<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.50 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 28.50

# Maṇimēkalai's Renunciation 28.50

Maṇimēkalai urai 28.50

- **Language:** Tamil

### [28.50](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.50)

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை  
  
205  
  
அதுவீ டாகு மென்றன னவன்பின்  
இதுசாங் கியமத மென்றெடுத் துரைப்போன்  
தனையறி வரிதாய்த் தான்முக் குணமாய்  
மனநிகழ் வின்றி மாண்பமை பொதுவாய்  
எல்லாப் பொருளுந் தோன்றுதற் கிடமெனச்  
  
201  
  
உரை  
  
205  
  
அவன் பின்-அந்த நிகண்டவாதி நீங்கிய பின்பு; இது சாங்கிய மதம் என்று எடுத்துரைப்போன்-யான் கூறும் இது சாங்கிய மதக் கொள்கையாமென்று சாங்கியவாதி யெடுத்துச் சொல்லுவானாய்; தனை அறிவரிதாய்-தன்னை இத்தன்மைத்தென அறிதற்கரிதாய்; தான் முக்குணமாய் - தானே மூவகைக் குணமுமாய்; மன நிகழ்வின்றி - மனத்தின் நினைவுக்கிடமாகாது; மாண்பமை பொது வாய் - மாட்சிமை பொருந்திய பொது வியல்பினையுடையதாய்; எல்லாப் பொருளும் தோன்றுதற்கு இடமெனச் சொல்லுதல்-எவ்வகைப் பொருளும் தோன்றுதற்கு இடமென்று சொல்லப்படுவது ; மூலப் பகுதி - மூலப் பகுதியாகும் (என்றான்) எ - று.  
  
இன்ன தன்மைத்தென யாவராலும் அறியப்படாமை பற்றி மூலப் பகுதியை, "தனையறிவரிதாய்" என்றும், முக்குணங்களின் விளங்கித் தோன்றா நிலையே மூலப் பகுதியின் இயல்பு என்றற்கு, "தான் முக்குணமாய்" என்றும், மனத்திற்கு விளங்காததாதலின், "மனநிகழ்வின்றி" என்றும், எவ்வகைப் பொருளும் தோன்றுவதற்குத் தான் மூலமாவதன்றித் தனக்கொரு மூலமில்லாததாதலின், "மாண்பமை பொதுவாய்" என்றும் கூறினான். "நின்று பரந்தரு வாய்ப்பொறியேதுமிக், கொன்று கிரிகையின் றப்பியத் தம்மது" (நீல. 737) என்று பிறரும் ஓதுதல் காண்க. மனநினைவுக் ககப்பட்ட வழி மூலப்பகுதிவிளங்கிவிடுமாதலின், மனநிகழ்விலதாயிற்றென வறிக. முக்குணங்களும் விளக்கமின்றி யொடுங்கியிருக்கும் நிலையைச் சாம்யாவத்தை யென்று சாங்கிய பிரவசனபாடிய முடையார் (i: 61) கூறுவர். "தெற்றென வில்லது" (நீல. 735) என்று சமயதிவாகரர் எடுத்துக் கூறுகின்றார்.

- [Previous: 28.49](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.49)
- [Next: 28.51.1](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.51.1)
- [Up: 28](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.27.201) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.50](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.50) · Pramāṇa
