<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 28

# Maṇimēkalai's Renunciation 28

Maṇimēkalai urai 28

- **Language:** Tamil

## Contents

- [28.51](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.51) — 11 parts
- [28.64](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.64) — 11 parts

### [28.1](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.1)

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை  
  
நவையறு நன்பொரு ளுரைமி னோவெனச்  
சமயக் கணக்கர் தந்திறஞ் சார்ந்து  
வைதிக மார்க்கத் தளவை வாதியை  
எய்தின ளெய்திநின் கடைப்படி யியம்பென  
  
1  
  
உரை  
  
4  
  
சசமயக்கணக்கர் தம் திறம்சார்ந்து-மாதவன் வடிவுகொண்டுவந்த மணிமேகலை சமயவாதிகள் உறையும் இடத்துக்குச் சென்று, நவையறு நன்பொருள் உரைமினோ என - குற்றமற்ற மெய்ம்ப்பொருளை யுரைப்பீராக என வினவும் கருத்தினளாய், வைதிக மார்க்கத்து அளவை வாதியை எய்தினள்-வேதநெறியை மேற்கொண்டொழுகும் பிரமாணவாதியை யடைந்தாள், எய்தி - அவ்வாறடைந்தவள், நின் கடைப்பிடி இயம்புஎன - நீ கொண்டொழுகும் சமயக் கொள்கையைச் சொல்வாயாக என்று வினவ எ - று. சமயக்கணக்கர் - சமய நுண்பொருள்களை யாராய்ந்துரைக்கும்சமயவாதிகள். மெய்ப்பொருளை "நவையறு பொருள்" என்றும், அதன் விளைவு நன்மையாதல்பற்றி "நன்பொரு" ளென்றும் கருதனாள். வேதத்தை மேற்கொண்டொழுகும் நெறி, வைதிகமார்க்கமெனப்பட்டது. அளவை, பிரமாணம். கொள்கையைக் "கடைப்பிடி" யென்றார், பல்லாற்றானு மாராய்ந்து கைக்கொள்ளப்படுதலின்.

### [28.2](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.2)

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை  
  
5  
  
வேத வியாதனுங் கிருத கோடியும்  
ஏதமில் சைமினி யெனுமிவ் வாசிரியர்  
பத்து மெட்டு மாறும் பண்புறத்  
தத்தம் வகையாற் றாம்¹பகர்ந் திட்டனர்  
  
5  
  
உரை  
  
8  
  
அளவைவாதி  
  
வேதவியாதனும் கிருதகோடியும்-வேதத்தைப் பகுத்துமுறை செய்த வியாத முனியும் கிருதகோடி முனியும்; ஏதம்இல் சைமினி எனும் இவ்வாசிரியர் - குற்றமில்லாத சைமினிமுனியு மென்னும் இந்த ஆசிரியன்மார்கள்; பத்தும் எட்டும் ஆறும் - அளவைகளை முறையே பத்தென்றும், எட்டென்றும் ஆறென்றும்; தத்தம் வகையால் பண்புறப் பகர்ந்திட்டனர் - தத்தமக்கேற்ற கூறுபாட்டின் படியே அளத்தற்குரிய தகுதியமையக் கூறியுள்ளனர் எ - று. இங்கே கூறிய வேதவியாதரை, வேதம் முறை செய்தவரும் பிரம சூத்திர மெழுதியவருமாகிய வியாதரல்ல ரென்றும், இவர் பௌராணிகரான வியாதராக இருக்கலாமென்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர். கிருத கோடி யென்பாரைப் போதாயனரென்றும் கிருதகோடிகவி யென்றும் கூறுப. சைமினி யென்பார் மீமாஞ்சை நூலை யெழுதியவர். இவருள் வியாதர் பத்தளவையும், கிருதகோடி எட்டளவையும், சைமினி ஆறளவையும கொண்டன ரென்பதாம். பிற்காலத்தே சைமினி யெழுதியது பூருவ மீமாஞ்சை யென்றும், வாதராயண ரெழுதியது உத்தரமீமாஞ்சை யென்றும் வழங்கலாயின வெனக்கொள்க. விரிந்தது தொகுத்தல் அவ்வக் காலத்துக்கும் மக்கள் அறிவு வளர்ச்சிக்கும் பண்பாதலின், "பண்புறப்பகர்ந்திட்டனர்" என்றான் ; முன்னோரை நோக்கப் பின்னோர் ஒரு சில அளவைகளைக் குறைத்துக்கொண்டாராயினும், அளத்தற்குரிய பொருள் எஞ்சாமல் அளக்கப்பட்ட தென்பதும் "பண்புற" என்றதனாற் பெற்றாம்.  
  
(பாடம்) ¹ பகிர்ந்திட்டனர்.

### [28.3](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.3)

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை  
  
10  
  
காண்டல் ¹ கருத லுவம மாகமம்  
² ஆண்டைய வருத்தா பத்தி யோடியல்பு  
ஐதிக மபாவ மீட்சி யொழிவறிவு  
எய்தியுண் டாநெறி யென்றிவை தம்மாற்  
பொருளி னுண்மை புலங்கொளல் வேண்டும்  
  
9  
  
உரை  
  
13  
  
1. பிரமாணங்கள்  
  
காண்டல் - காட்சியளவையும் ; கருதல்-அனுமான வளவையும்; உவமம்-உவமையளவையும்; ஆகமம்-ஆகம வளவையும்; ஆண்டைய அருத்தாபத்தியோடு - ஆங்கு அவற்றோடு கூறப்படும் அருபத்தாபத்தியளவையும் ; இயல்பு - இயல்பு அளவையும்; ஐதிகம்-ஐதிக வளவையும் ; அபாவம் - அபாவ வளவையும் ; மீட்சி ஒழி வறிவு - மீட்சியாலறியும் ஒழிபளவையும்; எய்தி உண்டாம் நெறி - தோன்றியுளதாய் நிகழும் சம்பவ வளவையும்; என்ற இவை தம்மால் - என்று கூறப்பட்ட இப்பத்தாலும்; பொருளின் உண்மை புலங்கொளல் வேண்டும் - பொருளின் உண்மைத் தன்மையையறிதல் வேண்டும் எ - று. காண்டல் முதல் ஆகம மீறாகக் கூறிய நான்கினையும் சிறப்புடையவாகவும் ஏனையவற்றை யத்துணைச் சிறப்பியல்லனவாகவும் சில ஆசிரியன்மார் கோடலின், "ஆண்டைய அருத்தாபத்தியோடு" என்று பிரித்தோதினார். ஓடு: எண்ணுப்பொருட்டு. பாரிசேடத்தை, மீட்சி யொழிவு அறிவு என விளக்கினார். சம்பவ வளவை, தோன்றி நின் றியலுவதைக் காட்டலின், "எய்தியுண்டா நெறி" யென்றார். "இவை தம்மாற் பொருளி னுண்மை புலங்கொளல் வேண்டும்" என்றது. இவற்றால் விளையும் பயன் உணர்த்தி நின்றது. காட்சியைப் பிரத்தியக்கமென்றும், கருதலைக் கருத்தென்றும் அனுமானமென்றும், ஆகமத்தைச் சத்தமென்றும், இயல்பைச் சுபாவமென்றும், அபாவத்தை இன்மையென்றும், மீட்சியைப் பாரிசேட மென்றும் கூறுப. புலங்கொளல், ஒரு சொல்லாய் அறிதலென்பது பட நின்றது; பிறாண்டும் இதுவே கூறிக்கொள்க. வியாதன் கூறிய பத்தையும் ஈண்டுக் கூறி, சைமினி கூறிய ஆறினையும் அளவை வாதத்தின் இறுதியிற் (83--4) கூறி யொழிதலின ³கிருதகோடி கொண்ட எட்டும் தாமே பெறப்படுதலின், அவற்றைக் கூறாதொழிந்தார். எஞ்சி நிற்கும் சுபாவம், ஐதிகம், பாரிசேடம், சம்பவம் என்ற நான்கனுள், அவரால் விலக்குண்ட இரண்டும் இன்னவையெனத் தெரிந்திலவாயினும், சுபாவம், பாரிசேடம் என்ற இரண்டுக்கும் விலக்குண்டனபோலும் எனக் கருதுவதற்கு இடமுண்டு.  
  
¹கருத்தேயுவம. ² மாண்டவருத் தாபத் தீயோடியைபு. ³ இக் கிருதகோடி யென்பாரது வரலாறு இதுகாறும் ஆராய்ச்சிக்கு நன்கு விளங்கவில்லை.

### [28.4](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.4)

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை  
  
15  
  
20  
  
மருளில் காட்சி யைவகை யாகும்  
கண்ணால் வண்ணமும் செவியா லோசையும்  
நண்ணிய மூக்கால் நாற்றமும் நாவாற்  
சுவையு மெய்யா லூறுமெனச் சொன்ன  
இவையிவை கண்டுகேட் டுயிர்த்துண் டுற்றுத  
துக்கமுஞ் சுகமுமெனத் துயக்கற வறிந்து  
உயிரும் வாயிலு மனமுமூ றின்றிப்  
பயிலொளி யொடுபொரு ளிடம்பழு தின்றிச்  
சுட்ட றிதல்கவர் கோட றோன்றாது  
கிட்டிய தேச நாம சாதி  
குணக்கிரி யையி னறிவ தாகும்  
  
14  
  
உரை  
  
24  
  
1. காட்சியளவை  
  
மருளில் காட்சி ஐவகையாகும்-மருட்சிக்குச் சிறிதும் ஏதுவாகாத காட்சி யளவை யைந்து வகைப்படும்: கண்ணால் வண்ணமும்-பொறியால் நிறமும்; செவியால் ஓசையும்-செவிப் பொறியால் ஓசையும்; நண்ணிய மூக்கால் நாற்றமும்-பொருந்திய மூக்காகிய பொறியால் நாற்றமும்; நாவாற் சுவையும்-நாக்காகிய பொறியால் சுவையும்; மெய்யால் ஊறும் என - மெய்யாகிய பொறியால் ஊறும் என்று; சொன்ன இவை இவை-சொல்லப்பட்ட இவற்றை; கண்டு கேட்டு உயிர்த்து உண்டு உற்று-முறையே கண்டும்கேட்டும் மோந்தும் உண்டும் மெய்யுற்றும்; துக்கமும் சுகமும் என - துக்கமென்றும் சுகமென்றும்; துயக்கற அறிந்து - குற்றமற வறிந்து; உயிரும் வாயிலும் மனமும் - உயிரும் இந்திரியங்களும் மனமும்; ஊறின்றி - குற்றமின்றி, பயில் ஒளியொடு - உலகிற் பயில நிலவும் ஞாயிறு திங்கள் தீ என்ற இவற்றின் ஒளி துணையாக ; பொருள் இடம் பழுதின்றி-பொருளும் இடமும் குற்றமற இயைய வைத்து, சுட்டல்-பொருண்மை மாத்திரம் காண்டலும்; திரிதல்-பிறிதொன்றாகக் கோடலும்; கவர்கோடல்-ஐயுறுதலும்; தோன்றாது-இல்லாமல்; கிட்டிய தேசம் நாமம் சாதிகுணம் கிரியைபின் அறிவதாகும்-சார்ந்துள்ள இடம் பெயர் சாதி குணம் தொழில் என்பவற்றாற் சிறப்பித்தறிவதாம் எ - று. எனவே, பொறிவாயிலாகப் பொருள்களின் நலந் தீங்கு காண்டல் காட்சி யளவையின் பயனாமென்றும், காட்சி நிகழுமிடத்து, உயிரும் பொறிகளும் மனமும், ஒளிநிலவும் பொருளும் இடமும் நோக்கிக் காணப்படும் பொருளினுடைய பெயர் சாதி குணம் தொழில் முதலியவற்றால் சிறப்புற அறிதற்கண் தொழிற்படுமென்றும், பொதுமையிற் காண்டல், திரியக் காண்டல், ஐயுறல் என நிகழ்தல் கூடாதென்றும் கூறியவாறாம். ஈண்டுக் கூறியனவே கௌதமரால் ஐவகையாகக் கூறப்படுகின்றன: அவை காணப்படும் பொருளும், ஒளியும், பொறியும்; மனமும், உயிரும் என்பனவாம். தெளிவுக்காட்சிக்குத் தடையாவன தோடம், சம்பிரயோகம், சமுசுகாரம் என்று கூறுவர். தோடமாவது பொறிகளிடத்தேயுள்ள குற்றம் ; சம்பிரயோகமென்பது ஒரு மருங்கு பற்றிய காட்சி: சமுசுகாரமாவது திரிபுக் காட்சி. இவற்றின் விரிவை நியாய பிந்து, நியாய மஞ்சரி முதலிய நூல்களுட் காண்க. ஈண்டுக் கூறிய தோடத்தையே இவ்வாசிரியரும் "ஊறின்றி" யென்றார். "கிட்டிய தேச நாம சாதி குணங்கிரியை"களைக் கற்பனை யென்பதுடன், இவற்றுள், தேசத்தை நீக்கியும் பொருண்மையைக் கூட்டியும் நியாய மஞ்சரி என்னும் நூல் கூறுகிறது. ற்பகனையைக்கழித்துக் காணப்படும் பொருண்மை, உணர்வுருவாய் நின்று உரைக்கு எய்தாதாகலின், அஃது எய்துதற்கு இவை வேண்டப்படுதலின், "கிட்டிய தேட...கிரியையின் அறிவதாகும்" என்றார். தருமகீர்த்தி முதலாயினார் நாமசாதி குணங்கிரியைகளின் வைத்துக் காணும் காட்சியறிவைச் சாமானிய விலக்கணமென்றும், இவையின்றிப் பொருண்மைக்காட்சி யுணர்வைச் சுவிலக் கணமென்றும் கூறுவர். துயக்கு-குற்றம்; தடையுமாம். ஏனையளவை போலாது பொருள்களை நேரிற் கண்டறிதலின் க இனிக் கண்ணாலொரு பொருளைக் காணுமிடத்தும் நிறமேயன்றியளவு வடிவு முதலிய பிறவும் காணப்படுமாயினும் சிறப்புப்பற்றி நிறம் கூறினார். இவ்வாறே பிறவற்றிற்கும் கொள்க. அன்றியும், ஒரு பொருளைக் கண்ணாற் காணுமிடத்துக். கட்பொறியும், மனமும், உயிரும், காண்டற்குத் துணையாகும் ஒளியும் ஒருங்கு தொழில் நிகழ்த்துவது போலச் செவி முதலியவற்றா னிகழும் காட்சிக்கண்ணும் இந்நிகழ்ச்சியுண்மையின் இவ்வாறே கூறிக்கொள்க. மனமும் உயிரும் பொதுவாயினும், பொறிகளும் அவற்றாற் காணப்படும் பொருளும் ஐவகைப்படுவது பற்றி, "காட்சி யைவகை யாகும்" என்றார். நாமதேசக் குணக் கிரியையின் வைத்தறியும் காட்சி சவிகற்பமென்றும்' அவ்வியபதேசமாய்க் காண்பது நிருவிகற்பமென்றும் பிற்காலத்தோர் கூறுவர். வாற்சாயனர், உத்தியோதகரர் முதலாயினோர் காலத்தே இப்பிரிவு இல்லை. அவர்களைப்போலவே இம் மணிமேகலை ஆசிரியரும் சவிகற்ப நிருவிகற்பப் பிரிவு கூறாமை குறிக்கத்தக்கது.

