<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.3.5 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 3.5

# Maṇimēkalai's Renunciation 3.5

Maṇimēkalai urai 3.5

- **Language:** Tamil

### [3.5](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.3.5)

ஊரலருரைத்த காதை  
  
45  
  
காதல ரிறப்பிற் கனையெரி பொத்தி  
ஊதுலைக் குருகின் உயிர்த்தகத் தடங்கா(து)  
இன்னுயி ரீவர் ஈயா ராயின்  
நன்னீர்ப் பொய்கையின் நளியெரி புகுவர்  
நளியெரி புகாஅ ராயின் அன்பரோ(டு)  
உடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம் படுவர்  
பத்தினிப் பெண்டிர் பரபபுநீர் ஞாலத்து  
அத்திறத் தாளும் அல்லளெம் மாயிழை  
  
42  
  
உரை  
  
49  
  
காதலர் இறப்பின் - கற்புடை மகளிர்க்கு உயிரினுஞ் சிறந்த கணவன் இறந்தால், கனைஎரி பொத்தி - துயரமாகிய மிக்க நெருப்பு மூளப்பட்டு, ஊது உலைக் குருகின் உயிர்த்து - உலையில் ஊதும் துருத்தி மூக்கினைப்போல் வெய்தாக உயிர்த்து, அகத்து அடங்காது - துன்பம் உள்ளத்தே அடங்கப்பெறாது, இன்னுயிர் ஈவர்-உடன் தமது இனிய உயிரைக் கொடுப்பர் ; ஈயார் ஆயின் - அங்ஙனம் கொடாராயின், நல்நீர்ப் பொய்கையின் நளிஎரி புகுவர்- நல்ல குளிர்ந்த நீரினையுடைய பொய்கையில் ஆடுபவர்போலச் செறிந்த நெருப்பின்கட் புகுவர் ; நளிஎரி புகாஅர் ஆயின் - அவ்வாறு தீயிடைக் குளியாராயின், அன்பரோடு உடன் உறை வாழ்க்கைக்கு நோற்று உடம்பு அடுவர்-மறுமைக்கண் தம் அன்பரோடு உடன் உறையும் வாழ்க்கையின் பொருட்டுக் கைம்மை நோன்பினை நோற்று உடம்பினை வருத்துவர் ; பத்தினிப் பெண்டிர்-கற்புடை மகளிராவார். பரப்பு நீர் ஞாலத்து - கடல் சூழ்ந்த நிலவுலகிலே, அத்திறத்தாளும் அல்லன் எம் ஆயிழை - எம் கண்ணகியோ அவ்வகையிர் சேர்ந்தவளும் அல்லன் ;  
  
பொத்தி-மூட்டி; மூளப்பட்டென்க. உயிர் ஈவர் -  
  
உடனிறப்பர் என்றபடி; இதனை மூதானந்தம் என்பர்; ¹ "ஒருயிராக வுணர்க உடன், கலந்தோர்க், கீருயி ரென்ப ரிடைதெரியார்-போரில், விடனேந்தும் வேலோற்கும், வெள்வளையி னாட்கும், உடனே யுலந்த துயிர்," என்பது காண்க; பாண்டியன் நெடுஞ்செழியன் இறப்ப அவன் மனைவியாகிய பெருங்கோப்பெண்டு 'தன்னுயிர் கொண்டவ னுயிர்தே டினள்போல்,' உடனுயிர் நீத்த வரலாறு ஈண்டு அறிதற்குரியது. கணவரை யிழந்த பத்தினிப் பெண்டிர்க்குப் பொய்கையும் தீயும் ஒரு தன்மையினை வாதலை, பூதப்பாண்டியன்தேவி தீப்பாய்வாள் கூறிய, ²"பெருந்தோட் கணவன் மாயந்தென வரும்பற, வள்ளித ழவிழ்ந்த தாமரை, நள்ளிரும் பொய்கையுந் தீயுமோரற்றே," என்பதனானும் அறிக. கைம்மை நோன்பின் இயல்பு, ³"வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட, வேளை வெந்தை வல்சி யாகப், பாற்பெய் பள்ளிப் பாயின்று வதியும், உயவற் பெண்டிர்," என்பதனானறியப்படும். அத்திறத்தாளும் அல்லள் - அம்மூன்று திறத்தாருள் அடங்குபவளல்லள்; வேறு சிறப்புடையாள் என்றபடி. ஞாலத்துப் பத்தினிப் பெண்டிர் காதலர் இறப்பின் இன்னுயிரீவர், நளியெரி புகுவர், நோற்றுடம்படுவர்; எம் ஆயிழை அத்திறத்தாளுமல்லள் என்க.  
  
¹ பு.வெ. 262. ² புறம். 245. ³ புறம். 246.

- [Previous: 3.4](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.3.4)
- [Next: 3.6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.3.6)
- [Up: 3](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.3)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.2.46) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.3.5](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.3.5) · Pramāṇa
