<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.18 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 30.18

# Maṇimēkalai's Renunciation 30.18

Maṇimēkalai urai 30.18

- **Language:** Tamil

### [30.18](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.18)

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை  
  
110 ஒட்டிய வுபநய நிகமன மிரண்டுந்  
திட்டாந் தத்தி லேசென் றடங்கும்  
  
109  
  
உரை  
  
110  
  
ஒட்டிய உபநயம் - பக்க முதலிய மூன்றோடு சேரவுள்ளன வாகிய உபநயமும்; நிகமனம் - நிகமனமும்; இரண்டும் - ஆகிய இரண்டும்; திட்டாந்தத்தில் சென்று அடங்கும் - மூன்றாவதாகிய திட்டாந்தத்தின்கண் அடங்கிவிடும் எ - று. எனவே, அவை எம்மனோர்க் காகா என்பதாம்.  
  
இந்நூலாசிரியர் காலத்தே அளவை நூலார் பக்க முதலிய ஐந்தனையும் மேற்கொண் டொழுகின ரென்றும், அவற்றுள் உபநயமும் நிகமனமும் திட்டாந்தத்தில் அடங்குமென்றும், எனவே தாம் மேற்கொள்வன பக்க முதலிய மூன்றுமே யென்றும், இதுகாறும் கூறிய வாற்றாற் பெறப்படும். "சுட்டுணர்வைப் பிரத்தியக்கமெனச் சொலி. விட்டனர் நாம சாதிக் குணக் கிரியைகள்" (49-50) எனப் பிறர்மேல் வைத்துக் கூறியதுபோல, ஈண்டும் திட்டாந்தத்திலே "அடக்கினர்" எனப் பிற ஆசிரியர் மேல்வைத் துரையாது, தாமே தெளிந்து கூறுமாறு தோன்ற, "திட்டாந்தத்திலே சென்றடங்கும்" என்றார். இவ்வாறே இவ்வறவணவடிகள் இருந்து அறங்கூறும் காஞ்சியம்பதியிலிருந்து வடநாடு சென்று சிறந்த திக்கநாகரும் பக்கமுதலிய மூன்றுமே வடமொழி வாயிலாக வடவர்க் கறிவுறுத்தியிருக்கின்றார். இம்மூன்றனையும் முதன் முதலில் வடிகட்டி யுரைத்த ஆசிரியல் மணிமேகலை யாசிரியரென்ப தறியாது நாகார்ச்சுன ரென்பார் தாமெழுதிய உபய கௌசல்ய சூத்திரமென்னும் நூலிற் கூறியுள்ளார் என்று கூறுவாரும் மூன்றாக வடிகட்டிய முதலாசிரியர் திக்கநாகரே யென்பாரும் உளர். இம்மூன்றும் பக்கம் ஏது திட்டாந்த மென்பனவா மென்றும், இம்மூன்றற்கும் சாதனமென்பது பெயரென்றும், இவற்றால் கேட்போர் அறியப்படாத பொருள் அறிவுறுத்த்ப்படுகிறதென்றும் தாமெழுதிய நியாயப் பிரவேச மென்னும் நூலில், "பக்ஷாதி வசநாநி ஸாதனம் பக்ஷஹேது த்ருஷ்டாந்த வசநைர்ஹ ப்ராஸ்நி காநாம்ப்ரதீ தோர்த்த: ப்ரதிபாத்யத இதி" என்று கூறியிருப்பது காண்க. இவர்கட்குப் பிற்போந்த தருமகீர்த்தி யென்பார் நியாயபிந்து வென்னும் தமது நூலில் மூன்றையும் இரண்டாக அடக்குகின்றார். பிறரெல்லாம் உபநயத்தை ஏதுவின் கண்ணும், நிகமனத்தைப் பக்கத்தின் கண்ணும் அடக்குப. சமணரும் வேதாந்திகளும் மீமாஞ்சகரும் இம்மூன்றையுமே மேற்கொண்டொழுகு கின்றனர்; பௌட்கர முதலிய சைவாகமங்கள் ஐந்தையுமே மேற் கொண்டொழுகுதலால் வாகீசமுனிவர் முதலிய தமிழாசிரியன்மாரும், சிவாக்கிரயோகிகள் முதலிய வடமொழி யுரைகாரரும் ஐந்தையும் மேற் கொண்டனர். இனி, ஞானசம்பந்தர் காலத்தே தமிழகத்து வாழ்ந்த புத்தர்கள் பக்கத்தன்மமாகிய ஏதுவும் பக்கவசனமாகிய எடுத்த மொழியு மாகிய இரண்டுமே கொண்டிருந்தனர். இவையே தருமகீர்த்தி முதலாயினர் மேற்கொட்டனவாம்.

- [Previous: 30.17](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.17)
- [Next: 30.19](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.19)
- [Up: 30](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.106) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.18](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.18) · Pramāṇa
