<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 30

# Maṇimēkalai's Renunciation 30

Maṇimēkalai urai 30

- **Language:** Tamil

## Contents

- [30.20](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.20) — 11 parts
- [30.46](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.46) — 9 parts
- [30.50](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.50) — 13 parts
- [30.67](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.67) — 10 parts

### [30.1](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.1)

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை  
  
இறைஞ்சிய விளங்கொடி தன்னை வாழ்த்தி  
அறந்திகழ் நாவி னறவண ணுரைப்போன்  
வென்வேற் கிள்ளிக்கு நாகநா டாள்வோன்  
தன்மகள் பீலி வளைதான் பயந்த  
  
5  
  
புனிற்றிளங் குழவியைத் தீவகம் பொருந்தித்  
தனிக்கலக் கம்பலச் செட்டிகைத் தரலும்  
வணங்கிக் கொண்டவன் வங்க மேற்றிக்  
கொணர்ந்திடு மந்நாட் கூரிரு ளியாமத்து  
அடைகரைக் கணித்தா வம்பி கெடுதலும்  
  
10  
  
மரக்கலங் கெடுத்தோன் மைந்தனைக் காணாது  
அரைசற் குணர்த்தலு மவனயர் வுற்று  
விரைவனன் தேடி விழாக்கோள் மறப்பத்  
தன்விழாத் தவிர்தலின் வானவர் தலைவன்  
  
1  
  
உரை  
  
13  
  
இறைஞ்சிய இளங்கொடி தன்னை-தன்னை வணங்கிய இளங்கொடி போன்ற மணிமேகலையை, அறம் திகழ் நாவின் அறவணன் வாழ்த்தி - அறவுரையால் விளக்கமுறும் நாவினையுடைய அறவணவடிகள் வாழ்த்தி, உரைப்போன் - காவிரிப்பட்டினம் கடன் கோட்படுதற்கு நேர்ந்தகாரணம் கூறுவானாய், நாக நாடான்வோன் தன் மகள் - நாக நாட்டையாளும் அரசனுடைய மகளாகிய, பீலி வளை - பீலிவளை யென்பவள், தீவகம் பொருந்தி-தான் மணிபல்லவத் தீவிலிருந்துகொண்டு, வென்வேற்கிள்ளிக்கு - சோழன் நெடு முடிக்கிள்ளி யென்பானுக்கு, தான் பயந்த புனிற்றிளங் குழவியை- தான் பெற்ற ஈன்றணிமை தீராத இளங்குழந்தையை, தனிக்கலக் கம்பலச் செட்டி கைத்தரலும்-தனியே கலஞ் செலுத்திப் போந்த கம்பலச் செட்டிபால் கையடைப்படுத்துச் சோழன்பாற் சேர்க்க என விடுத்தாளாக, வணங்கிக்கொண்டவன் - அவளை வணங்கி அக் குழவியை ஏற்றுச் செல்லும் அச் செட்டி, வங்கமேற்றிக் கொணர்ந்திடும் அந்நாள்-தன் தனிக்கலத்தில் கொண்டுவந்த அக்காலத்தில், அடைகரைக்கு அணித்தா-சோழமண்டலக் கரைக்கு அண்மையில், வரும்போது, கூர் இருள் யாமத்து - மிக்க இருள்சூழ்ந்த நடுவியாமத்தே, அம்பி கெடுதலும் - மரக்கலம் சிதைந்து கெட்டதாக, மரக்கலம் கெடுத்தோன்-கலம்கெட்டுத் தான்மட்டில் தனியே தப்பிக் கரையை யடைந்த அச் செட்டி, மைந்தனைக் காணாது அரைசற்குஉணர்த்தலும்-அரசன் மகனைத்தேடியும்காணாமல் சோழ வேந்தனுக்குத் தெரிவித்தலும், அவன் அயர்வுற்று-அரசன் மனம் வருந்தி, விரைவனன் தேடி-விரைந்து சென்று தேடித் திரிந்ததனால், விழாக்கோள் மறப்ப - காவிரிப்பூம்பட்டினத்தில் எடுத்தற்குரிய இந்திரவிழா மறக்கப்பட்டதாக, தன் விழாத் தவிர்தலின்- தனக்குரிய விழாச் செய்யப்படாது கழிதலால், வானவர் தலைவன்-(சினமுற்ற) வானவர்க்கிறைவனான இந்திரன் எ-று  
  
நாக நாட்டு வேந்தனை, "நாக நாடு நடுக்கின் றாள்பவன், வாகை வேலான் வளைவணன்" (மணி. 24:54-5) என்றமையின் ஈண்டுவாளாது "நாக நாடாள்வோன்" என்றொழிந்தார். ஈன்றணிமை தீருமுன்னே தான் பெற்ற குழவியை விடுத்தமையின், "புனிற்றிளங் குழவி" யென்றார். நாகநாட்டரசன் மகளாகிய பீலிவளை மணிபல்லவம் போந்து புத்த பீடிகையை வலஞ் செய்து வணங்க வந்திருந்த காலத்தே ஆங்குப் போந்த கம்பலச்செட்டிபால் தன் குழவியைக்கையடைப்படுத்துத் தான் அம் மணிபல்லவத்தே தவிர்ந்தமையின், "தீவகம் பொருந்தி" யென்றும், அச் செட்டியும் தனியே கலஞ் செலுத்தி வந்தமை தோன்ற, "தனிக் கலக் கம்பலச் செட்டி"யென்றும், தன்பாற் கையடைப்படுத்துவது அரசிளங் குழவியாதலாலும், கையடைப்படுத்துபவள் அரசன் மனைவியாதலாலும் வணங்கி"யென்றும் கூறினார். முன்பும், "தொழுதனன் வாங்கி" (25: 189) என்பது காண்க; அரசிளங் குளவி யிருய்தலின், "அடைகரை யணித்தா" என்றும், அதனைச் செட்டி காணா தல மருதற் கேது கலஞ்சிதை காலமாதலின், "கூரிருள் யாமத்"தென்றும் குறித்தார். தன் குழவியை யிழந்த கொடுந் துயரம் சோழன் உள்ளத்தைக் கவர்ந்து வருத்துதலின், விழாவைப்பற்றிய நினைவு மறைவதாயிற் றென்றற்கு, "அயர்வுற்" றென்றும், விரைவனன் தேடி விழாக்கோள் மறப்ப" என்றும் தெரித்துரைத்தார். இதனாற் பயன், குழவியின் மறைவுகுறித்து அரசன் உள்ளத்துத் தோன்றிய அயர்ச்சி, காவிரிப்பூம்பட்டினம் கெடுதற் கேதுவாயிற் றென்பதாம்.

### [30.2](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.2)

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை  
  
நின்னுயிர்த் தந்தை நெடுங்குலத் துதித்த  
  
15 மன்னுயிர் முதல்வன் மகர வேலையுள்  
முன்னிய வங்க முங்கிக் கேடுறப்  
பொன்னி னூசி பசுங்கம் பளத்துத்  
துன்னிய தென்னத் தொடுகட லுழந்துழி  
  
14  
  
உரை  
  
18  
  
நின் உயிர்த் தந்தை நெடுங்குலத்து உதித்த - உனக்கு உயிர் போன்ற தந்தையாகிய கோவலனது நெடியகுலத்திற் பிறந்த, மன்னுயிர்முதல்வன்-மிக்க உயிர்கட்கெல்லாம் அருள்செய்யும் முன்னோனொருவன், மகர வேலையுள் முன்னிய வங்கம்-மகரமீன் வாழும் கடலில் தான் செலுத்திச் சென்ற மரக்கலம், பசுங் கம்பளத்து பொன்னின் ஊசி துன்னிய தென்ன - பசுமையான கம்பளத்தில் இரும்பாற் செய்த ஊசியொன்று எளிதிற்றைத்து இடந் தெரியாது மறைந்தாற்போல, முங்கிக் கேடுற - மூழ்கிக் கெட்டதாக, தொடு கடல் உழந்துழி-ஆழ்ந்த கடற்கண்ணே வருந்தினகாலத்து  
எ-று.  
  
கப்பளத்து ஊசி துன்னியதென்ன, கடலிடத்தே வங்கம் கேடுற என இயைக்க. கோவலன் பெயர் கேட்ட மாத்திரையே உள்ளம் உருகும் பான்மையளாதலின், "நின்னுயிர்த் தந்தை" யென்றும், அவன் குலத்து முன்னோன் எவ்வுயிர்க்கும் அருள் மேவிய அறவோனாதலின் "மன்னுயிர் முதல்வன்" என்றும் சிறப்பித்தார். பிறாண்டும் அவனை, "ஆதி முதல்வன் போதி மூலத்து, நாதனாவோன்" (29:23-4) என்பர். இரும்பைக் கரும்பொன்னென வழங்கும் வழக்குப்பற்றி, "பொன்" னென்றார். பசுங் கம்பளங் கருங் கடற்கும், பொன்னினூசி வங்கத்துக்கும் உவமை. கடலலையால் உதைப்புண்டு ஏழுநாள்காறும் மிதந்து வருந்தினமையின், "தொடுகடல் உழந்துழி" என்பாராயினர்.

### [30.3](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.3)

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை  
  
எழுநா ளெள்லை யிடுக்கண்வந் தெய்தா  
  
20 வழுவாச் சீலம் வாய்மையிற் கொண்ட  
பான்மையிற் றனாது பாண்டு கம்பளந்  
தானடுக் குற்ற தன்மை நோக்கி  
ஆதி முதல்வன் போதி மூலத்து  
நாத னாவோ னளிநீர்ப் பரப்பின்  
  
25 எவ்வமுற் றான்றன தெய்வந் தீரெனப்  
பவ்வத் தெடுத்துப் பாரமிதை முற்றவும்  
அறவர சாளவு மறவாழி யுருட்டவும்  
பிறவிதோ றுதவும் பெற்றய ளென்றே  
சாரண ரறிந்தோர் காரணங் கூற  
  
19  
  
உரை  
  
29  
  
ஏழு நாள் எல்லை-இவ்வாறு ஏழுநாள்காறும் வருந்தி, இடுக்கண் வந்து ய்தா-உயிரிழக்குந் துன்பம் வந்து நெருங்கிய எல்லையில், சீலம் வாய்மையின் வழுவாக் கொண்ட பான்மையின்-ஐவகைச் சீலமும் நால்வகை வாய்மையும் குற்றமற மேற்கொண்டொழுகும் இயல்பின னாதலால், தனாது பாண்டு கம்பளம்-இந்திரன் தான் வீற்றிருக்கும் பாண்டு கம்பளமிட்ட இருக்கை, நடுக்குற்ற தன்மை நோக்கி - அசையத் தொடங்கிய வமைதி கண்டு, போதி மூலத்து ஆதிமுதல்வன் நாதனாவோன்-இவ்வணிகன் போதியின் அடியிலிருந்து நோற்ற ஆதி முதல்வனும் நாதனுமாகிய போதி சத்துவனாகும் தகுதியுடையவனாவான், நளி நீர்ப்பரப்பின்-பெரிய கடற் பரப்பிலே, எவ்வமுற்றான் தனது எவ்வம்தீர் என - துன்ப முற்ற இவனது துன்பத்தைப் போக்குவாயாக என ஆங்கிருந்த மணிமேகலா தெய்வத்தைப் பணிக்கவும், அறவரசாளவும்-உலகில் அறம்புரியும் வேந்தரே அரசாளவும், அறவாழிஉருட்டவும்-அவரது அறவாணையே நிலவவும், பிறவிதோறு உதவும் பெற்றியன் - எடுத்த பிறப்புத்தோறும் அவர்கட்குஉதவிபுரியும் தன்மையுடையவளாகிய அவள், பவ்வத்து எடுத்து - கடலினின்றும் அவனை யெடுத்து, பாரமிதை முற்றவும் - கரை சேரவும், உதவும் பெற்றியன்-உதவிய செய்கையுடையளாவாள், என்று - என, அறிந்தோர் சாரணர் - அந்நிகழ்ச்சியை யறிந்த சாரணர் வந்து, காரணம் கூற - நினக்கு மணிமேகலை யென்ற பெயர் வைத்தற்குரிய காரணமிது வென்று கூறவே எ - று.  
  
