<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.45 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 30.45

# Maṇimēkalai's Renunciation 30.45

Maṇimēkalai urai 30.45

- **Language:** Tamil

### [30.45](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.45)

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை  
  
245  
  
250  
  
255  
  
260  
  
265  
தோரிடத் துற்றுச் சபக்கத்தொத் தியறல்  
சத்தஞ் செயலிடைத் தோன்று மநித்தமா தலினெனின்  
அநித்த வேதுச் செயலிடைத் தோன்றற்கு  
விபக்க வாகா யத்தினு மின்னினு  
மின்னி னிகழ்ந்தா காசத்துக் காணாது  
சபக்கக் கடாதிக டம்மில்  
எங்குமா யேகாந்த மல்ல மின்போல்  
அநித்தமாய்ச் செயலிடைத் தோன்றாதோ கடம்போல்  
அநித்தமாய்ச் செயலிடைத் தோன்று மோவெனல  
உபயைக தேச விருத்தி யேதுச்  
சபக்கத் தினும்விபக் கத்தினு மாகி  
ஓர்தே சத்து வர்த்தித்தல் சத்த  
நித்த மமூர்த்த மாதலி னென்னின்  
அமூர்த்த வேது நித்தத் தினுக்குச்  
சபக்கவா காச பரமா ணுக்களின்  
ஆகா சத்து நிகழ்ந்து மூர்த்தமாம்  
பரமா ணுவினிக ழாமை யானும்  
விபக்க மான கடசுகா திகளிற்  
சுகத்து நிகழ்ந்து கடத்தொழிந் தமையினும்  
ஏகதே சத்து நிகழ்வதே காந்தமன்  
றமூர்த்த மாகாசம் போல நித்தமோ  
அமூர்த்த சுகம்போ லநித்தமோ வெனல்  
  
245  
  
உரை  
  
266  
  
உபயைகதேச விருத்தி - உபய ஏகதேச விருத்தி யென்னும் அநைகாந்திக ஏதுப்போலியாவது; ஏது - கூறப்படும் ஏதுவானது; சபக்கத்தினும் விபக்கத்தினும் ஆகி - சபக்கம் விபக்கம் என்ற இரண்டிடத்துக்கு முரியதாய்; ஓர் தேசத்து வர்த்தித்தல் - ஒவ்வொன்றினும் ஒரு புடைப் பொருத்தமே யுடையதாய் நிலவுதாம்; சத்தம் நித்தம் அமூர்த்தமாதலின் என்னில் - சத்தம் நித்தமெனப பக்கவசனமும் அமூர்த்தமாதலால் என ஏதுவும் கூறினால் அமூர்த்த ஏது - அமூர்த்தமாகிய ஏது; நித்தத்தினுக்குச் சபக்க ஆகாச பரமாணுக்களின் - நித்தத்துவமாகிய தன்மத்தையுடைய சபக்கத் தடங்குவனவான ஆகாசம் பரமாணு என்ற இவற்றினுள்; ஆகாசத்து நிகழ்ந்து - அமூர்த்தமாகிய ஏது ஆகாசத்தின்கட் பொருந்தி; மூர்த்தமாம் பரமாணுவின் நிகழாமையானும் - மூர்த்தப் பொருளாகிய பரமாணுவின்கண் பொருந்தா தொழிவதாலுன்; விபக்கமான கட சுகாதிகளில் - நித்தத்துவமும் அமூர்த்தத்துவமுமாகிய தன்மத்தையுடைய வல்லாத விபக்கத் தடங்குவனவான குடம் இன்பம் என்ற இவற்றினுள்; சுகத்து நிகழ்ந்து - அமூர்த்தமாகிய ஏது இன்பத்துக்குப் பொருத்தமாய்; கடத்து ஒழிந்தமையினும் - குடத்துக்குப் பொருந்தாதொழிவதாலும்; ஏக தேசத்து நிகழ்வது - சபக்க விபக்க மிரண்டினும் ஒரு புடைப் பொருத்த முடைத்தாயிற் றென்பதாம்; ஏகாந்தமன்று-அநைகாந்திகமாதல் எவ்வாறெனின்; அமூர்த்தம் ஆகாசம் போல நித்தமோ-அமூர்த்தமான பொருள் ஆகாசம் போல நித்தமானதோ; அமூர்த்தம் சுகம் போல் அநித்தமோ - அவ்வமூர்த்தப் பொருள் இன்பம் போல அநித்தமோ; எனல் - என்று ஐயுற்றுத் துணி பொருள் காணாது மயங்குதல் எ - று.  
  
