேண்டும் என்று அழுது முன்நிற்ப-உரைத்தருள வேண்டும் என்று கூறியழுது கண்ணகி திருமுன் நிற்ப;  
  
எழுந்து என்பதன் பின் அவாய் நிலையால் சில சொற்கள் வருவித் துரைக்கப்பட்டன. கடவுள் எழுதிய-தெய்வமாக இயற்றிய. கோவலன் கொடையில் மேம்பட்டவ னென்பது, தான் வளர்த்ததும் தன் மகவின் உயிரைக் காத்ததுமாகிய கீரியைப் பிறழ வுணர்ந்து கொன்ற குற்றத்திற்காகக் கணவனால் துறக்கப்பட்ட பார்ப்பினியின் பாவம் நீங்கத் தானஞ்செய்து, கணவனை அவளுடன் கூட்டி, அவர்கள் வாழ்க்கைக்கு மிக்க செல்வத்தையும் கொடுத்தனன் என்பது முதலிய வரலாற்றானறியப்படும். இதனைச் சிலப்பதிகாரத்து அடைக்கலக் காதையானறிக. படிமம்-படிவம், வடிவம். கண்ணகி கோட்டத்துக் கோவலனுக்குப் படிவம் அமைக்கப்பட்டதென்பது இதனாற்பெற்றாம். அற்புக்கடன்-தலையன்பினால் கணவனிறப்ப உடனறித்தலும் தீப்பாய்தலுமாம். நற்றவம் படர்தலாவது கைம்மை நோன்பைநோற்று உடம்பைவருத்துதல். கண்ணகி கற்பையே கடனாகக் கொண்டவளென்தபனை, ²"கற்புக்கடம் பூண்ட வித்தெய்வமல்லது, பொறைபுடைத் தெய்வம் யாங்கண் டிலமால்" "கற்புக் கடம்பூண்டு காதலன் பின்போந்த, பொற்றொடி நங்கைக்குத் தோழி நான் கண்டீர்" என்பவற்றி³னறிக. ஈண்டுக் கற்பென்றது மறக் கற்பினை. நும் கடன் முடித்தது என்றது மதுரையை அழற்படுத்திப் பதினான்காம்நாளிற் கோவலனைச் சென்று கூடியதை உணர்த்திற்று. "அற்புக் கடனில்லாது...முடித்தது" என்பவற்றின் கருத்து ⁴"காதல ரிறப்பிற் கனையெரி பொத்தி, ஊதுலைக் குருகி னுயிர்த்தகத் தடங்காது, இன்னுயி ரீவர் ஈயா ராயின், நன்னீர்ப்பொய்கையின் நளியெரிபுகுவர், நளியெரி புகாஅ ராயினன்பரோ, டுடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம் படுவர், பத்தினிப் பெண்டிர்" என, இந்நூலுள் முன்பு வந்திருந்தலால் விளக்கமாம்.  
  
(பாடம்.) ¹றழுது ணிற்ப. ² சிலப். 15: 143-4. ³ சிலப். 29: 'தற்பயந்தாள்.' ⁴ மணி. 2: 42-48.

- [Previous: 26.33](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26.33)
- [Next: 27.2](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.27.2)
- [Up: 27](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.27)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.26.1-6) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.27.1](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.27.1) · Pramāṇa