ஏழு நாள் வரையிற் கடலிடை யுழந்தவன் உயிர் இழக்கும் நிலை யெய்திய செய்தியை "இடுக்கண் வந்தெய்தா" என்று குறித்தார். அக்காலமே இந்திரன் இருக்கும் பாண்டு கம்பளம் அசைந்து அவற்கு இவனுறுந் துன்பத்தை யறிவிக்குங் காலம். உலகத்தில் அறவோர் அறச்செயலின் மிகுதியையும் அவர்க்குற்ற கெடுதியையும் பாண்டு கம்பளம் அசைந்து அவ்விந்திரற் கறிவிக்குமென்பது புத்தர் சமணர்களின் கொள்கை. உடனே இந்திரன் அருகு நின்ற மணிமேகலா தெய்வத்தை நோக்கி, "நீ சென்று அவன் இறப்புத் துன்பத்தைப் போக்குக" வென்று பணிப்பவன். அவன் இயல்பை விரியக் கூறுங் கால மன்மையின் சுருக்கமாக, "ஆதி முதல்வன் போதி மூலத்து நாதனாவோன்" என்று அறிவுறுத்தி, "நளிநீர்ப் பரப்பி னெவ்வ முற்றான்றன் எவ்வந்தீர்" என்று பணித்தான். நாதனாவோரைப் போதிசத்துவர் என்ப- போதி - உண்மை ஞானம்; சத்துவரென்பது பாலி மொழியடியாக வந்து வீரனென்னும் பொருள் படுவது. எனவே, போதி சத்துவ ரென்பது ஞானமே வடிவாக முயலும் சான்றோ ரென்பதாம். நாதனாவோ னென்பதும் இக்கருத்தையே வற்புறுத்துமாறு காண்க. இனி மணிமேகலா தெய்வத்தின் இயல்பினை, அறவரசாளவும் அறவாழியுருளவும் மக்கட்குதவும் மாண்புடையளென்று கூறினான். உதவும் பெற்றியள் என்பதை "பாரமிதை முற்றவும்" என்புழியும் கூட்டுக. பாரமிதை - கரை; இதனின் வேறாக உயிர்நிலை யென்றும் சால்பென்றும் பொருள் கூறுதலுமுண்டு. "நின்னுயிர்த் தந்தை" யென்பது முதல் "பிறவி தோறுதவும் பெற்றியள்" என்பது வரை, சாரணர் கோவலற் குரைத்த கூற்றினைக் கொண்டு கூறியது.

### [30.4](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.4)

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை  
  
30  
  
அந்த வுதவிக் காங்கவள் பெயரைத்  
தந்தையிட் டனனினைத் தையனின் துறவியும்  
அன்றே கனவி னனவென வறைந்த  
மென்பூ மேனிமணி மேகலா தெய்வம்  
என்பவட் கொப்ப வவனிடு சாபத்து  
  
35 நகர்கடல் கொள்ளநின் றாயரும் யானும்  
பகருநின் பொருட்டா லிப்பதிப் படர்ந்தனம்  
என்றலு மறவணன் றாளிணை யிறைஞ்சிப்  
  
30  
  
உரை  
  
37  
  
அந்த உதவிக்கு - அந்த வுதவி குறித்து, ஆங்கு - நினக்குப் பெயரிடும் நாளில், அவள் பெயரை - அம்மணிமேகலையின் பெயரையே, நினைத் தந்தை இட்டனன் - உனக்கு உன் தந்தையாகிய கோவலன் இட்டான்; தையல் நின் துறவியும் - அவன் மகளாகிய உனது துறவினையும்; அன்றே கனவின் நனவென அறைந்த-அன்றிரவே அவன் கனவிற் றோன்றி நனவிற் றெளியப் பேசுவது போலச் சொல்லிய; மென் பூமேனி மணிமேகலா தெய்வம் என்பவட்கு ஒப்ப - மெல்லிய பூப்போன்ற மேனியையுடைய அம்மணிமேகலா தெய்வமெனப்படும் அவள் கருத்துக்கேற்ப; அவன் இடு சாபத்து - அவ்விந்திரனிட்ட சாபத்தால்; நகர் கடல்கொள்ள, காவிரிப்பூம்பட்டினத்தைக் கடல் கொண்டொழியவே; நின் தாயரும் யானும் - நினக்குத் தாயாகிய மாதவியும் சுதமதியு முதலாயினாருடன் யானும்; பகரும் நின் பொருட்டால் - பலரும் புகழும் உன்னைக் காணும் பொருட்டு; இப்பதிப்படர்ந்தனம் - இக் காஞ்சியம்பதியை யடைந்தேம்; என்றலும் - என்று அறவணவடிகள் கூறினாராக எ - று.  
  
வானாவர் தலைவன் தன் விழாத் தவிர்தலின். என்பவட்கொப்ப, அவனிடு சாபத்தின் நகர் கடல்கொள்ள, நின் பொருட்டால் இப்பதிப் படர்ந்தனம் என்றலும் என இயைக்க, வானவர் தலைவனாகிய அவன்,. நோக்கி, எவ்வந் தீரென, பவ்வத்தெடுத்துப் பாரமிதை முற்றவும், உதவும் பெற்றிறள் என்று சாரணர் காரணம் கூற, அந்த உதவிக்கு அவள் பெயரைத் தந்தை இட்டனன்; அவட்கொப்ப, சாபத்து, கடல்கொள்ள, படர்ந்தனம் எனக் கூட்டிக் கொள்க. விழாக்கோள் மறந்தது காரணமாக இந்திரன் சினங்கொண்டு இட்ட சாபத்தால் நகர் கடல்கொள்ளப்பட்டது கூறுவான் தொடங்கிய அறவணன், மணிமேகலை இட்ட சாபமும் அக் கடல்கோட்கு ஏதுவாதலின் அதனையும் கூட்டி ''மணிமேகலா தெய்வம் என்பவட்கொப்ப அவனிடு சாபத்து'' என்றான். தன் விழாக்கோள் மறந்த சிறு பிழைக்குப் பெருநகர மொன்றை யழிக்குஞ் சினங்கொண்ட இந்திரன்பால் மணிமேகலைக்கு அருவருப்புண்டாகா வண்ணம், அவன் கோவலன் குலத்து முன்னோனுக்குற்ற இடுக்கண் களைந்த வரலாற்றையும், அவனது அருட்பணியை மேற்கொண்டாற்றிய மணிமேகலா தெய்வத்துக்கும் மணிமேகலைக்கும் உள்ள தொடர்பைக் காட்டுதற்குக் கோவலற்குச் சாரணர் உரைத்தவற்றையும் எடுத்தோதினான். இது மணிமேகலை நகரழிவு குறித்து வருந்தாமை விளைவித்தது. நினையென்புழி நான்காவதன்கண் இரண்டாவது மயங்கிற்று. தையல் மகளென்னும் பொருட்ரு; இதனை விளியாக்கினுமமையும். துறவு துறவியென நின்றது. பகரும் என்பதை ''இப்பதி'' யென்பதனோடு டியைத்தலுமொன்று. இந்திரவிழாவை மறந்தது குறித்து மணிமேகலா தெய்வம் சாபமிட்ட வரலாற்றை முன்னே, ''வானவன் விழாக்கோள் மாநக ரொழிந்தது, மணிமேகலா தெய்வ மற்றது பொறாஅள், அணி நகர் தன்னை யலைகடல் கொள்கென, இட்டனள் சாபம்'' (மணி. 25: 197-200) என்றமையின். ஈண்டுவாளாது ''என்பவட்கொப்ப'' என்றொழிந்தார்.

### [30.5](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.5)

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை  
  
என்றலு மறவணன் றாளிணை யிறைஞ்சிப  
பொன்றிகழ் புத்த பீடிகை போற்றுந்  
தீவ திலகையு மித்திறஞ் செப்பினள்  
  
40 ஆதலி னன்ன வணிநகர் மருங்கே  
வேற்றுருக் கொண்டு வெவ்வே றுரைக்கும்  
நூற்றுறைச் சமய நுண்பொருள் கேட்டே  
அவ்வுரு வென்ன வைவகைச் சமயமுஞ்  
செவ்வி தன்மையிற் சிந்தையின் வைத்திலேன்  
  
45 அடிகள் மெய்ப்பொரு ளருளுக வென்ன  
  
37  
  
உரை  
  
45  
  
அறவணன் தாள் இணை இறைஞ்சி - அது கேட்ட மணிமேகலை அறவணவடிகளின் இரண்டு திருவடிகளிலும் வீழ்ந்து வணங்கி, பொன்திகழ் புத்திபீடிகை போற்றும் தீவதிலகையும் - மணிபல்லவத்திலுள்ள பொன்போல் ஒளிவிடும் புத்த பீடிகைக்குக் காவல் புரிந்த தீவதிலகை யென்பாளும், இத் திறம் செப்பினள் - நீவிர் கூறிய இச் செய்தியை எனக்குத் தெரிவித்துள்ளாள் ; ஆதலின் - ஆதலால் இதிலொரு வியப்பில்லை; அன்ன அணி நகர் மருங்கே - அந்நகரமே போல அழகிய வஞ்சிநகர்ப் புறத்தே; வேற் றுருக்கொண்டு - மாதவனொருவன் உருக்கொண்டு சென்று ; வெவ்வேறுரைக்கும் - ஒருவரினொருவர் வேறுபட்டுச் சொல்லும்; நூற்றுறைச் சமய நுண் பொருள் கேட்டு - நூல் நெறியாக வந்த நுண்ணிய சமயக் பொருளைக் கேட்டு; அவ்வுரு என்ன - யான் மேற்கொண்டிருந்த எனக்கொவ்வாத உருவம்போல ; ஐவகைச் சமயமும் - ஐந்து வகைச் சமயத்து நுண் பொருள்கள் ; செவ்வி தன்மையின் சிந்தையில் வைத்திலேன்-எனக்குச் செம்மையுடைய வாகத் தோன்றாமையின் மனத்துட் கொள்ளா தொழிந்தேன் ; அடிகள்-அடிகளே; மெய்ப்பொருள் அருளுக-உண்மைப் பொருளையடியேனுக்கு உரைத்தருளுவீராக ; என்ன - என்று வேண்டி நின்றாளாக எ - று.  
  
அறவணன் கருத்தை யறிந்து கொண்டமையின். மணிமேகலை, நகர்க்குற்ற அழிவினைத் தான்முன்பே அறிந்திருந்த செய்தியையுரைத்தாள். ஆதலால் என்பது முதலாயின எஞ்சி நின்றன. ஆதலின் அது பற்றிய பேச்சு வேண்டா வென்றலும், தன் கருத்தினைச் சட்டென வெளியிடுதலும் சீலமன்மையின், ''ஆதலின்'' என வொழிந்தா ளென்று மாம். வஞ்சி நகரும் காவிரிப்பூம்பட்டிடனம் போல எல்லா நலங்களும் நிறைந்திருந்தமை தோன்ற, ''அன்ன அணிநகர்'' என்றாள். தான் வேற்றுருக்கொண்ட காரணம் கூறிற்றிலன், ''இளையள் வளைய ளென் றுனக் கியாவரும், விளைபொரு ளுரையார்" (26;68-9) எனக் கண்ணகி யுரைத்த காரணம் அறவணன் இயல்பாகவே யறிந்தவ னென்று. ஒருவரோ டொருவர் ஒவ்வாமலுரைத்தலின், ''வெவ்வேறுரைக்கும்'' என்றும், ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு நூலைப் பின்பற்றி நிலவுதலால், ''நூற் றுறைச் சமய'' மென்றும் கூறினாள். தான் காஞ்சிமாநக ரடைந்து அறவணன் முதலாயினாரைக்க கண்ட பின்பே அவ்வேற்றுருவைக் களைந்து உண்மையுருவொடு நின்றமையின், ''அவ்வுரு'' வெனச் சுட்டியும், தனக்கு ஒவ்வாமை தோன்ற, அதனையுவமித்து முரைத்தாள், செவ்விது என்பதனை ஒவ்வொரு சமய நுண்பொருட்டு மேற்றுக. இனி அவ்வுருவை வையாமை போல இவற்றையும் வைத்திலேன் என்றுமாம். வையாமைக் கேது அவற்றால் மெய்ப்பொருளைத் தெளிய முடிய வில்லை; அதனை நீவிரே யுரைத்தல் வேண்டும் என்றற்கு, ''அடிகள் மெய்ப்பொருள் அருளுக'' என வேண்டினான்.

