<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.11 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 31.11

# Maṇimēkalai's Renunciation 31.11

Maṇimēkalai urai 31.11

- **Language:** Tamil

### [31.11](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.11)

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை  
  
45  
  
50  
பேதைமை செய்கை யுணர்வே யருவுரு  
வாயி லூறே நுகர்வே வேட்கை  
பற்றே பவமே தோற்றம் வினைப்பயன்  
இற்றென வகுத்த வியல்பீ ராறும்  
பிறந்தோ ரறியிற் பெருமபே றறிகுவர்  
அறியா ராயி னாழ்நர கறிகுவர்  
  
45  
  
உரை  
  
50  
  
பேதைமை...ஈராறும் - பேதையையும் செய்கையும் உணர்வும் அருவுருவும் வாயிலும் ஊறும் நுகர்வும் வேட்கையும் பற்றும் பவமும் தோற்றமும் வினைப்பயனுமென இத்தன்மையாக வகுக்கப் பட்ட நிதானங்களின் இயல்பு பன்னிரண்டினையும்; பிறந்தோர் அறியின் - மண்ணில் மக்களாகப் பிறந்தவர்கள் ஆராய்ந்தறிந்து கொள்வார்களாயின்; பெரும்பேறு அறிகுவர் - பெரிய பேறாகிய வீடுபேற்றினை எய்துவர்; அறியாராயின் - அறியர் தொழிவாராயின்; ஆழ்நகரகறிகுவர் - கரையேறமுடியாத ஆழ்ந்த நரகத்தில் வீழ்ந்து ஆண்டுள்ள துன்பத்தைத் தான் அறிவர் எ-று.  
  
பேதைமை முதலாகக் கூறிய இப்பன்னிரண்டினையும் ஏனைப் புத்த நூல்கள் முறையே, அவிச்சை சம்ஸ்காரம், விஞ்ஞானம், நாமரூபம், சடாயதானம், பரிசம், வேதனை திருஷ்ணை, உபாதானம், பவம் சாதி என்று கூறிகின்றன. இவ்வாசிரியர் வாயில் என்றதனை ஏனையோர் சடாயதனம் என்றற்குச் காரணம், பொறியைந்தனோடு மனத்தையும் கூட்டிக் கோடலேயாகும். இவர் சடாயதன மென்பதை விலக்கிப் பஞ்சேந்திரியங்களையே கோடலின், இவ்வாறு கூறும் தசபூமிக சூத்திர முடையாரோடு இவர் ஒத்த கருத்துடையரென்று காணலாம்; ஆயினும்  
  
அவர் வேட்கையை அபிநந்தனை யென்றும், தோற்றத்தைப் பஞ்சஸ்கந்த மென்றும் கூறுதலின், அவரோடு அவர் முழுவதும் ஒவ்வாமை யறிந்துகொள்க. சில நூல்கள் அவிச்சையிற் றொடங்காது, வினைப்பயன் முதலாகத் தொடங்கிய பேதைமை யீறாகக் கூறுகின்றன. இப் பன்னிரண்டனையும் பகுத்தாராய்ந்தறிதலால் விளையும் பயன் இது வென்பார், "பிறந்தோ ரறியின் பெரும்பே றறிகுவ, ரறியா ராயி னாழ் நர கறிகுவர்" என்றார். பெரும்பேறு - வீடுபேறு; அதனிற் பெரியது வேறில்லை யாதலின். தசபூமிக சூத்திர முடையா (சூ; 48) ரும் இவ்வாறே கூறுகின்றார்.

- [Previous: 31.10](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.10)
- [Next: 31.12](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.12)
- [Up: 31](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.30.46) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.11](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.11) · Pramāṇa