முன்னர், சபக்கைகதேச விருத்தியும் விபக்கைகதேச விருத்தியுமாகிய இரண்டும் தனித்தனியாகக் கூறியவர், இதன்கண் இரண்டிடத்தும் ஏகதேச விருத்திப்படும் ஏதுப் போலியை யெடுத்தோதுதலின், சொற்சுருங்குதல் பற்றி, உபயைகதேச விருத்தி யென்றார். நியாயப் பிரவேசமுடையார், உபய பக்ஷைகதேச விருத்தி யென்று சிறிது விரியக் கூறினார். தமிழகத்து நிலவக்கண்ட இக்கருத்தை ஏனை நாட்டுப் பௌத்தர்கள் இனிதறிந்து கோடற்கு, சபக்க விபக்க மென்றிரண்டினும் ஒப்பப் பொருந்துதலின், "ஏதுச் சபக்கத்தினும் விபக்கத் தினுமாகி" யென்றும் அப்பொருத்தமும் முழுதும் பொருந்திய பொருத்தமன்று, ஓரொன்றிற் பொருந்தும் ஒருபுடைப் பொருத்த மென்றற்கு, "ஓர் தேசத்து வர்த்தித்தல்" என்றும் கூறினார். ஓர் தேசம் ஏக தேசம். வர்த்தித்தல்-இயலுதல். இவ்வாற்றால் உபயைகதேசவிருத்தி அநைகாந்திக போலிக்கு இலக்கணம் கூறியவாறாம். அமூர்த்தம் - உருவின்மை. இவ்வேதுப்போலி உப யைகதேச விருத்தியாதலை உதாரணத்தாற் காட்டலுற்று, "சத்தம் நித்தம் அமூர்த்த மாதலின் என்னின்" என்பதனால் பக்கவசனமும் ஏதுவும் முதற்கட் கூறிப் பின்னர், "அமூர்த்த வேது நித்தத்தினுக்குச் சபக்க வாகாசபரமாணுக்களின், ஆகாசத்து நிகழ்ந்து, மூர்த்தமாம் பரமாணுவின் நிகழாமையானும், விபக்கமான கட சுகாதிகளிற், சுகத்து நிகழ்ந்து கடத் தொழிந்தமையாயினும், ஏக தேசத்து நிகழ்வது" என்றார். ஆகாசம், அமூர்த்தம். பரமாணு, மூர்த்தம். இவை அநித்தத்துவ தன்மமுடைமையின். சபக்கமாயின. கடசுகாதிகள் அநித்தத்துவ தன்மமுடைமை பற்றி விபக்கமாயின; இவற்றுள் கடம் மூர்த்தம், சுகம் அமூர்த்தம். ஏகாந்தமன்றெனவே அநைகாந்திகமென்பது தானே பெறப்பட்டது. அநைகாந்திகமாவது இவ் வகையாலென்றற்கு, "அமூர்த்த மாகாசம் போல் நித்தமோ, அமூர்த்தம் சுகம்போ லநித்தமோ" என்றார்.

- [Previous: 30.44](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.44)
- [Next: 30.46.1](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.46.1)
- [Up: 30](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.256-266) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.45](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.45) · Pramāṇa