### [28.5](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.5)

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை  
  
25  
  
கருத்தள வாவது  
¹குறிக்கொ ளனுமா னத்தனு மேயத்  
தகைமை யுணருந் தன்மைய தாகும்  
மூவகை யுற்றது பொதுவெச்ச முதலாம்  
பொதுவெனப் படுவது சாத  
  
25  
  
உரை  
  
29  
  
2. கருத்தளவை  
  
கருத்தளவாவது - அனுமான வளவையாவது, குறிக்கொள் அனுமானத்து அனுமேயத் தகைமை யுணரும் தன்மையதாகும் - ஏதுவுக்கு நிலைக்களமான குறியாகக்கொண்டு அனுமானத்தாலே சாதிக்கப்படும் பொருளின் உண்மைத் தன்மையை உணர்த்தும் தன்மையுடையதாகும், அது - அவ்வனுமானவளவை, மூவகையுற்று - மூன்று வகைப்பட்டு, பொது எச்சம் முதல் ஆம் - பொதுவென்றும் எச்சமென்றும் முதலென்றுமாம் எ - று.  
  
ஈண்டு அனுமேயம் என்றது துணியப்படும் மேற்கோளையும். அனுமானமென்றது அதனைத் துணிபு செய்யும் ஏதுவையும் குறித்து நின்றன. குறிகொள் எனற்பாலது எதுகை நோக்கிக் குறிக்கொள் என நின்றது; குறிகொள் என்றும் பாடமுண்டு. இம்மலை தீ யுடைத்து, புகையுண்மையான் என்ற வழி, மலையின்பால் தீயுடைமை துணியப்படும் மேற்கோளாகிய அனுமேயம். புகை யுண்மை, அதனைச் சாதிக்கும் எது. அது தீ யுண்மையைத் துணிபு செய்யும் திறம் அனுமானம், அவ்வேதுவுக்கு நிலைக்களமாய புகை, குறி. இக்குறியை இலிங்கமென்ப. அனுமேயப் பொருட்குத் தகுதி சாதிக்கப்படும் உண்மைத்தன்மை யாதலின், "தகைமை"யெனப்பட்டது. இப் பொது முதலிய மூன்றையும் முறையே அளவை நூலார் சாமானியதா திருட்டம், சேடம், பூருவம் என்று கூறுவர்.  
  
(பாடம்) ¹ குறிகொளனு மானத்.

### [28.6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.6)

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை  
  
30 இவையந் நுவய மின்றா யிருந்துங் கடந்திகழ்  
யானைக் கானவொலி கேட்டோன்  
உடங்கெழில் யானையங் குண்டென வுணர்தல்  
  
30  
  
உரை  
  
32  
  
பொதுவெனப்படுவது - பொதுக் கருத்தளவை யென்று அளவை நூற்புலவராற் கூறப்படுவது, சாதன சாத்தியம் இவை - ஏதுவும் மேற்கோளுமாகிய இவற்றுக்கு, அந்நுவயம் இன்றாய் இருந்தும் - நியதமான உடனிகழ்ச்சி இலதாகிய வழியும், கானம்- காட்டிடத்தே, கடம் திகழ்யானை ஒலிகேட்டோன்-மதம் பொருந்திய யானையின் பிளிறு குரலைக் கேட்டவன் ; உடங்கு - உடனே, எழில் யானை அங்குஉண்டென உணர்தல்-உயர்ந்த யானையொன்று அவ்விடத்தே யுளது என்று உணர்வது எ - று. பொது முதலிய மூன்றுக்கும் உரிய சாமானியதா திருட்டம், சேடம், பூருவம் என்பனபற்றி நையாயிகர் பலர்க்கும் கருத்து வேறுபாடு பெரிது முண்டாயினும், இவ்வாசிரியர் வாற்சாயனர் கூறியாங்குக் கூறுகின்றா ராதலின், "பொது வெனப்படுவது" எனச் சிறப்பித்தார். அந்நுவயமானது காரண காரியத் தொடர்பு இடையறவின்றிச் சேர அமைவது. கானவொலிக்கும் யானை யுண்மைக்கும் அந்நுவய மில்லாமையின் "அந் நுவயமின்றா யிருந்தும்" என்றும், கேள்வியும் உணர்வும் இடையறவுபடாத உடனிகழ்ச்சி யாதலால், "உடங்குணர்தல்" என்றுங் கூறினார். எழுச்சிப் பொருட்டாய எழில் ஈண்டு உயர்ச்சி குறித்து நின்றது. இனிச், சாமானியதா திருட்டத்துக்கு வாற்சாயனர், ஒலிக் கேள்வியோடு கொம்புள்ள விலங்கொன்றினைக் கண்டோன், அதற்கு வாலுண்டென வுணர்தலும் சாமானியதா திருட்டம் என்று கூறினர். இவருக்குப் பிற்போந்த உத்தியோதகரர், நாரைகள் குழீஇ யிருப்பதைக் கண்டோன், அங்கே நீருண்டெனத் துணிதல் சாமானியதா திருட்டம் என்றார் ஆயினும், அவர் இம்மூன்றனையும் பற்றிக்கொண்ட கருத்து வேறென அறிக. இதனைச் சாமானியாநுமானம் என்றும் கூறுவர்.

### [28.7](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.7)

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை  
  
எச்ச மென்பது வெள்ளவே துவினால்  
நிச்சயித் தத்தலை மழைநிகழ் வுரைத்தல்  
  
33  
  
உரை  
  
34  
  
எச்சம் என்பது - எச்சக் கருத்தளவையாவது ; வெள்ள ஏதுவினால் - இவண் வருகின்ற வெள்ளமாகிய காரணத்தைக் கொண்டு ; அத் தலை மழை நிகழ்வு - அதன் மேலிடமாகிய அவ்விடத்தே மழை பெய்திருத்தலை ; நிச்சயித் துரைத்தல்-துணிந்து கூறுவதாம் எ - று. பள்ளத்தை நோக்கி யோடுதல் நீர்க்கியல்பாதலின், அத்தலையென்றது மேலிடமாகிய அவ்விடமாயிற்று. மழையினது எச்சம் வெள்ளமாதலின், வெள்ளவேது கொண்டு சாதிக்கும் கருத்தளவை, எச்சக் கருத்தளவை யெனப்பட்டமை யறிக. இந்த எடுத்துக்காட்டையே வாற்சாயனரும் காட்டியுள்ளார். இதனைக் காரியானுமான மென்றும் கூறுப.

### [28.8](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.8)

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை  
  
முதலென மொழிவது கருங்கொண் முகில்கண்  
டிதுமழை பெய்யு மெனவியம் பிடுதல்  
  
35  
  
உரை  
  
36  
  
முதல் என மொழிவது - முதற் கருத்தளவையென வழங்குவது ; கருக்கொள் முகில் கண்டு - நீர் பொருந்திய கருமுகிலைக் கண்டு, இது மழைபெய்யும் என இயம்பிடுதல் - இம்முகில் மழை பொழியும் எனத் துணிந்து கூறுவதாம். எ - று, மழை பெயற்கு முகில் காரணமாதலின், முதலெனப்பட்டது காரணத்தை முதலென்றல் தமிழ் வழக்கு; "ஆயெட்டென்ப தொழின் முதனிலையே" (தொல். சொல். வேற். மயங். 29) என்றும், "அவ்விரு முதலிற் றோன்று மதுவே" (சொல். வேற்று, 10) என்றும் வருதல் காண்க. கமஞ்சூல் மாமழையைக் "கருக்கொள் முகில்" என்றார். இவ் வெடுத்துக் காட்டே வாற்சாயனராலும் காட்டப்பட்டுள்ளது. இதனைக் காரணானுமானம் என்றலும் ஒன்று.