### [30.6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.6)

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை  
  
நொடிகுவெ னங்காய் நுண்ணிதிற் கேணீ  
ஆதி சினேந்திர னளவை யிரண்டே  
ஏதமில் பிரத்தியங் கருத்தள வென்னச்  
  
46  
  
உரை  
  
48  
  
நங்காய் - நங்கையே; நொடிகுவென் - நீ கேட்கும் மெய்ப் பொருளைக் கேட்டுத் தெளிதற்குரிய நெறியைச் சொல்லுவேன் ; நீ நுண்ணிதின் கேள் - நீ அறிவா னுணுகிக் கேட்பாயாக; ஆதி சினேந்திரன் - ஆதி புத்தன் மேற்கொண்டுரைத்த, ஏதம் இல் பிரத்தியம் கருத்தளவு என்ன - குற்றமில்லாத காட்சியும் கருத்து மென்று; அவளை இரண்டே-அளவைகள் இரண்டோயாகும் எ-று. மகளிருள் அறிவாற் சிறந்து நிற்றலின், ''நங்காய்'' என்றும், கேட்போர் வேட்கை யறிந்தேற்ப வுரைக்குமாறு தோன்ற, ''நொடிகுவென்'' என்றும், சொல்லுந்திறம் பல்வேறு வகையாய்ப் பரந்து சேறலின், கேட்கும் அவள், கேட்கப்படும் பொருளை நுணுகியறியும் மனவொருமை யுடையளாதல் வேண்டுமென்பான், ''நுண்ணிதிற் கேள்'' என்றும் கூறினான். பௌத்தம் சினேந்திரனாற் கூறப்பட்டதென்பது முன்பே கூறப்பட்டதாயினும் ஈண்டுக் கூற்றுநிகழ்த்துவோன் வேறாதல்பற்றி, ''ஆதிசினேந்திரன்'' என்றான். சினேந்திரர் பலராதல்பற்றி, ஆதிசினேந்திரனெனத் தெரித்து மொழிந்தான். காட்சியைப் பிரத்தியக்ஷமென்றும் கருத்தை அனுமானமென்றும் கூறுபவாதலின், அவற்றைப் பிரத்தியமெனச் சிதைத்தும், கருத்தளவையென மொழிபெயர்த்தும் கூறினான். காட்சி காண்டல் என்பன சவிகற்பக்காட்சிக்கும் பொது வாதலால், பிரத்தியம் ''சுட்டுணர்'' வாய் வேறுபடுவதுபற்றி மொழி பெயர்க்கா தொழிந்தாரென வுணர்க. ஏதமில் என்பது கருத்தள வோடும் இயையும்; எனவே, ஏதமில் பிரத்தியம். ஏதமில் கருத்து என அளவை இரண்டாதல் பெற்றாம். பிரத்தியக்கத்துக்குரிய குற்றம், 'சுட்டல் திரிதல் கவர்கோடல்'' என்றும், ''சுட்டுணர் வொடுதிரி யக்கோட லையந் தேராது தெளிதல் கண்டுணராமை'' என்றும் கூறிய வாற்றா லறிக. கருத்தளவைக்குரிய குற்றங்களைப் பின்னர்ப் ''பக்கப்போலியு மேதுப் போலியுந் திட்டாந்தப் போலியுமாம்'' என வகுத்துக் கூறுப. மெய்யுணர்வுப் பேறு நேர்முகமாகவும் வழிமுகமக்கவும் நிகழ்த்தலின், பௌத்தர்கள் நேர்முகப் பேற்றைப் பிரத்திய மென்றும், வழி முகத்தைக் கருத்தென்றும் கொண்டு ஆராய்ச்சி செய்வதுபற்றி 'அளவையிரண்டே'' யென்றார்; ஏகாரம்: தோற்றம்; ஏனைப் பத்தும் எட்டும் ஆறும் என்றவற்றுள், இரண்டை வாங்கிகொண்டதாகக் கொள்வார்க்குப் பிரிநிலையுமாம்..

### [30.7](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.7)

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை  
  
சுட்டுணர் வைப்பிரத் தியக்க மெனச்சொலி  
  
50 விட்டனர் நாம சாதிக்குணக் கிரியைகள்  
மற்றவை யனுமா னத்துமடை யும்மெனக்  
  
49  
  
உரை  
  
51  
  
சுட்டுணர்வை - ஒரு பொருளின் பொருண்மை மாத்திரம் கண்டுணரும் உணர்வை; பிரத்தியக்கம் எனச் சொலி - காட்சியளவை யென்று மேற்கொண்டு; நாம சாதி குணச் கிரியைகள் - பிறராற் கொள்ளப்படும் பெயர் சாதி குணம் தொழில் என்பவை அனுமானத்தும் அடையும் என -கருத்தளவைக்கும் செல்லுமென வாராய்த்து தெளிந்து; அவை விட்டனர் - அவற்றை இலக்கண மேற்கொள்ளாது நீக்கி விட்டனர் எ - று.  
  
காட்சியாவது கண் முதலிய பொறிகளால் வண்ண முதவியவற்றைப் பற்றிக் காண்டல் முதலியன செய்து, காணப்படும் பொருளின் இயல்பை இடம் காலம் பொருள் ஒளிகளோடு படுத்துக் ''கிட்டிய நாம சாதிக் குணக் கிரியையின் அறிவதாகும்'' என அளவை நூலார் கூறுதலின், அவரின் வேறுபடுத்தற்குச் ''சுட்டுணர்வைப் பிரத்தியக்க மெனச் சொலி விட்டனர்'' என்றும், நாமசாதிக் குணக்கிரியையின் வைத்தறியும் இலக்கணம் காட்சிக்கேயன்றிக் கருத்தளவைக்குஞ் சேறலின், அஃது அதிவியாத்தியாதல் கண்டு, ''அவை விட்டனர்'' என்றும் கூறினார். சுட்டுணர்வு பொருண்மை மாத்திரை கண்டொழிதலென்னும் பொருளதாதலை ''சுட்டுணர் வெனப்படுவது, ஏனைப் பொருளுண்மை மாத்திரை காண்டல்'' (மணி. 27: 61--2) என்பர். சுட்டுணர்வு நிருவிகற்பக்காட்சி யென்றும், அனுமானத்தும் என்ற எச்ச உம்மையால் நாம சாதிக் குணக்கிரியையின் வைத்துணரும் உணர்வு சவிகற்பக்காட்சி யென்றும் கொள்க; இவற்றை முறையே இந்திரிய ஞானமென்றும் விசிட்ட ஞானமென்றும் கூறுப. நாமசாதி முதலிய வற்றைத் திக்கநாகர் ''பஞ்சவித கற்பனை'' யென்றும், இவை, ''யாவும் அனுமான வனுமேய பாவம்'' என்றும் கூறுவரெனத் தருமகீர்த்தி உரைத்த தத்துவபிந்துவின் உரைகாரர் (90.17) குறிக்கின்றார் தத்துவ சங்கிரகம், நியாயபிந்து, பிரமாண முச்சமும், நியாயப் பிரவேசம் முதலிய நூலுரைகளில் இவற்றின் இயல்பைப் பரக்கக் காண்க. சுட்டுணர்வு சவிகற்பக் காட்சிக்கு அடிப்படையாகும் ; அது சவிகற்பக் காட்சியைப் பயவாவிடின் குற்றமாம். ஆதலாற்றான், அளவை நூலார், அதனைப் பிரமாணாபாசங்கள் எட்டனுள் ஒன்றாகக் கூறுகின்றனர். மற்று : வினைமாற்று.

### [30.8](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.8)

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை  
  
காரிய காரண சாமா னியக்கருத்  
தோரிற் பிழைக்கையு முண்டுபிழை யாதது  
கனலிற் புகைபோற் காரியக் கருத்தே  
  
55 ஏனை யளவைக ளெல்லாங் கருத்தினில்  
ஆன முறைமையி னனுமான மாம்பிற  
  
52  
  
உரை  
  
56  
  
காரண காரிய சாமானியக் கருத்து-காரணானுமாம் காரியானுமானம் சாமானியானுமான மெனப்படும் மூன்று ; ஓரின் - பொதுப்பட நோக்குமிடத்து; பிழைக்கையுமுண்டு-உண்மையுணர் தற்குதவாது குற்றப்படுதலுமுண்டு; பிழையாத்து-அவற்றுள் வழுப் படாதது; கனலிற் புகைபோல் காரியக் கருத்து - கனலும் புகையும் போலக் காரியானுமான மொன்றேயாகும்; ஏனை அளவைக ளெல்லாம் - மற்ற ஆகம முதலாகக் கூறிய அளவைகளெல்லாம்; கருத்தினில் ஆனமுறைமையின்-வழியளவைக்குரியவாகும் முறைமையினையுடையவாதலால்; அனுமானமாம் - கருத்தளவைக்கண் அடங்கும் எ - று.  
  
அளவை வாதி ''மூவகை யுற்றது பொதுவெச்ச முதலாம்'' என்று கூறிய அனுமான வகையை மறுத்துரைத்தலின் ''ஓரிற் பிழைக்கையு முண்டு'' என்றார். பொது வென்றது சாமானியச் கருத்தும், எச்சமென் பது காரியக் கருத்தும், முதலென்பது காரணக் கருத்துமாக அறவணவடிகளாற் கொண்டு கூறப்படுக்கின்றன. சாமானியக் கருத்தின்கண், சாதனமும் சாத்தியமும் அந்நுவயமாய் இல்லாமையின், ஐயத்துக்கிடமாம்; கானத்தில் எழும் யானையொலி, அக்கானத்தே இன்னவிடமென வரைந்து காட்டாமையின் பிழையாம் என்று நியாயபிந்து (3. 65) கூறுகிறது, கருமுகில் கண்டவிடத்து மழை பெய்யுமெனத் துணியும் காரணானுமானத்தின் சாதனமாகிய முகில் காரணமாகச் சாத்தியமாகிய மழை வரவு ஒருதலையாய்த் துணியப்படாமையின் பிழையாம். காரணமாகிய முகிற்கும் காரியமாகிய மழை வரவுக்கும் இடைக் காரணமாகக் காற்று முதலிய வுண்மையின் அவாந்தர காரணம் சாத்தியத்திற்குக் கட்டுப்பட்டதன்றாதலால் துணிவு ஒரு தலையாய்ப் பெறப்படாதென்பர்.  
  
இவற்றின் விரிந்த ஆராய்ச்சியைத் திக்கநாகர்¹ முதலியோர் கூறிய நுல்களிற் கண்டு கொள்க. காரியானுமானத்தின்கண், ஏதுவாகிய காரியத்தின்கண், காரணமாகிய பொருளுண்மை நியதமாதலின் பிழைத்தற்கு இடமின்மைபற்றி, ''பிழையாதது கனலின் புகைபோற் காரியக் கருத்தே'' என்றார். ஆகம மேற்கோள் அதனைக் கூறுவோம் கூறும் பொருளும் என இருதிறமாக வகுக்கப்பெற்றுக் கூறுவோனாயின் ஆகமம் அனுமானத் தடங்குமென்றும் பொருளாயின் காட்சிக்கண் அடங்குமென்றும் திக்கநாகர் கூறுகின்றார். இவ்வாறே ஐதிகத்தை ஆகமத்தும், அருத்தாபத்தியை யனுமானத்தும் நையாயிகரும் வைசேடி கரும் அடக்கிக் கூறுதலின், காட்சியுங் கருத்து மொழிந்த அளவைகள் யாவும் கருத்தினும் காட்சியினும் அடங்குமாறு கண்டு, காட்சிக்கண் அடங்குவன கருத்தின் கண்ணும் அடங்குமென்று தேர்ந்து ''கருத்தனிலான முறைமையின் அனுமானமாம்'' என்றார். பிற: அசைநிலை.  
  
¹ பிரமாண சமுச்சயம் ii. 30 Buddhistic Logic, Vol. I. P. 266.

### [30.9](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.9)

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை  
  
பக்க மேதுத் திட்டாந்த முபநயம்  
நிகமன மென்ன வைந்துள வவற்றிற்  
பக்க மிம்மலை நெருப்புடைத் தென்றல்  
  
60 புகையுடைத் தாதலா லெனல் பொருந்தேது  
வகையமை யடுக்களை போற்றிட் டாந்தம்  
உபநய மலையும் புகையுடைத் தென்றல்  
நிகமனம் புகையிடைத் தேநெருப் புடைத்தெனல்  
  
57  
  
உரை  
  
63  
  
பக்கம் ஏது திட்டாந்தம் உபநயம் நிகமனம் என்ன ஐந்துள - மேற்கோளும் ஏதுவும் எடுத்துக்காட்டும் உபநயமும் நிகமனமும் என ஐந்து உறுப்புக்கள் கருத்தளவைக்குண்டு; அவற்றிற் பக்கம் இம்மலை நெருப்புடைத்து எனல் - அவ்வைந்தனுள் மேற் கோளாவது இம்மலை நெருப்பை யுடையது என்று மொழிதல் ; பொருந்து ஏது புகையுடைத்தாதலால் எனல் - இம்மேற்கோளைச் சாதித்தற்குப் பொருந்திய ஏதுவாவது புகையுடைமையால் என்பது; திட்டாந்தம் வகையமை அடுக்களைபோல் - எடுத்துக் காட்டாவது பலவகைப்பட்ட அடுக்களை போல என்று சொல்லுதல்; உபநயம் மலையும் புகையுடைத் தென்றல் - உபநயமாவது இம்மலையும் புகையுடையதாம் என்பது; நிகமனம் புகையுடைத்தே நெருப்புடைத்து எனல்-நிகமனமாவது யாது யாது புகையுடையது அது நெருப்புடையது என்று துணிந்து கூறல் எ - று.  
  
