<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.41 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 28.41

# Maṇimēkalai's Renunciation 28.41

Maṇimēkalai urai 28.41

- **Language:** Tamil

### [28.41](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.41)

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை  
  
175  
  
இந்திரர் தொழப்படு மிறைவனெம் மிறைவன்  
தந்த நூற்பொரு டன்மாத்தி காயமும்  
அதன்மாத்தி காயமுங் காலா காயமும்  
தீதில் சீவனும் பரமா ணுக்களும்  
நல்வினை யுந்தீ வினையுமவ் வினையாற்  
செய்வுறு பந்தமும் வீடுமித் திறத்த  
  
171  
  
உரை  
  
176  
  
\[ நிகண்டவாதி \]  
  
இந்திரர் தொழப்படும் இறைவன் எம் இறைவன் - இந்திரர்கள் பலராலும் வணங்கப்படும் அருக பரமேட்டி எங்கட்கு இறைவனாவான், தந்த நூற் பொருள் - அவனுரைத்த ஆகமத்தின் பொருள்கள், தன்மாத்திகாயமும், அதன்மாத்திகாயமும்-, காலாகாயம் - காலமும் ஆகாயமும், தீதில் சீவனும் - குற்றமில்லாத சீவனும், பரமாணு - பரமாணுக்களும்: நல்வினையும் தீவினையும், அவ்வினையாற் செய்வுறு பந்தமும் - அவ்விருவினைகளையும் செய்ய வுண்டாகும் கட்டும், வீடும் - வீடு பேறுமாக, இத்திறத்த - இப்பத்து வகையினவாம் எ - று.  
  
இந்திரர், பவணேந்திரர், வியந்தரேந்திரர், கற்பேந்திரர், மிருகேந்திரர் எனப் பலராதலின், "இந்திர" ரெனப் பொதுப்படக் கூறினர். 'எனக் கேட்டாங் கெடுத்துரைப்பான் இந்திரர்கள் தொழப்படுவான், தனக்காய தர்மமு மதர்மமுங் காலமும், கனப்பாட்டிற் காயமே யுயிருருவே புண்ணியமே, நினைக்குங்காற் பாவமே கட்டு வீடென நிறுத்தி" (நீல. 288) என்று பிறரும் இவ்வாறே தொகுத்தோதிக் காட்டுதல் காண்க. நீலகேசியுரைகாரர், இவ்விந்திரரை, "ருஷீந்திர சுரேந்திர நரேந்திராதிகள்" (1. உரை) என்பது ஈண்டு நோக்கத்தக்கது. உயிர் அநாதிநித்திய மென்பது கொள்கையாதலின், "தீதில் சீவன்" என்றும் இருவினையும் கட்டுண்டற்குக் காரணமாதல்பற்றி, "அவ்வினையாற் செய்வுறுபந்தமும்" என்றும் கூறினான்.

- [Previous: 28.40](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.40)
- [Next: 28.42](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.42)
- [Up: 28](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.27.171-176) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.41](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.41) · Pramāṇa
