<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.30 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 30.30

# Maṇimēkalai's Renunciation 30.30

Maṇimēkalai urai 30.30

- **Language:** Tamil

### [30.30](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.30)

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை  
  
170 அப்பிர சித்த விசேடண மாவது  
தத்த மெதிரிக்குச் சாத்தியந் தெரியாமை  
பௌத்தன் மாறாய் நின்றசாங் கியனைக்  
குறித்துச் சத்தம் விநாசி யென்றால்  
அவனவி நாச வாதி யாதலிற்  
சாத்திய விநாசமப் பிரசித்த மாகும்  
  
167  
  
உரை  
  
172  
  
அப்பிரசித்த விசேடணமாவது-அப்பிரசித்த விசேடண மென்னும் குற்றமாவது; தத்தம் எதிரிக்குச் சாத்தியம் தெரியாமை - தத்தமக் கெதிரியாகிய பிரதிவாதிக்குத்தான் சாதிக்கும் பொருள் அறியாததா யிருத்தலாம்; மாறாய் நின்ற சாங்கியனைக் குறித்து - பிரதிவாதியாய் நின்ற சாங்கியனை நோக்கி; பௌத்தன்- புத்தனாகிய வாதி; சத்தம் விநாசி என்றால் - சத்தம் அநித்தம் என்பானாயின்; அவன் அவிநாசி யாதலால் - அச் சாங்கியன் நித்த மென்னும் கொள்கையுடையவனாதலால்; சாத்திய விநாசம் அப் பிரசித்தமாகும் - துணிபொருளாகிய அநித்தத்துவம் அப்பிரசித்தமாய்க் குற்றமாம்  
எ - று.  
  
ஈண்டு விசேடண மென்றது அடைமொழியன்று; துணிபொருளுணர்த்தும் சொல்லும் சொற்றொடருமாகிய "சாத்திய வசனம்." சத்தம் அநித்தம் என்று பக்க மொழியில், அநித்த மென்பது விசேடணம். "தத்தம் எதிரிக்குச் சாத்தியம் தெரியாமை" குற்றமெனவே தெரிய நிற்றலே வேண்டுவதென்பது நன்பக்கத்துக் கிலக்கணமாம். சாங்கியன் ¹ சற்காரியவாதி யாதலின், சத்த மநித்தமென்பது அவற்கு உடன்பாடன்று. காரியப் பொருள் தன் பருவுருக் (தூலநிலை) கெட்டு அருவுருவாய காரணநிலை பெறுவதே "விநாச" மென்பது சற்காரிய வாதம். பொருள்கள் கணந்தோறும் அழிவன வென்பது பௌத்த நூற் கொள்கை. ஆதலாற்றான், "மாறாய் நின்ற சாங்கியன்" என்றார். நியாயப் பிரவேசமும், வழக்கம்போல இதனையோர் எடுத்துக் காட்டால் விளக்கலுற்று, ஈண்டுக் கூறியதுபோல "பௌத்தஸ்ய சாங்க்யம் ப்ரதி விநாஸீ ஸப்தைதி" என்று கூறுகிறது. சத்தம் நித்தமென்னும் கொள்கையையுடைய சாங்கியனுக்கு, சத்தம் நித்தமன்று, அநித்தமென்று சாதிப்பது பௌத்தனாகிய வாதிக்கு முறையாதலாலும், வாதி பிரதி வாதிகட் கிடையே துணிபொருள் "பிரசித்த" மாயிருக்குமாயின், ஆராய்ச்சிக் கிடமின்மையாலும் அப்பிரசித்த விசேடணம் குற்றமெனக் கருதுவது பொருத்தமன்று எனக் கூறுவோருமுளர். அவரை மறுத்துப் பிரதிவாதி தான் அதனைக் கல்லாதா னொட்பம்போலக் கொண்ட வழி அவனைத் தெருட்டுங் குறிப்புடைய வாதி அப்பிரசித்த விசேடணங் கூறுதல் குற்றமென நாட்டுவர் ²கமலசீலர்.  
  
¹ சாங்கி, சூ. பாடி. i. iii. 123, ² தத்து. சங்கி. 1484.

- [Previous: 30.29](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.29)
- [Next: 30.31](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.31)
- [Up: 30](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.166) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.30](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.30) · Pramāṇa