ஆதி சினேந்திரன் கூறிய இருவகை யளவைகளையும் முறையே கூறுவார், அளவைவாதி அவ்விருவகையையும் பற்றிக் கூறியவற்றை மேற்கொண்டு அவற்றுள் தம் சமயக் கருத்துக்கொவ்வாதனவற்றை விலக்கித் தூய்மை செய்து வந்தாராகலின், இனி அனுமானத்துக்கு உறுப்பாகிய ஐந்தையும் விளக்கிக் கூறுவாராயினார். அனுமானம் தன் பொருட்டென்றும் பிறர் பொருட்டென்றும் இரு வகைப்படும் என எல்லாப் புத்தநூல்களும் கூறியிருப்பவும், இவ்வாசிரியர் கூறாராயினார். இவ்வகைமையை ஏனோரும் மேற்கொண்டிருத்தலின் பதார்த்த தரும சங்கிரக முடையார் சுநிச்சிதார்த்தம் என்றும் பரார்த்தம் (பக். 231) என்றும், நியாயபிந்து டீகையுடையார் ஞானான்மகம், சத்தான்மகம் (பக்.21) என்றும், சத்த பதார்த்தியுடையார் அருத்தரூபத்வம் சத்தரூபத்வம் (பக். 154) என்றும் கூறுப. புத்தருட் சிலர் பக்க முதலிய வைந் துறுப்பும் பரார்த்தானுமானத்துக்குரிய வென்றும் பக்க முதலிய மூன்று சுவார்த்தானுமானத்துக்குரிய வென்றுங் கூறுபவாயினும் இவ்வகைகள் பெயரால் வேறுபடினும் கருத்து ஒன்றாதல் காண்க. வாற்சாயனர் இவ்வைந்தனோடு, ஜிஞ்ஞாசம், சமுசயம், சக்கிய பிராப்தி, பிரயோசனம், சமுசய வியுதாசம் என்ற ஐந்தும் கூட்டிப் பத்தாகக் கூறுவ (நியாயபாடி 1. 1. 32)"ரென்றும். பத்திரபாகு வென்பார், இப்பத்தையும் பெயர் வேறுபடுத்து, பிரதிஞ்ஞை, பிரதிஞ்ஞாவிபத்தி, ஏது, ஏதுவிபத்தி, விபக்கம், விபக்கப் பிரதிசேதம், திருட்டாந்தம், ஆகாங்ஷை, ஆகாங்ஷா பிரதிசேதம், நிகமனம் என்று கூறுவதரென்றும் பேராசிரியர் இராதாகிருட்டினனார்¹ எடுத்துக்காட்டுகின்றார். பக்கம், தன்பக்கம் மறுதலைப் பக்கம் என வகுக்கப்பட்டுச் சபக்கம்விபக்கம்என மேலே வழங்குபவாதலின், ஈண்டு மேற்கோளென்றாதல் பிரதிஞ்ஞை என்றாதல் கூறாராயினார். பொருந்தேது என்றதனால், பொருந்தாஎது வென்பதுண்டென்றும், அது குற்றமுடைத்தென விலக்கப்படுமெனவும் அறிக. அடுக்களை, ஒரு கிளையும் பல கிளையுமுடையவாய்ப் பல வகைப்படுவதுபற்றி, "வகையமை அடுக்களை" யென்றார் ; இனி, "வகையமை யடுக்களை" யென்றற்கு, "துணிபொருள் வகையும் எதுப்பொருள்  
வகையும் பொருந்தியுள்ள பாகசாலை" யென்றும், "முறையானமைந்த பாகசாலைபோலும் எனக் கொள்வது மொன்" றென்றும், "முறையாவது வியாப்தி வசனத்துடன் கூறுதல்"; என்றும் கூறுவர்²  
திரு. நாராயணையங்காரவர்கள். பக்கப் பொருளை ஏது திட்டாந்தங்களா லுண்மையெனத் துணிந்தபின் அத்துணியை யெடுத்தோதுவதுஉபநய மாதலின், "மலையும் புகையுடைத் தென்ற" லென்றார். திட்டாந்தப் பொருளைத் தழுவி நிற்றலின் உம்மை எச்சப் பொருட்டு.  
  
¹ Indian Philosophy p. 80.(2nd Edn.) ²; செந்தமிழ் Vol. 34.பக். 46.

### [30.10](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.10)

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை  
  
நெருப்புடைத் தல்லா தியாதொன் றதுபுகைப்  
  
65 பொருத்த மின்று புனல்போ லென்றல்  
¹மேய விபக்கத்து மீட்சி மொழியாய்  
வைதன் மியதிட் டாந்த மாகுந்  
  
64  
  
உரை  
  
67  
  
யாதொன்று நெருப்புடைத்தல்லாது அது புகைப்பொருத்தம் இன்று புனல்போல்-யாதொன்று நெருப்புடையதன்றோ அது புகையொடு பொருந்துவதன்று புனல்போல; என்றல் - என்று சொல்லுவது; மேவிய பக்கத்து மீட்சிமொழியாய்-மேற்கோளாய்ப் பொருந்திய பக்கத்து மறு தலையாய்;வைதன்மிய திட்டாந்தமாகும்- வைதன்மிய திட்டாந்தமெனப்படும் எ - று.  
  
யாதொன்று புகையுடையது அது நெருப்புடையது. அடுக்களை போல என்பது சாதன்மிய திட்டாந்தம். அதனை "வகையமையடுக்களை போல் திட்டாந்தம்" என்று கூறினாராகலின், அதன் பக்கத்து மீட்சி மொழி நெருப்புடைத் தல்லாதது யாது அது புகைப் பொருத்த முடையதன்று என்பது பெறப்படுவது கொண்டு, "மேவிய பக்கத்து மீட்சி மொழியாய்" என்றும், இதனை வற்புறுத்தும் திட்டாந்தம் இது வென்பார், "வைதன்மிய திட்டாந்தமாகும்" என்றும் கூறினார். பக்க முதலியவற்றை விளக்கி வருபவர், புகையுடைத்தே நெருப்புடைத்தென நிகமனம் கூறிய வழி, அவ்வாறு கூறாது, யாதொன்று நெருப்புடைத் தல்லாது அது புகைப் பொருத்தமின்று புனல்போல் என எதிர்மறை முகத்தால் வற்புறுத்துவது யாண்டடங்கும் என்பார்க்கு, அது பக்கத்து மீட்சி மொழியாய் வைதன்மிய திட்டாந்தமாம் என்றாரெனக் கொள்க; வைதன்மிய திட்டாந்தத்தின் இயல்பைப் பிறாண்டுக் கூறுப.  
  
¹ மேவிய பக்கத்து

### [30.11](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.11)

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை  
  
தூய காரிய வேதுச் சுபாவம்  
ஆயிற் சத்த மநித்த மென்றல்  
  
70 பக்கம் பண்ணப் படுத லாலெனல்  
பக்க தன்ம வசன மாகும்  
  
68  
  
உரை  
  
71  
  
தூய காரிய ஏது சுபாவம் ஆயின் - குற்றமற்ற காரிய வியை பிற்றாகிய ஏது சாதிக்கப்படும் பொருட்டு இயல்பாகிய தருமமா வதை யாராயுமிடத்து;பக்க தன்ம வசனமாகும்-அது பக்க தன்ம வசனம் எனப்படும்;சத்தம் அநித்தம் என்றல் பக்கம்-ஒலி அநித்த மாம் என்பது பக்கம்; பண்ணப்படுதலால் - எழுப்பப்படுவதால் என்பது பக்க தன்ம வசனம் எ - று.  
  
காரியம் காரணம் பொது என முன்னர்க் கூறிய ஏதுவகை மூன்றனுள், "பிழையாதது காரியக் கருத்தே" (54.5) என்றாராகலின், ஈண்டு அதனைத் "தூய காரிய வேது" என்றும், இயல்பாய தன்மம் என்ற பொருண்மை தோன்றச் "சுபாவம்" என்றும் கூறினார். பக்க தன்ம வசனமாகும் என்பது சுபாவத்தோடும் சென்றியையும். இவ்வாறே திக்க நாகரும், "அநித்ய: ஸப்தைதி பஷ வசனம். க்ருதகத்வாத்இதி பஷதர்ம வசனம்" என்று கூறுவர்.

### [30.12](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.12)

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை  
  
75 யாதொன்று யாதொன்று பண்ணப் படுவது  
அநித்தங் கடம்போ லென்றல் சபக்கத்  
தொடர்ச்சி யாதொன் றநித்தமல் லாதது  
பண்ணப் படாத தாகாசம் போலெனல்  
விபக்கத் தொடர்ச்சி மீட்சிமொழி யென்க  
  
72  
  
உரை  
  
76  
  
சபக்கத் தொடர்ச்சி - சபக்கத் தொடர்ச்சி யென்பது; யாதொன்று யாதொன்று பண்ணப்படுவது-யாதொன்று செய்யப்படுவதோ; அநித்தியம் கடம்போல் என்றல்-அஃது அநித்தமாகும் குடம் போல் என்று சொல்லுவதாம்; யாதொன்று அநித்தமல்லாதது பண்ணப்படாதது ஆகாசம் போல் எனல்-யாது அநித்தமல்லாததோ அது செய்யப்படாததாம் ஆகாயம் போல என்று மறு தலைப்பக்கமாக நின்று சொல்லுவது; விபக்கத் தொடர்ச்சி மீட்சி மொழி என்க - விபக்கத் தொடர்ச்சி யென்னும் மீட்சிமொழி யென்று அறிக எ - று.  
  
பக்க தன்மமாகிய பண்ணப்படுதலா லென்பதையே தொடர்ந்து பக்கப் பொருளாக நிறுத்தி மேலே சாதித்த அநித்தத்துவத்தை வற்புறுத்துதவது பற்றிச் "சபக்கத் தொடர்ச்சி" யென்றும் சாதிக்கப்பட்ட பொருட்கு மறுதலைப் பொருளைப் பக்கப் பொருளாக நிறுத்தி மறுதலை யேதுவால் ஏற்ற திட்டாந்தங் காட்டிச் சாதித்தலின், "விபக்கத் தொடர்ச்சி" யென்றும், அவ் விபக்கத் தொடர்ச்சியும் பக்க வசனத்தின் மறுதலை யாதலின் "மீட்சி மொழி"யென்றும் கூறினார். சபக்கம்-தன்பக்கம். இதன் மறுதலை விபக்கம். திக்க நாகர் சபக்கத் தொடர்ச்சியை, சபக்கானுகம வசன மென்றும், விபக்கத் தொடர்ச்சி மீட்சி மொழியை வெதிரேக வசன மென்றும் உரைக்கின்றார்.

### [30.13](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.13)

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை  
  
80 அநன்னு வயத்திற் பிரமாண மாவது  
இவ்வெள் ளிடைக்கட் குடமிலை யென்றல்  
செவ்விய பக்கந் தோன்றாமை யில்லெனல்  
பக்க தன்ம வசன மாகும்  
இன்மையிற் கண்டில முயற்கோ டென்றல்  
அந்நெறிச் சபக்கம் யாதொன் றுண்டது  
தோற்றா வடுக்குங் கைந்நெல்லி போலெனல்  
ஏற்ற விபக்கத் துரையென லாகும்  
  
77  
  
உரை  
  
84  
  
அநந்நுவயத்திற் பிரமாணமாவது - அந்நுவய வியாத்தி யில்லாத அநந்நுவய அநுமானத்தாற் பொருளை யுணருந் திறமாவது; இவ்வெள்ளிடைக்கண் குடம் இலை என்றல் செவ்விய பக்கம்- இவ் வெற்றிடத்தில் குடம் இல்லை என்பமு நல்ல பக்க மொழியாகும்; தோன்றாமையில் எனல் பக்க தன்ம வசனமாகும் - தோன்றாமையால் என்னும் ஏது பக்க தன்ம வசனமாம்; இன்மையின் கண்டில முயற்கோடுஎன்றல் அந்நெறிச் சபக்கம்-யாதொன்று வெள்ளிடை இல்லையோ அதனைக் காண்பது இல்லை, முயற்கோடு போல என்பது அந்நெறியிற் பெறப்படும்சபக்கத் தொடர்ச்சியாம்; யாதொன்று உண்டு அது தோற்றரவு அடுக்கும் கை நெல்லிபோல் எனல் - யாதொன்று வெள்ளிடை யுள்ளதோ அது காணப்படும், கையகத்துற்ற நெல்லிக்கனுபோல என்பது; ஏற்ற விபக்கத்து உரை எனலாகும் - அதற்கேற்ற விபக்கத் தொடர்ச்சி மொழியாகும்  
எ - று.  
  
