<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.21 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 30.21

# Maṇimēkalai's Renunciation 30.21

Maṇimēkalai urai 30.21

- **Language:** Tamil

### [30.21](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.21)

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை  
  
நித்தா நித்த நிகழுநல் லேது  
மூன்றாய்த் தோன்று மொழிந்த பக்கத்  
தூன்றி நிற்றலுஞ் சபக்கத்துண் டாதலும்  
விபக்கத் தின்றியே விடுதலுஞ் சபக்கஞ்  
  
121  
  
உரை  
  
124  
  
நிகழும் நல்லேது மூன்றாய்த் தோன்றும் - நன்பக்கத்துக்குப் பக்கதன்ம வசனமாய் நிலவும் நல்லேது வென்பது மூன்று வகையாகத் தோன்றுகிறது ; மொழிந்த பக்கத்து ஊன்றித் தோன்றலும் - மொழியப்பட்ட பக்கப்பொருளில் நிலைபெற்ற இயைபுடைத்தாதலும் ; சபக்கத்து உண்டாதலும் - சபக்கப் பொருளின்கண் இல்லையாகாது உளதாதலும்; விபக்கத்து இன்றியே விடுதலும் - பக்கத்தின் மீட்சியாகிய விபக்கப் பொருளின் கண் அறவே இல்லையாதலுமாம் எ - று.  
  
ஏதுவினைப் பக்க தன்ம வசனமென்பது வழக்கு; "சத்தம் அநித்த மென்றல்பக்கம், பண்ணப்படுதலாலெனல் பக்கதன்ம வசனமாகும்" (மணி.29;69-71) என்றமை காண்க. பக்கத்தில் வந்துள்ள தன்மியின் தன்மமே சாதனமாகிய ஏதுவாதலின், "மொழிந்த பக்கத் தூன்றி நிற்றல்" இலக்கணமாயிற்று. மொழிந்த என்பது செயப்பாட்டுவினைப் பொருட்டாய பெயரெச்சம். தன்ம மில்வழித் தன்மியாதல் கூடாமை பற்றி, தன்மம் தன்மிக்கண் இயைந்து நிற்கும் இயல்பை, "ஊன்றித் தோன்றல்" என்றார். பக்கப் பொருட்குரிய பொதுத் தன்மமேயுடைய ஏனைப் பொருளெல்லாம் சபக்கத்தடங்குதலால், அவற்றின் கண்ணும் அத்தன்மம் காணப்படுவதுபற்றி, "சபக்கத் துண்டாதல்" என்றார்; உண்டாதல், உளதாதல், சபக்கப் பொருட்கு மாறாய பொருள் விபக்கப் பொருளாதலின், அதன்பால் உளதாகும் பக்க தன்மம் விபக்கத்து அறவேயில்லையா மென்பது உணரப்படுமாயினும், உய்த்துணர்வு எடுத்தோத்தில்வழி யென்பதுபற்றி, "விபக்கத்தின்றியே விடுதலை" என்றார். நன்பக்கத்துக்குரிய ஏதுவொன்றே, பக்கப் பொருளில் நிலைபேறும், சபக்கத்தில் உளதாதலும், விபக்கத்து இலதா தலுமாகிய மூவகையாய்ப் பகுத்தாரயப்படுவதுபற்றி "மூன்றாய்த் தோன்றும்" என்றார். ஏகாரம்: தேற்றம். உம்மை எண்ணுப்பொருட்டு. இனி, ஈண்டுக் கூறிய வியல்பை எடுத்துக் காட்டுக்களால் முறையே வற்புறுத்துகின்றார்.

- [Previous: 30.20.11](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.20.11)
- [Next: 30.22](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.22)
- [Up: 30](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.121) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.21](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.21) · Pramāṇa