### [28.9](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.9)

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை  
  
40 என்னு மேதுவி னொன்றுமுக் காலந்  
தன்னி லொன்றிற் சார்ந்துள தாகி  
மாண்ட வுயிர்முதன் மாசின் றாகிக்  
காண்டற் பொருளாற் கண்டில துணர்தல  
  
37  
  
உரை  
  
40  
  
என்னும் ஏதுவின் ஒன்று - பொது எச்சம் முதல் என்று கூறப்பட்ட ஏது வகைகளில் ஒன்று முக்காலம் ஒன்று தன்னிற் சார்ந்துளதாகி தோன்றும் - மூவகைக் காலங்களில் ஒன்றைப் பொருந்தியதாய்த் தோன்றும்; காண்டற்பொருளால்-காணப்படும் பொருளைக்கொண்டு; மாண்ட உயிர் முதல்-மாட்சிமைப்பட்ட உயிராகிய முதல்; கண்டிலது-காணப்படாததனை; மாசின்றாகி - குற்றமின்றி ; உணர்தல் - அறிவதாம் எ - று. எனவே, காண்டற் பொருளாற் காணப்படாததனை யுணர்தல் அனுமானவளவை யென்பதாம். "என்னும் ஏதுவின் ஒன்று" என்றதனால், சாமானியம் சேடம் பூருவம் என்ற மூன்றும் ஏதுவின் வகைமை யுணர்த்தி நிற்பது பெற்றாம். இனி, நையாரிகருட் பலர் பலவேறு கருத்துக்களைக் கூறுவர் ; ஈண்டுக் கூறியது வாற்சாயனர் முதலிய பண்டையாசிரியன்மார் கொண்ட கருத்தாமென அறிக. இவ்வாறே அனுமானமென்பதற்கும் ஆசிரியர் பலரும் பலவாறு கூறுப: நியாயவார்த்திகையென்னும் நூலுடையார், தெரியாததொரு பொருளையாதல், தெரிந்ததொரு பொருளையாதல் காண்டற்குப் பயன்படுவதன்றி, ஐயப் புலப் பொருளொன்றினைத் துணிதற்குப் பயன்படுவது அனுமானவளவையென்றும், நியாயசாரமுடையார், பொறிகளின் காட்சியெல்லைக்கப்பாற்பட்டு நிற்குமொரு பொருளை அதனிற் பிரிப்பறத் தொடர்புற்று, அப்பொறிகளின் காட்சிக் ககப்பட்டிருக்கும் பிறிதொன்றின் வாயிலாகக் காண்டற்கு அனுமானம் அளவையாமென்றும்,தத்துவசிந்தாமணி யாசிரியரான கங்கேசரும், சத்தபதார்த்தி யாசிரியரான சிவாதித்தரும் ஓரறிவைக் கொண்டு பெறலாகும் பிறிதோரறிவு அனுமான வறிவாம் என்றும் கூறுவர். இது குறித்து ஏனை வைசேடிகர், சாங்கியர், புத்தர், சமணர் முதலாயினோர் வேறு வேறு கூறியுள்ளனர் ; அவற்றை அவ்வவர் நூங்களுட் காண்க. காட்சியளவை போலாது, இக்கருத்தளவை முக்காலத்தும் ஒத்தியலும் இயல்பிற்றாதலின், "முக்காலந்தன்னிலொன்றிற் சார்ந்துளதாகித் தோன்றும்" என்றார். உத்தியோதகரரும் காட்சி, நிகழ்காலத்துக்கே யுரித்தென்றும், கருதல்முக்காலத்துக்கு முரித்தென்றும் கூறுவர் (நியாய வார்த். ii. 1 - 31). காண்பொருளும், இடைநிற்கும் ஒளி முதலியனவும், பொறியும், மனமும், உயிரும் என்ற ஐந்தனுள், காட்சிப் பயன் கோடற்கும், மனமும் பொறியும் காண்டலைச் செய்தற்கும்,உயிர் இன்றியமையாமையின், "மாண்ட வுயிர் முதல்" என்றும், மனமும் பொறியும் குற்றமுற்ற வழிக் காட்சி நிகழாமையின், "மாசின்றாகி"யென்றும் கூறனார்; "உயிரும் வாயிலும் மனமுமூ றின்றி" (மணி 27; 30) என்றதே மீளவும் கூறியது, வன்புறை.

### [28.10](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.10)

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை  
  
உவம மாவ தொப்புமை யளவை  
கவய மாவாப் போலுமெனக் கருதல்  
  
41  
  
உரை  
  
42  
  
3. உவமவளவை  
  
உவமமாவது - உவம வளவையாவது; ஒப்புமை அளவை - ஒன்றோடொன்றனை யொப்புக் கூறியுணர்த்தும் அளவையாகும்; கவயமா - கவயமா வென்பது ஒரு விலங்கென அறியாதானுக்கு அக் கவயமா; ஆப்போலும் எனக்கருதல்-பசுவைப்போலிருக்கும் என்று சொல்லி யுணர்த்துதலாம் எறு. தானே யுணர்ந்து கோடற்கு உவமை வேண்டாமையின், ஈண்டுக் கருதுதல் பிறவினைப் பொருட்டு. இதனால் தமிழ்நூலார் பொருளிலக்கணத்தின் ஒரு பகுதியாகக் கொள்ளும் உவமத்தை அணிநூலார் உவம வணியென்று கொண்டாங்கு, அளவைநூலார் உவமவளவை யென்று கொண்டனரென வறிக. இதுவும் "காண்டற் பொருளாற் கண்டில துணர்த"லாயினும்,கருத்தளவை தன் பொருட்டும் பிறர் பொருட்டும் பயன்படுவதாக, இது பிறர் பொருட்டே பயன்படுமென்றும், அது காணப்பட்ட ஏதுவைக்கொண்டு காணப்படாத பொருளை யுணர்த்தி நிற்க, இது காணப்பட்ட பொரு ளொப்புமையாற் காணப்படாத பொருளை யுணர்த்துமென்றும் கொள்க. அறிதற்குரிய பொருளும் அதற்குத் துணையாகும் ஒப்புமையும் உவமவளவைக்கு இன்றியமையாத வுறுப்புக்களாம். இவ் வொப்புமை முழுதுமொத்தல், ஒருபுடை யொத்தல் என இருதிறத்ததாம். முழுதுமொத்தற்கு உவமம்வேண்டா; பசு வென்பது பசுப்போலும் எனக் கூறாராதலின்; உவமமெல்லாம் ஒரு புடை யொத்தேயிருக்கும். மேலும் பொருளும் உவமமும் என்ற இரண்டனுள் உவமத்துக்கும் பொருட்கும் "சாதன சாத்தியபாவம்" இன்றியமையாது என்று நியாயபாடியம் (ii. 1 - 45) கூறுகிறது. இவ்வளவை நூலாரைப் போலவே சட்தரிசனமுச்சய மென்னும் நூலாசிரியரான அரிபத்திரரும் இக் கவயமாவையே உவமவளவைக்குப் பொருளாகக் காட்டுவர். இவ் வளவையை வைசேடிகர் கருதலளவைக் கண்ணும், சாங்கியரும் புத்தரும் காட்சிக்கண்ணும் அடக்கிக்கொள்வர். பூருவமீமாஞ்சகரும் வேதாந்திகளும் இதனை மேற்கொண்டு இலக்கணத்திற் சிறிது வேறுபடக் கூறுவர்.

### [28.11](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.11)

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை  
  
ஆகம வளவை யறிய னூலாற்  
போக புவன முண்டெனப் புலங்கொளல்  
  
43  
  
உரை  
  
44  
  
4. ஆகமவளவை  
  
ஆகமவளவை - உரையளவையாவது, அறிவன் நூலால் - விளங்கிய அறிவினையுடைய பெரியோன் கூறிய நூல் கருவியாக, போகபுவனம் உண்டெனப் புலங்கொளல்-போக நுகர்ச்சிக்கென இந் நிலவுலகத்தின் மேலுங் கீழும் உலகங்கள் உண்டென மேற் கொள்வதாம் எ - று. யாவரும் அறிவுடையரே யெனினும், அதனால் விளக்க முற்றோரே அறிவரெனப்படுப வாதலின், அறிவன் என்பதற்கு விளங்கிய அறிவினையுடைய பெரியோன் என்று பொருள் கூறப்பட்டது. அறஞ்செய்தான் துறக்கம் புகும் என்றும்,அல்லது செய்தான் நிரயம் புகும் என்றும் அறிவர் வழங்குதலின், துறக்க நிரயங்களின் உண்மை கொள்ளப்பட்டமை காண்க; "யானென தென்னும் செருக்கறுப்பான் வானோர்க், குயர்ந்த வுலகம் புகும்" எனவும், "அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத், தீயுழி யுய்த்துவிடும்" (குறள். 346,168.) எனவும் அறிவர் கூறுமாறு காண்க. இன்பமும் துன்பமுமாகிய இருவகை நுகர்ச்சியும்போகமெனப் படுதலின், இருவகைப் புவனத்தையும், "போகபுவனம்" என்றார். அறிவனை முதல்வனென்றும் ஆத்தனென்றும், ஆகமத்தை,உரையென்றும் சத்தமென்றும் வழங்குப. இக் கூற்று நிகழ்த்துவோன் "வைதிக மார்க்கத்தளவை வாதி" யாதலின், ஆத்தனாவான் தெளிந்த அறிவுடைய பெரியோனென்ற கருத்தால் "அறிவன்" என ஒருமையாற் கூறினான் என வறிக. நையாயிகருள் தொல்லோர் ஆத்தனாவான் இறைவனொருவனே யென்னாதுவிளங்கிய அறிவுடைய எவனும் ஆத்தனாகலாம் என்றும், "முனிவரும்,ஆரியரும் மிலேச்சரும்"(நியா.பாடி.1. 1. 7.) எல்லாருமடங்க "எவனும்" என்றும் கூறுப. பிற்கால நையாயிகரும் வைசேடிகரும் ஆத்தனாவான் இறைவனென்றே கூறுப.

### [28.12](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.12)

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை  
  
45 அருத்தா பத்தி யாய்க்குடி கங்கை  
இருக்கு மென்றாற் கரையிலென் றெண்ணல்  
  
45  
  
உரை  
  
46  
  
5. அருத்தாபத்தியளவை¹  
  
அருத்தாபத்தி - அருத்தாபத்தியளவை யென்பது,ஆய்க்குடி கங்கையிருக்கும் என்றால் - ஆயர்\[குடியிருக்கும் பாடி கங்கையிலிருக்கிறதென்று சொன்னால்,கங்கைக் கரையில் என்றெண்ணல்- கங்கையில் என்றது கங்கையாற்றின் கரையில் என்னும் பொருளதெனக் கோடல் எ - று.  
  
ஆயர் குடியிருக்கும் இருப்பு ஆயர்பாடி யெனவழங்கும். ஆயர்பாடி கங்கையிருக்குமென்ற வழி, கங்கையின் இடையே குடியிருத்தல் கூடாமையின், அதன் கரைக்கண் ணிருக்குமென எண்ணியறிந்து கோடல் வேண்டியிருப்பதுபற்றி "எண்ணல்" என்றார். அருத்தாபத்தியாவது ஒரு பொருளைக்கொண்டு, அதனோடியைபுடைய பிறிதொன்றனை யுணர்தல்' அருத்தம்-பொருள்; ஆபத்தி-பிறிதொரு பொருள். "அடுத்துல கோதும் பொருளருத் தாபத்தி யாவதுதான், எடுத்த மொழியினஞ் செப்புவ தாகுமிவ் வூரிலுளார், படைத்தவ ரென்னிற் படையா தவரு முண்டென்றுமிவன், கொடுப்பவ னென்னிற் கொடாதாரு முண்டென்று கொள்வதுவே" (சிவ. சித்தி. அளவை. உரை) என்று மறைஞான தேசிகர் காட்டும் மேற்கோளாலும் இதன் இயல்புணரப்படும்.கங்கேசர் முதலிய ஆசிரியன்மார்,இவ் வருத்தாபத்தி வியதிரேக வியாத்தியால் உணரப்படுவதென்றோதி, "பகலுண்ணான் சாத்தன் பருத்திருப்பான்" என்றவழி, உண்ணாதான் பருத்திருப்பானல்ல னென்பதால் உண்பதுண்டெனத் துணிந்து, "பகலுண்ணா" னெனவே, "இரவிலுண்பான்" எனத் துணிந்து "சாத்தன் இரவில் உண்பன்" எனக் கோடல் என்றுரைத்து இதனைப் பின்வருமாறு விளக்குப,  
  
"யாவன் உண்ணாதான் அவன் பருத்திருப்பானல்லன்:  
இவன் பருத்திருக்கின்றான் ;  
ஆகவே, இவன் உண்ணாதானல்லன்; உண்போனாவான்,  
"யாவனொருவன் உண்போன் அவன் பகலிலாதல் இரவிலாதல்  
இவன் பகலில் உண்ணான் : \[உண்டல்வேண்டும்; ஆகவே,  
இவன் இரவில்உண்போனாவான்."  
  
¹ இதனைச்சபரர் முதலியோர் திருஷ்டார்த்தாபத்தி,சுருதார்த்தா பத்தி யென இருவகைப் படுத்துரைப்பர். கௌடிலியர் தந்திரவுத்திகளில் ஒன்றாக்குவர் (அதி. 15: அத். 1).

### [28.13](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.13)

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை  
  
¹இயல்பி யானைமே லிருந்தோன் தோட்டிக்கு  
அயலொன் றீயா ததுவே கொடுத்தல்  
  
47  
  
உரை  
  
48  
  
6 - இயல்பளவை  
  
இயல்பு - இயல்பளவையாவது, யானைமேல் இருந்தோன் - யானையின் பிடரி மேலிருப்போன் ஒருவன் ; தோட்டிக்கு அயல் ஒன்று ஈயாது-கோலொன்று கொடுப்பதாயின் தன் கையில் உள்ள தோட்டியின் வேறாக ஒன்றும் கொடாது ; அதுவே கொடுத்தல்- அத் தோட்டியினையே கொடுப்பதாம் எ - று.  
யானைமேல் இருப்பவன் கையில் தோட்டியல்லதுபிறிதொருகோல் இன்மையின், கோல்கேட்டவழி அத்தோட்டியினைக் கொடுத்தல் அவற்கியல்பாதலால், இஃது இயல்பளவை யெனப்பட்டது; இதனைச் சுபாவவளவை யென்றும் கூறுப. இதனையே பிறரும், "மாமே லிருந்தொரு கோறா வெனிற்சுள்ளிக் கோறரலும், சோமே லிருந்தொரு கோறா வெனிற்றரவேதுணிந்து, பூமேவு கண்ணழுத் தங்கோல் கொடுத்தலும் பூதலத்தே, நாமே வியல்பென்று கூறுவர் நல்லசொன் னாவலரே" (சிவ. சித்தி. மறை. மேற்.) என்று விளக்கினர். வேறு சில ஆசிரியன்மார், இவ்வியல்பளவைக்கு வேறாகச் சட்டையென ஒன்றைத் தொடுத்துரைப்பர்.  
  
