<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.68 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 30.68

# Maṇimēkalai's Renunciation 30.68

Maṇimēkalai urai 30.68

- **Language:** Tamil

### [30.68](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.68)

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை  
  
470  
  
நாட்டிய விப்படித் தீயசா தனத்தாற்  
காட்டு மனுமான வாபா சத்தின்  
மெய்யும் பொய்யு மித்திர விதியால்  
ஐய மின்றி யறிந்துகொ ளாய்ந்தென்  
  
469  
  
உரை  
  
472  
  
இப்படி நாட்டிய தீய சாதனத்தால் - இவ்வாறு காட்டப் பட்ட குற்றமுடைய சாதனங்களால்; காட்டும் அனுமான ஆபாசத்தின்-காட்டப்படும் போலிக் கருத்துக்களின்; மெய்யும் பொய்யும்-மெய்ம்மைத் தன்மையும் பொய்ம்மைத் தன்மையும்; இத் திற விதியால் (விலக்கால்)--இம் மெய்யும் பொய்யுமாகிய கூறுகட்கேற்பக் கொள்ளுவதும் தள்ளுவதும் செய்தற்கமைந்த விதிவிலக்குகளைக் கொண்டு: ஐயமின்றி-ஐயந் திரிபின்றி; ஆய்ந்து அறிந்துகொள் - ஆராய்ந்து அறிந்து கொள்க; என்-என்று கூறினான் எ-று.  
  
அளவை நெறிபற்றி இதுகாறுங் கூறியவற்றைத் தொகுத்துச் சுட்டுதலின், "இப்படி நாட்டிய" என்றும், தீய சாதனத்தாற் காட்டுவதே அனுமானாபாசம் என்பதென்றற்கு, "தீய சாதனத்தாற் காட்டும் அனுமானாபாசத்தின்" என்றும் கூறினான். நியாயப் பிரவேசமுடையாரும் "ஹேத்து வாபாஸ பூர்வகம்ஞானம் அனுமானாபாஸம்" என்பது காண்க. பக்கம், ஏது, திட்டாந்தமென்ற மூன்றனுள், ஏது சிறந்தமையின், "தீய சாதனத்தால் காட்டும் அனுமானாபாசம்" என்றான்; ஆயீனும், தீய பக்கமும் தீய எடுத்துக் காட்டும் அனுபானாபாசமாம் என்பது கருத்தாகக் கொள்க. ¹"மெய்யும் பொய்யும்" கூறியதனால், அவற்றிற்கேற்ப விதியும் விலக்கும் கொள்ளப்பட்டன. இவ் விதி விலக்குகள் மேல்வரும் பவத்திற மறுகெனப் பாவைநோற்ற காதைக் கண் கூறப்படுதலின், அவற்றை யீண்டுத் தோற்றுவாய் செய்தார்.  
  
இளங்கொடி தன்னை, வாழ்த்தி, உரைப்போன், விழாக்கோள் மறப்ப, தன் விழாத் தவிர்தலின் மணிமேகலா தெய்வம் என்பவட் கொப்ப, அவனிடு சாபத்து,நகர் கடல் கொள்ள,இப்பதிப் படர்ந்தனம் என்றலும்,இறைஞ்சி,வைத்திலேன்,அருளுக என்ன, நங்காய் நொடிகுவென் கேள்நீ்; அளவை இரண்டே, ஏனை எல்லாம் அனுமானமாம்; பக்கம், ஏது, திட்டாந்தம். உபநயம்,நிகமனம் என்ன ஐந்துள; உபநயம் நிகமனம் இரண்டும் திட்டாந்தத்தில் அடங்கும்; பக்கம் ஏது திட்டாந்தங்கள் நல்லவும் தீயவும் உள; நன்பக்கம் என நாட்டுக; நல்லேது ஊன்றி நிற்றலும், உண்டாதலும் இன்றியே விடுதலும், ஏதமில் திட்டாந்தம் இருவகைய,தீய பக்கமும் தீய வேதுவும் தீயவெடுத்துக் காட்டு மாவன பக்கப் போலியும் ஏதுப் போலியும் திட்டாந்தப் போலியுமாம்; பக்கப் போலி பிரத்தியக்க விருத்தம் முதல் அப்பிரசித்த சம்பந்தம் என ஒன்பது வகைப்படும்; ஏதுப்போலி அசித்தம் அநைகாந்திகம், விருத்தம் என மூன்றாகும். நான்கு அசித்தம்; அநைகாந்திகமும் ஆறு; விருத்தம் விளம்பில் நான்கு வகையதாகும்; தீயவெடுத்துக் காட்டாவன திட்டாந்த வாபாசங்கள்;சாதன்மிய திட்டாந்த வாபாசம் ஓதில்,என்ன ஐந்து; வைதன்மிய திட்டாந்தாபாசமும் என்ன ஐவகைய; இப்படி நாட்டிய தீய சாதனத்தால் அனுமா னாபாசத்தின் மெய்யும் பொய்யும் இத்திற விதியால், ஆய்ந்து அறிந்து கொள் என்றான் என, வினைமுடிபு கொள்க.  
  
தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை முற்றிற்று.  
  
¹ தீயசாதனமாவது பக்கப் போலி ஏதுப் போலி திட்டாந்தப் போலி யென்பதை நியாயப் பிரவேசம், "ஏஷாம் யக்ஷ ஹேது த்ருஷ் டாந்தா பாஸா நாம் வசநாநி ஸாதனாபாசம்" என்பது காண்க.

- [Previous: 30.67.10](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.67.10)
- [Next: 30.69](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.69)
- [Up: 30](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.471) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.68](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.68) · Pramāṇa