ஏற்புடைய சொற்கள் வருவிக்கப்பட்டன. வெள்ளிடை யென்றது சபக்க விபக்கங்கட்குக் கூட்டியுரைக்கப்பட்டது. அந்நுவய வியாத்தியில்லாதது அநந்நுவயம் என்றாயிற்று. பிரமாணம், அளத்தற் கருவி மேனின்றது. வெள்ளிடை யென்பதே குடமின்மை உணர்த்து மென்பாரை மறுத்தற்குச் "செவ்விய பக்க" மென்றார். முயற்கோ டென் புழித் திருட்டாந்த வியைபாகிய உவம வுருபு எஞ்சி நின்றது. தோற்றரவடுக்கு மென்பது ஒரு சொல்லாய்த் தோன்றுமென்பது பட நின்றது. வெள்ளிலையை வெற்றிலை யென்பதுபோல வெற்றிடம், வெள்ளிட மென வந்தது. வெண்மை, வெறுமை மேற்று. இல் : ஏதுப்பொருட்டாய ஐந்தாவதனுருபு. காண்டல் இலவென்பது கண்டில வென வந்தது. கண்டில மெனக்கொண்டு காண்ப தில்லே மென்றும், முயற்கோடு கண்டில எனவியைத்து முயற்கோடுகள் காணப்பட்டில வென்றும் கூறலுமொன்று. யாதொன் றுண்டென்புழி, உண்மை, கண் முதற் பொறிகட்குத் தோன்ற வுளதாதல்.

### [30.14](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.14)

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை  
  
85  
  
90 இவ்வகை யேதுப் பொருள்சா திப்பன  
என்னைகா ரியம்புகை சாதித்த தென்னிற்  
புகையுள விடத்து நெருப்புண் டென்னும்  
அன்னுவயத் தாலு நெருப்பிலா விடத்துப்  
புகையில்லை யென்னும் வெதிரேகத் தாலும்  
புகைஇ நெருப்பைச் சாதித்த தென்னின்  
  
85  
  
உரை  
  
90  
  
ஏது இவ்வகை பொருள் சாதிப்பன - சாதனமாகிய ஏதுக்கள் இக்கூறிய வகையால் பொருளைச் சாதிப்பனவாம்; காரியம் புகை சாதித்தது - காரியமாகிய புகையே காரணமாகிய நெருப்புண்மையைச் சாதித்தது; என்னை யென்னின்-அது தானும் எங்ஙனம் என்றால்; புகை யுளவிடத்து நெருப்புண்டு என்னும் அந்நு வயத்தாலும் - புகை தோன்றுமிடத்து நெருப்புளதா மென்னும் உடன்பாட்டுட னிகழ்ச்சியாலும்; நெருப்பிலா விடத்துப் புகையில்லை யென்னும் வெதிரேகத்தாலும்-யாண்டு நெருப்பில்லை ஆண்டுப் புகையில்லையா மென்னும் எதிர்மறை யுடனிகழ்ச்சியாலும்; புகைஇ நெருப்பைச் சாதித்தது - புகையாகிய ஏது நெருப்பின் உண்மையைச் சாதித்ததாம் எ - று.  
  
ஏதுக்களை பொருளைச் சாதிககுந் திறத்தை அநுமானவளவையைப் பற்றிக் கூறியவாற்றால் பக்கம் முதலாக விளக்கிப் போந்தமையின் அவற்றை மறுத்துத் தமது கொள்கையைக் கூறுவாராய், "இவ்வகை யேதுப்பொருள் சாதிப்பன" என்று முன் மொழிந்துகொண்டு ஏதுப் பொருளைச் சாதிக்கும் நெறியைப் பல்வேறு தடைகளால் மறுக்கத் தொடங்கி, "காரியம் புகை சாதித்த தென்னை யென்னின்" என்றொரு கடாவை யெழுப்பி, அந்நுவயத்தாலும் வெதிரேகத்தாலும் புகை நெருப்புண்மையைச் சாதித்த தென்பார், "புகைஇ நெருப்பைச் சாதித்தது" என்றார். யாண்டுப் புகையுண்டு ஆண்டு நெருப்புண்டு, அடுக்களை போல என்பது அந்நுவயஞ் சாதித்தல்; எங்கு நெருப்பில்லை அங்குப் புகையில்லை, புனல்போல என்பது வெதிரேகஞ் சாதித்தல். புகை நெருப்பைச் சாதித்தது என்றவிடத்துக் கருவி கருத்தாவாக உபசரிக்கப்பட்டது. அந்நுவாயத்தாலும் வெதிரேகத்தாலும் என்புழி, என் என்னும் இடைச்சொற் றொக்கதாகக் கொண்டு, அந்நுவயத்தாலேனும் வெதிரேகத்தாலேனும் என்று உரைப்பர் திரு. நாராயணையங்கார்.

### [30.15](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.15)

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை  
  
90  
  
95 புகைஇ நெருப்பைச் சாதித்த தென்னின்  
நேரிய புகையி னிகழ்ந்துண் டான  
ஊர்த்தச் சாமங் கௌடிலச் சாமம்  
வாய்த்த நெருப்பின்வரு காரிய மாதலின்  
மேனோக் கிக்கறுத் திருப்பபகைத் திருப்ப  
தாமே நெருப்பைச் சாதிக்க வேண்டும்  
  
90  
  
உரை  
  
95  
  
என்னின்-என்று இவ்வாறு ஏதுப்பொருளைச் சாதிக்குமென்றால்; நேரிய புகையில் நிகழ்ந்து உண்டான ஊர்த்தச் சாமம் - நெருப்பின் காரியமாய்ப் பொருந்திய புகையிடத் துண்டாகிய மேனோக்கிய செலவும்; கௌடிலச் சாமம் - வளைந்து படர்ந்தமையும் படலமுமாகிய இரண்டும்; வாய்த்த நெருப்பின் வருகாரியம் ஆதலால் - காரணமாய் அமைந்த நெருப்பினின்று தோன்றிவரும் காரியமாதலால்; மேனோக்கிக் கறுத்திருப்ப-மேனோக்கிச் சென்று கறுத்திருப்பனவும் ; பகைத்திருப்ப - மேனோக்காது மாறுபட்டுப் பரந்து படலமாய்ப் படர்ந்திருப்பனவும் ; நெருப்பைச் சாதிக்க வேண்டுமே - தாம் தோன்றியுள்ள விடத்தே நெருப்புண்டெனச் சாதிக்க வேண்டுமல்லவோ எ - று.  
  
காரணத்தின் பண்பு காரியத்து முண்டென்னும் அளவைநூற் கருத்தை யுட்கொண்டு, மேனோக்கிய செலவும் படலமாய்ப் படர்தலும் காரணமாகிய நெருப்பின் காரிய மென்றற்கு, "வாய்த்த நெருப்பின் வரு காரியம்" என்றார். "பிழையாதது காரியக்கருத்தே" யென்றதை மேற்கொண்டு, இக்காரியங்களும் காரணமாகிய நெருப்புண்மை சாதிக்க வேண்டுமல்லவோ என்பார், "காரியமாதலின் மேனோக்கிக் கறுத்திருப்ப பகைத்திருப்ப தாமே நெருப்பைச் சாதிக்கவேண்டும்" என்றார். தாம்; அசை எதிர்மறை யேகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது. இதனாற் பயன், காரியம் காரணஞ் சாதித்தல், அன்னுவயஞ் சாதித்தல், வெதிரேகஞ் சாதித்தல் என்ற மூன்றனுள், காரியவேதுவாய புகை பிழைபடுமாறு காட்டியவாறு. ஊர்த்தஸ் யாம்மன் என்பது ஊர்த்தச் சாமம் என வந்தது. கௌடிலஸ்யாமம், வளைந்து படர்ந்து செல்வது. மேனோக்கிய செலவின் மாறாகப் படர்ந்திருப்பது பற்றிப் "பகைத் திருப்ப" வென்றார்.

### [30.16](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.16)

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை  
  
100 அன்னு வயஞ்சா திக்கின் முன்னும்  
கழுதை யையுங் கணிகை யையுந்  
தம்மி லொருகா லத்தோ ரிடத்தே  
அன்னு வயங்கண் டான்பிற் காலத்துக்  
கழுதையைக் கண்ட விடத்தே கணிகையை  
அனுமிக்க வேண்டு மதுகூ டாநெருப்  
  
96  
  
உரை  
  
101  
  
அன்னுவயம் சாதிக்கின் - உடன்பாட் டுடனிகழ்ச்சிப் பொருளதாகிய அன்னுவயத்தால் பொருளுண்மை சாதிக்கப்படு மாயின்; முன்னும் ஒரு காலத்து ஓரிடத்தே கழுதையையும் கணிகையையும் தம்மில் அன்னுவயங் கண்டான் - முன்னொரு காலத்தே ஓரிடத்தில் கழுதையும் கணிகை யொருத்தியும் தம்மில் உடங்கிருப்பக் கடண்டவனொருவன்; பிற்காலத்துக் கழுதையைக் கண்டு பின்னொரு காலத்தே கழுதை யிருப்பக் கண்டு; அவிடத்து- அவ்விடத்தே; கணிகையை அனுமிக்க வேண்டுமே - கணிகையும் உடனிருப்பதாகத் துணிய வேண்டுமல்லவோ; அது கூடா-அது கூடாதாம் எ - று.  
  
அன்னுவயம் என்புழி மூன்றாவது விகாரத்தாற் றொக்கது. செயப் படுபொருள் வருவிக்கப்பட்டது. நெருப்பும் புகையும் அன்னுவயமாகக் கண்டவன் பிறிதோரிடத்துப் புகை கண்டவழி நெருப்புண்மை சாதிக்கும் திறம் குறித்து முன்னர்ப் "புகையுள விடத்து நெருப்புண்டென்னும் அன்னுவயத்தாலும்" என்று கூறியதை மறுக்கும் குறிப்பினால் "அன்னுவயஞ் சாதிக்கின்" என்றார். அவ்விடத்தொனற்பாலது அவிடத்து என விகாரமாயிற்று. எதிர்மறை யேகாரம் ஈண்டும் பிரித்துக் கூட்டப்பட்டது. கூடாதென்பது ஈறு குறைந்தது. இதனால் அன்னுவ யானுமானம் பிழைபடுமாறு காட்டியவாறு.

### [30.17](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.17)

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை  
  
105 அனுமிக்க வேண்டு மதுகூ டாநெருப  
பிலாவிடத் துப்புகை யிலையென னேரத்  
திருத்தகு வெதிரேகஞ் சாதிக்கு மென்னின்  
நாய்வா லில்லாக் கழுதையின் பிடரின்  
நரிவாலு மிலையாக் காணப் பட்ட  
அதனையே கொண்டு பிறிதோ ரிடத்து  
நரிவாலி னானாய் வாலையனு மித்தல்  
அரிதா மதனா லதுவு மாகாது  
  
101  
  
உரை  
  
108  
  
நெருப்பிலா விடத்துப் புகை இலையென நேர் அத்திருத்தகு வெதிரேகம் சாதிக்கும் என்னின் - நெருப்பில்லாதவிடத்திற் புகையில்லையாம் என மேற்கொள்ளும் அந்தச் சிறப்பமைந்திருக்கின்ற எதில்மறையுட னிகழ்ச்சிப் பொருளதாகிய வெதிரேகம் பொருளுண்மை சாதிக்குமென்பாயாயின்; நாய்வால் இல்லாக் கழுதையின் பிடரில்-(ஓரிடத்தே) நாய்வால் இல்லாத கழுதையின் பிடரியிலே; நரிவாலும் இலையா - நரியினது வாலும் இல்லையாக ; காணப்பட்ட அதனையே கொண்டு-அங்ஙனம் காணப்பட்ட வெதி ரேக அறிவே கொண்டு; பிறிதோரிடத்து - பிறிதோரிடத்துக்குச் சென்ற காலை; நரிவாலில் நாய்வாலை யனுமித்தல்-நரிவாலிருப்பக் கண்டு நாய்வாரு முண்டெனத் துணிதல்; அரிதாம் - கூடாதாம்; அதனால் அதுவும் ஆகாது - ஆதலால் வெதிரேகியனுமானமும் கூடாதன்றோ எ - று.  
  
