Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 28.64

Maṇimēkalai urai 28.64

Language
Tamil

28.64.1

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை

28.64.2

280

28.64.3

285

28.64.4

என்றலு மெல்லா மார்க்கமுங் கேட்டு
நன்றல வாயினு நான்மா றுரைக்கிலேன்
பிறந்தமுற் பிறப்பை யெய்தப் பெறுதலின்
அறிந்தோ ருண்டோ ²வென்றுநக் கிடுதலும்
தெய்வ மயக்கினுங் கனாவுறு திறத்தினும்
மைய லுறுவோர் மனம்வே றாம்வகை
ஐய மன்றி யில்லையென் றலுநின்
தந்தைதா யரையனு மானத் தாலலது
இந்த ஞாலத் தெவ்வகை யறிவாய்
மெய்யுணர் வின்றிமெய்ப் பொருளுணர் வரிய
ஐய மல்லதிது சொல்லப் பெறாயென
உள்வரிக் கோலமோ டுன்னிய பொருளுரைத்து
ஐவகைச் சமயமு மறிந்தன ளாங்கென்.

28.64.5

277

28.64.6

உரை

28.64.7

289

28.64.8

எல்லா மார்க்கமும் கேட்டு-இங்ஙனம் கூறிவந்தஎல்லாச் சமயங்களையும் மணிமேகலை கேட்டு; நன்று அல ஆயினும்-இவர்கள் கூறுவன அறமல்லவாயினும்; நான் மாறு உரைக்கிலேன் - யான் அவர்களை மறுத்து மாறு கூறேன் என நினைப்பவள்; பிறந்த முற்பிறப்பை எய்தப் பெறுதலின்-பிறந்து கழித்த முற்பிறப்புநிகழ்ச்சியைத் தான் அறிந்திருத்தலால்; அறிந்தோர் உண்டோ என்று - முற்பிறப்பை அறிந்தவர்கள் உண்டோ என்று பூதவாதிகூறியதை நினைந்து; நக்கிடுதலும் - நகைத்துத் தன் வரலாற்றைக் கூறவும், தெய்வமயக்கினும் - தெய்வ மருளாலும்; கனாவுறு திறத்தினும் - கனாக்காணும் வகையாலும்; மையலுறுவோர் - மயங்குபவர்; மனம் வேறாம் வகை-மனம் திரிந்து உரைப்பது போலும் உரைவகையாகும் உனதுரையாதலால்; ஐயம் அன்றி இல்லை என்றலும் - இஃது ஐயத்துக்கு இடமாவதல்லது உண்மையாகாது என்றானாக; இந்த ஞாலத்து-இந்த நிலவுலகத்தில்; நின்தந்தைதாயரை-உனக்குத் தந்தையுந் தாயுமாகிய பெற்றோரை; அனுமானத்தாலல்லது எவ்வகை அறிவாய் - அனுமான வளவையா லறிதலையன்றி எவ் வகையால் அறிவாய்; மெய்ப் பொருள்கள் - மெய்ம்மையான பொருள்கள் பலவும்; மெய்யுணர்வின்றி உணர்வரிய - உண்மை யுணர்வுக் கேதுவாகிய அனுமானமுதலிய வளவைகளாலன்றி அறிதற்கரியனவாகும்; ஐயம் அலது இது சொல்லப்பெறாய் என காட்சியல்லாத பிற அளவைகளாற் கொள்வன. ஐயத்துக்கிட மாவன வென்றும் காட்சியளவாற் கொள்வதொன்றே தெளிவுப் பொருளென்றும் சொல்லாதேகொள் என்று; உள்வரிக் கோல மோடு தன்னை மறைத்த ஆண்வேடத்தோடே நின்று; உள்ளிய பொருள் உரைத்து - தான் கருதிய பொருளை உரைத்துவிட்டு ஆங்கு-அவ் நகரத்தே;ஐவகைச் சமயமும் அறிந்தனள்-இது காறும் கூறிய இவ்வைகைச் சமயங்களின் பொருள்களையும் கேட்டாள் எ - று. நன்று, அறம்; "வீழ்நாள் படாஅமை நன்றாற்றின்" (குறள்; 38) என்றாற் போல.