¹ இயைபியானை.

### [28.14](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.14)

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை  
  
50 ஐதிக மென்ப துலகுரை யிம்மரத்து  
எய்திய தோர்பே யுண்டெனத் தெளிதல்  
  
49  
  
உரை  
  
50  
  
7. ஐதிகவளவை  
  
ஐதிகமென்பது - ஐதிகமென்னும் அளவையாவது ; உலகுரை - உலகோராற் கேள்வி வழியாகக் கேட்டு வழிவழியாகச் சொல்லப்பட்டுவரும் சொற்பொருளாகும் ; இம்மரத்து எய்தியது ஓர் பேய் உண்டு எனத் தெளிதல்-இம்மரத்தில் வந்திருப்பதாகிய ஒரு பேய் உண்டு என்று உலகவர் கூறுவதை யுடன்பட்டொழிவது எ-று.  
  
ஒருவரும் கண்ணிற் காணாராயினும், பலரும் உண்டென்ப தொன்றே பற்றி யுடன்பட்டொழிவது ஐதிகவளவையாயிற்று. "உலகத்தா ருண்டென்ப தில்லென்பான் வையத், தலகையா வைக்கப்படும்" (குறள். 850) என்பதும் இதனை யுட்கொண்டிருப்பது காண்க. பிறரும், "கொன்பயில் வேலைக் கடல்புடை சூழுங்குவலயத்தோர், அன்புடனாலிலலகையுண் டென்பர்க ளென்பதுவும், மின்பயில் புற்றில் விடநாக முண்டென்ப ரென்பதுவும், என்பர் கணாவல ரென்பது மைதிக மென்பர்களே" (சிவ. சித்தி. மறை. மேற்.) என்ப.நியாயபாடியம், இதனை ஆகமளவைக்கண் ணடக்கி, ஆத்தனொருவனாற் கூறப்பட்ட வழி இதுவும் ஆகமவளவையா (ii. 2 - 2) மென்று கூறுகிறது.

### [28.15](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.15)

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை  
  
அபாவ மென்ப தின்மையோர் பொருளைத்  
தவாதவ் விடத்துத் தானிலை யென்றல்  
  
51  
  
உரை  
  
52  
  
8. அபாவவளவை  
  
அபாவமென்பது-அபாவவளவை யெனப்படுவது; இன்மை ஒரு பொருளின் இல்லாமையாம்; ஓர் பொருளை - பொருளொன்றினை ; அவ்விடத்துத் தவாது இலை என்றல் - கூறப்படும் அவ்விடத்தே பற்றற இல்லையென்று கொள்வது எ-று.  
  
எனவே, பொருளொன்றின் இன்மை கூறுவது அபாவவளவையென்றும், அபாவமென்பது இன்மையென்றும் கூறியவாறாம். பொருளொன்றின் உண்மையின்மைகளைக் குறித்துச் சொல்நிகழுமிடத்து, இடமும் காலமும் முதலிய வியைபு பற்றியே நிகழுமாகலின், அவற்றுள்ளும் இடத்தையே சிறப்பித்து, "அவ்விடத்து" என்றும், சிறிது எஞ்சக் கூறிய வழியும் இன்மை பெறப்படாமையின், "தவாது இல்லை என்றல்" என்றும் கூறினான். என்றும்பாவம், முன்னபாவம், ஒன்றினொன்ற பாவம், அழிவுபாட்டபாவம் எனப் பகுத்து ஆராய்தலுமுண்டு,அவற்றை விரிந்த நூல்களுட் காண்க. உள்ளதொன்றின் உண்மைகொண்டு அதனோடியைபுடைய பிறிதொன்றின் இன்மையுணர்வு அபாவமாகாது; அஃது அனுமானத்தினடங்கு (நியா. பா. ii. 2-2) மென்றும், காரியத்தினுண்மை காரணத்தினுண்மை யுணர்த்துவதுபோலக் காரியத்தின் இன்மை காரணத்தின் இன்மை யுணர்த்துமென்றும், ஆகமவளவை யானும் அபாவம் பெறப்படுமென்றும் -நியாயகந்தலி, குசுமாஞ்சலி. நியாயமஞ்சரி முதலிய நூல்கள் கூறுகின்றன.

### [28.16](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.16)

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை  
  
மீட்சி யென்ப திராமன்வென் றானென  
மாட்சியி லிராவணன் றோற்றமை மதித்தல்  
  
53  
  
உரை  
  
54  
  
9. மீட்சியளவை  
  
மீட்சி-மீட்சியளவையாவது ; இராமன் வென்றான் என - இராமனுக்கும் இராவணனுக்கும் நடந்த போரில் இராமன் வென்றான் என்ற வழி ; மாட்சியில் இராவணன் தோற்றமை மதித்தல்- அறமாண்பில்லாத இராவணன் தோற்றானென்பதை யுணர்ந்து கோடலாம் எ - று. மீட்சியாவது "ஒழிவறிவு" (மணி. 27: 11) என்றாராகலின் ஈண்டு வாளாது மீட்சி யென்றொழிந்தார். இராமனோடு பொருதற்கு முன்பு காறும் துணைசெய்து போந்த அறம், இராமனது பகைபெற்ற வழித் துணையின்றிக் கழிந்தமையின், "மாட்சியில் இராவணன்" என்றார். வென்றோன் பாலுளதாகும் மாட்சி தோற்றோன்பால் இலதாதல் பற்றி இவ்வாறு கூறினாரென்றுமாம். இவ்வளவையைப் பாரிசேடமென்றும் ஒழிபென்றும் கூறுப. "சீரா ரொழிபென்று செப்பப் படுவது திண் புவிமேற், போராடி நின்று பொருதா ரிருவர்தம் போர்க்களத்துப், பாராரி ராகவன் வென்றா னெனிற்றன் பரிசழிந்து, நேராமிராவணன் றோற்றசொல் லாகி நிகழ்வதுவே" (சிவ. சித்தி. மறை. மேற்.) என்றார் பிறரும். நன்னூல், சிவஞானபோதம், சிவஞானசித்திமுதலியநூலுரைகளில் சிவஞான யோகிகள் இப் பாரிசேடத்தைப் பலவிடங்களில் எடுத்தாளுதல் காண்க. சில மீமாஞ்சை நூல்களுள் இது தனித்ததோ ரளவையாகக் கொள்ளப்படுகிறது.

### [28.17](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.17)

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை  
  
உள்ளநெறி யென்பது நாராசத் திரிவிற்  
கொள்ளத் தகுவது காந்தமெனக் கூறல்  
  
55  
  
உரை  
  
56  
  
10. உள்ளநெறியளவை  
  
உள்ளநெறி யென்பது - சம்பவ வளவையாவது; நாராசத் திரிவில் - இருப்புத்துண்டின் சுழற்சியால்; கொள்ளத்தகுவது காந்தமெனக் கூறல் - கொள்ளக் கிடப்பது காந்தமென்று சொல்வதாம் எ - று.  
  
இதனையே மேலே எய்தியுண்டாநெறி யென்றார். பிறரெல்லாம் சம்பவமென்றும் உண்மையென்றும் வழங்குப. நாராசம் - இருப்புத் துண்டு. காந்தமேறிய இருப்புத்துண்டு சலிப்பது உண்மை; சலிப்பினால் காந்த முண்மை துணிவது சம்பவமாயிற்று. முதலின்கண் சினையுண்மையும், தொகுதிக்கண் பகுதியுண்மையும் ஆயிரத்தில் நூறுண்மையும், நூற்றின்கண் தொண்ணூறுண்மையும் சம்பவமென்றும், இது கருதலளவைக்கண் அடங்குமென்றும் நையாயிகர் கூறுவர். இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தலும் இதன்கண் அடங்குமெனக்கொண்டு, "துயக்கற வுண்மை யெனநா வலர்க டுணிந்துரைப்ப, தியற்கைப் பொருளினை யிற்றென லாமிது தானுரைக்கின், வியக்குற்ற கால்சலிக்கும்தீச் சுடும்விய னீர்குளிரும்,வயக்குற்ற மண்வலி தென்றுபட் டாங்கு வழங்குவதே" (சிவ. சித். மறைஞா. மேற்.) என்று கூறுவாருமுளர்.

### [28.18](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.18)

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை  
  
60 எட்டுள பிரமா ணாபா சங்கள  
சுட்டுணர் வொடுவிரி யக்கோட லையந்  
தேராது தெளிதல் கண்டுண ராமை  
எய்து மில்வழக் குணர்ந்ததை யுணர்தல்  
நினைப்பென நிகழ்வசுட் டுணர்வெனப் படுவது  
  
57  
  
உரை  
  
61  
  
2. பிரமாணாபாசங்கள்  
  
பிரமாணாபாசங்கள் எட்டுள - மேலே காட்சி முதல் உள்ள நெறி யீறாகக் கூறிய பிரமாணம் பத்திற்கும் ஆகாவென விலக்கப் பட்ட குற்றங்கள் எட்டு உள்ளன; சுட்டுணர்வு - பொருண்மை மாத்திரம் காணும் சுட்டுணர்வும்; திரியக்கோடல் - திரிபுக் காட்சியும்; ஐயம் - ஐயக்காட்சியும்; தேராது தெளிதல் - தேராத் தேற்றமும்; கண்டுணராமை - அறிவறியாமையும்; எய்தும் இல்வழக்கு- இவற்றோடு பொருந்திய இல்வழக்கும்; உணர்ந்ததை யுணர்தல் மறித்துணர்வும் ; நினைப்பு என - நினைப்பும் என ; நிகழ்வ - நிலவு வனவாகும் ;  
  
மேலே காட்சியளவைக்கு ஆகாவென விலக்கிய சுட்டுணர்வு, திரியக்கோடல், ஐயம் என்றவற்றை ஈண்டும் கூறியது பிரமாணாபாசமாம் இயைபு குறித்து என்க. எட்டுள என்றது, "தொகுத்துச் சுட்டல்"; ஏனைய, "வகுத்து மெய்ந் நிறுத்தல்." தெளிதற்குரிய ஏதுவகையாற் றெளியாது தேறுதல் குற்றமாதலின், தேராத தேற்றத்தைத் "தேராது தெளித" லென்றும், கண்டுணர்தற்குரிய அளவையும் கருவியும்கொண்டு கண்டவழியும் உணராமை அறிவறியாமை யாதலின், அதனைக் "கண்டுணராமை" யென்றும் பண்டேயுணர்ந் திருக்கு மொன்றை மறித்தும் உணர்தல் மிகையாதலின், அதனை "உணர்ந்ததை யுணர்தல்" என்றும் கூறினார். மறதியன் றென்றற்கு "உணர்ந்ததை" என்றார். இது மறித்துணர்வு என்றும் வழங்கும்.

### [28.19](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.19)

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை  
  
62 நினைப்பென நிகழ்வசுட் டுணர்வெனப் படுவது  
எனைப்பொரு ளுண்மை மாத்திரை காண்டல்  
  
61  
  
உரை  
  
62  
  
சுட்டுணர் வெனப்படுவது - சுட்டுணர்வு என்பது; எனைப் பொருளுண்மை மாத்திரை காண்டல் - எல்லாப் பொருள்களையும் அவற்றின் உண்மை மாத்திரம் கண்டொழிதலாம் எ - று.  
  
குற்றியோ மகனோ தோன்றிய வழி, அக்குற்றி மகன்களின்பெயர் சாதி குணம் தொழில் முதலியன காணாது தோற்றமேபற்றி உளதென்னும் உண்மை மாத்திரம் கண்டொழிதல் என்பதாம்; "பிறிதினை விலக்கலு மாட்டலு மின்றாய், ஒருபொரு ளுரைப்பது சுட்டெனப்படுமே" (நீலகே, 120. உரை. மேற்,) என்பது கருதத்தக்கது. பிற்காலத்தே இது நிருவிகற்பக் காட்சி யெனப்படுவதாயிற்று.