"நெருப்பிலா விடத்துப் புகையிலையென நேர் வெதிரேகம்" என்றது, முன்னே "நெருப்பிலா விடத்துப் புகையில்லை யென்னும் வெதி ரேகத்தாலும், புகைஇ நெருப்பைச் சாதித்தது" என்றதைக் கொண்டு கூறியது. நேர்தல்; உடன்பட்டு மேற்கோடல். அவ் வெதிரேக மென்னாது, "திருத்தகு வெதிரேக" மென்றது இழித்தற் குறிப்பு. திரு : துணி பொருளைச் சாதிக்குஞ் சிறப்பு; ஈண்டு அது குறிப்பு மொழியாய்ச் சிறப்பின்மை குறித்தது; தீங்கட்டானை நன்கட்டாய் என்றாற்போல, கழுதையின் பிடரிமயிர் நிலைக்களமாக, நாய்வாலுமில்லை நரிவாலுமில்லை என்று கண்ட வெதிரேகத்தை, "நாய்வாலில்லாக் கழுதையின பிடரியின் நரிவாலு மிலையாக் காணப்பட்டவது" என்றொழிந்தார். "பிறிதோரிடத்து" என்றமையின் ஓரிடத்தென முன் மொழிந்து கொள்ளப்பட்டது. இதனால் வெதிரேக யனுமானமும் பிழைபடுமாறு காட்டியவா றாயிற்று.

### [30.18](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.18)

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை  
  
110 ஒட்டிய வுபநய நிகமன மிரண்டுந்  
திட்டாந் தத்தி லேசென் றடங்கும்  
  
109  
  
உரை  
  
110  
  
ஒட்டிய உபநயம் - பக்க முதலிய மூன்றோடு சேரவுள்ளன வாகிய உபநயமும்; நிகமனம் - நிகமனமும்; இரண்டும் - ஆகிய இரண்டும்; திட்டாந்தத்தில் சென்று அடங்கும் - மூன்றாவதாகிய திட்டாந்தத்தின்கண் அடங்கிவிடும் எ - று. எனவே, அவை எம்மனோர்க் காகா என்பதாம்.  
  
இந்நூலாசிரியர் காலத்தே அளவை நூலார் பக்க முதலிய ஐந்தனையும் மேற்கொண் டொழுகின ரென்றும், அவற்றுள் உபநயமும் நிகமனமும் திட்டாந்தத்தில் அடங்குமென்றும், எனவே தாம் மேற்கொள்வன பக்க முதலிய மூன்றுமே யென்றும், இதுகாறும் கூறிய வாற்றாற் பெறப்படும். "சுட்டுணர்வைப் பிரத்தியக்கமெனச் சொலி. விட்டனர் நாம சாதிக் குணக் கிரியைகள்" (49-50) எனப் பிறர்மேல் வைத்துக் கூறியதுபோல, ஈண்டும் திட்டாந்தத்திலே "அடக்கினர்" எனப் பிற ஆசிரியர் மேல்வைத் துரையாது, தாமே தெளிந்து கூறுமாறு தோன்ற, "திட்டாந்தத்திலே சென்றடங்கும்" என்றார். இவ்வாறே இவ்வறவணவடிகள் இருந்து அறங்கூறும் காஞ்சியம்பதியிலிருந்து வடநாடு சென்று சிறந்த திக்கநாகரும் பக்கமுதலிய மூன்றுமே வடமொழி வாயிலாக வடவர்க் கறிவுறுத்தியிருக்கின்றார். இம்மூன்றனையும் முதன் முதலில் வடிகட்டி யுரைத்த ஆசிரியல் மணிமேகலை யாசிரியரென்ப தறியாது நாகார்ச்சுன ரென்பார் தாமெழுதிய உபய கௌசல்ய சூத்திரமென்னும் நூலிற் கூறியுள்ளார் என்று கூறுவாரும் மூன்றாக வடிகட்டிய முதலாசிரியர் திக்கநாகரே யென்பாரும் உளர். இம்மூன்றும் பக்கம் ஏது திட்டாந்த மென்பனவா மென்றும், இம்மூன்றற்கும் சாதனமென்பது பெயரென்றும், இவற்றால் கேட்போர் அறியப்படாத பொருள் அறிவுறுத்த்ப்படுகிறதென்றும் தாமெழுதிய நியாயப் பிரவேச மென்னும் நூலில், "பக்ஷாதி வசநாநி ஸாதனம் பக்ஷஹேது த்ருஷ்டாந்த வசநைர்ஹ ப்ராஸ்நி காநாம்ப்ரதீ தோர்த்த: ப்ரதிபாத்யத இதி" என்று கூறியிருப்பது காண்க. இவர்கட்குப் பிற்போந்த தருமகீர்த்தி யென்பார் நியாயபிந்து வென்னும் தமது நூலில் மூன்றையும் இரண்டாக அடக்குகின்றார். பிறரெல்லாம் உபநயத்தை ஏதுவின் கண்ணும், நிகமனத்தைப் பக்கத்தின் கண்ணும் அடக்குப. சமணரும் வேதாந்திகளும் மீமாஞ்சகரும் இம்மூன்றையுமே மேற்கொண்டொழுகு கின்றனர்; பௌட்கர முதலிய சைவாகமங்கள் ஐந்தையுமே மேற் கொண்டொழுகுதலால் வாகீசமுனிவர் முதலிய தமிழாசிரியன்மாரும், சிவாக்கிரயோகிகள் முதலிய வடமொழி யுரைகாரரும் ஐந்தையும் மேற் கொண்டனர். இனி, ஞானசம்பந்தர் காலத்தே தமிழகத்து வாழ்ந்த புத்தர்கள் பக்கத்தன்மமாகிய ஏதுவும் பக்கவசனமாகிய எடுத்த மொழியு மாகிய இரண்டுமே கொண்டிருந்தனர். இவையே தருமகீர்த்தி முதலாயினர் மேற்கொட்டனவாம்.

### [30.19](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.19)

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை  
  
பக்க மேதுத் திட்டாந் தங்கள்  
ஒக்க நல்லவுந் தீயவு முளவதில்  
  
111  
  
உரை  
  
112  
  
பக்கம் ஏது திட்டாந்தங்கள் - பக்கமும் ஏதுவும் திட்டாந் தமுமாகிய மூன்றனுள்ளும்; ஒக்க நல்லவும் தீயவும் உள-ஒவ்வொன்றிலும் குற்றமில்லாதனவும் குற்றமுடையனவும் உள்ளன எ-று.  
  
மூன்றிலும் ஒப்ப இவ்வேறுபாடிருத்தலின் "ஒக்க நல்லனவும் தீயனவும் உள" என்றும், குற்றமின்மை நன்மையும், குற்றமுண்மை தீமையு மாதலால் அவற்றைப் பயன் குறித்து, "நல்லவும்" என்றும் "தீயவும்" என்றும் கூறினார். நல்லவை நன்பக்கம் என்றும் நல்லேது என்றும், "ஏதமில் திட்டாந்த" மென்றும் வழங்கும்; தீயவை, பக்கப் போலி, ஏதுப்போலி, திட்டாந்தப் போலியென்றும், தீய பக்கம் தீய வேது தீயவெடுத்துக்காட்டென்றும் வழங்கும். இனி, இதற்குத் திரு. நாராயனையங்கார், 'பக்க முதலிய மூன்றுறுப்புக்களும் முற்றும் நல்லனவாதலால் நல்லனுமானமாதலும், அவற்றுள் ஒரோவொன்று தீயன வாதலானே அனுமானாபாசமாதலும், உள்ளனவா மென்றவாறு" என்றும், "நல்லனவாதற்கு ஒக்கவென்றதனால் தீயனவாதற் கொரோ வொன்றே சாலுமென்பதாயிற்று" என்றும் கூறுவர்

### [30.20.1](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.20.1)

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை

### [30.20.2](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.20.2)

ஒக்க நல்லவுந் தீயவு முளவதில  
வெளிப்பட் டுள்ள தன்மி யினையும்  
வெளிப்பட் டுளசாத் தியதன் மத்திறம்  
பிறிதின் வேறாம் வேறுபாட் டினையுந்  
தன்கட் சார்த்திய நயந்தருத லுடையது  
நன்கென் பக்கமென நாட்டுக வதுதான்  
சத்த மநித்த நித்தமென் றொன்றைப்  
பற்றி நாட்டப் படுவததில் தன்மி  
சத்தஞ் சாத்திய தன்ம மாவது  
நித்தா நித்த நிகழுநல் லேது

### [30.20.3](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.20.3)

112

### [30.20.4](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.20.4)

உரை

### [30.20.5](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.20.5)

121

### [30.20.6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.20.6)

நன்பக்கம் - குற்றமில்லாத பக்கமவாது; வெளிப்பட்டுள்ள தன்மியினையும் - வெளிப்படையாகத் தோன்றி நிற்கும்தன் மியையும்; வெளிப்பட்டுள சாத்திய தன்மத்திறம் - அவ்வாறு விங்கத் தோன்றி நிற்கும் சாத்தியதன்மக் கூறுபாடு; பிறிதின் வேறாம் வேறுபாட்டினையும் - பிறிதொரு பொருளினின்றும் வேறாகவுடையதாகும் வேறுபாட்டையும்; தன் கண் சார்த்திய நயம் தருதலுடையது - தன் கண்ணே சார்த்திக் கூறப்படும் தன்மையுடையதாகும்; என நாட்டுக-எனத் துணிவாயாக; அது - அஃதாவது; சத்தம் அநித்தம் நித்தம் என்ற ஒன்றைப்பற்றி - சத்தம் அநித்த மென்றும் சத்தம் நித்தமென்றும் வரும் இரண்டனுள் ஒன்றை மேற்கொண்டு; நாட்டப்படுவது - ஏது திட்டாந்தங்களால் சாதிப்பதாகும்; அதில் - அப் பக்க வசனத்தில்; தன்மி சத்தம் - தன்மியாவது சத்தம்; சாத்திய தன்மமாவது - அவற்றை முறையே சாதித்தற்குப் பொருந்திய தன்மமாவது ; தித்தாநித்தம்- நித்தத்துவமும் அநித்தத்துவமுமாம். எ - று.

### [30.20.7](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.20.7)

பக்கத்துட் கூறப்படும் தன்மியும் சாத்தியதன்மமும் வாதிபிரதி வாதிகட்கு நன்கு தெரிந்தவை யென்றற்கு, வெளிப்பட்டுள்ள தன்மி" யென்றும், வெளிப்பட்டுள சாத்தியதன்ம" மென்றும் சிறப்பித்தார். தன்மி யின்னதென்றும் அது நிற்கும் நற்பக்க வசனம் இதுவென்றும் காட்டுவார், "தன்மி சத்தம்" என்றும், "சத்தம் அநித்த நித்தமென் றொன்றைப்பற்றி நாட்டுவது" என்றுங் காட்டினார். பக்கமும் தன்மியுங் காட்டிய வழி இயைபுபடுதலின் சாத்திய தன்மத்தைக் காட்டுவதற்கு, "சாத்தியதன்மமாவது நித்தா நித்தம்" என்றார். சத்தம் அநித்தம் நித்தமென்றதற்கேற்பக் கூறாது, செய்யுளாகலின், நித்தா நித்தமென மாறிக் கூறினார். பக்க வசனத்துத் தன்மி யெழுவாயும் சாத்திய தன்மம் பயனிலையுமாதலின், இவ்விரண்டையு மெடுத்தோதுவது பக்க வசனமென்றொழியாது, தன்மியைக் கூறவே, அதன் சாத்திய தன்மமும் அடங்குமென்ற கருத்தால், "வெளிப்பட்டுள்ள தன்மியினையும்" என்றும், தன்மி வெளிப்படையாய தென்னின், அதன் சாத்திய தன்மமும் அவ்வியல்பிற்றே யென்பது தோன்ற "வெளிப்பட்டுள சாத்தியத் தன்மம்" என்றும், அது தன் படர்ச்சிக்குட்பட்ட ஏதுக்களாலும் எடுத்துக்காட்டுக்களாலும் உடம்பாடும் எதில்மறையுமாகிய பலவகையால் நாட்டப்படுதலின், சாத்திய தன்மமென்னாது "சாத்திய தன்மத்திற" மென்றும், சத்தம் அநித்தமெனச் சாதிக்குமிடத்து நித்தமாகிய தன்மத்தையுடைய பிற பொருள்களின் வேறாம் இயல்பை, பிறிதின் வேறாம் வேறுபாட்டினையும்" உடைய தென்றும் கூறினார். பக்க தனமம், திட்டாந்தம், சபக்கத் தொடர்ச்சி முதலிய இயைந்து சாத்திய மாகிய பயனை வற்புறுத்தற்கு நன்பக்கம் இடமாகும். நயத்தின் விளைவு பயனென்பர். அதனை "நயங்க ணான்காற் பயன்க ளெய்தி" (மணி. 30 : 35) என்பது காண்க. சாத்திய தன்மம் - தன்மியோ டின மாயவற்றில் ஒன்றியிருத்தல் ஒற்றுமை நயம் ;

