<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.42 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 28.42

# Maṇimēkalai's Renunciation 28.42

Maṇimēkalai urai 28.42

- **Language:** Tamil

### [28.42](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.42)

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை  
  
180  
  
ஆன்ற பொருடன் றன்மைய தாயும்  
தோன்றுசார் வொன்றின் றன்மைய தாயும்  
அநித்தமு நித்தமு மாகி நின்று  
நுனித்த குணத்தோர் கணத்தின் கண்ணே  
தோற்றமு நிலையுங் கேடு மென்னும்  
மாற்றரு மூன்று மாக்கலு முரித்தாம்  
  
177  
  
உரை  
  
182  
  
ஆன்ற பொருள்-ஆகமத்தே கூறப்பட்டமைந்த பொருள், தன் தன்மையதாயும் - தன்னியல்பாகிய தன்மையுடையதாயும், தோன்று சார்வு ஒன்றின் தன்மையதாயும் - சார்பாகத் தோன்றிய பொருளொன்றின் தன்மையையுடையதாயும், ஓர் கணத்தின் கண்ணே நுனித்த குணத்து - ஒரு கணத்தையே கூர்ந்துணரப்படும் குணத்தால், அநித்தமும் நித்தமுமாகி நின்று - நிலையாமைத் தன்மையும் நிலைத்த தன்மையு முடையதாயும், தோற்றமும் நிலையும் கேடு மென்னும் - தோன்றுதல் நிலைபெறுதல் கெடுதல் எனப்படும், மாற்றரும் மூன்றும் ஆக்கலும் உரித்தாம் - மாற்றுதற்கரிய மூவகை யியல்பு முடைத்தாயு மிருத்தற்குரியதாம் எ - று.  
  
எனவே, தன் தன்மையும் சார்ந்த தன்மையும் ஆகிய தன்மையுடைமையும், ஒரு கணத்தே நித்தமாயும் அநித்தமாயும் இருப்பதும், ஒரு கணத்திலேயே தோற்றம் நிலை கேடு மூன்றுமெய்துவதும் பொருட்கு இயல்பென்தாம். பொருள்களின் நித்தாநித்தா வியல்பை அவற்றின் குணம் கொண்டே காண்பது பற்றி, "நுனித்த குணத்து" என்றார்; பிறரும், "நின்ற குணங்களினித்தியமென்றும் நிலையிலவாம், என்ற குணங்களனியத மென்றும் இயம்புதலால்" என்றும், "கேடிலவாய குணத்தினிலையும் கெடுங்குணத்தி, னீடிலவென்பதும் நேர்ந்து" (நீல. 397,80) என்றும் கூறுதல் காண்க. பொருள்களின் தோற்ற முதலிய மூன்றும் குணங்கருவியாகக் காணப்படுதல்பற்றி, "ஓர் கணத்து" என்பது தோற்ற முதலியவற்றோரும் இயைந்து நின்றது. "மும்மைத் தன்மையதாம் திருவத்ததென்பொருள்" (நீல. உரை. மேற். 387) என்பது இம்மூன்றற்கும் ஆதரவு தருகிறது.

- [Previous: 28.41](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.41)
- [Next: 28.43](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.43)
- [Up: 28](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.27.181) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.42](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.42) · Pramāṇa