### [28.20](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.20)

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை  
  
திரியக் கோட லொன்றையொன் றென்றல்  
விரிகதி ரிப்பியை வெள்ளியென் றுணர்தல்  
  
63  
  
உரை  
  
64  
  
திரியக்கோடல் - திரியவுணர்தலென்பது ; ஒன்றை ஒன்றென்றல் - காணப்பட்டதொரு பொருளைப் பிறிதொன்றாகக் கொள்ளுதல் ; விரிகதிர் இப்பியை வெள்ளியென்று உணர்தல் - விரிந்த ஒளிக்கதிர்களையுடைய இப்பியை வெள்ளியென்று உணர்ந்து கொள்வதாம் எ - று.  
  
உணர்வின் திரிபு உணரும் செயன்மேனின்றது ; அருணந்தி சிவனாரும் "திரியவே கொண்டல் திரிவாம்" (சிவ. சித்தி. அள. 3) என்பது காண்க. இப்பியை வெள்ளியென்று திரியக் கோடற்கு ஏது அதனது விரிகதிர்த் தோற்றமாதலின், "விரிகதிர் இப்பியை" என்று சிறப்பித்தார். இதனை விபரீதக் காட்சியென்றும் வழங்குப. "ஒன்றை யொன்றென்றல்" இதன் இலக்கணமெனவும், இப்பியை வெள்ளியென் றுணர்தல் எடுத்துக் காட்டெனவும் கொள்க.

### [28.21](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.21)

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை  
  
ஐய மென்ப தொன்றை ¹ நிச்சயியா  
மையற் றறியோ மகனோ வென்றல்  
  
65  
  
உரை  
  
66  
  
ஐயமென்பது - ஐயமென்னும் பிரமாணக் குற்றமாவது ஒன்றை நிச்சயியா மையல்-காணப்பட்டதொன்றை இன்னதெனத் துணியாமைக் கேதுவாய் நிற்கும் மயக்கம் ; தறியோ மகனோ என்றல்-காணப்பட்ட உருவைக் குற்றியோ மகனோ எனக் கவர்வுற்றுத் துணியாதொழிதல் எ - று.  
  
ஐயக் காட்சிக் கேதுவாகிய மையலை "ஐய" மென்றார். தறி, குற்றி முன்னர்க் "கவர்கோடல்" (மணி. 27:) என்றதும் காண்க. ஐயத்துக் கேதுவாக மையலாகிய அகக்காரணமொன்றே கூறினாராக, பதார்த்த தரும சங்கிரகமுடையார் ஒளியின்மை, சேய்மை முதலாகப் புறக்காரணமும் கூறுவர். பிற்போந்த அளவைநூலார், ஐயமும் உண்மையுணர்வுக்கு ஊக்கங் கொளுத்துமாற்றால் ஆக்கமாகக் கருதுப.  
  
(பாடம்) ¹நிச்சயியாது.

### [28.22](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.22)

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை  
  
தேராது தெளிதல் செண்டு வெளியில்  
ஓராது தறியை மகனென வுணர்தல்  
  
67  
  
உரை  
  
68  
  
தேராது தெளிதல்-ஆராயாது துணிதலென்பது ; செண்டு வெளியில் தறியை-செண்டாடும் வெளியிடத்து நிற்குங் குற்றியை; ஓராது-குற்றியோ மகனோ என ஆராயாமலே ; மகன் என உணர்தல் - மகனென்றே துணிந்தொழிவது எ - று.  
  
செண்டுவெளி-குதிரைவீரர் விளையாட்டயருமிடம்; "செண்டாடுந் தொழில் மகிழ்வம்" (பெரியபு. கழறிற். 155) எனச் சான்றோர் வழங்குவது காண்க. குதிரைவீரரும் குதிரையைப் பிணிக்கும் குற்றியுமிருக்கும் செண்டுவெளியில் நிற்கும் குற்றியைக் குதிரைவீரருள் ஒருவனாக ஆராயாது மேற்கோடல் குற்றமாதல் காண்க. கூற்றுவகையால் தெளிவு தோன்றினும், ஆராய்ந்த வழி வழுவாதலின், "தேராது தெளிதல்" எனப்பட்டது. தேராத் தெளிவும் தெளிந்ததன்கண் ஐயுறவும் குற்றமென வறிக.

### [28.23](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.23)

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை  
  
70 கண்டுண ராமை ¹ கடுமாப் புலியொன்று  
அண்டலை முதலிய கண்டுமறி யாமை  
  
69  
  
உரை  
  
70  
  
கண்டுணராமை - கண்டுணராமையென்னும் பிரமாணாபாசமாவது, கடுமாப் புலியொன்று அண்டல் முதலிய - கடிய விலங்காகிய புலியொன்று நெருங்குதல் முதலியவற்றை, கண்டும் - நேரிற் கண்டுவைத்தும், அறியாமை - தம்மைப் பாதுகாவாமைக் கேதுவாகிய அறிவறியாமையாம் எ - று.  
  
இரை விழுங்கி யுறங்கும் மாசுணம் எரியாற் சூழப்படினும் இடம் பெயராது கிடத்தல் போல, புலி முதலிய தீங்கு செய்யும் விலங்குகள் நெருங்கி வருதலை யறிந்துவைத்தும் தம்மைப் பாதுகாவாமைக்கு ஏதுவாகிய நல்லறிவின்மை, ஈண்டுக் "கண்டுணராமை" எனப்பட்டது. அறியாமை, அறிந்து பாதுகாத்தலைச் செய்யாமை. இதனை உலகோர் "அலட்சிய புத்தி" யென்றும், அளவை நூலோர், "உபேட்சாத்மக ஞானம்" என்றும் வழங்குவர். அண்டலை யென்புழி ஐ: சாரியை அண்டல், அணுகுதல்; "துயரங்கள் அண்டாவண்ணம் அறுப்பான் எந்தை" (ஞானசம். 197-1) என்புழிப்போல.  
  
¹ கடுமருப்புலியி லோர்ந்து.

### [28.24](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.24)

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை  
  
இல்வழக் கென்பது முயற்கோ டொப்பன  
சொல்லின்மாத் திரத்தாற் கருத்திற் றோன்றல்  
  
71  
  
உரை  
  
72  
  
இல்வழக்கென்பது - இல்வழக்கென்று சொல்லப்படுவது, முயற்கோடொப்பன - முயற்கோடு போலவரும் வழக்குக்களை, சொல்லின் மாத்திரத்தால் கருத்தில் தோன்றல்-ஓசைவடிவிற்றாய சொல்லே பொருளாகக் கருத்திற் கொண்டொழிதல் எ - று.  
  
முயற்கோடு ஒப்பன என்றது, ஆகாயப்பூ, யாமை மயிர்க்கம்பலம் முதலாயினவற்றை உளப்படுத்தற்கு. இவை பொருளல்லவாயினும், சொன்மாத்திரையால் உண்டெனக் கொண்டொழிதலாற் பயனின்மையின் குற்றமாயின. முயற்கோடு முதலாயின தொடராற்றலாற்பொய்ப் பொருள் குறித்து நிற்பனவாதலின், 'சொல்லின் மாத்திரத்தாற் கருத்திற் றோன்றல்' என்றார். கருத்திற் கொள்ளாவழி ஆண்டுத் தோன்றுதலின்மையின், கோடல், "கருத்திற் றோன்றல்" எனப்பட்டது.

### [28.25](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.25)

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை  
  
உணர்ந்ததை யுணர்த லுறுபனிக் குத்தீப்  
புணர்ந்திடல் மருந்தெனப் புலங்கொள நினைத்தல்  
  
73  
  
உரை  
  
74  
  
உணர்ந்ததை உணர்தல்-உணர்ந்திருந்ததனையே மறித்தும் உணர்தல் என்பது, உறுபனிக்குத் தீப்புணர்ந்திடல் மருந்து என- மிக்க குளிருக்கு நெருப்பருகே சார்தல் மருந்தாமென்று, புலங்கொள நினைத்தல் - அறிவானறிந்து மேற்கோடல் எ - று.  
  
தட்பத்துக்கு வெப்பம் மாறாதலையுணர்ந்துவைத்தும் தீயருகே சார்தல் குளிர்க்கு மருந்தாமென ஆராய்ந்து தெளிதல் வேண்டாச் செய்கை யாதலால் குற்றமாயிற்று. எத்துணை மிக்க பனியாயினும், மறித்தும் ஆராய்ச்சி வேண்டா என்றற்கு "உறுபனி" யென்றும், அளவையானாராய்ந்து தெளியுமாறு தோன்றப் "புலங்கொள நினைத்தல்" என்றும் கூறினார்.

### [28.26](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.26)

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை  
  
75  
நினைப்பெனப் படுவது காரண நிகழாது  
நினக்கிவர் தாயந் தந்தையு மென்று  
பிறர்சொலக் கருதலிப் பெற்றிய வளவைகள்  
  
75  
  
உரை  
  
77  
  
நினைப்பு எனப்படுவது - நினைப்பென்னும் பிரமாணாபாசமாவது, நினக்கு இவர் தாயுந் தந்தையுமென்று பிறர் சொல-நினக்கு இவர் தாயுந் தந்தையுமாவர் என்று பிறர் கூறியவழிக் கோடல் போல், காரணம் நிகழாது கருதல் - பிறர் கூறுவனவற்றைக் காரணவாராய்ச்சியின்றி மேற்கொண்டொழிதலாம் எ - று.  
  
எனவே, பிறர் கூறும் அனைத்துச் சொற்களையும் காரண காரிய ஆராய்ச்சியின்றி மேற்கோடல் குற்றமென்ற வாறாம். இக்காலத்தும் வெளுத்த தெல்லாம் பாலெனக் கருதி யேமாற்ற மெய்தினோரை நோக்கி, "நுமக்கு யாவரும் தூயவே மொழிகுவரென்னும் நினைப்பு" என்று கூறக் காண்டும். தனக்குத் தாயுந் தந்தையுமாவாரைக் காரண வகையா லாராய்தல் கூடாமையின், "காரணம் நிகழாது" என்றும், தாயறிவிக்க அறியுந் தந்தையினும் தாயைப் பிறர் அறிவிக்கவன்றி யறிதல் கூடாமையின், "பிறர் சொல" என்றும், காரண நிகழாது மேற்கோடற்குரியார் தாயுந் தந்தையுமின்றிப் பிறரின்மையின், "நினைக்கிவர் தாயுந் தந்தையுமென்று பிறர் சொலக் கருதல்" என்றும் கூறினார். கருதுதல் போலக் கருதுதலைக் "கருதல்" என்றார்; இஃது "என்னோற்றான் கொல்லெனும் சொல்" (குறள்-70) என்றாற்போல முடிந்தது-  
  
(இப்பெற்றிய அளவைகள்) அளவைகள் இப்பெற்றிய - இது காறும் கூறிய பிரமாணங்களும் அவற்றின் ஆபாசங்களும் இத் தன்மையனவாம் எ - று. இது முடிந்தது முடித்தல்.

### [28.27](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.27)

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை  
  
80  
பாங்குறு முலோகா யதமே பௌத்தஞ்  
சாங்கியம் நையா யிகம்வை சேடிகம்  
மீமாஞ் சகமாஞ் சமயவா சிரியர்  
தாம்பிரு கற்பதி சினனே கபிலன்  
அக்க பாதன் கணாதன் சைமினி  
மெய்ப்பிரத் தியமனு மானஞ் சாத்தம்  
உவமான மருத்தா பத்தி யபாவம்  
  
78  
  
உரை  
  
84  
  
பாங்குறும்-பகுதிப்படுகின்ற, உலகாயதம் பௌத்தம் சாங்கியம் வைசேடிகம் மீமாஞ்சகமாம்-உலகாயதமும் பௌத்தமும் சாங்கியமும் வைசேடிகமும் மீமாஞ்சையுமாகிய, சமய ஆசிரியர் தாம் - சமயங்கட்கு முறையே ஆசிரியராவார், பிருகற்பதி சினன் கபிலன் அக்கபாதனும் கணாதன் சைமினி - வியாழனும் புத்தனும் கபிலனும் அக்கபாதனும் கணாதனும் சைமினியுமாவர், மெய்ப்பிரத்தியம் அனுமானம் சாத்தம் உவமானம் அருத்தாபத்தி அபாவம்-அவருள் வியாழன் காட்சி யொன்றும், 1புத்தன் காட்சியும் அனுமானமுமாகிய இரண்டும், கபிலன் அவ்விரண்டுடன் ஆகமம் சேர மூன்றும், அக்கபாதன் அம்மூன்றோடு உவமானம் கூட்டி நான்கும், கணாதன் அந்நான்குடன் அருத்தாபத்தியைச் சேர்த்து ஐந்தும், சைமினி காட்சி முதல் அபாவ மீறாகவுள்ள ஆறும் அளவைகளாகக் கொண்டனர், இப்போது இவையே இயன்றுள அளவைகள் - இப்போழ்து இவ்வறுமே அச் சமயிகளால் வழங்கப்பட்டு வரும் அளவைகளாகும் எ - று.  
  