28.64.9

"நன்றல வாயினும் நான்மா றுரைக்கிலேன்" என ஈண்டுக்கூறுவதுபோல அறவணவடிகள்பால் கூறுமிடத்து, "ஐவகைச் சமயமும், செவ்வி தன்னையின் சிந்தையின் வைத்திலேன்" (29:43-4) என மணிமேகலை கூறுவது காண்க. முற்பிறப்பின் வரலாற்றை யறிந் துள்ள தான் கண்ணெதிரே நிற்கவும், "அறிந்தோருண்டோ?" வெனப் பூதவாதி கேட்டது மணிமேகலைக்கு நகையை விளைவிப்ப, அதுகண்ட பூதவாதி நகைத்ததற்குக் காரணம் வினவுவதும், மணிமேகலை முற்பிறப் புணர்ந்த செய்தி கூறுவதும் நகை யேதுவாகப் பிறந்தசொல் லாட்டாதலின், சொற் பல்காமைப் பொர்ட்டு "நக்கிடுதலும்" என்றதனாற் பெறவைத்தார். தெய்வ மயக்கும் கனவும் உண்மையல்லவென்னுங் கருத்தால், "ஐயமன்றியில்லை" யென்றான்; "கடவுளாயினுமாக, மடவை மன்ற வாழிக முருகே" என்பதனால் தெய்வ மயக்கும், "கன விற் கண்டது நனவின் எய்துதல், தேவர்க் காயினு மிசைதல் செல்லாது" என்பதனால் கனவுநிலையும் உணரப்படும். மெய்யுணர்வென்பது சத்திய ஞானமென்றும், மெய்ப்பொருளென்பன பாரமார்த்திக தத்துவ மென்றும் கூறுப. மணிமேகலை ஆண்வேடந் தாங்கி நிற்றலின் "உள் வரிக்கோல" மென்றார். "உள்வரி யென்ப துணர்த்துங் காலை, மண்டல மாக்கள் பிறிதோ ருருவம், கொண்டுங் கொள்ளாது மாடுதற் குரித்தே" (சிலப். 8: 89 அடி. மேற்) என்பது காண்க. அளவை முதல் வேதவாத மீறாகியவற்றை வைதிகவாதமென வொன்றாகவும், ஆசீவகவாதம் நிகண்டவாத மிரண்டையு மொன்றாகவும் ஏனைச் சாங்கியம் வைசேடிகம் பூதவாத மூன்றாகவும் கொண்டு ஐவகைச் சமயமெனத் தொகுத்து "ஐவகைச் சமயமு மறிந்தனள்" என்றார்; இனி உலகாயதம், பௌத்தம், சாங்கியம், நையாயிகம், வைசேடிகம், மீமாஞ்சகம் என்ற சமயங்கள் ஆறனுள், பௌத்த மொழிந்த ஏனையைந்தையும், இங்கே கேட்கின்றாளாதலின் "ஐவகைச் சமயமும் அறிந்தன" ளென்றாரென்றுமாம்.

28.64.10

இவ்வகையில் அளவை வாத மும், சைவவாதமும், வைணவ வாதமும் நையாகிகத்தும், பிரம வாதமும் மும் வேதவாதமும் மீமாஞ்சகத்தும், பூதவாதம் உலகாயதத்தும், அடங்கும். ஆசீவகவாதமும் நிகண்டவாதமும் ஒன்றாய் இவ்வைந்தனுள் அடங்காவாயினும் வழக்காற்றுச் சிறப்புப்பற்றி ஐவகைச் சமயமெனத் தொகுத்தெடுத் தோதினாரெனக் கோடலுமாம். "ஆற்றுளிக் கிளந்த வறுவகைச் சமயமும்" (பெருங். 1. 36. 242) என்று கொங்கு வேளிர் கூறுதல் காண்க. இக்கருத்தே பற்றி, சைனமொழிந்த ஏனைய சமயங்களை, "ஐவகைச் சமயமு மறந்தோற் றனவென" (பெருங் 1. 36. 249) ஐவகைச் சமயமென்று அவர் கூறுதல் ஈண்டுக் குறிக்கத்தக்கது. இக இயம்பென, என்றவன் தன்னைவிட்டு, சைவவாதி நேர்படுதலும், எப்படித் தென்ன, அவன் உரைத்தனன்; பிரமவாதி என்றனன்; கடல் வணன் புராணம் ஓதினன் உரைத்தனன்; வேதியின் உரையின் விதியும் கேட்டு, யாதினும் இசையாது இவர் உரையென, புராணனை யாதென, அவன் வகையிது என்ன, விட்டு, நிகண்டவாதியை விளம்பென, விளம்பலுறுவான் என்றனன்; அவன்பின் உரைப்போன் செப்பிய திறமும் கேட்டு, வைசேடிக, உரையென்ன, உரைத்தனன்; உடனே பூதவாதி யைப் புகல் நீ என்ன, என்றலும், கேட்டு, உரைக்கிலேன் என்று, நக்கிடுதலும், என்றலும், என, உரைத்து, அறிந்தனள் எனக்கூட்டி, வினை முடிவு செய்க.

28.64.11

(பாடம்) ¹ தழிவின்; ² வெனநக்கிடுதலும்.

Linked texts (1)