<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.7 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 30.7

# Maṇimēkalai's Renunciation 30.7

Maṇimēkalai urai 30.7

- **Language:** Tamil

### [30.7](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.7)

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை  
  
சுட்டுணர் வைப்பிரத் தியக்க மெனச்சொலி  
  
50 விட்டனர் நாம சாதிக்குணக் கிரியைகள்  
மற்றவை யனுமா னத்துமடை யும்மெனக்  
  
49  
  
உரை  
  
51  
  
சுட்டுணர்வை - ஒரு பொருளின் பொருண்மை மாத்திரம் கண்டுணரும் உணர்வை; பிரத்தியக்கம் எனச் சொலி - காட்சியளவை யென்று மேற்கொண்டு; நாம சாதி குணச் கிரியைகள் - பிறராற் கொள்ளப்படும் பெயர் சாதி குணம் தொழில் என்பவை அனுமானத்தும் அடையும் என -கருத்தளவைக்கும் செல்லுமென வாராய்த்து தெளிந்து; அவை விட்டனர் - அவற்றை இலக்கண மேற்கொள்ளாது நீக்கி விட்டனர் எ - று.  
  
காட்சியாவது கண் முதலிய பொறிகளால் வண்ண முதவியவற்றைப் பற்றிக் காண்டல் முதலியன செய்து, காணப்படும் பொருளின் இயல்பை இடம் காலம் பொருள் ஒளிகளோடு படுத்துக் ''கிட்டிய நாம சாதிக் குணக் கிரியையின் அறிவதாகும்'' என அளவை நூலார் கூறுதலின், அவரின் வேறுபடுத்தற்குச் ''சுட்டுணர்வைப் பிரத்தியக்க மெனச் சொலி விட்டனர்'' என்றும், நாமசாதிக் குணக்கிரியையின் வைத்தறியும் இலக்கணம் காட்சிக்கேயன்றிக் கருத்தளவைக்குஞ் சேறலின், அஃது அதிவியாத்தியாதல் கண்டு, ''அவை விட்டனர்'' என்றும் கூறினார். சுட்டுணர்வு பொருண்மை மாத்திரை கண்டொழிதலென்னும் பொருளதாதலை ''சுட்டுணர் வெனப்படுவது, ஏனைப் பொருளுண்மை மாத்திரை காண்டல்'' (மணி. 27: 61--2) என்பர். சுட்டுணர்வு நிருவிகற்பக்காட்சி யென்றும், அனுமானத்தும் என்ற எச்ச உம்மையால் நாம சாதிக் குணக்கிரியையின் வைத்துணரும் உணர்வு சவிகற்பக்காட்சி யென்றும் கொள்க; இவற்றை முறையே இந்திரிய ஞானமென்றும் விசிட்ட ஞானமென்றும் கூறுப. நாமசாதி முதலிய வற்றைத் திக்கநாகர் ''பஞ்சவித கற்பனை'' யென்றும், இவை, ''யாவும் அனுமான வனுமேய பாவம்'' என்றும் கூறுவரெனத் தருமகீர்த்தி உரைத்த தத்துவபிந்துவின் உரைகாரர் (90.17) குறிக்கின்றார் தத்துவ சங்கிரகம், நியாயபிந்து, பிரமாண முச்சமும், நியாயப் பிரவேசம் முதலிய நூலுரைகளில் இவற்றின் இயல்பைப் பரக்கக் காண்க. சுட்டுணர்வு சவிகற்பக் காட்சிக்கு அடிப்படையாகும் ; அது சவிகற்பக் காட்சியைப் பயவாவிடின் குற்றமாம். ஆதலாற்றான், அளவை நூலார், அதனைப் பிரமாணாபாசங்கள் எட்டனுள் ஒன்றாகக் கூறுகின்றனர். மற்று : வினைமாற்று.

- [Previous: 30.6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.6)
- [Next: 30.8](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.8)
- [Up: 30](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.46) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.7](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.7) · Pramāṇa