இறைவன், முறை செய்து காக்கும் முதல்வன், உயிர்கட்கு உடலும் பிரத்தியக்கமெனினு மொக்கும். காட்சிக் கண் பொருளை நேரேயுற்றறிதலின், அதனை "மெய்ப்பிரத்தியம்" என்றார். பிரத்திய முதலிய ஆறுமே பொருள்களின் உண்மை துணிதற்குரியவையாதல்பற்றி இவ்வாறு சிறப்பித்தாரெனினுமாம். எண்ணுக் குறித்தியலும் எண்ணேகாரம் இடையிட்டு நின்றது. அக்கபாதரைக் கௌதமபுத்தரென்றும், கணாதரைக் கணாசனரென்றும் கூறுவதுண்டு. ஏற்புடைய சொற்கள் இசை எச்ச வகையால் பெய்து கூறப்பட்டன.  
  
1 தார்க்கிகரட்சையென்னும் நூலாசிரியரான வரதராசரென்பார், உலகாயதர் காட்சயாகிய ஓரளவையும், புத்தரும் வைசேடிகரும் காட்சியும் கருதலுமாகிய இரண்டளவையும், சாங்கியர் அவ்விரண்டோடு உரையினைக் கூட்டி மூன்றளவையும், நையாயிகருள் ஒரு சாரார் அம்மூன்றோடு உவமையைக் கூட்டி நான்களவையும், மீமாஞ்சகருள் ஒருசாரார் அந்நான்குடன் அபாவத்தைக் கூட்டி ஐந்தளவையும் கொண்டனர் என்பர். சைவருட் பெரும்பாலோர் காண்டல், கருதல், உரையென்ற மூன்றளவையும், பௌட்கர முதலிய ஆகமவழி நின்றோர் அம் மூன்றோடு அருத்தாபத்தியைக் கூட்டி நான்களவையும் கொள்ப. பட்டாசாரியன் நெறி நின்றோர், காட்சி, கருதல், உரை, உவமை, அருத்தாபத்தி, அபாவம் என்ற ஆறுமே கொண்டனரென்றும், பிரபாகர நெறி நின்றோர் அபாவமொழிந்த ஏனை ஐந்துமே கொண்டனரென்றும், நையாயிகர் அருத்தாபத்தி யொழிந்த ஏனை நான்குமே கொண்டனரென்றும், சாங்கியர் உவமை யொழிந்த மூன்றும் கொண்டனரென்றும், வைசேடிகரும், புத்தரும் காட்சியும் கருத்துமே கொள்பவென்றும், உலகாயதர் காட்சியொன்றே கொள்வரென்றும் சாத்திர தீபிகையின் ஆங்கில முன்னுரை கூறுகிறது.

### [28.28](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.28)

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை  
  
85  
  
90  
  
95 இடையே யிப்போ தியன்றுள வளவைகள்  
என்றவன் றன்னைவிட்டிறைவ னீசனென  
நின்ற சைவ வாதிநேர் படுதலும்  
பரசுநின் றெய்வ மெப்படித் தென்ன  
இருசுட ரோடிய மானனைம் பூதமென்  
றெட்டு வகையு முயிரும்யாக் கையுமாய்க்  
கட்டிநிற் போனுங் கலையுருவி னோனும்  
படைத்துவிளை யாடும் பண்பி னோனுந்  
துடைத்துத் துயிர்தீர் தோற்றத் தோனுந்  
தன்னில் வேறு தானொன் றிலோனும்  
அன்னோ னிறைவ னாகுமென் றுரைத்தனன்  
  
85  
  
உரை  
  
95  
  
\[ சைவவாதி \]  
  
என்றவன் தன்னைவிட்டு - என்று கூறிமுடித்த அளவை வாதியைவிட்டுநீங்கி, இறைவன் ஈசன் என நின்ற சைவவாதி நேர் படுதலும் - எங்கட்கு இறைவனவான் ஈசன் என்று கொண்டொழுகிய சைவவாதி எதிர்ப்பட்டானாக அவனைக் கண்டு, பரசம் நின் தெய்வம் எப்படித்து என்ன - நீ வழிபடும் நின் தெய்வம் எவ்வியல் பிற்று என மணிமேகலை கேட்க, இரு சுடரொடு இயமானன் ஐம்பூதம் என்று எட்டு வகையும் யாக்கையும் உயிருமாய்க் கட்டி நிற்போனும் - ஞாயிறு திங்கள் இயமானன் மண் நீர் தீ காற்று வான் என்ற எட்டினையும் தனக்கு உடம்பாய்த் தான் அவற்றிற்கு உயிராய் அமைந்து நிற்பவனும், கலையுருவினோனும் - பல்வகைக் கலைகளையும் தனக்கு உருவாக வுடையவனும், படைத்து விளையாடும் பண்பினோனும்-யாவற்றையும் படைத்து அப்படைத்தவை நின்ற நிலவச் செய்யும் தன்மை யுடையவனும், துடைத்துத் துயர்தீர் தோற்றத்தோனும்-படைப்புற்று நிற்பவற்றை யொடுக்குமாற்றால் அவற்றின் இளைப்பைப் போக்கியருளும் சிறப்புடையவனும், தன்னில் வேறு ஒன்று இல்லோனும்-தன்னின் வேறாய்த் தனக்கு ஒப்பதும் மிக்கதுமாகிய தெய்வமொன்றுமில்லாதவனுமாகிய, அன்னோன் -அத்தன்மையையுடைய முதல்வனே, இறைவனாகும் என்று உரைத்தனன் - எங்கட்கு இறைவனாவான் என்று சொன்னான்.  
  
இறைவன், முறை செய்து காக்கும் முதல்வன், உயிர்கட்கு உடலும் கருவியும் உலகும் பிறவும் படைத்தளித்துக் காத்தலும், அவ்வுயிர்கட் குண்டாகும் இளைப்பு முதலிய நீங்குதற் பொருட்டு ஒடுக்குதலும் செய்து, அவ்வுயிர்கள் செய்யும் வினைக்கேற்ப இன்பமும் துன்பமுமாகிய பயன்களை முறை செய்து வழங்குதலும் செய்தலின் "இறைவன்" என்றார்: இறு என்னும் சொல்லடியாகக் கொண்டு எப்பொருளினும் தங்குபவன் என்றலு மொன்று. இரு சுடர் முதலிய எட்டினையும் கட்டி நிற்றலாவது, தனக்கென வேறுடம்பின்றி அவற்றையே உடம்பாகவும் அவற்றில்தான் உண்ணிறைந்தியக்குதலின் உயிராகவும் கொண்டு நிற்றல். யாக்கையும் உயிருமாய் என மாறுக. கட்டி நிற்போனெனவே, இவ்வாறு உடம்புமுயிருமாக வமைத்துக் கோடல் அவன் தானாகவே தன் நினைவாற் (சங்கற்பத்தால்) சமைப்பதென்றும், இவ்வாறு கட்டிக் கொள்ளாதே வேறாய் நிற்றலும் அவற்குண்டென்றுங் கூறினானாம். முதல்வன் அட்டமூர்த்தியாயிருத்தலை, நாவரசரும், "இருநிலனாய்த் தீயாகி நீருமாகி இயமான னாயெறியுங் காற்று மாகி, அருநிலைய திங்களாய் ஞாயி றாகி ஆகாச மாயட்ட மூர்த்தி யாகி" (6:91,1) என்பது காண்க. கற்கப்படும் கலை பலவும் இறைவனே என்பது, "கலையவன் மறையவன் காற்றொடுதீ, மலையவன் விண்ணொடு மண்ணுமவன்" (109:6) என்று ஞானசம்பந்தரும், "கலையாகிக்கலைஞானம் தானேயாகி" (6:94: 2) என நாவரசரும் கூறுவர். படைத்தலும் காத்தலும் அவற்கு மிக எளிதில் அமைவன என்றற்கு "விளையாடும் பண்பினோன்" என்றார்; "காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி" (திருவெம்பாவை) என்று மணிவாசகர் கூறுதல் காண்க. துயர், இளைப்புத் துன்பம். தோற்றம், சிறப்பு, துடைத்தற்கு ஏது கூறுவர், "துயர் தீர்தோற்றத்தோன்" என்றார். "தன்னில்" என்றதனால் ஒப்பும், வேறு என்றதனால் மிகுதியும் கொள்ளப்பட்டன.

### [28.29](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.29)

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை  
  
பேருல கெல்லாம் பிரம வாதியோர்  
தேவ னிட்ட முட்டை யென்றவனன்  
  
96  
  
உரை  
  
97  
  
\[ பிரமவாதி \]  
  
பிரமவாதி-பிரமவாதி யென்பவன், பேருலகெல்லாம்-பெரிய இவ்வண்ட முழுதும், ஓர் தேவன் - ஒப்பற்ற பிரமதேவனிட்ட, முட்டை என்றனன்-முட்டையாகுமென மணிமேகலைக்குச்சொன்னான். எ-று.  
  
இது வைதிக நெறியாகிய அறுவகைச் சமயத்துள் கூறப்படாது புராணங்களிற் கூறப்படும் வழக்கு. இப்பிரமவாதி கூற்றே பற்றி, இவ் வண்டமும் பிரமாண்டமெனப்படுகிறதென வறிக. ஈண்டுக் கூறப்படும் கருத்து மனுதரும நூலில் முதல் அத்தியாயத்திலே (சுலோ. 9) கூறப்படுகிறது.

### [28.30](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.30)

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை  
  
காதல் கொண்டு கடல்வணன் புராணம்  
ஓதின னாரணன் காப்பென் றுரைத்தனன்  
  
98  
  
உரை  
  
99  
  
\[ வைணவவாதி \]  
  
கடல்வணன் புராணம்-கடலின் நிறத்தை யுடையனாகிய விட்டுணு புராணத்தை, காதல் கொண்டு ஓதினன் - அன்போடு ஓதிப் பயின்றவனாகிய வைணவ வாதி, நாரணன் காப்பு என்று உரைத்தனன் -தங்கட்கு நாராயணனே இறைவன் என்று மணிமேகலைக்குச் சொனனான் எ - று.  
  
காதல் கொண்டோதினன் எனவே, இவன் வைணவ சமயத்திற் பேரன்பும் கடைப்பீடியும் உடையனென்பது பெற்றாம். முறை செய்தலே யன்றிக் காத்தலும் இறைவன் கடனாகும் இயைபுபற்றி, இறையென்பதற்குக் "காப்பு" என்றான். புராணம்: பழமையான வரலாறு. து.

### [28.31](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.31)

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை  
  
100  
கற்பங் கைசந் தங்கா லெண்கண்  
தெற்றெ னிருத்தஞ் செவிக் கைமூக்  
குற்ற வியாகர ணமுகம் பெற்றுச்  
சார்பிற் றோன்றா வாரண ¹வேதக்  
காதி யந்த மில்லையது நெறியெனும்  
  
100  
  
உரை  
  
105  
  
\[ வேதவாதி \]  
  
கற்பம் கை சந்தம் கால் எண் கண்-கற்பமென்னும் அங்கம் கையாகவும் சந்தமென்பது காலாகவும் கணிதமென்பது கண்ணாகவும், தெற்றென் நிருத்தம் செவி-தெற்றென விளக்கம் செய்யும் நிருத்த மென்னும் அங்கம் காதாகவும், சிக்கை மூக்கு-சிஷை மூக்காகவும், உற்ற வியாகரணம் முகம் பெற்று - இவற்றோடு பொருந்தும் சொல் இலக்கணம் என்னும் அங்கம் முகமாகவும் கொண்டு, சார்பின் தோன்றா-யாதொன்றனையும் சார்ந்து தோன்றுதலில்லாது தான்றோன்றி யாகிய, ஆரணவேதக்கு-ஆரணமாகிய வேதபுருடனுக்கு, ஆதி அந்தமில்லை-தோற்றமும் கேடும் இல்லை,அது நெறி - அவ்வேதம் கூறுவதே எங்கட்குச் சமய நெறியாம். எ - று.  
  