### [30.20.8](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.20.8)

பிறிதின்பால் இல்லாது வேறாதல். வேற்றுமை நயம். நற்பக்கமாவது இவிவிருவகை நயங்களையு முடைத்தாதல் பற்றி, "தன்கட் சார்த்திய நயந்தருமலுடைய" வென்றார். இதனால், நற்பக்கமாவது வெறிப்பட்டுள்ள தன்மியையும், வெளிப்பட்டுள்ள் சாத்திய தன்மத்தையும், அத்தன்மத்தின் படர்ச்சிக் குட்பட்ட இனப்பொருளின்கண் ஒன்றி நிற்கும் ஒற்றுமையே யன்றிப் பிறிதின் வேறாம் வேறுபாட்டையும் உடையதென்பது கூறப்பட்டதாம். பிறிதின் வேறாம் வேறுபாடுடைமை கூறவே, இனமாயவற்றில் ஒற்றுமையுடைமைதானே எய்துதலின் உம்மையாற்றழீஇக் கொண்டார். "வெளிப்பட்டுள்ள" என ஒருமுறைக்கிருமுறை மிகுத்துக் கூறியதனால், இத் தன்மி தன்மங்கள் பிரிதிவாதி யறியாதனவா யிருத்தல் கூடாதென்றும் பக்க வசனமும், கவர்பொருள் வைப்பு, மாறுகொளக் கூறல், குறிப்பிற் பொருள்தரல் முதலியனவின்றி எடுத்த பொருளை யெளிதினிது காட்டுவதா யிருத்தல் வேண்மென்றும் கொள்க. இது பலரும் அறிந்த செய்தியாதலின், இந்நூலாசிரியர், இலேசினாற் பெறவைத்தார். இனி ஆசிரியர் திக்கநாகர் இலேசினாற்போந்த இவற்றையே யெடுத்துப் பக்க வசனத்துக்கு இலக்கணமாகக் கூறினரேயன்றி, ஈண்டு எடுத்தோதப்படும் நலமுற்றும் கூறிற்றிலர்; பக்க வசனத்தின் சொல்லமைதி தூய்மையுறின் இலக்கணந் தானே யமையு மென்பது கருத்துப்போலும். நியாயப் பிரவேசத்தில், பக்கமாவது வெளிப்பட்டுள்ள தன்மியைத் தன்கண் உடைமையால் சாத்தியமாக விரும்பப்படுவது என்ற கருத்துப்படவே அவர் கூறுகின்றார்.

### [30.20.9](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.20.9)

இனி, ¹திரு நாராயணையங்கார், "பிறிதின் வேறாம் வேறுபாடாவது பக்கம் சபக்கவிபக்கங்களினின்றும் வேறுபட்டிருத்த" லென்றும் இப் "பிறிதின் வேறாம் வேறுபா" டுடைமையைத் திக்கநாதர் பக்கத்துக் கிலக்கணமாகக் கூறாமைக்குக் காரணங் கூறலுற்று, "மணிமேகலை நூன் மரபினர்க்குப் பிறிதின்வேறாம் வேறுபாடும் பக்ஷலக்ஷணத்திற்சேர்க்கப்பட்டிருத்தலால் எல்லாப் பொருளும் அநித்தமென்று பக்ஷவசனங் கூறில், எல்லமென்னும் சொற்பொருளுக்குப் பிறிதாயொரு பொருளு மில்லாமையால் அதற்குப் பிறிதின் வேறாம் வேறுபாடின்மைபற்றி அதனைப் பக்ஷவசனமாக்க் கொள்ளத்தகாதென்பதே யுடன்பாடென்று தோன்றுகிற" தென்றும் "இக் கொள்கை சுத்த தருக்கமுறையுடைய நியாய நூலார்க்கெல்லாம் உடன்பாடா" மென்றும் கூறுகின்றார்.

### [30.20.10](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.20.10)

பக்க வசனத்துக் கெடுத்துக்காட்டாகச் "சத்த வநித்தம் நித்த மென்றொன்றைப்பற்றி நாட்டப்படுவது" என்று இவ்வாசிரியர் சொன்னதே சிறிது வேறுபாட்டுடன் நியாயப் பிரவேசத்திலும் காணப்படுகிறது.

### [30.20.11](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.20.11)

¹ செந்தமிழ் Vol. xxxii. பக் 29-30.

### [30.21](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.21)

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை  
  
நித்தா நித்த நிகழுநல் லேது  
மூன்றாய்த் தோன்று மொழிந்த பக்கத்  
தூன்றி நிற்றலுஞ் சபக்கத்துண் டாதலும்  
விபக்கத் தின்றியே விடுதலுஞ் சபக்கஞ்  
  
121  
  
உரை  
  
124  
  
நிகழும் நல்லேது மூன்றாய்த் தோன்றும் - நன்பக்கத்துக்குப் பக்கதன்ம வசனமாய் நிலவும் நல்லேது வென்பது மூன்று வகையாகத் தோன்றுகிறது ; மொழிந்த பக்கத்து ஊன்றித் தோன்றலும் - மொழியப்பட்ட பக்கப்பொருளில் நிலைபெற்ற இயைபுடைத்தாதலும் ; சபக்கத்து உண்டாதலும் - சபக்கப் பொருளின்கண் இல்லையாகாது உளதாதலும்; விபக்கத்து இன்றியே விடுதலும் - பக்கத்தின் மீட்சியாகிய விபக்கப் பொருளின் கண் அறவே இல்லையாதலுமாம் எ - று.  
  
ஏதுவினைப் பக்க தன்ம வசனமென்பது வழக்கு; "சத்தம் அநித்த மென்றல்பக்கம், பண்ணப்படுதலாலெனல் பக்கதன்ம வசனமாகும்" (மணி.29;69-71) என்றமை காண்க. பக்கத்தில் வந்துள்ள தன்மியின் தன்மமே சாதனமாகிய ஏதுவாதலின், "மொழிந்த பக்கத் தூன்றி நிற்றல்" இலக்கணமாயிற்று. மொழிந்த என்பது செயப்பாட்டுவினைப் பொருட்டாய பெயரெச்சம். தன்ம மில்வழித் தன்மியாதல் கூடாமை பற்றி, தன்மம் தன்மிக்கண் இயைந்து நிற்கும் இயல்பை, "ஊன்றித் தோன்றல்" என்றார். பக்கப் பொருட்குரிய பொதுத் தன்மமேயுடைய ஏனைப் பொருளெல்லாம் சபக்கத்தடங்குதலால், அவற்றின் கண்ணும் அத்தன்மம் காணப்படுவதுபற்றி, "சபக்கத் துண்டாதல்" என்றார்; உண்டாதல், உளதாதல், சபக்கப் பொருட்கு மாறாய பொருள் விபக்கப் பொருளாதலின், அதன்பால் உளதாகும் பக்க தன்மம் விபக்கத்து அறவேயில்லையா மென்பது உணரப்படுமாயினும், உய்த்துணர்வு எடுத்தோத்தில்வழி யென்பதுபற்றி, "விபக்கத்தின்றியே விடுதலை" என்றார். நன்பக்கத்துக்குரிய ஏதுவொன்றே, பக்கப் பொருளில் நிலைபேறும், சபக்கத்தில் உளதாதலும், விபக்கத்து இலதா தலுமாகிய மூவகையாய்ப் பகுத்தாரயப்படுவதுபற்றி "மூன்றாய்த் தோன்றும்" என்றார். ஏகாரம்: தேற்றம். உம்மை எண்ணுப்பொருட்டு. இனி, ஈண்டுக் கூறிய வியல்பை எடுத்துக் காட்டுக்களால் முறையே வற்புறுத்துகின்றார்.

### [30.22](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.22)

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை  
  
125  
  
130  
  
135 விபக்கத் தின்றியே விடுதலுஞ் சபக்கஞ  
சாதிக் கிற்பொரு டன்னாற் பக்கத்  
தோதிய பொதுவகை யொன்றி யிருத்தல்  
சத்த வநித்தஞ் சாத்திய மாயின்  
ஒத்த வநித்தங் கடாதி போலெனல்  
விபக்கம் விளம்பில் யாதொன் றியாதொன்  
றநித்தமல் லாதது பண்ணப் படாதது  
ஆஅ காசம் போலென் றாகும்  
பண்ணப் படுதலுஞ் செயலிடைத் தோன்றலும்  
நண்ணிய பக்கஞ் சபக்கத் திலுமாய்  
விபக்கத் தின்றி யநித்தத் தினுக்கு  
மிகத்தரு மேதுவாய் விளங்கிற் றென்க  
  
124  
  
உரை  
  
135  
  
சபக்கம் சாதிக்கின்-நல்லோதுவானமது சபக்கத்தின்கண் உளதாய் நின்று பக்கத்தோதிய சாத்திய தன்மத்தைச் சாதிக்கு மாயின் ; பொருளின் தன்னால் பக்கத்து ஓதிய பொதுவகை ஒன்றியிருத்தல்-தான் எடுத்துக் காட்டும் பொருளின் பொதுத் தன்மத்தோடு பக்க வசனத்துட் கூறிய சாத்திய தன்மம் ஒத்திருத்தல் வேண்டும் ; சத்த அநித்தம் ஒத்த சாத்தியமாயின் - சத்தம் அநித்த மென்ற பக்க வசனத்துள் அநித்தத்துமாகிய தன்மம் சாதிக்கப் படுமிடத்து; அநித்தம் ஒத்த கடாதிபோல் எனல் - அநித்தத்துவ மாகிய தன்மத்தை யொப்ப வுடைய குட முதலியவற்றைப்போல் என நாட்டுதல் ; விபக்கம் விளம்பில் - இதற்கு விபக்க நிலை காட்டுவதாயின் ; யாதொன்று யாதொன்று அநித்தமல்லாதது பண்ணப்படாதது ஆகாசம்போல் என்று ஆகும் - தொகுபொருள் அநித்தமன்று, அது பண்ணப்படாததாம், ஆகாசம் போல எனவரும் ; பண்ணப்படுதலும் செயலிடைத் தோன்றலும் - பண்ணப்படுவதும் பண்ணுஞ் செய்கை யிடத்தே தோன்றுவதுமாகிய பொதுத் தன்மமானது ; நண்ணிய பக்கம் சபக்கத்திலுமாய் - ஆராய்ச்சிக்குப் பொருந்திய பக்கப் பொருளிலும் சபக்கப் பொருளிலும் உளதாய்; விபக்கத்தின்றி - விபக்கத்தோதும் பொருளிடத்தே அறவே இல்லையாய்; அநித்ததினுக்கு - சத்தமாகிய தன்மி அநித்தத்துவமாகிய தனமத்தையுடைய தென்பதைச் சாதித்தற்கு ; மிகத்தரும் ஏதுவாய் விங்கிற்று என்க - மிகவும் பொருத்தமான ஏதுவாய் விளங்கிவிட்டது என அறிக எ - று.  
  
ஒத்த அநித்த மென்பதை, அநித்தம் ஒத்த என மாறுக. இனி, திரு. நாராயடையங்கார் கிடந்தபடியே கொண்டு, "எதிரியால் ஒத்துக்கொள்ளப்பட்ட அநித்தியப் பொருளாகிய குட முதலியனபோல் என்று கூறுதல்" என்பர். "விபக்கம் விளம்பில்" என்றது, அதனை விளம்புவது ஏதுவின் தூய்மையை விளக்குதற் பயத்ததெனக் குறிப்பித்து நிற்கிறது. பண்ணப்படுதலும் செயலிடைத் தோன்றலும் எனப் பன்மை யாற் கூறினராயினும், இரு வழியும் ஒத்த நிலையில் பொதுத் தன்மமாய ஒருமைப் பொருள்படுதலின், "விளங்கிற்"றென வொருமை முடிவு கூறினார். இவ்வகையால் இவ்வேது தன் பயனைக் குற்றமறச் சாதித்துத் தரும் சிறப்புத் தோன்ற "மிகத்தரும்¹ ஏதுவாய் விளங்கிற்"றென்றார். எனக் கொள்க.  
  
¹ நியா. பிர.

