<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.9 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 28.9

# Maṇimēkalai's Renunciation 28.9

Maṇimēkalai urai 28.9

- **Language:** Tamil

### [28.9](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.9)

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை  
  
40 என்னு மேதுவி னொன்றுமுக் காலந்  
தன்னி லொன்றிற் சார்ந்துள தாகி  
மாண்ட வுயிர்முதன் மாசின் றாகிக்  
காண்டற் பொருளாற் கண்டில துணர்தல  
  
37  
  
உரை  
  
40  
  
என்னும் ஏதுவின் ஒன்று - பொது எச்சம் முதல் என்று கூறப்பட்ட ஏது வகைகளில் ஒன்று முக்காலம் ஒன்று தன்னிற் சார்ந்துளதாகி தோன்றும் - மூவகைக் காலங்களில் ஒன்றைப் பொருந்தியதாய்த் தோன்றும்; காண்டற்பொருளால்-காணப்படும் பொருளைக்கொண்டு; மாண்ட உயிர் முதல்-மாட்சிமைப்பட்ட உயிராகிய முதல்; கண்டிலது-காணப்படாததனை; மாசின்றாகி - குற்றமின்றி ; உணர்தல் - அறிவதாம் எ - று. எனவே, காண்டற் பொருளாற் காணப்படாததனை யுணர்தல் அனுமானவளவை யென்பதாம். "என்னும் ஏதுவின் ஒன்று" என்றதனால், சாமானியம் சேடம் பூருவம் என்ற மூன்றும் ஏதுவின் வகைமை யுணர்த்தி நிற்பது பெற்றாம். இனி, நையாரிகருட் பலர் பலவேறு கருத்துக்களைக் கூறுவர் ; ஈண்டுக் கூறியது வாற்சாயனர் முதலிய பண்டையாசிரியன்மார் கொண்ட கருத்தாமென அறிக. இவ்வாறே அனுமானமென்பதற்கும் ஆசிரியர் பலரும் பலவாறு கூறுப: நியாயவார்த்திகையென்னும் நூலுடையார், தெரியாததொரு பொருளையாதல், தெரிந்ததொரு பொருளையாதல் காண்டற்குப் பயன்படுவதன்றி, ஐயப் புலப் பொருளொன்றினைத் துணிதற்குப் பயன்படுவது அனுமானவளவையென்றும், நியாயசாரமுடையார், பொறிகளின் காட்சியெல்லைக்கப்பாற்பட்டு நிற்குமொரு பொருளை அதனிற் பிரிப்பறத் தொடர்புற்று, அப்பொறிகளின் காட்சிக் ககப்பட்டிருக்கும் பிறிதொன்றின் வாயிலாகக் காண்டற்கு அனுமானம் அளவையாமென்றும்,தத்துவசிந்தாமணி யாசிரியரான கங்கேசரும், சத்தபதார்த்தி யாசிரியரான சிவாதித்தரும் ஓரறிவைக் கொண்டு பெறலாகும் பிறிதோரறிவு அனுமான வறிவாம் என்றும் கூறுவர். இது குறித்து ஏனை வைசேடிகர், சாங்கியர், புத்தர், சமணர் முதலாயினோர் வேறு வேறு கூறியுள்ளனர் ; அவற்றை அவ்வவர் நூங்களுட் காண்க. காட்சியளவை போலாது, இக்கருத்தளவை முக்காலத்தும் ஒத்தியலும் இயல்பிற்றாதலின், "முக்காலந்தன்னிலொன்றிற் சார்ந்துளதாகித் தோன்றும்" என்றார். உத்தியோதகரரும் காட்சி, நிகழ்காலத்துக்கே யுரித்தென்றும், கருதல்முக்காலத்துக்கு முரித்தென்றும் கூறுவர் (நியாய வார்த். ii. 1 - 31). காண்பொருளும், இடைநிற்கும் ஒளி முதலியனவும், பொறியும், மனமும், உயிரும் என்ற ஐந்தனுள், காட்சிப் பயன் கோடற்கும், மனமும் பொறியும் காண்டலைச் செய்தற்கும்,உயிர் இன்றியமையாமையின், "மாண்ட வுயிர் முதல்" என்றும், மனமும் பொறியும் குற்றமுற்ற வழிக் காட்சி நிகழாமையின், "மாசின்றாகி"யென்றும் கூறனார்; "உயிரும் வாயிலும் மனமுமூ றின்றி" (மணி 27; 30) என்றதே மீளவும் கூறியது, வன்புறை.

- [Previous: 28.8](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.8)
- [Next: 28.10](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.10)
- [Up: 28](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.27.36) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.9](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.9) · Pramāṇa