சந்தம், சந்தோவிசிதி. வைதிகச் சொற்களை யாராய்தற்குக்கருவி யாதலின், "தெற்றென் நிருத்த" மெனப்பட்டது. வியாகரணம் ஐந்திர முதலிய வடமொழி யிலக்கணம். வேதம் அநாதி யென்றும் அதனை யுருவகத்தாற் புருடனென்றும் கூறுவது வைதிக வேதியர் மரபு. "வேதம் அபௌருஷேயம்" என்பது பற்றி "சார்பிற் றோன்றாது" என்றார். ஊழிதோறும் தொடக்கத்தே இறைவன் இவ்வேதங்களைத் தொகுத்தளிக்கின்றா னென்பான், அதற்கு இறைவன் போல அநாதி யுண்மைத் தன்மை கற்பித்து, ²"வேதக்கு ஆதியந்தமில்லை" என்றான் "மாயா வாய்மொழி" (பரி. 3.47) என்பதற்கும், "முதுமொழி" (பரி 3.47) என்பதற்கும் கூறப்படும் உரையகத்தும், "அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதி" (குறள். 543) என்பதன் உரையகத்தும் ஆசிரியர் பரிமேலழகர் வேதம் அநாதி நித்தியம் என்பது காணப்படும். வேத புருடற்குக் கற்ப முதலியன கை முதலிய உறுப்புக்களாகக் கூறுவது பற்றி இக்கற்ப முதலிய ஆறும் வேதாங்கமெனப்படும். இனி, நச்சினார்க்கினியார் சிக்கையையொழித்துப் பிரமத்தைக் கூட்டி ஆறங்கமாவன: உலகியற் சொல்லை யொழித்து வைதிகச் சொல்லை யாராயும் நிருத்தமும், அவ்விரண்டையு முடனாராய்ந்த ஐந்திரத் தொடக்கத்து வியா கரணமும், போதாயனீயம், பாரத்துவாசம், ஆபத்தம்பம், "ஆத்திரேயம் முதலிய கற்பங்களும், நாராயணீயம் வராகம் முதலிய கணிதங்களும், எழுத்தாராய்ச்சியாகிய பிரமமும், செய்யுளிலக்கணமாகிய சந்தமுமாம்" (தொல். புறத். 20. உரை) என்றனர். இனி ஈண்டுக் கூறிய எண்ணைச் சோதிடம் என்றும் கொள்ப. "மனக்கினியாற்கு" (மணி. 21.30.) என் புழிப் போல வேதக்கு என்பதும் சாரியை பெறாது முடிந்தது. அவ்வேதம் கூறும் விதி விலக்குகளையே சமயநெறியாகக் கொண்டொழுகுதலின்; "அது நெறி" என்றான்.  
  
(பாடம்) ¹வேதத், தாதியந்த மில்லை யதுவே நெறியெனும். ² வேதம் அநாதி நித்தியமென்பது பற்றி நிகழும் தடை விடைகளை நியாய பாடியத்தும் நியாயவார்த்திக தாற்பரிய டீகை (ii. 1. 68)யிலும் நீலகேசி வேதவாதச் சருக்கத்தும் (ix) சாத்திர தீபிகை (அதி. VIII) முதலிய வேறு பல நூல்களிலும் காணலாம்.

### [28.32](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.32)

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை  
  
105  
வேதிய னுரையின் விதியுங் கேட்டு  
மெய்த்திறம் வழக்கென விளம்பு கின்ற  
எத்திறத் தினுமிசை யாதிவ ருரைதென  
ஆசீ வகநூ லறிந்த ¹புராணனைப்  
பேசுநின் னிறையார் நூற்பொருள் யாதென  
  
105  
  
உரை  
  
109  
  
எனும்-இவ்வாறு சொல்லும், வேதியன் உரையின் விதியும் கேட்டு - வேதவாதியால் உரைக்கப்படும் பொருள்களைக் கேட்டு, மெய்த்திறம் வழக்கு என விளம்புகின்ற-மெய்யாய நூல் வழக்கு உலக வழக்கு என்று கூறப்படும், எத்திறத்தினும் இவர் உரை இசையாது என -- எவ்வகையினும் இவ்வேதியர் முதலாயினோர் கூறுவது பொருந்தாதென்று கருதினவளாய், ஆசீவக நூல் அறிந்த புராணனை-ஆசீவக நூற்பொருளை யோதியுணர்ந்த முதியோனொருவனைக் கண்டு, பேசும் நின் இறை யார் நூற்பொருள் யாது என - நின்னாற் பரவப்படும் இறைவன் யார் நினக்கு மேற்கோளாகிய நூற்பொருள் யாது என்று வினவி எ - று.  
  
வேதங்கூறும் பொருள்கள் விதியும் விலக்குமாகிய வடிவிலிருந்தலின் "விதியும் கேட்டு" என்றார். உம்மையால் விலக்கும் தழுவப்பட்டது. "மெய்த்திறம் வழக்கு" என்பவற்றுள், வழங்கு உலக வழக்கு. "வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின்" (தொல். பாயி.) என்பது காண்க. எனவே, மெய்த்திறம் நூல் வழக்காயிற்று. "மெய்த்திறம் வழக்கு நன்பொருள் வீடு" (மணி. 1: 11) என்று முன்பும் கூறியிருத்தல் காண்க. நூல்வழக்கும் உலக வழக்குமென்ற இரண்டும் உண்மை யாராய்ச்சிக்கும் வேண்டுவன எனச் சான்றோர் கூறுதல் தோன்ற, "விளம்புகின்ற" என்று மணிமேகலை கருதினாள். இவர் என்றது, அளவைவாதி முதல் வேதவாதி யீறாகக் கூறிய வாதிகளை. இவர் கூற்றைக் கேட்ட மணிமேகலை அமையாது மேலும் சமயக்கணக்கர் பலரையும் வினவுதற்கு விழைந்தமையின், ஏதுவொன்றும் கூறாது "எத்திறத்தினுமிசையாதிவர் உரையென" ஒழிகின்றான். பன்னெடுநாள் ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் அறிவு நிரம்பினமை தோன்றப் "புராணன்" என்றார். பூரணனென்றும் பாடம். பூரணன், ஆசீவக நூலைக்கூறிய மற்கலி. "விரையாவறிவிற் புகழ்பூரணனே" (நீல.673) என்புழி, பூரணன் என்பதற்கு, "பூரணனென்னு மெம்முடைய ஆப்தன்" என்று சமயதிவாகர வாமனமுனிவர் உரை கூறுவதனாலறிக.  
  
¹ பூரணனை.

### [28.33](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.33)

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை  
  
110  
  
115  
  
எல்லையில் பொருள்களி லெங்குமெப் பொழுதும்  
புல்லிக் கிடந்து புலப்படு கின்ற  
வரம்பி லறிவ னிறைநூற் பொருள்களைந்  
துரந்தரு முயிரோ டொருநால் வகையணு.  
அவ்வணு வுற்றுங் கண்டு முணர்ந்திடப்  
பெய்வகை கூடிப் பிரிவதுஞ் செய்யும்  
நிலநீர் தீக்காற் றெனநால் வகையின  
மலைமர முடம்பெனத் திரள்வதுஞ் செய்யும்  
வெவ்வே றாகி விரிவதுஞ் செய்யும்  
அவ்வகை யறிவ துயிரெனப் படுமே  
  
110  
  
உரை  
  
119  
  
\[ ஆசீவகவாதி \]  
  
எல்லையில் பொருள்களில்-எல்லையில்லாத பொருள்களின் இடத்தில், எங்கும் எப்பொழுதும் புல்லிக்கிடந்து புலப்படுகின்ற - எவ்விடத்தும் எப்பொழுதும் நீங்காமற் பொருந்திக் கிடந்து விளங்குவனவாகிய, வரம்பில் அறிவன் இறை-எல்லையில்லாத அறிவினையுடைய மற்கலியாகிய எங்கள் இறைவன் உரைத்த, நூற் பொருள்கள் ஐந்து - நூற்பொருள்கள் ஐந்து வகைப்படும், உரந்தரும் உயிரோடு அணுநால்வகை - (அவை) திண்மைபொருந்திய உயிரும் நால்வகை யணுவகையுமாம், அவ்வணு உற்றும் கண்டும் உணர்ந்திட-அவ்வணுக்கள் தாம் தம்மை உற்றும் கண்டும் உணர்ந்திடுமாறு, பெய்வகை கூடிப் பிரிவதும் செய்யும்-ஒன்று ஒன்றினுட் புகுமாறு செறித்த வழியும் ஒன்றாகாவகையிற் கூடுதலும் பிரிதலும் செய்யும், நிலம் நீர் தீ காற்று என நால்வகையின - நிலவணுவும் நீரணுவும் தீயணுவும் காற்றணுவுமென நான்கு வகைப்படுவன வாகிய அவை, மலைமரம் உடம்பு எனத் திரள்வதும் செய்யும் - மலையாகவும் மரமாகவும் உடம்பாகவும் திரண்டு உருவாவது முண்டு, வெவ்வேறாகி விரிவதும் செய்யும் - அவை வேறுவேறாகப் பிரிந்து விரிவதும் உண்டு, அவ்வகை அறிவது உயிர் எனப்படும் - திரள்வதும் விரிவதுமாகிய அணுக்களின் அக்கூறபாடுகளை யறிவது உயிரென்று கூறப்படும் எ - று.  
  
பொருள்கள் எல்லையில்லாதனவாதலின், அவற்றால் விளக்கமுறும் அறிவும் எல்லையில்லாது விரிதலின், "வரம்பில் அறிவன்" என்றான். மற்கலி, ஆசீவகநெறியைக்கண்டவர். இவரை, மற்கலி கோசலர் என்றும் கூறுப. இவரெழுதிய நூல் நவகதிர் என்று கூறப்படும். ஆசீவகர்க்கு இறைவன் மற்கலி என்பதை, "மற்கலி நூலின் வகையிது" (மணி.27 : 165) என்பதனால் அறிக. நீலகேசி யுடையாரும், ஆசீவகன் கூற்றில் வைத்து, "மற்கலிதானே இறைஇனி, ஒன்பதுவாங் கதிர்நூல் யாமுடையன, மண்பெறு நுண்பொரு ளைந்து" (671) என்று கூறுவது காண்க. உணர்வுடைமைபற்றி, உயிரை வேறுவைத்து, "உரந்தரு முயிரோ டொருநால் வகையணு" என்றார். ஓரணு மற்றோரணுவிலடங்கினும், ஒன்று மற்றொன்றினுட்புகுந்தொன்றாகாதென்றும், ஒன்றினொன்றடங்கிக் கூடுவதும் பிரிவதும் செய்யுமென்பவாகலின், "பெய்வகை" யென்றும் "கூடிப் பிரிவதும் செய்யு" மென்றும் கூறினான் பிறரும், "குழுவும் பிரியும்" உணல்மேயினும் உள்புகுதல் உரையேம்" (நீலகே. 677) என்றார். "உயிரோடொரு நால்வகையணு" (மணி.27:113) என்று தொகுத்தோதியதை விரித்துரைத்தலின், நிலநீர் தீக்காற்றென நால்வகையின என்று விரித்துரைத்தார். நால்வகையணுவும் கூடிப் பிரியுமென்ற விடத்துக் கூடிநிற்குந் திறத்தை விளக்கற்கு, "மலைமரம் உடம்பெனத் திரள்வதும் செய்யும்" என்றும், பிரியுந் திறத்தை, "வெவ்வேறாகி விரிவதும் செய்யும்" என்றும் கூறினான். உயிர் எனப்படும் எனச் சிறப்பித்தான், அஃது உணர்வதும் பிறர்க் குணர்த்துவதும் செய்யும் சிறப்புப்பற்றி. பிறரும், "அறித்தலறிதலவை தாமுயிராம்" (நீல. 676) என்றார். அறித்தல்-அறிவித்தல். உயிரெனப் பிரித்துக் கூறினா னாயினும், அதுவும் அணுவென்றே கருதப்படும். "உடங்கே யணுவைந் துருவா யுளதே" (நீல. 674) என்பது காண்க. "அவ்வணு" வென்றது உயிரணுவென்றும், "உற்றுங்கண்டு முணர்ந்திடப் பெய்வகைக் கூடிப் பிரிவதும் செய்யும்" என்றது அவ்வுயிரணுவின் இலக்கணமென்றும் கூறுவாருமுளர். வேறுவேறென்பது வெவ்வேறென மரீஇயிற்று.