### [30.23](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.23)

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை  
  
140 ஏதமி றிட்டாந் தம்மிரு வகைய  
சாதன் மியம்வை தன்மி யம்மெனச்  
சாதன் மியமெனப் படுவது தானே  
அநித்தங் கடாதி யன்னுவயத் தென்கை  
வைதன் மியதிட் டாந்தஞ் சாத்தியம்  
எய்தா விடத்தி லேதுவு மின்மை  
இத்திற நல்ல சாதனத் தொத்தன  
  
136  
  
உரை  
  
142  
  
ஏதம்இல் திட்டாந்தம் - குற்றமில்லாத திட்டாந்தம்; சாதன்மியம் வைதன்மியம் என இருவகைய - சாதன்மிய திட்டாந்தமென்றும், வைதன்மிய திட்டாந்தமென்றும் இருவகைப்படுவனவாம்; சாதன்மிய மெனப்படுவது - அவற்றுள் சாதன்மிய திட்டாந்தமெனப்படுவது; அந்நுவயத்து - உடன்பாட்டு நெறிக் கண்; அநித்தம் கடாதி என்கை - சத்தம் அநித்தம், பண்ணப்படுதலால், கடாதிபோல என எடுத்துக் காட்டுதல்; வைதன்மிய திட்டாந்தம் - வைதன்மிய திட்டாந்தமாவது ; சாத்தியம் எய்தாவிடத்தில் ஏதுவும் இன்மை - சாத்திய தன்மம் இல்லாத பொருளிடத்தில் பக்க தன்மமாகிய ஏதுவும் இல்லையாயொழிதல்; இத்திறம் - நன் பக்கம் நல்லேது நற்றிட்டார்ந்தமென்ற இவ்வகைகள் மூன்றும்; நல்ல சாதனத்து ஒத்தன - வழுவின்றிச் சாதித்தற்கு ஒப்ப ஏற்புடையவாகும் எ - று.  
  
முன்னே சபக்க விபக்கங்களைத் தனித்தனியே யெடுத்து இலக்கணங் கூறுதொழிந்தார், ஈண்டு இருவகைத் திட்டாந்தங்களில் சாதன் மியத்துக்கு எடுத்துக்காட்டுக் கூறியும் வைதன்மியத்துக்கு இலக்கணங் கூறியும் விளக்கஞ் செய்தார். சாதன்மியத்துக்கு¹ இலக்கணம், "எங்கு ஏதுவிற்குச் சபக்கத்தில் மாத்திரம் உண்மை சொல்லப்படுகிறதோ அது" என்றும், வைதன்மியத் திட்டாந்தத்துக்கு எடுத்துக்காட்டு, "யாதொன்று செய்யப்பட்டது அது அநித்தமாகக் காணப்பட்டது குட முதலியன போல" என்றும் நியாயப் பிரவேசம் கூறுகிறது. "பக்கமேது திட்டாந்தங்கள், ஒக்க நல்லவும்...உள" என்று முன்பு கூறினமையின், ஈண்டும் அதற்கேற்ப, "ஒத்தன" என்றார்.  
  
¹ பதார்த்த.பக். 234.

### [30.24](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.24)

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை  
  
145  
  
150  
தீய பக்கமுந் தீய வேதுவுந்  
தீய வெடுத்துக் காட்டு மாவன  
பக்கப் போலியு மேதுப் போலியுங்  
திட்டாந்தப் போலியு மாஅ மிவற்றுட்  
பக்கப் போலி யொன்பது வகைப்படும்  
பிரத்தி யக்க விருத்த மனுமான  
விருத்தஞ் சுவசன விருத்த முலோக  
விருத்த மாகம விருத்த மப்பிர  
சித்த விசேடண மப்பிர சித்த  
விசேடிய மப்பிர சித்த வுபயம்  
அப்பிர சித்த சம்பந் தம்மென  
  
143  
  
உரை  
  
153  
  
தீயபக்கமும் தீயஏதுவும் தீயஎடுத்துக்காட்டுமாவன - குற்றமுடைய பக்கமும் ஏதுவும் எடுத்துக்காட்டு மென்பவை; பக்கப் போலியும் ஏதுப்போலியும் திட்டாந்தப் போலியுமாம் - பக்கப்போலி ஏதுப்போலி திட்டாந்தப்போலி என வழங்கும்; இவற்றுள்-இம் மூன்றனுள்; பக்கப்போலி என்பது - பக்கப்போலி என்று வழங்குவது; பிரத்தியக்க விருத்தம்...என - பிரத்தியக்க விருத்தமெனவும் அனுமான விருத்தமெனவும், சுவசன விருத்தமெனவும் உலோக விருத்தமெனவும் ஆகமவிருத்த மெனவும் அப்பிரசித்த விசேடண மெனவும் அப்பிரசித்த விசேடிய மெனவும் அப்பிரசித்தவுபயமெனவும் அப்பிரசித்த சம்பந்தமெனவும்; ஒன்பது வகைப்படும்-ஒன்பது வகையாகக் கூறப்படும் எ - று.  
  
போலிகளை முறையே தீயபக்கம் தீயவேது தீயவெடுத்துக் காட்டென முன்னர்க் கூறியது, பக்கப்போலி முதலியவற்றிற்கு இலக்கணம்; அஃதாவது பக்கப் போலியாவது தீயபக்கம் என்றும், ஏதுப்போலி தீய வேது என்றும் திட்டாந்தப்போலி தீயஎடுத்துக்காட்டென்றும் கொள்க வென்பதாம். நியாயப் பிரவேசம் தீயபக்கம் முதலிய மூன்றையும் முறையே பக்ஷாபாசம் ஏதுவாபாசம் திருஷ்டாந்தாபாசம் என்று கூறி அவற்றிற்கு இலக்கணமாகப் பக்ஷாபாசம் பிரத்தியக்ஷ விருத்த முதலாயினவா மென்றும், ஏதுவாபாசம் அசித்தம் அநைகாந்திக முதலாயினவாமென்றும் திருஷ்டாந்தாபாசம் சாதன்மியம் வைதன்மியமென விருவகைத்தாய்ச் சாதன்மியம் சாதனதன்மாசித்தம், சாத்திய தன்மா சித்தம் உபயதன்மாசித்தம் அநந்நுவயம் விபரீ தாந்நுவயம் என்பனவாமென்றும், வைதன்மியம் ஐவகைத்தாய்ச் சாத்தியா வியாவிருத்தி சாதனா வியாவருத்தி உபயா வியாவிருத்தி அவ்வியதிரேகம், விபரீத வியதிரேகமென்பனவா மென்றும் கூறுகிறது. இப் பக்கப்போலி ஏனைத் தருக்கநூல்களில் பிரதிஞ்ஞாபாசம் என்றும் வழங்கும். ஆராய்ச்சியாளர் பக்கப்போலி முதலிய மூன்றனுள், ஏதுப்போலி யொன்றே பழமையானதென்றும். ஏனையிரண்டும் வாற்சாயனரை யுள்ளிட்ட அறிஞர் காலத்தனவல்லவென்றும் கூறுப, உத்யோதகரர் இவ் விரண்டையும் மறுப்பர். 'சிலர் பக்கப்போலி திட்டாந்தப்போலி என்பவற்றைப் பொருளாகக் கொள்ளவில்லை. பிரசத்தபாதர் தம்முடைய பதார்த்ததரும சங்கிரகத்தில் பக்கப்போலிஐந்துவகைப்பட்டு, முறையேபிரத்தியக்க விருத்தம், அநுமான விருத்தம், உலக விருத்தம், ஆகம விருத்தம், சுவவசன விருத்த மென்றியலும் என்பர். மணிமேகலை யாசிரியர் அவ்வைந்தனோடு அப்பிரசித்த விசேடண முதலிய நான்கையும் கூட்டி ஒன்பதாகக் கூறினாராக, அவற்றையே நியாயப்பிரவேச முடையாரும் மேற்கொண்டுள்ளனர். இனி சுலோக வார்த்திக முடையார் இவற்றின் வேறாகக்¹ கூறுவர்.  
  
¹ அனுமான பரிச்சேதம் சு, 52-75

### [30.25](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.25)

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை  
  
155 எண்ணிய விவற்றுட் பிரத்தியக்க விருத்தங்  
கண்ணிய காட்சி மாறுகொள லாகுஞ்  
சத்தஞ் செவிக்குப் புலனன் றென்னல்  
  
154  
  
உரை  
  
156  
  
எண்ணிய இவற்றுள் - குற்றமுடையனவென ஆராய்ந்து காணப்பட்டவிவற்றுள்; பிரத்தியக்க விருத்தம் - பிரத்தியக்க விருத்த மென்பது; கண்ணிய காட்சி மாறுகொளலாம் - கண் முதலிய பொறிவாயிலாகத் தெளியக் கண்ட அறிவுக்கு மாறாகக் கொண்டுரைப்பதாம்; சத்தம் செவிக்குப் புலனன்று என்றல் - இதற்கு உதாரணமாவது சத்தம் காதுக்குப் புலப்படுவதில்லை யென்று சொல்லுதல் எ - று.  
  
குற்றமுடையனவெனக் கண்டபின், அக்குற்றத்தின் இயல்பை யெண்ணுமிடத்து முன்னர்க் கூறியவாறு பலவகைப் பட்டுத் தோன்றினமை தோன்ற, "எண்ணிய் விவற்றுள்" என்றும், சுட்டுணர்வாகிய காட்சி, வாயால் உரைத்தற்ககப்படாமையின், "நாமதேச குணக கிரியையின்" வைத்தறியும் தெளிவுக் காட்சி யென்றற்குக் "கண்ணிய காட்சி" யென்றும் கூறினார். காரணம் காரியமாக உபசரிக்கப்பட்டது. சத்தம் செவிக்குப் புலனாதல் கண்ணிய காட்சி, புலனன்று என்றல் அக்காட்சிக்கு மாறுகோளுரை, இனி, "கண்ணிய காட்சி மாறு கொளலாகிய இலக்கணத்தைவிட்டு, ஈண்டுக் காட்டிய உதாரணத்தை மட்டில் நியாயப் பிரவேசம் கூறுகிறது; பதார்த்ததரும சங்கிரகம் ஈண்டுக் கூறிய இலக்கணத்தைக் கூறி, "தீ தண்ணிது" என உதாரணம் காட்டுகிறது.

### [30.26](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.26)

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை  
  
மற்றனு மான விருத்த மாவது  
கருத்தள வையைமா றாகக் கூறல்  
அநித்தியக் கடத்தை நித்திய மென்றல்  
  
157  
  
உரை  
  
159  
  
அனுமான விருத்தம்-அனுமான விருத்தமாவது; கருத்தள வையை மாறாக்கூறல் - கருதலளவையால் துணியப்பட்ட வொன்றைத் தவறாக எடுத்துக் கூறுதலாம்; அநித்தியக் கடத்தை நித்தியம் என்றல் - அநித்தியத்துவமாகிய தன்மத்தையுடைய குடத்தை நித்தியத்துவமுடைய தன்மியாகக் கூறுவது போல்வது எ - று.  
  
மற்று: அசை. தீயபக்க மாதலின், தவறாக வென்பது வருவித்துரைக்கப்பட்டது. அநித்தியம் நித்தியமென்பன அவ்வத் தன்மத்தின் மேனின்றன. நியாயப்பிரவேசத்துள் ஈண்டுக் காட்டப்பட்ட வுதாரண மொன்றுமே காணப்படுகிறது. பதார்த்ததரும சங்கிரகம் "கணம் அம்பரம்" என உதாரணமும் ஈண்டுக் காட்டப்படும் இலக்கணமும் கூறுகிறது.

### [30.27](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.27)

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை  
  
160  
சுவசன விருத்தந்தன் சொன்மாறி யியம்பல்  
என்தாய் மலடி யென்றே யியம்பல்  
  
160  
  
உரை  
  
161  
  
சுவவசன விருத்தம்-சுவவசன விருத்தமாவது; தன் சொல் மாறி இயம்பல் - தான் சொல்லும் சொற்கள் ஒன்றுக்கொன்று மாறுபடக் கூறுதல்; என் தாய் மலடி என்று இயம்பல் - என்னைப் பெற்ற தாய் மகப்பெறாத மலடி எனச்சொல்வது போல்வது எ - று.  
  
ஏ: அசைநிலை. திக்கநாகர் நியாயப்பிரவேசத்துள் இதற்கு இலக்கணங்கூறாது என்தாய் மலடியென்ற இவ்வுதாரணத்தையேகாட்டுகின்றார். பிரசத்தபாதர் இலக்கணமும், "சொற்கள் ஒருபொருளும் உணர்த்தா" என வுதாரணமும் கூறுவர்.

_First 37 of 112 passages. [Read on](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30)_

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.1-11) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30) · Pramāṇa