### [28.34](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.34)

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை  
  
120 வற்ப மாகி யுறுநிலந் தாழ்ந்து  
சொற்படு சீதத் தொடுசுவை யுடைத்தாய்  
இழினென நிலஞ்சேர்ந் தாழ்வது நீர்தீத்  
தெறுதலு மேற்சே ரியல்பு முடைத்தாம்  
காற்று விலங்கி யசைத்தல் கடனிவை  
  
120  
  
உரை  
  
124  
  
நிலம் வற்பமாகி யுறும் - நிலவணு வன்மையுடையதாயிருக்கும்; நீர் தாழ்ந்து - நீரணுவானது கீழே வீழ்ந்து, சொற்படு சீதத் தொடு சுவையுடைத்தாய் - இயல்பென்று சொல்லப்படும் குளிர்ச்சியுடன் சுவையுடையதாய், இழின் என நிலம் சேர்ந்து ஆழ்வது - இழினென்னு மோசையுடன் நிலத்தையடைந்து ஆழத்தே சுவறி விடுவதாம், தீ - தீயணு, தெறுதலும் மேற் சேர் இயல்பும் உடைத்தாம் - எரிப்பதும் மேனோக்கி யெழுவதும் இயல்பாக வுடைய தாகும்; காற்று விலங்கி அசைத்தல் கடன் - காற்றணு குறுக்கிட்டசையும் இயல்பினதாகும் எ - று.  
  
வற்பம், வன்மை, நிலத்தே தாழ்ந்து ஆழத்தே சுவறுதல் நீரணுவுக்கியல் பென்றும், சுவையுடையை அதன் குணமென்றும் கொள்க. நிலவணுவின் குணம் வற்பமென்றாராக, நீலகேசியுடையார், "நிலநீர்எரிகாற்றுயிரின் இயல்பும், பலநீ ரிவற்றின் படுபா லவைதாம், புலமா கொலியொன்றொழிய முதற்காம், சலமாயது தண்மை யையே முதலாம்," "எறித்தல் முதலாயின தீயினதாம், செறித்தலிரை யோடிகை காற்றின வாம், அறித்த லறித லைதா முயிராங், குறித்த பொருளின் குணமாமிவையே" (நீல. 675, 676) என்றும், "மேற்சீர தீயோ டுயிர் காற்று விலங்கு சீராம், பாற்சீர நீரு நிலந்தானும் பனிந்த சீராம், மேற்சீர மேற் போம் விலங்கோடு விலங்கு சீர்கீ, ழாற்சீ ரவிழும் அவையென்னினு மாவ தென்னோ" (நீல. 717) என்றும் கூறுப.

### [28.35](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.35)

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை  
  
125  
  
130  
  
135 ¹வேற்றியல் பெய்தும் விபரீ தத்தால்  
ஆதி யில்லாப் பரமா ணுக்கள்  
தீதுற் றியாவதுஞ் சிதைவது செய்யா  
² புதிதாய்ப் பிறந்தொன் றொன்றிற் புகுதா  
முதுநீ ரணுநில வணுவாய்த் திரியா  
ஒன்றிரண் டாகிப் பிளப்பதுஞ் செய்யா  
அன்றியு மவல்போற் பரப்பதுஞ் செய்யா  
உலாவுந் தாழு முயர்வதுஞ் செய்யும்  
குலாமலை பிறவாக் கூடும் ³பலவும்  
பின்னையும் பிரிந்துதந் தன்மைய வாகும்  
மன்னிய வழிரமாய்ச் செறிந்துவற் பமுமாம்  
வேயாய்த் துளைபடும் பொருளா முளைக்கும்  
தேயா மதிபோற் செழுநில⁴ வரைப்பாம்  
  
125  
  
உரை  
  
137  
  
இவை ஆதியில்லாப் பரமாணுக்கள் இவ்வைவகையணுக்களும் அநாதியான பரமாணுக்களாதலால், வேற்றியல் பெய்தும் விபரீதத்தால் - வேறாகிய இயல்புகளையும் எய்தும் விகாரமுடைய வாயினும், தீதுற்று யாவதும் சிதைவது செய்யா - கேடுற்றுச் சிறிதும் இல்லையாமாறு அழிவது கிடையா, புதிதாய் ஒன்று பிறந்து ஒன்றிற் புகுதா - புதிதாக ஓரணுதுத் தோன்றி வேறோ ரணுவுக்குட் புகுவதுமில்லை; முதுநீர் அணுநில வணுவாய்த் திரியா-அநாதியான நீரணுக்கள் அத்தன்மையவான நிலவணுக்களாய் மாறுவதில்லை; ஒன்று இரண்டாகிப் பிளப்பதும் செய்யா - ஓரணு இரண்டணுக்களாய்ப் பிளந்து போவதும் கிடையாது; அன்றியும்-மேலும்; அவல் போல் பரப்பதும் செய்யா-நெல் முதலியவற்றைக் குற்றிப்பெறும் அவல்போல விரிவதுமில்லை; உலாவம் தாழும் உயர்வதும் செய்யும் -உலாவுவதும் தாழ்வதும் உயர்வதும் உண்டு; குலாம் மலை பிறவாக்கூடும் - நிலவணுக்களாற் பொருந்திய மலை கரைந்து மணலாகிப் பிறவற்றோடு கூடும்; பலவும் பின்னையும் பிரிந்து தம் தன்மையவாகும் - பலவாய்த் தம்மிற் செறிந்து கூடியிருக்குமவை பின்னரும் அக்கூட்டத்திற் பிரிந்து தனித்தனி யணுவாகவும் மாறும்; மரம் மன்னிய வயிரமாகச் செறிந்து வற்பமுமாம் - மரமாய்க் கூடிய அணுக்கள் திண்மையுறக்கூடி வயிரமாகி வன்மையுடைய மரமுமாம்; வேயாய்த் துளைபடும் - மூங்கிலாகி உள்ளே புழையுடையதாகும்; பொருளா முளைக்கும் - வித்தாகி முளைக்கும்; தேயாமதிபோல் செழுநில வரைப்பாம் - தேயாத முழுத் திங்கள் போல வட்டமான செழுமை பொருந்திய நிலப் பரப்பாகும் எ - று.  
  
விபரீதம் - விகாரம். கூடுதற்குரிய இயல்பு பிரியுமிடத்து வேறுபடுதலின், "வேற்றியல் பெய்தும் விபரீத" மாயிற்று. வேற்றியல்பெய்தும் விபரீத முடைமையின் விகாரியாதலால் அணுக்கள் அழியுங்கொலென்னு மையமறுத்தற்கு, "ஆதியில்லாப் பரமாணுக்கள்" என்றார். ஆதியின்மையை விளக்கற்கு, "புதிதாய்ப் பிறந்தொன் றொன்றிற புகுதா" என்றும், ஒருவகையணு பிறிதொருவகை யணுவாய்த் திரியா மையை விளக்கலுற்று, "முது நீரணு நிலவணுவாய்த் திரியா" என்றும் கூறினான். முதுமையை நிலவணுவுக்கும் கூட்டுக. ஒன்று மற்றொன்றாதல் இல்லையென்பதையே வேறுபல ஏதுக்களால் விளக்குவானாய், ஒன்றிரண்டாகப் பிளத்தலும் நெல் முதலியவற்றைக் குற்றிப் பெறும் அவலைப்போலப் பரத்தலும் இல்லையென்றான். ஒருவகை யணுக்களே தம்மிற் கூடிச் செறிதலும் பிரிதலும் செய்யுமென்றும் அதனால் தந்தன்மை திரியாவென்றும் கூறியதனை, மலையியல்பும் மரத்தியல்பும் நிலப்பரப்பமைதியும் முறையே கூறி விளக்கினான். மரஞ் செடி கொடிகள் முதலியவற்றாள் விளையும் பொருள் வித்தாதலின், அவ் வித்தினைப் "பொருள்" என்றார். வயிரமேறிய மரம் நிலைபெறுதல் தானே யமை தலின், "மன்னிய" என்றான். மதி, முழுத்திங்கள் ; அதுதானும் மறுநாளே குறையலுறுதலின், அதனினீக்கத் "தேயாமதி" யென்று சிறப்பித்தார்.  
  
(பாடம்) ¹வேற்றியலெய்தும். ²;புத்தாய்ப். ³;மலையும். ⁴வரைப்பால்.

### [28.36](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.36)

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை  
  
140  
  
145  
நிறைந்தவிவ் வணுக்கள் பூதமாய் நிகழிற்  
குறைந்து மொத்துங் கூடா வரிசையின்  
ஒன்று முக்கா லரைசா லா¹யுறும்  
துன்று²மிக் கதனாற் பெயர்சொலப் படுமே  
இக்குணத் தடைந்தா லல்லது நிலனாய்ச்  
சிக்கென் பதுவும் நீரா யிழிவதும்  
தீயாய்ச் சுடுவதுங் காற்றாய் வீசலும்  
ஆய தொழிலை யடைந்திட மாட்டா  
  
138  
  
உரை  
  
145  
  
நிறைந்த இவ்வணுக்கள் பூதமாய் நிகழின்-எல்லாப் பொருள்களிலும் நிறைந்திருக்கும் இந்த நிலமுதலிய நால்வகை யணுக்களும் நிலநீர் முதலிய பூதங்களாக நிலவுமிடத்து; வரிசையின் குறைந்தும் ஒத்தும் கூடா - தத்தமக்குரிய அளவிற் குறைதலும் சம்மாதலுமின்றி; ஒன்று முக்கால் அரை காலாய் உறும் - நிலமாகிய பூத நிகழ்ச்சிக்கு நிலவணு ஒன்று கூடின் நீரணுவுக்கு முக்காலும் நெருப்புக்கு அரையும் காற்றுக்குக் காலுமாய்ப் பொருந்தும்; துன்றும் மிக்கதனால் பெயர் சொல்லப்படும்-பொருந்தும் அணுக்களுள் மிக்கவற்றால் இன்ன பூதமெனப் பெயர் கூறப் படும்; இக்குணத்து அடைந்தாலல்லது-இவ்வளவாக அணுக்கள் செறிவுற்றாலன்றி; நிலனாய்ச் சிக்கென்பதுவும் - நிலமாய் வன்மை யுற்றிருப்பதும்; நீராய் இழிவதும்-நீராகிப் பள்ளம் நோக்கி யோடுவதும்; தீயாய்ச் சுடுவதும் - நெருப்பாகிச் சுடுவதும்; காற்றாய் வீசலும்-காற்றாய் இயங்குவதும்; ஆய தொழிலை யடைத்திடமாட்ட - ஆகிய இத்தொழில்களைச் செய்யா எ - று.  
  
இவ்வணுக்கள் பூதமாய் நிகழுமிடத்து ஒவ்வொரு பூதத்துக்கும் வேண்டும் அணுத்திரள் தம் அளவில் குறைந்தோ, தம்மோடு கூடும் பிற அணுக்களின் அளவிற்கொப்பவோ கூடவென்றற்கு, "வரிசையின் குறைந்தும் ஒத்தும் கூடா" என்றும், அவ்வளவினை, "ஒன்று முக்கால் அரை காலாயுறும்" என்றும் கூறினான். பிறரும், "இரண்டுங்கூடும் நெறி நில நான்கு நீர் மூன், றின்றிரண் டழல்கா லொன்றா விசைந்திடும் பூமியிவ்வா, றென்று நீர் தீ காலாதி யீண்டுவ தென்றியம்பும்" (சிவ. சித். பர. ஆசீவ. 7) என்று கூறுவது காண்க. ஒன்று முக்கால் அரை காலாயுறும் என்பதே பிறிதோர் வாய்பாட்டால் நான்கு மூன்று இரண்டு ஒன்றாகக் கூறப்பட்டதென்க. நிலவணு மிக்கது நிலமென்றும் நீரணுமிக்கது நீரென்றும் இவ்வாறே பிறவுமாதலின், "துன்று மிக்கதனாற் பெயர் சொலப்படுமே" என்றான்.  
  
1துன்றும். 2 மிக்க வதனிற்.

_First 36 of 87 passages. [Read on](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28)_

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.27.1) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28) · Pramāṇa
